Start Reading

Sivam

Ratings:
549 pages6 hours

Summary

தினமலர் வாரமலரில் வந்த தொடர்கதை இது! 'தினம் ஒரு உயிர்' என்று ஒரு தொடரினைஅதே வார மலரில் தான் எழுதினேன். சிந்தர்களைப் பற்றிய செய்திகளைக் கொண்ட ஒரு அமானுஷ்யத் தொடர் அது. 51 வாரங்கள் அது வாரமலரில் வெளியிடப்பட்டு மகத்தான வெற்றி கொண்டது. தொடர்ந்து 52-வது வாரம் முதல் நான் எழுதத் தொடங்கிய தொடர் தான் சிவன். இதுவும் முந்தைய தொடரினைப் போல் 51 வாரங்கள் வந்து நிறைவு பெற்றது.

அதாவது தொடர்ச்சியாக 102 வாரங்கள் தினமலர் வாரமலரில் எழுதும் ஒரு வாய்ப்பு இறையருளால் எனக்கு வாய்த்தது.

முதலில் அதற்காக அந்த இறைவனுக்கும் தினமலர் நிறுவனத்துக்கும் என் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

'சிவம்' என்கிற இந்தத் தொடர் நான் எழுதிய தொடர்களிலேயே மிகமிக வித்தியாசமாக மட்டுமல்ல, என் இறப்புக்குப் பிறகும் எனக்குப் பெயர் சேர்க்க வல்லது என்று கருதுகிறேன்.

ஒரு மர்ம நாவலில் இறை சிந்தனையை எப்படிப் புகுத்த முடியும் என்பது பலரது கேள்வி. இந்த சிவம் தொடர் அவர்களுக்கெல்லாம் விடையாகத் திகழும்.

'சைவ சித்தாந்தம்' பற்றி இவ்வளவு எளிமையாகவும், வலிமையாகவும் இதுவரை யாரும் எழுதியதில்லை என்று ஒரு வாசகர் என்னைப் பாராட்டினார்.

இன்னொருவரோ என் பொருட்டு சிவாலயங்களுக்குச் சென்று அர்ச்சித்துப் பிரசாதம் அனுப்ப 'சிவம்' பற்றிய இந்த தொடர் பெரியபுராணம், திருவாசகம் போல பல காலத்திற்கும் நிலைத்து நிற்கக் கூடியது என்றார். நான் அதைக் கேட்டு மிக மகிழ்ந்தேன்.

உண்மையில் வாசகர்கள் வாரம் தவறாமல் மறவாமல் தேடிப்பிடித்து படிக்க வேண்டிய ஒரு விறுவிறுப்பான தொடராகத்தான் இதை எழுத எண்ணினேன்.

ஆனால் என்னையுமறிமால் இதன் கருப்பொருள் என்னை ஆட்டிவைத்து என் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

ஒரு கோணத்தில் பார்த்தால் இது ஒரு சராசரி மர்மக் கதை... அவ்வள்வுதான்! ஆனாலும் இன்றைய ஹைடெக் யுகத்தில் இறை சிந்தனையை இது புராண நூல்கள் ஏற்படுத்தியதைவிட அதிகம் ஏற்படுத்தியது. 52 வாரமும் வாசகர்கள் பாராட்டுக்களில் நீந்தினேன். சில வைணவர்கள் இப்படி நான் சிவத்தை முழுமுதற் கடவுளாகச் சித்தரிப்பது கண்டு கோபித்துக் கடிதம் எழுதினர். கோவிலில் பணிபுரிபவர்கள் குருக்கள்தான். பட்டர்கள் அல்ல... பட்டர்கள் என்றால் அவர்கள் வைணவர்கள் என்று ஒரு சிலர் கடிதம் எழுதினர்.

ஆனால் நான் பிழையாக எதையும் இதில் எழுதவில்லை. மிக பொறுப்போடு இந்தக் தொடரை எழுதினேன்.

என் நோக்கம் காவியம் படைப்பது அல்ல... எழுத்தை விட்டு டி.வி. நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்ட வாசக உலகை மீண்டும் எழுத்தின் பக்கம் இழுப்பதே...

அதை வெற்றிகரமாய் செய்து முடித்தேன்.

இந்த நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால் வரும் புரலூட்டுகள்(P) அதாவது தலைப்புச் செய்திகள் புராணச் செய்திகளின் அடிப்படையில் என் கற்பனையில் உருவானவை.

அவை தானாய் என்னுள் தோன்றின.

குறிப்பாக நமது நாக்கே சிவலிங்க வடிவில் இருப்பதாகவும், நமது வாயினுள் 'நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்' என்கிற பஞ்ச பூதமும் அடங்கிச் கிடப்பதாக நான் எழுதி இருப்பதை அதை எழுதுவதற்கு முன் வரை நான் சிந்தித்தே பார்ககவில்லை.

எழுதி முடித்தபிறகோ எனக்கே வியப்பாகி விட்டது. அப்பொழுது தான் எனக்குள் எனக்கே தெரியாமல் ஏராளமான விஷயங்கள் ஒளிந்திருப்பது தெரியவந்தது.

மொத்தத்தில் இந்த நாவல் எனக்கொரு சந்தோஷ அனுபவம். கர்வமாக என் நெஞ்சை உயர்த்தும் இறைவனின் பேரருள்.

அதற்காக அந்த சிவத்தின் திருவடிகளைப் பற்றி ஆனந்தக் கண்ணீர் உகுக்கிறேன்.

-- இந்திரா சௌந்தர்ராஜன்.

Read on the Scribd mobile app

Download the free Scribd mobile app to read anytime, anywhere.