You are on page 1of 8

லீலை

ஆஞ்சனேயா ஆட்டோ ஒர்க்ஸிற்கு வந்த மாணிக்கம் புல்லட்டை விட்டு இறங்காமலேயே காலை ஊன்றி நின்றபடி
“ சீனு, நம்ம வண்டி வேலை செய்யோனுமப்பா” என்றான். “உட்டுட்டு போங்கண்ணா செக் பண்ணீட்டு என்ன
போயிருக்குது, என்ன மாத்தோனு, எவ்வளவு நாள்ல எடுத்துக்ளாம்னு மத்தியானமாச் சொல்லீர்ரனுங்ணா”
என்றதும்

” அட இதில்ல சீனு அது தானப்பா எம் மச்சினனுக ரெண்டு பேரும் வசூலுக்கு எடுத்துக்கிட்டு போவானுகளே
அந்த டிவீசுக் கட்டைவ ரெண்டு ஊட்ல கெடக்குதல்ல அதுகளத்தே”.

“டீவிசா” என இழுக்க

“என்னப்பா இழுக்கற” என்றான் மாணிக்கம்.

”ஸ்பேர் எல்லாம் அதிகமா வாரதில்லைங்ணா” என்ற சீனு

“வேல தெரிஞ்ச பசங்களும் இல்ல” என முனகினான்.

உடனடியாக முடியாது என்று சொல்லிவிடவும் முடியாது. அவன் தயவு எப்போதாவது சீனுவுக்குத் தேவைப்படும்.

“சீனு நாளைக்கிப் பசங்க எவனையாவுது வூட்டுக்கு வரச் சொல்லு அங்கயே இருந்து வேலையை முடிச்சிறச்
சொல்லு” என்று சொன்னவுடன் பதிலுக்காகக் கூட நிற்காமல் கிளம்பி விட்டான் மாணிக்கம். தோரனை தூள் பறக்க
ஒரு ஆணையைப் போல சொல்லிவிட்டு புடு புடுக்கும் புல்லட் சத்தத்தோடு மாணிக்கம் போவதையே பார்த்துக்
கொண்டிருந்தான் சீனு.

மாணிக்கத்திற்கு ஆலந்துறையில் ஒரு உரக்கடை உண்டு, உரக்கடை பேருக்கு இருந்தது முக்கியமான தொழில்
தினசரி வசூல் அதாவது “கந்துவட்டி”. அந்த சிறு நகரத்தில் மட்டுமின்றி பேரூரிலிருந்து சாடிவயல் வரை தினசரி
வருமானம் பார்க்கக்கூடிய அனைவரும் மாணிக்கத்தை ஏதாவது ஒரு வேளையில் அனுகியிருந்தனர்.அவனும்
கடன் கொடுத்து தினசரி வட்டியோடு வசூல் செய்து கொண்டிருந்தான். மாணிக்கத்திடம் இரண்டு டி.வி.எஸ்.
வண்டிகள், ஒரு ஸ்பிளண்டர், அது போக ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒன்றும் இருந்தது.கார் தனிக்கணக்கு. தினசரி
வசூல் வேலைகளுக்காகத் தனது ஒன்று விட்ட மாமனார்கள் இருவரின் மகன்கள் இருவரை வேலைக்கு
வைத்திருந்தான். சரியாகப் படிப்பு ஏறாத, விவசாய வேலைகளுக்கும் வளையாத அவர்கள் இருவரும் இந்த
வேலையை விருப்பமாகவே செய்தனர். ஆனால் அவர்களுக்கு வேலைகளுக்காகக் கொடுக்கப்பட்டிருந்த அந்த
டி.வி.எஸ் வண்டிகள் மீது மட்டும் புகார் இருந்துகொண்டே இருந்தது. இந்த வண்டிகளில் வசூலுக்குச்
செல்வதற்காகவே தங்கள் மாமா மாணிக்கம் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என நினைத்தனர்.

“டேய் குமாரு,எல்லா சைஸ் ஸ்பேனர்லியும் ஒரு செட்டு போட்டுக்க ரிஞ்ச்சு,ரிங்ஸ்சு,பாக்சு எல்லா ஒரு செட்டு
எடுத்து வெச்சுக்க, வண்டி ரெண்டயு நல்லாத் தரவா செக் பண்ணீரு எதெல்லா மாத்தோனும்னு மொதல்ல பாத்துக்க
அப்பறமா உக்கடம் போயிட்டு வந்துரு. சும்மா சும்மா அது வேணு இது வேணும்னு பொலுதுனிக்கி போவக்குடாது,
சாப்பாடு கொனாந்திருந்தா அதயுமெடுத்துக்கிட்டு போயிரு மாணிக்கனூடு தெரியுமில்ல” “ஆஞ்சனேயா ஆட்டோ
ஒர்க்ஸ்”சின் முதலாளி சீனு என்கிற சீனிவாசன் குமாரிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

” தெரியும்ணே அன்னைக்கி புல்லட் பஞ்சர்னு வீல் கழட்ட உங்க கூட வந்திருந்தன்ல”

