You are on page 1of 2

மாணவர் முழக்கப் பேச்சுப் போட்டி 2016

மாணவர் பார்வையில் ஆசிரியர்

பெருமதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே , நீதி வழுவா நீதி மான்களே

உங்கள் அனைவருக்கும் என் முத்தான முதற்கண் தமிழ் வணக்கத்தை

உரித்தாகுகின்றேன். இந்தப் பொன்னான நேரத்தில் மாணவர் பார்வையில்

ஆசிரியர் எனும் தலைப்பில் உங்கள் முன் உரையாற்ற வந்துள்ளேன்.

அன்புசால் அவையோரே

இப்புவியில் பிறந்த அனைத்து மனிதர்களும் மாணவர் பருவத்தைக் கடந்து வந்திருப்பார்கள். அவர்களின்


வாழ்க்கை ஓட்டத்தில் இந்த மாணவர் பருவம் என்றும் செழுமையாக இருக்கும். இந்த பருவத்தில்
அவர்களுடன் ஒன்றினைந்து பயணிப்பவர்களே ஆசிரியர்கள். காலங்கள் கடந்தாலும் நமக்கு வயதானாலும்
நம்முடைய ஆசிரியர்களுக்கு நாம் எப்போதுமே மாணவர்தான். பாலர்ப்பள்ளி, ஆரம்பப்பள்ளி,
இடைநிலைப்பள்ளி, மேற்கல்விக் கூடங்கள் என ஒவ்வொரு வயதிலும் மாணவர்களின் பார்வையில்
ஆசிரியர்களின் வெவ்வேறாக தெரிகின்றனர்.

எழுத்தறிவித்தவன் இறைவன் எனும் கொன்றை வேந்தனை எழுதிய ஔவை மூதாட்டி எதைச் சொல்லி
விட்டு சென்றார் ? கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர் என்பவர் கடவுளுக்கு நிகராகக் கருதப்படுவதாகக்
கூறினார். ஆம், மானிடராய் பிறந்த ஒவ்வொருவரின் அறிவுக் கண்ணைத் திறந்த ஆசிரியர்களின்
அர்ப்பணிப்பு அளப்பரியது. ஆசிரியர் என்பவர் நம் பெற்றோர்களுக்கு அடுத்த நிலையில் நமக்கு நிழலாக
இருப்பவர். அதனையே , மாதா பிதா குரு தெய்வம் எனும் முதுமொழி வலியுறுத்துகிறது. இப்படி ஆசிரியரை
தெய்வமாக பார்க்கும் பருவம்தான் பாலர்ப்பள்ளி பருவம். இப்பருவ மாணவர்களின் பார்வையில் ஆசிரியர்கள்
தெய்வமே!

அவையோரே,

மாணவர்கள் சிறந்த நுணுக்கத்தோடு கல்வியைக் கற்று வாழ்வில் நட்சத்திரம் போல் மிளிர ஆசிரியரின்
கற்றல் கற்பித்தலே அதற்கு சான்றாகும்.குன்றின் மேலிட்ட விளக்கு போல மாணவர்களின் எதிர்காலம்
பிரகாசமாக அமைவது முற்றிலும் ஆசிரியரின் வழிக்காட்டலிலே அமைகின்றது. அன்று , வெண்கட்டியைப்
பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் நடத்தப்பட்டு வந்தது. இன்றோ, 21 ஆம் நூற்றாண்டின் காலத்திற்கு ஏற்ப
மின்னியல் பயிற்றுத் துணைப்பொருளான தகவல் தொழில்நுட்பம் பங்கு வகிக்கின்றது. ஆகவே,
மாணவர்கள் தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கவும் , வேலை வாய்ப்பைத் தேடிக் கொள்ளவும்
உறுதுணையாக அமைகின்றது. இது போன்ற புதியதொரு கற்பித்தல் மாணவர்கள் ஆக்கத்தோடும்
புத்தாக்கத்தோடும் , ஆழ்நத
் சிந்தனையாற்றலோடும் உருவாக துணைப்புரிந்து வருகின்றது. ஆக
காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு மாணவர்களுக்கு முறையான கல்வியைக் கொடுக்கும்
ஆசிரியர்கள் வானில் மின்னும் நட்சித்திரங்களாகத் மாணவர்களுக்குப் பளிச்சிடுகின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்த 1 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் ஆண்டு வரை மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களை
அனைத்தும் அறிந்த வல்லவர்களாகப் பார்க்கின்றனர். ஆசிரியர்களின் சொல் வேத வாக்காக மாறும் மாயம்
இந்தப் பருவத்தில் காணலாம்.

தொடர்ந்து, இடைநிலைப்பள்ளி மாணவர்கள் பார்வையில் ஆசிரியர்கள் பல பரிமானங்களில் தெரிவர். இந்த


இளம் பருவத்தில், மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களை நடமாடும் “ஹீரோ”வாகவும், தங்களின்
கவலைகளை களையும் மரியாதைக்குரிய நண்பர்களாகவும், தோல்விகளில் சோர்வடையும் தருணத்தில்
தட்டிக்கொடுக்கும் தந்தையாகவும், நம் வெற்றியில் மறைந்திருந்து கண்ணீர் விடும் அன்னையாகவும்
பார்க்கின்றனர். இவர்களின் பார்வையில் ஒரு சில தடுமாற்றங்கள் ஏற்படும் நொடியில் அதனை சரி செய்து
உடனே திருத்தும் ஆசிரியர்கள் மாணவர்களின் பார்வையில் ஒரு சவால் நிறைந்தவராகவும் எதற்கும்
துணிந்தவராகவும் திகழ்கின்றனர்.

அவையோரே,

மேற்கல்வி கூடங்களில் கல்வி கற்கும்போது, கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் மரியாதைக்குரியவராகவும்


போற்றக்கூடியவராகவும் மாணவர்கள் பார்வையில் தெரிவர். பல சவால்களையும், அவமானங்களையும்
சகித்துக்கொண்டு அனைத்து மாணவர்களையும் ஒரே பார்வையுடன் பார்தத
் ஆசிரியர்கள் இப்பருவத்து
மாணவர்களுக்குச் “சாதனை” வீரர்களாகத் தெரிவர்.

நாட்கள் நகர்ந்து வருடங்கள் கழித்து குழந்தைகளுடன் வெளியே செல்லும் முன்னாள் மாணவன் ஒருவன்
தனக்குப் படித்துக் கொடுத்த ஆசிரியரை பார்த்தவுடன் வணக்கம் சொல்லும் தருணம்; கூடவே தன் மகனும்
வணக்கம் சொல்ல வைக்கும் பழக்கம் ஒன்று போதும் மாணவர்கள் பார்வையில் ஆசிரியர்கள் எவ்வாறு
தெரிகிறார்கள் என்று நாம் அறிய.

ஆசிரியரை மதிக்காத எந்நாடும் முன்னேறாது என்று ஓர் அறிஞர் கூறி இருக்கிறார். ஆசிரியரை உண்மை
விழிகளால் காணுங்கள். அவர்களின் உண்மை உருவம் உங்களின் பார்வையில் நிச்சயம் தெரியும்.

கல்வி கற்க வந்த என்னை ஒரு முழு மாணவனாக மாற்றிய ஆசிரியர்களுக்கு நன்றி கூறி உங்களிடமிருந்து
விடைப் பெருகிறேன்.

நன்றி வணக்கம்.

You might also like