Start Reading

Sangeetha Yogam

Ratings:
184 pages1 hour

Summary

தமிழிசை இயக்கத்துக்குழு 1941-ம் ஆண்டில் ஒரு பெரிய அதிர்ஷ்டம் வந்தது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய தனவந்தர் என்றும், கொடையாளி என்றும் புகழ் பெற்றிருந்த ராஜா ஸர் அண்ணாமலை செட்டியார் அவர்களுக்கு அந்த இயக்கத்தைப் பலமாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அண்ணாமலை சர்வகலா சாலையில் அதற்காக ஒரு மகாநாடு நடந்தது. மகாநாட்டையொட்டிப் பல வித்வான்களின் தமிழிசைக் கச்சேரிகளும் நடந்தன. மேற்படி மகாநாட்டைப் பற்றிக் "கல்கி” யில் நான் எழுதிய கட்டுரைதான் இந்தப் புத்தகத்தில் முதல் கட்டுரையாக அமைந்திருக்கிறது.

அச்சமயம் அமெரிக்காவிலிருந்த ஸர் ஆர். கே. ஷண்முகஞ் செட்டியார் "கல்கி" பத்திரிகையின் மூலம் தமிழிசை இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொண்டார். அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த பிறகு மேற்படி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இந்த இரு தமிழ் நாட்டுப் பிரமுகர்களின் முயற்சியினால் தமிழ் இசை இயக்கம் பெரிதும் பலமடைந்தது. இயக்கத்தை வளர்ப்பதற்குத் தமிழ் இசைச் சங்கம் முதலிய நிரந்தர ஸ்தாபனங்களும் ஏற்பட்டன.

இப்படி ஒரு பக்கத்தில் தமிழிசை இயக்கம் துரிதமாக வளர்ந்து வந்த போது, மற்றொரு பக்கத்தில் அதற்குப் பலமான எதிர்ப்பும் உண்டாகி வளர்ந்தது. தமிழிசையை மூர்த்தண்யமாக எதிர்த்தவர்களில் டி. கே. சி. அவர்களுக்கும் எனக்கும் வெகு நாளையப் பழக்கமுள்ள சிநேகிதர்கள் சிலரும் இருந்தார்கள். எதிர்ப்பின் வேகத்தினால், ஏற்கெனவே சிதம்பரத்தில் தமிழிசை மகாநாட்டில் கலந்து கொண்டு சங்கீத வித்வான்களில் பலர் பின்னால் நடந்த தமிழிசை மகாநாடுகளில் கச்சேரி செய்வதற்குத் தயங்கினார்கள்; சிலர் அடியோடு மறுதளித்தும் விட்டார்கள்.

எனவே, எதிர்ப்புக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியம் நேரிட்டது. வாதப் பிரதிவாதங்கள் மேலும் மேலும் காரசாரமாகிக் கொண்டு வந்தன. அந்த நாட்களில் "கல்கி" யில் எழுதப்பட்ட கட்டுரைகள்தான் பெரும்பாலும் இந்தப் புத்தகத்தில் அடங்கியிருக்கின்றன.

தமிழிசை இயக்கத்தின் வளர்ச்சியைப் பற்றிச் சொல்லும் போது ஒரு விஷயத்தை அவசியம் குறிப்பிட்டே தீரவேண்டும். அந்த இயக்கத்துக்கு ஆதரவு தந்து, உதவி புரிந்து வளர்த்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் இருக்கிறார்கள். எனினும் தமிழிசை இயக்கம் மிகத் தீவிரமான எதிர்ப்புக்கு உள்ளாகி இருந்த போது, அது அடியோடு விழுந்துவிடாமல் தாங்கி நின்று நிலைநாட்டியவர்கள் யார் என்பதை உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், என்னுடைய நண்பர் ஸ்ரீ டி. சதாசிவமும் அவருடைய மனைவியார் ஸ்ரீமதி எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களுந்தான் என்று சொல்ல வேண்டும்.

அத்தகையவர் தமிழிசை இயக்கத்தின் நியாயத்தை உணர்ந்து உற்சாகத்துடன் அவ்வியக்கத்தில் ஈடுபட்டார். புதிது புதிதாகப் பல தமிழ்க் கீர்த்தனங்களைக் கற்றுக் கொண்டும், தாமாகவே மெட்டுகள் அமைத்துக் கொண்டும் கச்சேரிகள் பாடிப் பிரபலப் படுத்தினார்.

‘கச்சேரிகளில் பல்லவிக்கு முன்னால் தமிழ்ப் பாட்டுப் பாடக் கூடாது; அப்படிப் பாடினாலும் ஒன்று இரண்டு தான் பாடலாம்' என்னும் நிர்ப்பந்தத்தை ஒப்புக் கொள்ள மறுத்து, அவ்வாறு கட்டாயப்படுத்தும் சங்கீத சபைகளில் கச்சேரி செய்யவும் மறுதளித்தார். இது காரணமாகச் சிறந்த சங்கீத ரஸிகர்கள் அடங்கிய மியூஸிக் அகாடமி போன்ற மகாசபைகளில் ஸ்ரீமதி எம். எஸ். அவர்களின் சங்கீதக் கச்சேரி நடைபெற முடியாமற் போயிற்று. இது அவருக்கு ஓரளவு வருத்தத்தை அளித்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் தமக்கு நியாயமென்று தோன்றிய காரியத்தில் உறுதியுடன் நின்று வருகிறார்.

ஆகவே தமிழிசை இயக்கத்துக்கு உண்மையில் உயிர் அளித்து அதை நாளது வரையில் உறுதியாக நிலைநாட்டி வருகிறவர்கள் நண்பர் ஸ்ரீ. டி. சதாசிவமும் அவருடைய மனைவியார் ஸ்ரீமதி எம். எஸ். சுப்புலக்ஷ்மியும்தான் என்பதைப் பற்றிச் சிறிதும் ஐயமில்லை. இந்தத் தம்பதிகளின் உறுதியான ஆதரவு இருந்திராவிடில், நாலு வருஷத்திற்கு முன்பு தமிழிசை இயக்கத்துக்கு ஏற்பட்ட மாபெரும் எதிர்ப்பைச் சமாளிக்க முடிந்திருக்குமா என்பது சந்தேகந்தான்.

Read on the Scribd mobile app

Download the free Scribd mobile app to read anytime, anywhere.