Are you sure?
This action might not be possible to undo. Are you sure you want to continue?
Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
21
அந்த பங்களாவின் ஒவ்வோர் அங்குலத்திலும் புஷ்டியான சந்தோஷம் தெரிந்தது.
மெலிதான இலைப்பச்சை நிறத்தில் டிஸ்டெம்பர் பூச்சு சுவர் பரப்புப் பூராவும் தெரிய - அதற்குக் கரை கட்டின மாதிரி - அடர்த்தியான நீல நிறத்தில் பெயிண்ட் கோடு ஓடியிருந்தது. மொஸைக் தரைக்கு எக்ஸ்ட்ரா பளபளப்பை ஏற்றியிருந்தார்கள். கதவுகள் வார்னிஷ் பூச்சில் முகம் காட்டிப் ‘பளப்பளா’ என்றது. சுவரில் மாட்டியிருந்த அந்த ஸ்விஸ் கடிகாரம்கூடச் சுறுசுறுப்பாய் எட்டு மணியை அடித்தது.
எப்போதும் கிழிசலான அழுக்கு சேலையில் வளைய வரும் வேலைக்காரி கௌரி, அன்றைக்குப் புதுப் புடவையில் தெரிந்தாள். தலைக்கு அதிசயமாய் எண்ணெய் போட்டு வாரிக் கதம்பம் வைத்திருந்தாள். சமையல் ஆள் சுப்புராமனின் தலையில் துண்டும் இடுப்பில் வேஷ்டியும் வெள்ளையாய் ஏறியிருந்தன.
ஹாலின் நடுவே -
வரிசையாய்ப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் -
அந்த ஆறுபேரும் உட்கார்ந்து - எதிரே இருந்த போட்டோகிராபரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ப்ளீஸ் பி இன் ஹேப்பி மூட்...
போட்டோகிராபர் சொல்லிக்கொண்டே காமிராவின் கண்ணைத் தன் கண்ணோடு பதித்து - பின்னோக்கி நகர்ந்து - பட்டனை அழுத்தி க்ளிக் செய்ய விநாடிகளை எண்ணிக்கொண்டிருந்தார்.
உட்கார்ந்திருந்த இந்த ஆறுபேரும் - கதைக்கு ரொம்பவும் முக்கியமானவர்கள். எனவே காமிராக்காரர் ‘க்ளிக்’ செய்து முடிப்பதற்குள் அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி விடுகிறேன்.
இந்த ஆறுபேரில் நடுநாயகமாய் உட்கார்ந்திருப்பவர்கள் ரிடையர்ட் ஜட்ஜ் ரத்னப்பிரகாசமும் அவர் மனைவி திலகவதியும்.
ரத்னப்பிரகாசத்திற்கு இன்றைய தினம் சஷ்டியப்த பூர்த்தி.
அவர் அறுபது வயதைத் தொட்டிருந்தாலும் - தலை நரைக்காமல் இருந்தது. பின்புறம் சொற்ப வழுக்கை. அந்த வழுக்கையையும், சாமர்த்தியமான தலைச் சீவலில் மறைத்திருந்தார். சற்று நீள்வட்ட முகம். கண்களில் சட்டம் படித்த கூர்மை தெரிந்தது. மீசையை மழித்து மேலுதட்டைச் சுத்தமாக வைத்திருந்தார். காது மடல்களில் லேசாய் ரோம வளர்ச்சி தெரிந்தது. தினசரி வாக்கிங் போய் உடம்பை ஆரோக்கியமாய் வைத்து டாக்டர்களை தவிர்த்திருந்தார். பத்துவருஷ காலமாய் மரச் சுத்தியால் ‘ஆர்டர் ஆர்டர்’ என்று தட்டி - இரண்டு பக்க வக்கீல் வாதத்தையும் கேட்டு - நிறையப் பேர்களுக்குத் தலா ஒரு வருஷமும் - ஏழு வருஷமும் தீர்ப்புச் சொன்னவர்.
