You are on page 1of 1

இலக்கியம் - அன்புடைமை

குறிப்பு:

* பால்: அறத்துப்பால்.

* இயல்: இல்லறவியல்.

* அதிகாரம்: அன்புடைமை.

அன்புடைமை

குறள் 71:

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

விளக்கம் :

அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.

குறள் 72:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

விளக்கம் :

அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு
உரிமையாக வுடையர். அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று.

குறள் 73:

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.

விளக்கம் :

முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.

குறள் 74:

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

விளக்கம்:

அன்பு தரும் ஆர்வமுடைமையை அவ்வார்வமுடைமை தரும். நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை.

குறள் 75:

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

விளக்கம்:

முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.

குறள் 76:

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.

விளக்கம்:

அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார். அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம்.

குறள் 77:

என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

விளக்கம்:

என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.

குறள் 78:

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.

விளக்கம்:

தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும். தளிர்த்தற்குக் காரணமின்மையால்
தளிராதென்றவாறு.

குறள் 79:

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

விளக்கம்:

உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?

குறள் 80:

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

விளக்கம்:

உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?

You might also like