Start Reading

Kanchi Thalaivan Karunai Vizhigal

Ratings:
159 pages48 minutes

Summary

"அத்தி பூத்தாற் போல்" என்ற சொல் வழக்கம் ஒன்று நம் தமிழர் பண்பாட்டில் உண்டு. அதாவது அத்திப்பூ 50 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மலரும் என்பது பல ஆன்றோர்களின் கருத்தாகும்.

எனவே அந்த அத்தி மரத்தால் ஆன "அத்தி வரதரும்" சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை "அனந்த சரஸ்" குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் கொடுப்பது எவ்வளவு பொருத்தமாக உள்ளது!

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும், சமூக வாழ்வையும் ஒழுங்கு முறைக்கு உட்படுத்துவதே ஆன்மீகம். உலகம் முழுவதும் ஆன்மீகம் பல்வேறு மதங்கள் மற்றும் சம்பிரதாயம் மூலமாக, தங்கள் கடமைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றச் செய்து, நடைமுறைப் படுத்தப்படுகிறது.

எந்த சமயமாக இருந்தாலும், மனித குல மேம்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு மனித குணத்தைப் பண்படுத்துவதே ஆன்மீகத்தின் அடிப்படை நோக்கமாகும். அந்த விதத்தில் "இந்து மதம்” காலங்கடந்த வரலாற்றைக் கொண்ட சிறப்பு வாய்ந்தது.

நம் பாரத நாடு பண்பாட்டு ரீதியில் பல ஆன்மீக கலாச்சாரங்களை தன்னகத்தே கொண்டு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமும், பன்னிரு ஆழ்வார்களும், இராமானுஜரும், ஸ்வாமி வேதாந்த தேசிகரும் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக அவர்களது படைப்புகளும், போதனைகளும் ஆன்மீக வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ளன.

இன்று வரை நம் திருக்கோயில்களில் ஆகமங்களின் அடிப்படையில் தான் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட எண்ணற்றத் திருக்கோயில்களை, திருமால் வாழும் இடங்களாக, ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த இடங்களைத்தான், நாம் “திவ்ய தேசம்” என்று கூறுகிறோம். இப்படி 108 திவ்ய தேசங்கள் நம் பாரத பூமியில் பரந்து விரிந்து கிடக்கின்றது. இதில் காஞ்சிபுரம் என்னும் திருக்கச்சி முக்கியமான தொண்டை நாட்டு திவ்ய தேசமாகும். இதில் எண்ணற்ற ஆசாரியர்கள் அவதரித்து, நம் பெருமாளாகிய "தேவாதி ராஜனை" கண்ணால் கண்டும், கைங்கரியம் செய்தும் வணங்கிய பெருமை கொண்டது.

இந்த அரிய தமிழை எனக்கு வழங்கிய வள்ளல் பெருமான் 'கந்தக்கோட்ட திருமுருகனை' நான் நினைவு கூறாமல் இருக்க முடியாது. எனவே, அவரது திருவடிகளையும் வணங்கி இந்தத் தொகுப்பை உங்களுக்கு வழங்குகிறேன். முடிந்தவரை வரலாற்றுச் சான்றுகளைப் பதிவு செய்துள்ளேன். அதே சமயம் இந்தக் கட்டுரைக்குத் தேவையான, பல மேல் நாட்டு அறிஞர்களின் குறிப்புகளை, அவர்களது ஆய்வு நூல்களில் இருந்த எடுத்துக் கொண்டது, எனக்கு பெரிதும் துணை நின்றது. விரிவு அஞ்சி சில மேற்கோள்களை கையாளவில்லை.

பிரம்மாவின் யாகத்தின் போது யாகத்தீயில் இருந்து உதித்த பெருமாள் என்று பல புராணங்களும் கூறுகின்றன. முதலில் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருக்கோயிலுக்கு பல மன்னர்களும் தங்களால் ஆன திருப்பணிகளைச் செய்துள்ளனர். இதை முக்கியமாக அத்திகிரி வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அமைத்துள்ளேன். கோயில் உண்டான காரணம் யாராலும் நிர்ணயிக்க முடியாத நிலையில் உள்ளது.

தற்போது எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் வராஹ மஹாதேஸிகன் ஸ்வாமிகள் என் மீது கருணை மழைப் பொழிந்து, கருணைக் கொண்டு என் பெயரை "காஞ்சிநேசன்" என்று செல்லமாக அழைப்பது பற்றி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவருடைய ஆச்ரம அலுவல்கள் ஆயிரத்திற்கு இடையே இந்த சிறியேனின் தொகுப்பு நூலான "காஞ்சிதலைவன் கருணைவிழிகள்" என்னும் நூலுக்கு ஸ்ரீமுகம் தந்து ஆசீர்வதித்துள்ளது அடியேனுக்கு கிட்டிய பாக்கியமாகக் கருதுகிறேன். அவருடைய பாதகமலங்களுக்கு என் சிரந்தாழ்ந்த வந்தனங்கள்.

பெருமாள் கொடுத்த திருநாமம் என்ற காரணத்தல் அப்படியே விட்டு விட்டேன். இதில் ஏதேனும் அபசாரம் இருந்தால் ஷமிக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். தேவரீர் என் பெயரை தாங்கள் அழைக்கும் பெயராக “காஞ்சிநேசன்" என்றே இருக்கட்டும் என்று பாக்கியமாக ஏற்றுக் கொள்கிறேன். இனிவரும் என் எல்லாப் படைப்புக்களுக்கும் "ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ வராஹ மஹாதேஸிகன் ஸ்வாமி" அவர்கள் "திருகடாஷம்" படவேண்டுமாறு பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

அன்பன்
நங்கைநல்லூர் இளநகர் காஞ்சிநாதன் (காஞ்சிநேசன்)

Read on the Scribd mobile app

Download the free Scribd mobile app to read anytime, anywhere.