அவருக்குப் பக்கத்தில் வெட்கத்தோடு உட்கார்ந்திருக்கும் திலகவதிக்கு ஐம்பத்தி மூன்று வயது. உடம்பில் தள்ளாமை நன்றாகவே தெரிந்தது. எதைச் சொன்னாலும் நம்பிவிடும் அப்பாவித்தனம் முகத்தில் பரவியிருந்தது. கணவர் செய்துபோட்ட வைர மூக்குத்தியும் - வைரக் கம்மலும் ஜோராய்ச் சுடர்விட - போட்டோகிராபரை நேருக்கு நேர் பார்க்க வெட்கப்பட்டாள். அவளுடைய பூஞ்சையான உடம்பைச் சுற்றிலும் - இரண்டாயிரம் ரூபாய்ப் பட்டுச் சேலை ஏராளமான ஜரிகையோடு தெரிந்தது.
ரத்னப்பிரகாசத்திற்கு வலக்கைப் பக்கமாய் - அவர் சாயலில் உட்கார்ந்திருந்த கமலகுமார் அவர்களுக்கு மூத்த மகன். அவர் ரிடையரானதும் ஆரம்பித்த லேத் இண்டஸ்ட்ரீஸை வெகு அக்கறையாய்க் கவனித்து வருபவன். தன்னுடைய இருபத்தேழு வயதைப் போன மாதம் துவக்கியவன். பார்க்கிற பெண்ணெல்லாம் பிடிக்காமல் போகவே - கல்யாண வலையிலிருந்து தப்பித்துக்கொண்டவன். கொஞ்சம் கஞ்சன். உதாரணம்: காரில் சினிமாவுக்குப் போய் 2.90 டிக்கெட்தான் வாங்குவான். சிகரெட், விஸ்கி எதுவும் பழகாதவன்.
திலகவதிக்கு இடப் பக்கமாய் உட்கார்ந்திருப்பவள் ரூபா...
கமலகுமாருக்கு அடுத்தபடியாகப் பிறந்தவள். சுமாரான அழகு. மாநிறம். இருந்தாலும் தன்னை அழகியாய் நினைத்துக் கொள்பவள். ஐந்து வருஷங்களுக்கு முன்னால் கல்யாணம் செய்துகொண்டு கணவன் வீடு போனவள் - ஒரே வாரத்தில் மாமியாரோடு சண்டை போட்டுக்கொண்டு கணவனையும் இழுத்துக்கொண்டு பிறந்த வீட்டுக்கே வந்து விட்டவள்.
ரூபாவின் தோளை ஒட்டின மாதிரி உட்கார்ந்திருப்பவன்தான் அவளுடைய கணவன் சுபாகர். சுருட்டை முடியோடு அழகாய் இருப்பவன். மனைவியின் வாயிலிருந்து உதிர்கிற சொல்லை மந்திரமாய் நினைப்பவன். தனியார் தொழிற்சாலையொன்றில் சீப் சூபர்வைசராக பணியாற்றிக்கொண்டு வீட்டு மாப்பிள்ளையாக இருப்பவன்.
சுபாகரின் தோளையொட்டினமாதிரி உட்கார்ந்திருக்கிற நான்கு வயதுச் சிறுமி அகஸ்தி அவர்களுடைய ஒரே மகள். பக்கத்துத் தெரு நர்சரி ஸ்கூலில் எல்.கே.ஜி. படிப்பவள். படிப்பைவிட டி.வி. பார்க்கத்தான் அகஸ்திக்குப் பிடிக்கும். நர்சரி ரைமைச் சரியாகச் சொல்லத் திணறுபவள், சினிமாப் பாடல்களை அடிபிறழாமல் பாடுவாள்.
இந்த ஆறு பேர்களைத்தவிர - இன்னொரு முக்கியமான நபரும் இந்தக் கதைக்குத் தேவையான பாத்திரந்தான்.
பெயர் சுவாதி.
ரூபாவுக்கு அடுத்ததாய்ப் பிறந்தவள்.