“ அதேதே அந்த வண்டி கேட்டுக்கு வெளீல நின்னுதுதல்ல அந்த ஊடுதே இப்ப உள்ளார போயி வண்டி
வேலைக்கு வந்திருக்கறனுங்கன்னு சொல்லு “ தலையாட்டிய குமார் தான் ஆஞ்சனேயா ஆட்டோ ஒர்க்ஸ்”சில்
மெக்கானிக்காக வேலை செய்யும் பையன். பையன் வயதைத் தாண்டிவிட்டாலும் “பையன்” என்றே
அழைக்கப்பட்டான். குமார் பத்து வயதுப் பையனாக இருக்கையில் இருந்து இங்கு வேலை செய்கிறான். ஒரு
பதினைந்து வருடமிருக்கும். ரைஸ்மில் வேலைக்காகத் தெற்கே இருந்து வந்த அப்பன் இவனையும் இவன்
அம்மாவையும் விட்டு விட்டு லாரியில் அடிபட்டுப் போய்ச்சேர்ந்து விட. இவன் இங்கேயும் இவன் அம்மா
கூலி வேலைகுப் போயும் ஜீவிகிறார்கள். டீவிஎஸ் சில் துவங்கி 250 சிசி வண்டி வரை எல்லாம் வேலை
செய்வான்.முதலாளி சீனிவாசன் என்கிற சீனுவுக்கு குமார் மீது அபார நம்பிக்கை. மற்றவர்கள் கூட ஸ்பேர்ஸ்
வாங்குவதில் சின்னதாய் கமிஷன் பார்ப்பது சீனு இல்லாத பொழுதில் வரும் சின்ன வேலைகளைச் சீக்கிரமாக
முடித்து சில்லரைகளைப் பாக்கெட்டில் போட்டுக்கொள்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவது உண்டு ஆனால்
குமார் அப்படிப்பட்ட ஆள் இல்லை அதுமட்டுமில்லாது குமார் இருந்தால் அவர்களை அந்த வேலைகளைப்
பார்க்கவும் விட மாட்டான். வேலையிலும் படு துல்லியம் மொத்தத்தில் இவன் ஆளு வேற மாதிரி எனச் சொல்லும்
சீனுவுக்கு அவன் மீது பிரியமும் நம்பிக்கையும் அதிகம்.

ஆலந்துறை தாண்டிச் செல்லும் தார்ச் சாலையில் மாதவராயபுரத்துக்கு முன்னதாகவே வலப் பக்கமாகப் பிரியும்
கிளைச் சாலையில் ஒரு அரைக் கிலோமீட்டர் தூரம் போனதும் அதிலிருந்து மீண்டும் வலப்பக்கமாகவே பிரியும்
மண்சாலையில் தென்னந்தோப்புக்கு இடையில் மாணிக்கத்தின் வீடு. அது வீடல்ல பங்களா. அந்த பிரமாண்டமான
கேட்டில் காவலுக்கென்றெல்லாம் யாருமில்லை. வண்டியை நிறுத்தி இறங்கி இரும்புக் கதவைத் தள்ளியவுடன்
திறந்து கொண்டது. கதவிலிருந்து ஒரு எழுபது எண்பதடி தூரத்தில் வீடு இருந்தது. வீடுவரைத் தான் ஓட்டிவந்த
கடையின் ஸ்கூட்டி வண்டியை ஓட்டிச் செல்வதா இல்லை இங்கேயே நிறுத்திவிட்டு நடந்து செல்வதா என
யோசித்தான். தான் எடுத்து வந்திருந்த டூல்ஸ் பையின் கனத்தை உத்தேசித்து வண்டியிலேயே போகலாம் என
வண்டியை எடுத்து ஸ்டார்ட் செய்கையில் தான் அந்த குரைப்போசை கேட்டது. எவ்வளவு பெரிய நாய்கள் என
குமார் மிரண்டு விட்டான். எந்த வெளிநாட்டு வகைப் பெயர் கொண்ட நாய்கள் எனத் தெரியவில்லை. இடப்பக்கம்
ஒன்றும் வலப்பக்கம் ஒன்றுமாய் ஆள் மார்பு உயரத்திற்கு நின்றன. நல்ல வேளை சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன.
நாய் குரைக்கும் சத்தம் கேட்டுச் சாவகாசமாய் ஒரு கிழவி வந்து பார்த்தாள் வண்டியை ஓட்டி வந்து ஸ்டேண்ட்
போட்டு நிறுத்திய குமார் “ வண்டி வேலை செய்ய வந்திருக்கிறெ ஆத்தா” என்றான்.”டீவீசுகளயா, இதா மேக்கால
வண்டிச் சாலைல வண்டிக நிக்கும் பாரு” எனக் கைகாட்டியது.

பங்களாவின் பின்புறமாக வந்து வலது புறமாக திரும்பும் இடத்தில் இருந்தது வண்டிச் சாலை. முன்பு மாட்டு
வண்டிகள் இருந்த பொழுது மாட்டு வண்டி நிறுத்தக் கட்டியது. அதன் நாலாபுறமும் தென்னைமரங்களாய் விரிந்து
கிடந்தது. வண்டிச் சாலையில் நின்ற பழைய டிவிஎஸ் வண்டிகள் இரண்டை எடுத்து வெளியே நிறுத்தி ஸ்டார்ட்
செய்து பார்த்துக் கொண்டிருந்தான் குமார். சிறிது நேரத்தில் அந்த கிழவி அங்கு வந்தது அங்கிருந்த ஓரடி உயரத்
திட்டில் அமர்ந்து சுருக்குப் பையை எடுத்து வெற்றிலை பாக்குப் போட்டு மென்று கொண்டு குமாரையே பார்த்துக்
கொண்டு அமர்ந்திருந்தது. குமார் அதை கண்டும் காணாமல் வேலையைத் தொடர்ந்தான். ஒரு அரை மணி நேரம்
கழிந்த பிறகு “ந்தேப்பா தம்பி காப்பி ,டீ எதுங் குடிக்கிரியா வெச்சாருட்டா” என்றது. “ வேண்டாத்தா” என்றான்
குமார். அப்படியே கிழவி குமாரோடு வாயடிக்கத் துவங்கிவிட்டது. அந்த கிழவியின் பெயர் பொன்னம்மா என்றும்
சமையல் மற்றும் வீட்டு வேலைகளை இங்கு செய்து வருவதாகவும் சொன்னது. அவ்வப்போது உள்ளே செல்வது
சிறிது நேரம் கழித்து வருவது என்று இருந்தது. குமார் மதியம் சாப்பிட கைகழுவியபோது குடிக்கத் தண்ணீர்,
பொரியல் ,மோர் எனக் கொண்டுவந்தது.” நீ நாளைக்கி இங்க வேலைக்கு வந்தா சாப்பாடு எடுத்துக்கிட்டு
வரவேண்டாம்னுமு இங்கியே சாப்டுக்லாமுனுமு அம்மிணி சொல்லுச்சு” என்றது பொன்னம்மாக் கிழவி ”அதாரு
ஆத்தா அம்மிணி” என்றான் குமாரு. “மாணிக்கப்பஞ் சம்சாரம்” என்றது கிழவி. “நாம் பாக்கிலியே” என்றான்
குமார்.”மேல் ரூம்பு சன்னல்ல இருந்து இங்கதே பாக்குது பாரு” என்றது பொன்னம்மாக் கிழவி. தலையை உயர்த்திப்
பார்த்தான்.மேல் ஜன்னலில் இருந்து பளீரென்று ஒரு முகம் மறைந்தது.”செரி ஆத்தா இங்கயே சாப்டுக்குற” என
எழுந்து கைகழுவப் போனான் குமார்.

