Start Reading

Poiyil Pootha Nijam

Ratings:
304 pages2 hours

Summary

கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகள் ஒரு செய்திப் பத்திரிகையின் ஆசிரியையாகப் பணியாற்றி வெளியில் வந்த பிறகு நான் எழுதிய முதல் புதினம் இது. இந்த நாவலுக்கு உண்மையில் எந்த முன்னுரையும் தேவையில்லை. எந்த அரசியல் நிகழ்வையும் ஆதாரமாகக் கொண்டுப் புனையப்பட்ட கதை அல்ல இது. ஒரு 'எரியும்’ சமூகப் பிரச்னையை மையமாகக் கொண்டு விடை தேடும் முயற்சியில் எழுந்த கதையும் அல்ல. பெண்ணியக் கதை என்றும் கட்டம் கட்டி அதற்குள் இதை திணிக்க முடியாது.

இது முழுக்க முழுக்க ஒரு கற்பனைக் கதை. இதில் வரும் சகுந்தலாவும் ராஜமோகனும், சரவணனும் காமாட்சியும் கற்பனைப் பாத்திரங்கள். ஆனால் நான் கதையைப் பின்னப் பின்ன, உயிர் பெற்று எனக்கு நிஜமாகிப் போனவர்கள். என்னை ஆத்மார்த்தமாக பாதித்தவர்கள். ஏனென்றால் அவர்கள் பேசும் பேச்சுக்கள், பட்ட துன்பங்கள், அனுபவித்த தாபங்கள் கோபங்கள் எல்லாம் நிஜமானவை, பாசாங்குத் தனமற்றவை.

இது ஒரு அசாதாரண நிகழ்வைச் சுற்றி, ஒரு நிஜமான மருத்துவ கேஸ் பற்றி கேள்விப்பட்டதன் விளைவாக, என் கற்பனை வரைந்து கொண்டுபோன புதினம். மருத்துவப் பிரச்னை என்பது இங்கு முக்கியமல்ல. மருத்துவ சொற்பிரயோகங்களைக் கூட நான் உபயோகிக்கவில்லை. ஏனென்றால் இது மனித உறவுகளைப் பற்றின கதை. மகாபாரத காலத்திலிருந்து ஆண் பெண் உறவை நிர்ணயிக்கும் பதிவுகளின் தாக்கங்களைத் கேள்வி எழுப்பும் கதை. ஸ்திரத்தன்மை கொண்டவையாகக் கருதப்படும் ஸ்தாபனங்களை நவயுகத்துப் பின் புலத்தில் மறுபரிசீலனை செய்யத் துணியும் முயற்ச்சி. சமூக அமைப்பிலிருந்து, அங்கீகரிக்கப்பட்ட அமைப்பிலிருந்து விலகி வாழ்பவர்கள் சந்திக்க நேரும் சவால்களை ஆராயும் முயற்சி. சமுதாய வரையறைகள், கோட்பாடுகள், எதிர்பார்ப்புகள், தர்மங்கள் காலத்துக்குக் காலம் மாற வேண்டியவை என்பதால் நிலையானவை அல்ல. எது சரி எது தவறு என்று எந்தக் காலத்திலும் உறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் சத்தியம், நேயம், மானுடம் என்பதெல்லாம் சாச்வதமான விஷயங்கள். இவற்றின் முன் மற்றவையெல்லாம் அற்பமானவை. இவற்றைச் சுற்றித்தான் உலகம் உயிர்ப்புடன் இயங்குகிறது.

நமது வாழ்க்கை முறை விஞ்ஞான வளர்ச்சியால் மாறிப் போனாலும் மகாபாரதத்துக் கதாபாத்திரங்களிலிருந்து நாம் அதிகம் மாறி விடவில்லை. புராண காலத்து சகுந்தலை பட்ட வேதனையெல்லாம் புதினத்தின் சகுந்தலாவுக்கும் உண்டு. துஷ்யந்தனின் குழப்பங்களிலெல்லாம் ராஜமோகனும் அனுபவிக் கறான். அப்படிப்பட்ட அனுபவங்கள் அசாதாரணமானவை அல்ல. இந்தக் கதையை முடித்த போது என்னை மிதமிஞ்சிய ஆயாசம் ஆட்கொண்டது. சாத்திரங்கள் நியதிகள் கட்டுப் பாடுகள், நம்பிக்கைகள் மாறும் - ஆனால் மனிதன் என்பவன் மாறவில்லை.

அதே போல வாழ்வின் ஆதார உண்மைகள், தார்மீக சத்தியங்கள் மாறாது. மாறக்கூடாது என்ற நம்பிக்கையில் வளர்ந்த புதினம் இது. கற்பனைக் கதை என்றாலும் இதில் வரும் மாந்தர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள், பொய்மையற்றவை. நீங்களும் நானும் தினம் தினம் சந்திப்பவை. உணர்பவை.

நாவலைப் படிக்கும் உங்களை அந்த உணர்வுகளோடு ஐக்கியப்படுத்த அதன் கதையோட்டம் உதவுமானால் அதன் கதாபாத்திரங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று கொள்ளலாம். இந்த நவலை மிகுந்த ஆர்வத்தோடு ரசித்துப் படித்த வாசகர்களுக்கு நன்றி.

- வாஸந்தி

Read on the Scribd mobile app

Download the free Scribd mobile app to read anytime, anywhere.