அபார படிப்பு ஞானம்.யூனிவர்ஸ்டி ராங்க் வாங்கி டிகிரியைப் பெற்றவள். ஒரு ட்ரஸ்ட் வழங்கிய ஸ்காலர் ஷிப்பின் உதவியோடு வெளிநாட்டில் மேற்படிப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள். அப்பாவின் இந்த சஷ்டியப்த பூர்த்தி விழாவில் கலந்துகொள்ள எந்த நிமிஷமும் அவள் வரலாம் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
க்ளிக்
போட்டோகிராபர் ‘கிளிக்’ செய்ய, எல்லோரும் கலைந்தார்கள்.
தாத்தா... தாத்தா...
அகஸ்தி ஓடிவந்து ரத்னப்பிரகாசத்தின் தோள்மேல் தொற்றி ஏறினாள். அவர் பேத்தியை அள்ளிக்கொண்டார்.
என்னம்மா?
இன்னிக்கு உனக்கும் பாட்டிக்கும் கல்யாணமா?
ம்... இது ரெண்டாவது கல்யாணம்... உன்னோட பாட்டியை முப்பது வருஷத்துக்கு முன்னாலே ஒருதபா கல்யாணம் பண்ணிகிட்டேன்.
எல்லோரும் சிரிக்க -
அகஸ்தி கேட்டாள். சித்தி எப்போ வருவாங்க தாத்தா?
சுவாதி சித்தி இந்நேரம் பிளேன்லே வந்திட்டிருப்பா. இன்னும் ஒரு மணி நேரத்துல நம்ம வீட்டிலே இருப்பா. சித்தி வந்ததும் நாம்ப எல்லோரும் கோயிலுக்குப் போறோம்...
என்றவர், மகனின் பக்கமாய்த் திரும்பினார்.
கமலகுமார்...
என்னப்பா?
ஏர் போர்ட்டுக்குப் போன் பண்ணிக் கேட்டியா?
கேட்டேன்பா...
என்ன சொல்றாங்க?
எட்டு மணிக்குத்தான் ஃப்ளைட் வருமாம்.
ஏர்போர்ட்டுக்கு யார் யார் போறீங்க?
நானும் ரூபாவும்.
ஒரு மணி நேரத்துக்கு முன்னமே போயிடுங்க. அம்பாசிடர் காரை எடுத்துக்குங்க...
ரத்னப்பிரகாசம் சொல்லச் சொல்லத் திலகவதி சலித்துக்கொண்டாள்.
ஊருக்கு வர்ற பொண்ணு ரெண்டு நாளைக்கு முன்னாடியே வரவேண்டாம்? இப்படியா கழுத்தைப் பிடிக்கிறமாதிரி வர்றது?
டிக்கெட் கிடைக்க வேண்டாமா திலகம்? அங்கேயெல்லாம் இரண்டு மூணு மாசத்துக்கு முன்னாடியே டிக்கெட் ரிசர்வாயிடும்.
நாமதான் மூணு மாசத்துக்கு முன்னாடியே லெட்டர் போட்டிருந்தோமே, அப்பவே டிக்கெட்டை ரிசர்வ் பண்ணியிருக்கலாமே இந்தப் பொண்ணு?
நாம போட்ட லெட்டர்தான் கிடைக்கலையாமே?
ரூபாவின் கணவன் சுபாகர் முதல் தடவையாய் வாயைத் திறந்தான். இந்த ஃபங்க்ஷனோட தேதியை வேற நாம ரெண்டு தடவை மாத்திட்டோம். அதான் சுவாதி குழப்பமாயிட்டா...
அவர்கள் பேசிக்கொண்டிருந்த அதே நேரம் -
ஹாலின் மூலையில் - டீபாயின் மேலிருந்த டெலிபோன் குரைத்தது.
கமலகுமார் ரிசீவரை எடுக்கப்போனான்.
ரத்னப்பிரகாசம் சிரித்தார். இனிமே போன் வந்துட்டேயிருக்கும். கோர்ட் ஹை அபீஷியல்ஸ் ஒவ்வொருத்தரா போன் பண்ணி வாழ்த்துக்களைத் தெரிவிக்க ஆரம்பிப்பாங்க. ஒரு மணி நேரத்துக்கு இனி போன் பக்கத்திலேயே உட்கார்ந்துட வேண்டியதுதான்...
கமலகுமார் ரிஸீவரை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான். ஹலோ... கமலகுமார் ஸ்பீக்கிங்...
