You are on page 1of 1

ஹம்ஸ யோகம் – 03

மூலம்: பண்டிச் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா


தமிழில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்
*****************************************************************************

இந்த ஹம்ஸ யோக சாதனையில் சாதகன் அவனது மனதை பிரபஞ்ச பேருணர்வுடன் இணைக்கும்
ஆற்றலைப் பெறுகிறான். அவன் தனது அகவுணர்வை விழிப்படைய வைத்து தான் மனம் உடல்
என்பவற்றைத் தாண்டிய ஆன்மா என்பதை உணர ஆரம்பிப்பான். தன்னுடைய பிராணன், அதனால்
உருவாகும் மனித காந்தம், ஏகாக்கிரப்படுத்தப்பட்ட மனம், அமைதி, எல்லையற்ற சிரத்தை ஆகியவற்றைக்
கொண்டு மனதையும், உடலையும் தனது அகத்தின் ஆழத்திலுள்ள உணவினை அறிய முயற்சி
செய்வான். இந்த சாதனை ஒருவனில் சித்தியானால் அதன் பிறகு அவன் தனது சாதாரண மூச்சின்
மூலமே பிரபஞ்சத்திலிருந்து மகாபிராணனை ஈர்க்கும் ஆற்றலைப் பெற்றுவிடுவான். இந்தச் சாதனையில்
அவன் ஸ்தூல உடலினால் ஒட்சிசனை ஏற்கும் அதேவேளை சூக்ஷ்ம உடலில் பிராணனையும், காரண உடலில்
தெய்வ சக்தியையும் ஏற்கும் தன்மையினை சாதகன் தடையுறாமல் பெறுவான். இந்த சிறப்புமிக்க ஆன்ம
சாதனையான பிரணாயாமத்தை ஸோஹம் சாதனை என்று கூறுவார்கள்.
உள்ளிழுக்கும் மூச்சினை பிரணாயாமத்தில் பூரகம் என்று கூறுவார்கள்; வெளிவிடும் மூச்சினை இரேசகம்
என்று கூறுவார்கள். இரண்டுக்கும் நடுவில் சிறிது நேரம் மூச்சினை நிறுத்துவதை அந்தர் கும்பகம் என்று
சொல்லுவார்கள். வெளிமூச்சு விட்டபின்னர் உள்ளே மூச்சினை இழுப்பதற்கு முன்னர் உள்ள மூச்சின்
நிறுத்தத்தை பாஹிய கும்பகம் என்று சொல்லுவார்கள். ஹம்ஸ யோகத்தில் சாதகன் பூரகத்தின் போது
“ஸோ.. “ என்ற சப்தத்தை நினைவு படுத்த வேண்டும். இந்த சப்தம் வாயினால் உச்சரிக்கப்படக் கூடாது.
மூச்சு உள்ளே செல்லும் போது அதைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் அந்த மூச்சு மூக்குத்துவாரத்தினூடு
செல்லும் போது ஏற்படும் அதிர்வில் இந்த ஒலி வருவதை ஆழமான ஏகாக்கிரம் மூலமும், சிரத்தையுடனும்
அவதானித்து உணரவேண்டும். இந்த சப்தம் புல்லாங்குழலில் இருந்து வரும் ஒலியைப் போன்று
உணரவேண்டும். இப்படி உணரத்தொடங்கினால் சாதகன் தெய்வீகத்தின் ஆற்றலையும், செய்தியையும்,
உணரத்தொடங்குவான். இந்த நாதமானது மூச்சின் வழியே உள்ளே சென்று எமது அகத்திலும், உடலிலும்
அந்த பிரபஞ்ச மூலசக்தியின் ஆற்றலைப் பதிவிக்கிறது.
உள்ளே சென்ற மூச்சினை அந்தர் கும்பகம் செய்யும் சாதகன் தன்னுடைய ஆன்மாவினை முழுமையாக
அந்த பரப்பிரமத்திற்கு ஸோ என்ற நாதத்தினால் அர்ப்பணிக்கும் பாவனையினைச் செய்ய வேண்டும்.
அதன் பிறகு இரேசகத்தின் போது அவன் “ஹம்” என்ற சப்தத்தினை இருதயத்திலிருந்து உணர்நது ்
வெளிமூச்சினை நிகழ்த்த வேண்டும். இப்படி வெளிமூச்சுப் போகும் போது அவன் “ நான்” என்ற
அகங்காரமும் முழுமையாக தன்னை விட்டு நீங்குவதாக பாவிக்க வேண்டும். பிற்கு சில வினாடிகள்
மூச்சினை வெளி நிறுத்தி பாஹ்ய கும்பகம் செய்ய வேண்டும். இப்படி பாஹ்ய கும்பகம் செய்யும் போது
“தற்போது அகம்காரம் சார்ந்த அறியாமைகள் அற்றுப்போகிறது; எனக்குள் இருக்கும் அனைத்தும்
பிரம்மத்தினுடைய பிரதிபலிப்பு” என்ற பாவனையைச் செய்ய வேண்டும். இப்படி ஒரு சாதகன் எப்போது
வாழும் நிலையைப் பெற்றால் அது வேதாந்தம் சொல்லும் சிவோஹம், சத்சித்தானந்தம் என்ற
நிலையாகும்.
தொடரும்…

You might also like