Start Reading

Kadai Bommaigal

Ratings:
336 pages2 hours

Summary

'கடை பொம்மைகள்' நாவலின் கதைக் கரு அத்தகையது, தமிழகத்தில் பெண் சிசுக்கொலை என்பது ஒரு ஆர்வம் கொண்ட பத்திரிக்கை நிருபர் எதேச்சையாகக் கண்டறிந்த விஷயத்தை வெளியிட்ட பிறகே, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பொது மக்களின் கவனத்தைப் பெற்றது. இந்தியா டுடே ஆங்கில ஏடு புகைப்படங்களுடனும் பெண் சிசுவைக் கொன்றவர்களின் வாக்கு மூலங்களுடனும் கட்டுரை வெளியிட்ட போது, பிரச்னை தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் கவனம் பெற்றது. ஆண் பெண் இரு பாலாரையும் துணுக்குறச் செய்தது. பெண்ணே தனது இனத்தை அழிப்பாளா? பெற்றவளே கொலை செய்யத் துணிவாளா என்கிற கேள்விகள் எழுந்தன. ஒன்பது மாதம் சுமந்த ஒரு சிசுவை பெண் என்கிற காரணத்தால் கொலை செய்கிறார்கள் என்றால் அதற்கு வலுவான காரணங்கள் இருக்க வேண்டும்.

வறுமையினாலா அல்லது ஒரு பிரத்யேக இனத்தின் மரபு சார்ந்த வழக்கத்தினாலா என்றும் கேள்விகள் எழுந்தன. உசிலம்பட்டி தாலுகாவிலும் அதை ஒட்டியும் இருக்கும் பகுதிகளில், கள்ளர் இனத்தில் பெண் சிசுக் கொலை சகஜமாக நடப்பதாகச் செய்திகள் தெரிவித்தன. பெண் சார்ந்த பிரச்னைகளில் எப்பொழுதுமே அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்த நான் இதைப் பற்றி அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வது என்று முடிவு செய்தேன். ஆய்வு பொருட்டு நான் தில்லியிலிருந்து உசிலம்பட்டிக்கு பயணம் மேற்கொள்வது வழக்கமாயிற்று. அந்த ஓராண்டு காலம் நான் சந்தித்த பெண்கள் அநேகம். மனத்தை உலுக்கும் கதைகள். கண்ணீரில் தோய்த்த துயரங்கள். வறுமை ஒருபுறம். மரபுச் சுமைகளின் அழுத்தம் மறுபுறம், அதைக் கேவலப்படுத்தும் வகையில் கிராம வாழ்க்கையை ஆக்ரமிக்கத் துவங்கி விட்ட நுகர்வோர் கலாச்சாரமும் அது தூண்டி விட்ட (ஆண்பிள்ளை) பெற்றவர்களின் பேராசையுமாக அந்த மக்களை ஆட்டிப் படைப்பதை என்னால் உணர முடிந்தது. வரட்டு கெளரவத்தால் செய் முறை'களை நிறுத்த முடியாமல் கடன்பட்டு அல்லல்படும் குடும்பங்களுக்கு, பெண் குழந்தை பாரமாகிப் போனதில் வியப்பில்லை. படிப்பறிவு இல்லாத, வேலை வாய்ப்பு இல்லாத வறண்ட பிரதேசத்தில் பிள்ளையைப் பெற்ற தாய்மார்கள் மருமகள் கொண்டு வரப் போகும் வரதட்சணையை நம்பியே காத்திருக்கும் கொடுமையை தாய்மார்கள் கூச்சமில்லாமல் ஒரு விதப் பெருமையுடன் சொல்வதை நான் கண்டேன். 'நாலு பொண்ணைப் பெத்தேன். நாலையும் கொன்னேன் என்ன செய்ய?' என்று கண்களில் நீர் மல்கச் சொல்லும் பெண்கள், பெண் குழந்தையோடு வீட்டுக்கு வராதேங்கறான் புருஷன். அவன் விரட்டிட்டான்னா எங்கே போவேன்? அப்படிச் சொன்ன பெண்கள் வாழாவெட்டிகளாக அல்லல்படும் அவலங்கள். அவமானப்பட்டு தூக்கில் தொங்கிய துயரங்கள். 'இருக்கோ இல்லியோ பத்து சவரன் பெண்ணுக்குப் போடணும் கல்யாணம்னா' என்று அலுத்துக் கொள்ளும் காய்ந்த வயிறுகள். பெற்ற குழந்தைகளை இஷ்டப்பட்டு யாரும் கொல்ல முடியாது. அவர்கள் நிர்ப்பந்தங்களின் அழுத்தத்தில் தவிப்பதும் யாராவது உதவ முன் வர மாட்டார்களா என்று ஏங்குவதும் யதார்த்தமான உண்மை. என்னை உலுக்கிய அனுபவங்கள் எல்லாமே. அவர்களுடன் நானும் கண்ணீர் வடித்தேன்.

அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியதற்கு தீர்க்க தரிசனமில்லாத அரசுகளே பொறுப்பு என்கிற கோபத்துக்கிடையில், கௌரவத்தைப் பற்றின போலி மதிப்பீடுகளும், பெண்ணை ஒரு பண்டமாகப் பாவிக்கும் சமூகத்தின் பார்வையும் என்னில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தின. பெண் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து வரும் நிலை சமூகத்தைத் தடம் புரளச் செய்யும் என்கிற தொலை நோக்கு அங்கில்லை. பெண் ஒரு சுமை என்பதற்கு அவர்களிடம் ஆயிரம் விளக்கங்கள் இருந்தன. படித்த ஆண் பேராசிரியர்களே சிசுக் கொலையை ஆதரித்துப் பேசியதைக் கேட்டு நான் அதிர்ந்தேன். எனக்குப் பழக்கப் பட்ட வடிகால் தேவைப்பட்டது. 'கடை பொம்மைகள்’ என்ற நாவல் இனித்தது.

இந்த நாவலில் வரும் கதாநாயகி மஞ்சுவும் அவளுடைய வளர்ப்புத் தாயும் மற்ற கதாபாத்திரங்களும் கற்பனை என்றாலும், இதில் வரும் அநேகம் சம்பாஷணைகள் நான் நேரில் சந்தித்த மாந்தர்கள் பேசியவை. அவர்கள் பிரயோகித்த சொற்கள், வெளிப் படுத்திய கருத்துக்கள், கதை மாந்தர்கள் சொல்வது போல வருகின்றன, 'சாமிக் குத்தம்னு (சிசுக் கொலை செய்வது) பயமில்லையா?' என்ற கேள்வியையும், 'சாமியை யார் பார்த்தா?’ என்ற கிழவியின் பதிலும், நான் கேட்ட கேள்வியும், கிடைத்த பதிலும். நாவலை மீண்டும் படிக்கும் போது இன்றும் பசுமையாக அந்தப் பெண்களின் நினைவு எனக்கு வருகிறது. அவர்களது பிரச்னைகளுக்கு வேறு விதமான தீர்வு இன்று ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. மூலைக்கு மூலை ஸ்கானிங் சென்டர்கள் முளைத்திருப்பதில், கருவிலேயே பெண் சிசுவை இனங் கண்டு கருக்கலைப்பு நடப்பது இப்போது பரவலாகிப் போய் விட்டது. பெண் கல்வியும், பொருளாதார முன்னேற்றமும் போதாது. பெண்ணைப் பற்றின சமூக மதிப்பீடுகள் மாறினாலேயே பெண்ணிற்கு மதிப்பு என்கிற ஆதங்கம் என்னை ஆட்கொள்கிறது.

Read on the Scribd mobile app

Download the free Scribd mobile app to read anytime, anywhere.