மறுநாள் காலை நேரமாகவே வந்திருந்தான் குமார். முதல் நாள் இரவு உக்கடம் சென்று தான் வாங்கி வந்திருந்த
வண்டிக்குத் தேவையான ஜாமான்கள் சிலதையும் கொண்டுவந்திருந்தான். மாணிக்கத்தின் புல்லட் இன்னும்
கிளம்பியிருக்கவில்லை.குமார் வேலையைத் துவக்கி ஒரு பத்து நிமிடம் கூட இருக்காது. ஒரு வண்டி மோதிய
வேகத்தில் முன்கதவுகள் அகல விரிய தும்பைப்பூ வெள்ளையில் வேட்டி, கைவைத்த பனியன், கழுத்திலே துண்டு
பறக்க ஒரு அறுபது எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஆக்டிவாவில் வந்து இறங்கினார். இல்லை அவர்
இறங்கக் கூட இல்லை காலூன்றி நின்றபடி” டேய் மாணிக்கா டேய்” எனக் கத்தினார். மாணிக்கம் ஓடி வருவது
தெரிந்தது “தெவுசாமணி பொண்டாட்டி எங்கடா”என்றது பெரியவரின் குரல் அதற்குள் நாய்கள் குரைக்கத் துவங்கி
விட்டன. மாணிக்கத்தை எதும் பேசவிடாமல் “பொழுதுக்குள்ள அவம் பொண்டாட்டி அவனூட்ல இருக்கோனு அது
பண வந்தாலோ வருலீனாலோ ஆமா” என்றார் பெரியவர்.“அந்த நாய் அதுக்குல்ல அங்க வந்துருச்சா” என்றான்
மாணிக்கம். “டேய் நா வாய்ச் சகுனம் பாக்குறவன்டா பல பல்லுப் படுகையில ஒரு பல்லுப் பொல்லாப் பல்லா
இருந்தாலும் பலிச்சிறும்டா வேண்டாமடா எவஞ் சொன்ன சொல்லோ ஏழு வருசமாயிம் இன்ன எம்பட ஊடு
தீபமெரியாமக் கெடக்குதுடா வேண்டாம்டா” அந்தக் குரலின் மொத்தக் கம்பீரமும் போய் ஒரு இறைஞ்சலைப்
போலத் தேய்ந்தது. அப்படியே வண்டி திரும்பி புறப்பட்டுச் சென்று விட்டது. ஒன்றுமே புரியாவிட்டாலும்
கம்பீரமாய் ஆரம்பித்து கடைசியில் ஒரு கெஞ்சலைப் போல முடிந்த அந்த குரல் குமாரை ஏதோ செய்தது. வேலை
எதுவும் செய்யாமல் அப்படியே நின்றான் குமார். ஏதேச்சையாக மாடி ஜன்னலை பார்த்தான் யாருமில்லை. சிறிது
நேரத்தில் மாணிக்கம் வந்தான் வேலை எப்படி போகிறது எப்பொழுது முடியும் என விசாரித்துப் போனான்.சற்று
நேரத்தில் அவன் புல்லட் கிளம்பியது. அவன் போன பின்னே நேற்று வந்திருந்த பொன்னம்மாக் கிழவி கூட
வரவில்லை.

மதியம் சாப்பாட்டு நேரம் வந்ததும் தான் அந்த கிழவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இன்று சாப்பாடு
கொண்டுவரவில்லை என்ற எண்ணம் எரிச்சலாய் உருவானது குமாருக்கு. என்ன வேலை இருந்தாலும் மதியம் ஒரு
மணி ஆனால் வேலையை அப்படியே விட்டு விட்டு சாப்பிடப் போகச் சொல்லி விடுவான் சீனு, குமாருக்கும்
அப்படியே பழகி விட்டது. பசி அதிகமாக அதிகமாக வீட்டுக்குள் சென்றே கேட்டுவிடுவது என்ற முடிவுக்கு
வந்தான் குமார். “ ஏனுங்க ஏங்க யாருங்க வீட்ல” என்ற படி வீட்டுக்குள் நுழைந்தான் குமார். சட்டென அவன்
முன்னாள் பிரசன்னமானாள் மாணிக்கத்தின் மனைவி. சாண்டில்யன் கதைகளின் நாயகி அறிமுகத்தையோ,
கல்கியின்பெண் வருணனைகளையோ, படித்துப் பழக்கமில்லாதாதல் அவள் அழகை எப்படியும் வருணிக்கத்
தெரியாமல் வெறித்துப் பார்த்தபடி நிலை மறந்து நின்றான் அந்த மெக்கானிக் பையன் குமார்.

