You are on page 1of 77

சொல் அரும்பும் சோலை.

முன்னுரை

சில சமயங்களில் செறிந்த சொற்கள் இல்லாமல்


இயல்பான, எளிய மொழியில் கவிதைகளை எழுத
முயல்வேன். முந்தையவை பலா என்றால், இவை மா.
உரிக்க வேண்டாம்; இன் மணம் கமழும் செழும்
தோலோடு, அப்படியே கடித்துச் சாறு ஒழுகச் சுவைத்து
உறிந்து உண்ணலாம்.

முந்தைய நாட்களில் சின்னச் சின்ன சொற்களோடும்,


சட்டென முடியும் வரிகளோடும் எழுதிப் பழகியது. பின்
பழந்தமிழ் வார்த்தைகளின் பால் பற்று வர,
அவற்றிலேயே எழுதினேன். ஆனாலும், எளிமையாக
எழுதத் தோன்றும் நேரங்களில், பிடிவாதம் பிடிக்காமல்
அவற்றிலும் இக்கவிதைகளை முயன்றேன்.

இலக்கியத் தமிழில் மட்டுமின்றி, எனக்கு மிகப்


பிடித்தமான கொங்கு வட்டாரத் தமிழிலும் சில
கவிதைகளை எழுதப் பார்த்ததில், ஆச்சரியமூட்டும்
அளவுக்கு அதில் உணர்வுகள் துல்லியமாக வந்தன.
இருபதாண்டுகளுக்கு முன்பே ஊரிலிருந்து கிளம்பி
விட்டிருந்தாலும், கிராமப் பகுதிகளில் அவ்வளவாகப்
பழக்கம் இல்லாவிட்டாலும், காற்றில் அச்சொற்கள்
கலந்திருந்தன போலும். ஒவ்வொரு சுவாசத்திற்கும் ஈரல்
சுவர்களோடு சென்று ஒட்டிக் கொண்டு, உள்ளே
வாழ்ந்திருக்கின்றன.

இரா. வசந்த குமார். 1


சொல் அரும்பும் சோலை.

சிறுவர்மலரில் துவக்கி, இருள் வந்து சூழ்ந்திருந்தாலும்


கற்பனையின் துடுப்பு கொண்டு அப்பேராழியைக் கடந்து
விடலாம் என்று உணவோடு ஊட்டி வளர்த்து, இன்றும்
என் சொற்களுக்குக் கைதட்டி வாழ்த்தி மகிழும் அன்பு
அம்மாவுக்கு இச்சிறுநூல் சமர்ப்பணம்.

நன்றிகள்,
இரா.வசந்த குமார்,
26-மார்ச்-2019, பூனா, மராட்டியம்.

இரா. வசந்த குமார். 2


சொல் அரும்பும் சோலை.

அட்டவணை

● உடைந்த மூக்கு.

● எச்சில்.

● நரகுசூழ் பாதை.

● நீரலை நுரை.

● ஒரு கோப்பை தேநீர்.

● காலணி திருத்துனர்.

● இன்னும் மழை இருக்கிறது.

● வெம்பாலை வாழ்வு.

● அப்பாவாதல்.

● ஏக்கர் நிலம் வேண்டும்.

● எழுவிழுதல்.

● நன்று என்று ஆன பின்!

● மழைப் பொழுது – 1.

● மழைப் பொழுது – 2.

● ஆகாயம்.

● செய்க.

● அழைப்பு.

● உன் பொன் சொல்.

● சிறு கோடு.

● ஞாயிறு போற்றுதும்.

● திங்கள் போற்றுதும்.

● மாமழை போற்றுதும்.

● சொல் செல்லும்.

இரா. வசந்த குமார். 3


சொல் அரும்பும் சோலை.

● உன் இடை.

● A Stray Dog.

● அறத்தாறிது.

● தனி மலரே.

● களிமனம்.

● மனப்பாறை.

● பெருமூச்சுகள்.

● எங்கெங்கிலும்.

● சில துளிகள்.

● வரமாட்டேன்.

● வாய்க்கா வரப்போரம்.

● பாடுகிறேன்...!

● போறவளே பொன்னுத்தாயி...!

● மொட்டுகள்.

● இறுதிப்புள்ளி.

இரா. வசந்த குமார். 4


சொல் அரும்பும் சோலை.

இரா. வசந்த குமார். 5


சொல் அரும்பும் சோலை.

உடைந்த மூக்கு.

இணையதளத்தில்
துளித்துளியாய்
ஆடை விலக்கி
பரிநிர்வாணம் அடைபவள்,
அன்று
உடைந்த மூக்குடன்
தோன்றினாள்.