மறுமுனை கரகரத்தது.
நான் இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் பேசறேன். மிஸ்டர் ரத்னப்பிரகாசம் வீட்லே இருக்காரா?
இருக்கார் ஸார்.
அவரைக் கொஞ்சம் பேசச் சொல்றீங்களா?
இதோ...
என்றவன் ரத்னப்பிரகாசத்தின் பக்கமாய்த் திரும்பி, அப்பா... இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் உங்ககிட்டப் போசணுமாம்... வர்றீங்களா?
ரிஸீவரை நீட்டினான்.
ரத்னப்பிரகாசம் வேகவேகமாய் வந்து ரிஸீவரை வாங்கினார்.
ஹலோ, நான் ரத்னப்பிரகாசம்.
குட்மார்னிங் ஸார்... நான் கோகுல்நாத் பேசறேன். உங்ககூடக் கொஞ்சம் தனியாப் பேசணும். வீட்டுக்கு வந்தா அவெய்லபிளா இருப்பீங்களா?
வெல்கம். வாங்க, என்ன விஷயமா வர்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?
ரத்னப் பிரகாசம் ஆச்சரியமான குரலில் கேட்டார்.
ஒரு மோசமான விஷயத்தைப் பத்தி உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணனும் சார். ஸாரி டூ ஸே திஸ்...
மோசமான விஷயமா?
ஆமா... ஸார். தர்மராஜ் என்கிற கைதியைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா?
தர்மராஜ்?
எஸ்... பதினாலு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு கொலைக் குற்றத்துக்காக - அவனுக்கு நீங்க ஆயுள் தண்டனை விதிச்சிருக்கீங்க. ஞாபகமிருக்கா சார்?
எஸ். ஞாபகமிருக்கு. இப்போ அவனுக்கு என்ன?
அவன் ரெண்டு நாளைக்கு முன்னாடி விடுதலையாயிட்டான் ஸார். இன்னிக்குக் காலையிலே அவன்கிட்டேயிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு.
லெட்டரா?
ஆமா... ஸார்... அந்த லெட்டரை இப்போ கொண்டு வர்றேன். வீட்டுக்கு வாட்ச்மேன் இருக்கானா?
இருக்கான்.
வெளியாட்கள் யாரையுமே வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்ன்னு சொல்லிடுங்க. நீங்களும் உங்க பேமிலி மெம்பர்ஸும் வெளியே போகாமே வீட்டிலேயே இருங்க... நான் ஒரு பத்து நிமிஷத்துலே வந்துடறேன்...
ரத்னப்பிரகாசம் முகர் வியர்த்தார்.
அந்த தர்மராஜ் லெட்டர்ல என்ன எழுதியிருக்கான் இன்ஸ்பெக்டர்?
நேர்லே வந்து சொல்றேன் ஸார்...
கோகுல்நாத் ரிசீவரை வைத்துவிட - ரத்னப்பிரகாசம் தோளில் போட்டிருந்த மேல் துண்டால் முகத்து வியர்வையைப் பயத்தோடு ஒற்றிக்கொண்டார்.
திலகவதி கணவரின் முகத்தை ஏறிட்டாள். என்னங்க, போன்லே இன்ஸ்பெக்டர் என்ன சொன்னார்? ஏன் என்னவோ மாதிரி ஆயிட்டீங்க?
நான் தண்டனை கொடுத்த பழைய கைதி ஒருத்தன் ரெண்டு நாளைக்கு முன்னாடி விடுதலையாயிட்டானாம்... போலீஸ் ஸ்டேஷனுக்கு ஏதோ லெட்டர் எழுதியிருக்கானாம்... விஷயம் என்னான்னு தெரியலை... இன்ஸ்பெக்டர் நேர்ல வந்து சொல்றேன்னு சொல்லியிருக்கார்...
ரத்னப்பிரகாசம் சொல்லச் சொல்ல...
எல்லோரும் வாய் பிளந்தார்கள்.
அந்தக் கைதியோட பேர் என்னப்பா?
This action might not be possible to undo. Are you sure you want to continue?