“ஒன்னுமில்லீங்க பொன்னம்மாத்தாவ காலையிலிருந்து பாக்குலீங்க உள்ளார கீது இருக்குதானு பாக்க வந்தனுங்க”

“அது காலைல நேரமே ரேசன் கடைக்கு போயிருச்சு”

“ரேசன் கடைப் பொருளெல்லாம் வாங்குவீங்களா”

“ஏன் வாங்கக் கூடாதா குமாரு”

…….

“ ரேசன் அரிசியில தான் சாப்பாடு செய்வோம் , ரேசன் பருப்புல தான் குழம்பு, எண்ணெய் கூட ரேசன்
கடை பாமாயில் தான் குமாரு”

குமார் என்னும் தன் பேர் அவளுக்கு எப்படி தெரியும் என்ற வியப்பின் அதிர்வு அடங்கும் முன்பாக ரேசன்
அரிசியிலும், ரேசன் பொருட்களிலும் தான் இவ்வளவு பெரிய பணக்கார வீட்டில் சமைக்கிறார்கள் என்பது
அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“ஏனுங்க சும்மா வெலையாட்டுக்குத்தானுங்க சொல்றீங்க”

“ உங்கிட்ட எனக்கு என்ன விளையாட்டு குமார்”

அவள் குரல் அவள் யார்,குமார் யார் என்பதையும் அவன் அவளிடம் எவ்வளவு உரிமை
எடுத்துக்கொள்ளலாம் என்பதை உணர்த்துவதாய் தெரிய. அவள் அழகு, அவனுள் ஏற்படுத்தியிருந்த
மெல்லுணர்வுகளை எல்லாம் மேலும் வளர விடாமல் முடக்க சடக்கென வெளியெ வரத் திரும்பினான்.

“ஓய் குமாரு என்ன விசயமா உள்ள வந்த அத சொல்லு “

அவள் குரல் காதை இழுத்து திருகி திருப்பி நிறுத்தியதைப் போல் இருந்தது.

“ அதாங் மொதல்லயே சொன்னனுங்களே பொன்னம்மாத்தாவ காலையிலிருந்து பாக்குலீங்க “

“அத எதுக்கு நீ பாக்குறே”

“த் த் தண்ணி வேணும்முங்க”

ஓரு ஜக்கில் அவள் தண்ணீர் கொடுக்க வாங்கிக் குடித்த குமார் விரைவாகத் திரும்பினான்.” வருட்டு அந்த
கெழவி” என மனதுக்குள் கறுவியபடி.
அவள் முன் பரிதாபகரமாக சற்று முன் மாறிய குமார் முகத்தை நினைத்து புன்னகைத்தபடி குமாரின்
முதுகையே வெறித்துப் பார்த்தாள் மாணிக்கத்தின் மனைவி லீலா.

மீண்டும் வேலையை ஆரம்பித்தான் குமார். ஒரு அரை மணி நேரம் போயிருக்கும் சட்டென தலையை
உயர்த்தி மாடி அறைச் சன்னலைப் பார்த்தான் யாருமில்லை. அருகில் அவனைப் பார்த்துப் புன்னகைத்த படி
நின்றிருந்தாள் லீலா.

குமார் சாப்பிட்டு முடித்துக் கைகழுவிக் கொண்டிருக்கையில் பொன்னம்மாக் கிழவி ரேசன் கடையிலிருந்து


வெறுங்கையோடு திரும்பி வந்தது. குமார் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ரேசன் பொருட்களை வாங்கி
அதன் மகள் வீட்டில் கொடுத்து விட்டு வரும் விசயம் லீலா மூலம் சற்று முன் அவனுக்குத் தெரிந்திருந்தது.

“ஏத்தா, இங்கயே சாப்படலாம்னு சொல்லீட்டுப் நீ பாட்டுக்கு போய்ட்ட”

“இப்பத்தே சாப்புட்டியல்ல” என்ற கிழவியின் குரலில் ஆச்சர்யமா, வெறுப்பா இன்னதெனெ விளங்கவில்லை.

“என்னமா பயப்படுத்தீருச்சு தெரியுமா சோறு போடங்காட்டி அந்தக்கா”

“யாரு லீலாவா?”

“ம்க்கூம்”

அதற்குள் பொன்னம்மாவை லீலா அழைக்க பொன்னம்மாக் கிழவி உள்ளே சென்று விட்டது. குமார் அவன்
இடத்திற்குத் திரும்பினான் சற்று நேரம் சும்மா உட்கார்ந்திருந்தவன் மீண்டும் வேலையைத் தொடர்ந்தான்.

சற்று நேரத்தில் லீலா அங்கு வந்தாள். முன்பு பொன்னம்மா அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்து
கொண்டாள்.

பொன்னம்மா அங்கு வருகின்ற ஒவ்வொரு முறையும் எதாவது வேலை சொல்லி திருப்பி அனுப்பிக்
கொண்டிருந்தாள் லீலா. பிறகு கிழவி அங்கு வரவே இல்லை.

லீலாவும் குமாரும் சிரித்தபடி பேசிக்கொண்டிருப்பதைக் கிழவி எரிச்சலாய்ப் தூரத்தில் இருந்து பார்த்தது.


