Start Reading

Oppanaikalin Koothu

Ratings:
250 pages1 hour

Summary

இந்த நூல் எதற்காக?

வரலாற்றை மறைப்பது திருட்டுத்தனம். வரலாற்றைத் தவறாகச் சித்திரிப்பது அயோக்கியத்தனம். ஆனால், வரலாற்றைத் திருத்துவது பாசிசம். 'பாசிசம்' என்பது பிற்போக்கான சித்தாந்தம்; அது எதையும் ஒழுங்காகத் திட்டமிட்டுச் செயல்படுத்துகின்ற அழிவு சக்தி; அது மனித குலத்தின் விரோதி.

நாம் வரலாற்றைக் கற்க விரும்புகிறோம். சரியான, உண்மையான வரலாற்றினையே கற்க விரும்புகிறோம். அதற்காக, உண்மையான வரலாற்றினைத் தேடுகிறோம். வரலாற்றைக் கற்க விரும்புகின்ற நமக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. எனவேதான், உண்மையான வரலாற்றை எழுதுவதும் உண்மையான வரலாற்றிற்கு எதிரான கற்பனைகளை அம்பலப்படுத்துவதும் நமது கடமையாகிவிடுறது.

எனவே முடிந்த வகையில் சரியானதைச் செய்யும் முயற்சியில் இறங்கி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. நமது முயற்சியில் முதலாவதாக இடம்பிடிக்கிறாள் குயிலி. யாரிந்தக் குயிலி? 1780 ஆம் ஆண்டில் ஆற்காட்டு நவாப், புதுக்கோட்டைத் தொண்டைமான், ஆங்கிலேயரது படைகள் ஒரு புறமாகவும், வேலுநாச்சியார், மருதுபாண்டியரது படைகள் ஒரு புறமாகவும் நின்று, சிவகங்கை மீட்டெடுக்கப்படும்போது அரண்மனைக்குள் இருந்த ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கினில் தனது உடலெங்கும் நெய்பூசி, நெருப்பு வைத்துக் கொண்டு குதித்த ஒரு தற்கொலைப் போராளியாக, வீரத் தியாகியாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருப்பவள்தான் குயிலி. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில், குயிலி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்தவளாகவும் குறிப்பிடப்படுவதுதான்.

அக்காலகட்டங்களில் ஆங்கிலேயக் கம்பெனிக்கு எதிராக நின்றவர்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பங்களிப்பானது மிகவும் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்றும் அதிசயமானது அல்ல. தென் மாவட்டச் சமூக வரலாறானது முழுக்கவும் சாதிய எழுத்துக்களால் நிரம்பியது. சமூகம், பொருளாதாரம், கலை, இலக்கியம் போன்ற அனைத்திலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு என எதையும் குறிப்பிடுமளவிற்கான பதிவுகள் இதுவரை அறியப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தமிழக வரலாறுகளில் இல்லை. இன்றளவும் இல்லை. எனவே, தமிழ் மண்ணின் வரலாற்றினை எப்போதுமே நாம் கவனத்துடன் அணுக வேண்டும். இந்த எச்சரிக்கை உணர்வுடன் சிவகங்கை வரலாற்றின் சில பகுதிகளை அணுகத் தயாராவோம்.

தமிழக அரசு சார்பாக, சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சூரக்குளம் எனும் கிராமத்தில் வீரத்தாய் குயிலிக்கான நினைவுச் சின்னம் அமைக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஆணையிடப்பட்டு அதனடிப்படையில் 18.07.2014 அன்று வேலுநாச்சியாருக்கு எனத் திறக்கப்பட்ட மணிமண்டபத்தில் ரூபாய் இருபத்தியேழு இலட்சத்தி ஐம்பதாயிரம் (27,50,000) செலவில், குயிலிக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. குயிலி மறத்தி (மறவர்/தேவர் சாதி என்றும்; ஆதி திராவிடப் (பறையர்) பெண் என்றும்; அருந்ததியப் (சக்கிலியர்) பெண் என்றும் தேவேந்திர குல வேளாளப் (பள்ளர்/மள்ளர்) பெண் என்றும் குறிப்பிட்டு நூல்களும் மற்றும் பல இணையத் தளங்களும் உள்ளன. பல்வேறு வகையான கட்சிகளும் அமைப்புகளும் இப்போக்குகளை ஆதரிக்கின்றன, வரவேற்கின்றன.

நாம் இந்த நூலினை எழுதியது, குயிலியை குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்த பெண் என அழுத்தமாக நிறுவி, ஏனைய சாதிப் பெண் அல்ல என மறுப்பதற்காக அல்ல. மேலும் குயிலி எந்த சாதியைச் சேர்ந்த பெண் என ஆராய்வதற்காகவும் அல்ல. மாறாக, சிவகங்கை வரலாற்றில் குயிலியின் பங்களிப்பினை இடங்காட்டவும் அதன் மூலம் சிவகங்கை வரலாற்றை இனங்காணவும் முயல்வதற்காகவே.

எமது நூலாக்கத்திற்கான இலக்கானது இரண்டு அடைவிடங்களைக் கொண்டிருக்கின்றன. 1. குயிலியின் இடங்காட்டல். 2. குயிலி மறைக்கப்பட்டதற்கு சிவகங்கை வரலாற்றாய்வாளர்களின் சாதியமனம்தான் காரணம் எனத் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்ற தவறினைக் கண்டித்தல்.

இதைத் தொடர்ந்து, சிவகங்கை வரலாற்று நாயகர்களாக விளங்குகின்றவர்கள் குறித்த ஆய்வு நூல்கள் எழுதுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம், படவேண்டும். வரலாறு குறித்த செய்திகளின் மீதான கேள்விகளையெல்லாம் ஆராய்வதன் மூலமாக உண்மையான வரலாற்றினை அறிந்து கொள்வதற்கான முயற்சியைத் தொடங்கிவிட முடியும் எனும் நம்பிக்கையோடு நீங்கள் இந்நூலுக்குள் சென்று திரும்பலாம். ஒப்பனைகளே கூத்தாடினாலும் கூட கூத்தின் முடிவில் ஒப்பனைகளும் கழன்றுதானே ஆக வேண்டும்.

இந்நூலினை எழுதிவரும்போது சில இடங்களில் எனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு எழுத வேண்டிய சூழ்நிலை வந்தது. அதனால் எனது அசலான எழுத்தினை நான் மறைத்த குற்றத்திற்கு ஆளாகியிருக்கிறேன். அவ்வாறு கட்டுப்படுத்திக் கொண்ட இடங்களை ஊகித்து, உணர்ந்து பொருள் கொள்ளக் கோருகிறேன். வாசகர்கள் பொறுத்தருள்க! நூலை வாங்கவும் வாசிக்கவும் முன்வந்த உங்களை வரவேற்கிறேன். வாழ்க!

Read on the Scribd mobile app

Download the free Scribd mobile app to read anytime, anywhere.