லீலா, அதை ஒரு கண்ணில் கவனித்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் காலையில் எழுந்தபொழுது தான் லீலா அங்கு இல்லாததைக் கண்டான் மாணிக்கம். அவனுக்கு
முன்பாக அவள் எழுந்து சென்றது இந்த ஏழு வருடங்களில் நடந்திராத அதிசயம். கீழே வந்ததும்
பொன்னம்மா காபி கொடுத்தாள். குடித்தபடி வெளியே வந்த மாணிக்கம் மாடுகள் இருக்கும் கட்டுத்தரைப்
பக்கம் போனான். கட்டுத்தரை வேலைகளை முடித்து விட்டு பழைய உரல் ஒன்றின் மீது அமர்ந்து பீடி
குடித்துக் கொண்டிருந்த ராமு மாணிக்கத்தைப் பார்த்ததும் எழுந்தான்”பூ வயலுக்கு மருந்தடிக்க ராஜேந்தர
வந்தானா ராமு?” “நேரமே போயிருப்பானுங்க வெய்ய வரதுக்கு முன்னாடி வேலைய முடிகோனுமில்லைங்க.
அவனுக்கு சொல்ல வேண்டியதில்லைங்க”. காபித் தம்ளரை அங்கேயே ஒரமாக வைத்த மாணிக்கம்

”ம்ம் பீடி ஒன்னு குடு, இதென்ன கணேஸ் பீடியா?”

“இந்தாங்க, பேரு தெரியலீங்க” நீட்டிய பீடியையும், தீப்பெட்டியையும் வாங்கிக் கொண்டான் மாணிக்கம்

“தெவுசாமணி சம்சாரத்த கூட்டிக்கிட்டு போய்ட்டானா?”

“நேத்து சாயந்திரமே சத்திவேலு கணக்கு வந்துருச்சு உட்ரலாம்னு போன் பன்னுச்சுன்னு சங்கர


காரெடுத்துக்கிட்டு வந்து ஊட்லயே உட்ரம்னு கூட்டிக்கிட்டு போய்ட்டாப்டீங்க”

“சாவி பத்தரம் நீயே வெச்சிரு “ என்றபடி அங்கிருந்து கிளம்பினான் மாணிக்கம்.

காலையில் சாப்பிடாமலே வெளியே கிளம்பிய மாணிக்கம் மதியச் சாப்பாட்டுக்கு வீடு வந்த பொழுதுதான்
லீலா வீட்டில் இல்லை என்பதைப் பதட்டத்தோடு பொன்னம்மா சொல்லத் தெரிந்து அதிர்ச்சியானான். கொஞ்ச
நாட்களாகப் பேசிக்கொள்வதில்லை இருவரும் என்பதால் காலையில் இங்கு தான் எங்காவது இருப்பாள் என
நினைத்துக்கொண்டிருந்து விட்டான். திருமணமான இந்த ஏழு வருடங்களில் பல முறை லீலா சண்டை
போட்டிருக்கிறாள். மாணிக்கம் செய்கிற வட்டித் தொழில் அவளுக்குப் பிடிக்கவேயில்லை. பணத்தை நீண்ட
நாட்களாகத் தராமல் இழுத்தடிப்பவர்களின் மனைவியையோ, மகளையோ தூக்கிக் கொண்டு வந்து
தோட்டத்து வீட்டில் பணம் வரும் வரை அடைத்து வைத்து வசூலிப்பதை அவள் சுத்தமாக விரும்பவில்லை.
அதை முன்னிட்டு பலமுறை சண்டை போட்டிருக்கிறாள்.அந்தப் பாவம் தான் தங்களுக்கு இவ்வளவு
நாட்களாகக் குழந்தை இல்லை எனப் பலமுறை மாணிக்கத்திடம் சொல்லிப் பார்த்து விட்டாள். நேற்று
மாணிக்கத்தின் அப்பா வந்து சொன்னதில் இன்னும் மனம் வெம்பியிருப்பாள்.

யோசனையில் ஆழ்ந்தான் மாணிக்கம் கோவித்துக்கொண்டு சென்றிருந்தாள் அவள் அம்மா வீட்டுக்குத்தான்


போயிருப்பாள். அப்படிப் போயிருந்தாள் இந்நேரம் மாமனார் போன் செய்திருப்பார்.
பெருந்துறையிலிருக்கும் அவளது அக்கா வீட்டுக்குப் போயிருந்தாலும் சகலை போன் செய்திருப்பார்.
வேறெங்கு போயிருப்பாள். உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் நீண்ட நேரம் யோசனையிலேயே
இருந்தான் மாணிக்கம் நேத்தைக்கு அந்தக் கெழவன் வந்து ஆச்சா, போச்சான்னு குதிக்கலைனா அந்த
டீக்கடை தெய்வசிகாமணி பொண்டாட்டிய அடைச்சு வெசிருக்கறதே அவளுக்குத் தெரியாது. அது
தெரிந்ததும் தான் இவள் ஏதாவது முடிவு எடுத்திருப்பாள். என்ற எண்ணம் உதித்த அடுத்த வினாடி முடிவு
என்ற சொல் மனதைப் பிறாண்டியது வெகு வேகமாக எழுந்தவன் சட்டை போடாமல் வெறும் மேலோடு
தோப்புக்குள் ஓடினான் வடக்காலக் கிணறு, சற்று தொலைவிலிருந்த தெக்காலக் கிணறு இரண்டையும்
துப்புரவாகப் பார்த்தவன் காலோய்ந்து, தளர்ந்து மெதுவாக வீடு நோக்கி வந்தான்.

“சேச்சே அவளென்ன அப்புடிப் பொம்பளையா, யாருகிட்ட இதச் சொல்லுவ, எங்கீனு போய்த் தேடுவன்,
அத்தனை சண்டைலியு ஒரு அடி வச்சிருப்பனா உன்ன, கடங்கொடுத்தவன் பொம்பள புள்ளையத்
தூக்குனாலும் உன்னத் தவர இன்னொருத்திய தொட்டுருப்பனா என்னளே கொற வெச்ச உனக்கு லீலாக் கழத
முன்ட” மனதுக்குள் அரற்றியவாறு சோபாவில் தொப்பெனச் சத்தமெழ விழுந்தான் மணிக்கம்.
சமையலறையிலிருந்து ஓடிவந்து பயமாய் அவனைப் பார்த்தது பொன்னம்மாக் கிழவி.

சற்று நேரத்தில் சீனிவாசன் அங்கு வந்தான். “என்ன ஊட்ல ஒருத்தரும் இல்லையா?” என்றபடி ஹாலுக்குள்
வந்தவன் மாணிக்கனைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி” ஒன்னுமில்லீங்கண்ணா பேனர் ஒன்னு பைய்ய
வேலைக்குக் கொண்டாந்த பையில இருக்குதுங்க அதானுங் எடுத்துக்கிட்டுப் போலாமுன்னு வந்தனுங்க”
என்றபடி திரும்பினான். குமாரும் வண்டி வேலையை நேற்றே முடித்து விட்டான். நேற்று சாயங்காலம்
போகிற வழியில் பார்த்தவன் சொல்லி விட்டுப் போனான். போனவன் ஸ்பேனர் பையை விட்டுவிட்டுப்
போயிருக்கிறான்.திரும்ப உள்ளே வந்த சீனி “என்னங்ணா டீவீசு வண்டியையுங் காணாம் வேலைக்கு வந்த
பைய்யனையுங் காணாம்?” என்றான்.

“வண்டிய உன்னோட ஆளு நேத்தே ரெடி பண்ணீட்டானே, வண்டிய இன்னைக்குக் காத்தாலயே அந்தத்
திருவாத்தானுக வசூலுக்கு எடுத்துக்கிட்டுப் போயிருப்பானுக” என்றான் மணிக்கம்.

“குமாரு லீவு போட்டுட்டானாட்ட இருக்குதுங்க இன்னைக்கு வருலீங்களா அதானுங்க இங்கிருப்பான்னு


நெனச்சுட்டனுங்ணா” என்றவன்

“செரி வாரனுங்க பில்ல கடைக்கு குடுத்து உடறனுங்க” என்றவன் மாணிக்கத்திடம் தலையாட்டி


விடைபெற்றுக் கிளம்பினான்.

மௌனமாக அருகில் வந்து நின்றாள் பொன்னம்மா.என்ன என்பதைப் போல பார்த்தான் மாணிக்கம்.

கடை பூட்டும் நேரம் ஆஞ்சனேயா ஆட்டோ ஒர்க்ஸ் முன்னாடி காரில் வந்து நின்றான் மணிக்கம். “ சீனு
இங்க வா ‘ என அழைக்க அருகில் வந்த சீனுவிடம் “அந்தப் பையன் குமாரு எப்புடி சீனு? என்றான்

“ ஏனுங்கண்ணா திடீர்னு அவனப் பத்தி கேக்கறீங்க”

“வீட்ல வெச்சிருந்த பணத்தக் கொஞ்ச காணாம் குமாரும் உள்ளயெல்லாம் வந்தான்னு பொன்னம்மா


சொல்லுது”

“அய்யோ அண்ணா தங்கமான பைய்யனுங்கண்ணா, கீழ கெடந்தாக் கூட எடுத்துக் குடுத்துட்டு


வந்துருவானுங்களே”

“அவனூடு எங்க இருக்குது “

“இங்க தானுங்க போளுவம்பட்டீங்க”

“ஊடு தெரியுமல்ல அப்பச் சீக்கிரம் பூட்டீட்டு வந்து ஏறு” என்றான் மாணிக்கம் ஏதோ நினைவு வந்தவனாய்

” ஏஞ் சீனு அவுனுக்குப் போன் நெம்பர் இருக்குதா?”


“இருக்குதுங்ணா நானும் சாயந்திரத்துல இருந்து கூப்புடுறனுங்க சுச் ஆப்னே வருதுங்க”

“நெம்பர் குடு “ என வாங்கியவன் பதட்டத்தோடு கால் பட்டனை அழுத்தினான்

சுவிச் ஆப் என்ற ரெக்கார்டேட் வாய்சே வந்தது

அதற்குள் கடையைப் பூட்டி விட்டு வந்த சீனு காருக்குள் உட்கார்ந்தான் போளுவப்பட்டியில் குமார் வீட்டு
முன் காரை நிறுத்தி விட்டு இறங்கினார்கள்.

பூட்டுத் தொங்கியது

ஆத்திரத்தில் கதவை ஓங்கி உதைத்தான் மாணிக்கம்.

அதிர்ச்சியாக அவனைப் பார்த்தான் சீனி

கார் நின்ற சத்தமும் கதவு உதைபட்ட சத்தமும் கேட்டு அக்கம் பக்கத்தினர் மூன்று நான்கு பேர்
கூடிவிட்டனர். சத்தமில்லாமல் காருக்குள் சென்று மாணிக்கம் உட்கார சீனுவைச் சிலர் அடையாளம் கண்டு
கொள்ள குமாரும் அவனது அம்மாவும் சொந்த ஊருக்குப் போவதாகச் சொல்லிப் போனதாகச் சிலர்
சொல்ல அவர்களிடம் தலையசைத்து விடைபெற்று காரின் உள்ளே வந்தான்.ஊருக்குப் போயிருப்பதாக
வெளியே பேசியது மாணிக்கத்திற்கும் கேட்டிருந்ததால் மாணிக்கம்

“சீனு அவனோட சொந்த ஊரு தெரியுமா?”என்றான்

“தெரியும்ணா ஒரு தடவ கெடா வெட்டுக்குப் போயிருக்கிறேன் மதுரைப் பக்கம் மதுரைல இருந்து பேரையூர்
போற வழில டி.கல்லுப்பட்டி”

“நல்லது அப்ப வா போலாம் “

“அண்ணா காலைல போலாம்ணா, சம்சாரம் வேற உடமாட்டா … அதுவுமில்லாம அவன் அப்படிப்பட்ட


பையனுமில்லைங்க நல்லாத் தேடிப் பாக்கலாமில்லைங்கண்ணா” என இழுக்க

“அட வாப்பா” என்றபடி காரைக் கிளப்பினான். சீனுவின் வீடு மெயின் ரோட்டில் உள்ளது அது
மாணிக்கத்திற்குத் தெரியும்

“இந்தா இத ஊட்ல குடுத்துட்டு நாளைக்கு வந்துருவன்னு சொல்லீட்டு வா” என நூறு ரூபாய்த் தாளாகப்
பத்தாயிரம் இருக்கிற கட்டொன்றை எடுத்து நீட்ட வாங்கிக்கொண்ட சீனு “காணாமப் போனது பெரிய
அமௌண்ட் போல” என்ற படி உள்ளே போனான். மாணிக்கம் சங்கருக்குப் போன் செய்து மெயின்
ரோட்டிற்கு வந்து நிற்கச் சொன்னான். அவன் சொந்த வண்டி வைத்து வாடகைக்கு ஓட்டுபவன் என்றாலும்
மாணிக்கம் நீண்ட தூரப் பயணம் என்றால் சங்கரை அழைப்பதே வழக்கம்.மாணிக்கத்தின் பல பைனான்ஸ்
திரைமறைவு வேலைகளுக்குப் பயன்படுபவன். சீனு வண்டியில் ஏறியவுடன் வண்டியைக் கிளப்பிய மாணிக்கம்
ஆலந்துறை ஹைஸ்ஸ்கூல் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி அங்கு நின்ற சங்கரிடம் வண்டியைக் கொடுத்து
விட்டு பின்னாடி ஏறி உட்கார்ந்து கொண்டான். மதுரை வரைக்கும் என்று முன்பே போனில்
சொல்லியிருந்ததால் காரை பறக்க விட்டான் சங்கர்.

பின்சீட்டில் சாய்ந்த மாணிக்கத்திற்கு கழுத்தெல்லாம் வலித்தது ரெண்டு நாள்ல ஒரு பொம்பளையப் பேசி
மயக்கி கூடவே கூட்டிக்கிட்டு போற அளவு அவனென்ன அவ்வளவு பெரிய அழகனா நாதேறி நாயி,
அப்பிடியும் தெரிலியே சுருட்டி வீசுனா ஒரு கைக்கு பத்தமாட்டானே. லீலா அப்பிடிப் பட்ட பொண்ணும்
இல்லையே எவ்வளவு சண்ட ரெண்டு பேருக்குள்ள இருந்தாலும் அப்ப ஆயா கிட்டக் கூட மூச்சுட
மாட்டாளே. பலவுன ரெண்டு நாள்லயா இன்னொருத்தங் கூடப் போயிருப்பா?. பொன்னாக் கெழவி
சொன்னாப்ல மதரக் காரன் மை ஏதாச்சும் வெச்சிருப்பானோ? எதா இருந்தாலும் எம் பொண்டாட்டி இந்த
ராத்திரி அவனோட இருந்தரக் கூடாது. அங்க மட்டும் இருந்துட்டா ரெண்டு பேரையும் குத்தி
சரிச்சுப்புடோனும் என பலவாறான எண்ண ஓட்டங்களுக்கிடையே சீட்டுக்கடியில் கையை விட்டு காகிதத்தில்
சுத்தி உள்ளே போட்ட சூரிக் கத்தி இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டான். கழுத்தில் துவங்கிய வலி உச்சி
மண்டைக்கு ஏறி இருந்தது. மாணிக்கமாக அவர்கள் எப்படிச் சென்றிருப்பார்கள் என ஒரு பயணத்
திட்டத்தை யூகித்திருந்தான். முதலில் அம்மாவும் மகனும் கிளம்பிச் சென்று சிங்காநல்லூர் பேருந்து
நிலையத்தில் காத்திருந்திருப்பார்கள். லீலா கிளம்பி இரவு பதினோரு மணிக்குக் காந்திபுரம் போகும்
பேருந்தில் கிளம்பிச் சென்று டவுன் ஹாலில் இறங்கி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்துக்கு ஆட்டோவிலோ,
பேருந்திலோ சென்றிருப்பாள். மூவரும் மதுரை சென்றிருப்பார்கள்.என்றெல்லாம் யோசித்தான். யோசித்து
அதை அழித்தான். மீண்டும் மாத்தி யோசிக்க முயன்றான் வேறு யோசனை எதுவும் ஓடாததால் அதையே
இறுதி செய்தான். அது தான் நடந்திருக்கும் என திரும்பத் திரும்ப மனதிற்குள் ஓட்டிப் பார்த்து உறுதி
செய்து கொண்டான்.

மனம் ஓயாமல் குமுறியது மாணிக்கத்திற்கு. தாராபுரத்தில் சாப்பிட, திண்டுக்கல்லில் டீ குடிக்க என இரண்டு


இடங்களில் வண்டியை நிறுத்தி அழைத்த பொழுதும் மறுத்துவிட்டான் மாணிக்கம். அவர்கள் மட்டும்
சாப்பிட்டு, டீ குடித்து விட்டு வந்தனர். டி.கல்லுப்பட்டியில் குமாரின் வீட்டைச் சீனி அடையாளம் காட்டப்
போய்ச் சேர்ந்த பொழுது அதிகாலை மூன்று மணி வீட்டின் முன்புறம் பந்தல் போடப்பட்டிருந்தது. ஐந்தாறு
உறவுக்காரர்கள் ஆண்களும் பெண்களுமாய் பிளாஸ்டிக் சேர்களில் உட்கார்ந்திருந்த வாக்கில் தூங்கினர். சிலர்
திண்ணையில் பல கோணங்களில் படுத்திருந்தனர். ஒரு துக்கம் நடந்த வீட்டின் அடையாளம் இன்னும்
எஞ்சியிருந்தது பார்த்ததும் தெரிந்தது. வண்டியிலிருந்து இறங்கியதும் மாணிக்கம் “இதென்னடா சீனி கரும
எழவூடாட்ட இருக்குது” என்றான் அதீதக் குழப்பமாய் “அண்ணா நீங்க இங்கயே நில்லுங்க நாம் பாத்துட்டு
வார” என சீனி முன்னால் நடந்தான், சீட்டிக்கடியிலிருந்து எடுத்து இடுப்பில் செருகிக்கொண்ட கத்தியை ஒரு
முறை தொட்டுப் பார்த்துக் கொண்டு வண்டியில் சாய்ந்து நின்று கொண்டான் மாணிக்கம்.”இதென்னடா கூத்தா
இருக்குது இது எழவூடாட்ட இருக்குது இத்தன சனம் வேற இருக்குது அவ இவங்கூட வந்த மாதிரியே
தெரில” என மனதுக்குள் குழம்பினான்.சங்கரன் காரை விட்டு இறங்கியவன் சற்றுத் தள்ளிப் போய்
ஒன்றுக்குப் போய் விட்டு வந்தான். சீனி வந்தான் “ அண்ணா அவனோட தாத்தன் மண்டையப்
போட்டுட்டாராம் கெடயா கெடந்தது வெச்சிருக்க முடியாதுன்னு இவன் வந்ததும் நேத்து
எடுத்துட்டாங்களாம் காரியமெல்லாம் காத்தாலத்திக்குத் தனாம் அவன எழுப்ப அவுங்கம்மா போயிருக்குது
இருங்க வந்துருவே, ஆனா ஒன்னு குமாரு பணத்துல கையெல்லாம் வெசிருக்க மாட்டாங்ணா” என்றான்.
குமாரது அம்மா அவனை எழுப்பும் சத்தம் கேட்டது. தூக்க கலக்கத்தில் குமார் நடந்து வருவது மசமசப்பான
இருளுருவமாய்த் தெரிந்தது. பார்த்த மாணிக்கத்திற்கு இவனில்லை எனத் தோன்றியது. லீலா இங்கில்லை
கண்டிப்பாக “ அத்திக்காட்டு கருப்பணா மானத்த காப்பாத்திட்ட கொலகாரப் பேரோட சாவ வுடாம
காப்பாத்திட்ட” மனதுக்குள் கையெடுத்துக் கும்பிட்டான். எல்லாரையும் பொதுவாகப் பார்த்த குமார் “
அண்ணா, மாணிக்கண்ணா நீங்கெல்லாம் வருவீங்கன்னு நெனைக்கவே இல்லைங்கண்ணா, நேத்து நம்ம வீட்ல
வண்டி வேலை செஞ்சுக்கிக்கிட்டு இருந்தப்பத்தான் போன் வந்துதுங்க பேசிட்டு பாத்தா சார்ஜ் இல்லைங்களா
உள்ள சார்ஜ் போட லீலாக்காகிட்ட கொடுக்கப் போவ அக்கா எட்டி வாங்கறதுக்குள்ள போனு கைநழுவி
மீன் தொட்டிக்குள்ள உழுந்துருச்சுங்க அது தானுங்க சீனியண்ணனுக்கு ஒரு போன் போட்டுக் கூட
சொல்லமுடீலீங்க “என்றான் மீண்டும் ஒரு முறை மாணிக்கம் கருப்பராயனுக்கு நன்றி சொன்னான்.”அக்கா
சொன்னாங்களுங்களா ?” என்றான்.ஆமாம் என்பதைப் போல தலையசைத்த மாணிக்கம் “இங்கயில்லைன்னா
லீலா என்ன ஆனாள்” என உள்ளுக்குள் கலவரமாக அடுத்த பத்து நிமிடத்தில் இருவரையும் கிளப்பிக்
கொண்டு காரை எடுத்தார்கள். மதுரை போகாமல் திருமங்கலத்திலிருந்து சமயநல்லூர் போகும் பைபாஸ் வழி
இன்னும் சுருக்கு என சங்கரன் சொல்ல அதுலயே வண்டிய விடச் சொன்னான் மாணிக்கம். சமயநல்லூர்
பக்கம் வருகையில் மாணிக்கத்தின் அப்பாவிடமிருந்து போன் மாணிக்கம் எடுத்தான் “ஹாலோ” லீலா குரல்
வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கித் தூரமாகப் போன மாணிக்கம்”ஏய் லீலா எங்கடி போன” என்றான்”
எங்க மதுர தாண்டீட்டீங்களா” என்றாள்.

“நீ இப்ப எங்க இருக்கற அதச் சொல்லு மொதல்ல”

“ஒங்க ஊட்ல தான்”

“அங்க தான் இல்லையே “

“உங்க அப்பா இருக்குற வீடும் உங்க வீடு தான”

“அங்கயா?, செரி மதுர வந்தது எப்படித் தெரியு”

“உங்க பொண்டாட்டீங்க நானு, மதுரைல யாருகிட்டயாச்சும் கடன் வாங்கிட்டு கொடுக்காமா இருக்கீங்களா


என்ன? என்ன காணாம்னதும் இப்படி ஓடியிருக்கீங்க, வீடு வந்து சேருங்க பேசிக்கலாம்” என்றவள் போனை
வைத்தாள். சற்று நேரம் கண்மூடி நின்றான்

ஆரஞ்சு வெளிச்சமாய் சூரியன் அடிவானில் உதித்துக்கொண்டிருந்தது. திசையெட்டும் அதன் வெளிச்சம்


பரவிக்கொண்டிருந்தது. மெதுவாக வண்டிக்கு திரும்பினான் மாணிக்கம்.

“சீனு அந்த டீவிஎஸ் வண்டிக ரெண்டையும் நீயே வெசுக்கப்பா”


“அண்ணா”

“ அட சும்மா வெச்சுக்கப்பா”

ம.கோவர்த்தனன் மணியன்

கோவை, 8778698027

You might also like