‘ஜென்னி, என்ன ஆயிற்று


உன் மூக்கிற்கு?’
என்று
வந்த 7713 பேரும் கேட்டார்கள்.
‘உடற்பயிற்சிக்கூடத்தில் தவறி
விழுந்து விட்டேன்’
என்று
அனைவருக்கும் சொன்னாள்.

‘மூக்கைத் துணியால் மறைத்துக் கொள்.


என் கற்பனைக்கு
அது இடைஞ்சல்
செய்கிறது’ என்றான் ஒருவன்.

‘மூக்கு சரியாகும் வரை


பின்புற போஸ் மட்டும்
காட்டு’ என்றான் மற்றொருவன்.

இரா. வசந்த குமார். 6


சொல் அரும்பும் சோலை.

‘கேமிராவைக்
உதட்டுக்கு மேல்
கொண்டு போய் விடாதே’ என்றான் இன்னொருவன்.

பார்வையாளர்கள் எண்ணிக்கை
சட்டென 5320 ஆனது.

‘ஜென்னி,
இப்போது தான்
நீ இன்னும் அழகாய் இருக்கிறாய்.
மேகங்களில் மிதந்து கொண்டிருந்த
பொன்புறா,
மரக்கிளைமேல் வந்தமர்ந்தது போல்.
கைக்கெட்டும் அளவான அழகில்.’
என்றான் 4517-ல் மிஞ்சிய ஒரு கவிஞன்.

அவனுக்கு மட்டும்
இரு முத்த எமோஜிகளும்
ஒற்றைத் துளி கண்ணீர் எமோஜியும்
அனுப்பினாள்.

யாரும்
‘டேக் கேர்’
சொல்லவில்லை.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 7


சொல் அரும்பும் சோலை.

இரா. வசந்த குமார். 8


சொல் அரும்பும் சோலை.

எச்சில்.

பொது உணவகத்தில்
எச்சில் இலைகள்
நிரம்பிய
தொட்டிக்குள்
விழுந்த
செல்போன்
எந்த வேறுபாட்டையும்
உணரவில்லை.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 9


சொல் அரும்பும் சோலை.

நரகுசூழ் பாதை.

சிரிப்புகளாலும் மகிழ்ச்சிகளாலும்
நிரப்பப்பட்டிருக்கும்,
தன்னால் வெல்லப்பட
முடியாதவர்களின்,
தன்னை வென்றவர்களின்.

நுரைத்து நுரைத்தெழும்
ஆனந்தப் பேரலை
அடித்துக் கொண்டிருக்கும்,
தன்னை இகழ்ந்தவர்களின்,
வாயிலில் நிறுத்தித்
துரத்தியவர்களின்.

திருவிழாக்களும்
திசையெங்கும் வண்ணங்களும்
திரண்டிருக்கும்,
தினம் எண்ணிப் புகைப்போர்க்கும்,
கணம் கூட மறவாதோர்க்கும்.

கெடுநாற்றமும்,
வேகும் நெருப்புக் கொந்தளிப்பும்
மழைச்சாணிக் குழைசலும்
கூர் நுனிமுட்களும்
நிரம்பிய
புராணப் பாதைபோல்
இருக்கலாமெனில்,
அது மேலல்லவா,
வருந்திச் சிந்தக் கண்ணீரும்
தோள் வருடி ஆறுதலிக்க

இரா. வசந்த குமார். 10


சொல் அரும்பும் சோலை.

இரு கரங்களும்
கூட கேள்!

சிலுவையிலிருந்து
பிய்த்தெடுத்து
வழிகுருதி துடைத்து,
நீட்டித் துயர் துடைப்பான்,
அவன்.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 11


சொல் அரும்பும் சோலை.

நீரலை நுரை.

வினை முடித்து மெல்ல விதி விலகியது.


ஓரிரவின் கனவொன்று நீண்டு நீண்டு ஒரு
முழுக்காலமும் எடுத்துக் கொண்டது.
முளைத்துக் கிளைத்து வளர்ந்து நீண்டு பூத்து மெல்ல
உலர்ந்து கருகி உதிர்ந்து சருகாக எடுத்துக் கொண்ட
காலம்.

கனவில் திளைத்தல் போல்


கற்கண்டுக் குளத்தில் மிதத்தல் போல்
இனிக்க இனிக்க சுவைத்தல் போல்
இனியது இனி அது வாராது என்பது போல்

பிழை என ஏதும் இன்றியே


இப்பிள்ளை விளையாட்டு ஆடி ஓய்ந்து விட்டது.

உறக்கம் விலகிப் போய்


உணவும் கசந்து போய்
நாள் நகராப் பாறையாய் நிற்க
கணங்களை நத்தை ஔியென முந்திச் செல்ல
இவ்வாழ்வென்பதே பெரும் வீண் என்று தோன்ற.

உதிகதிர் உதிர்கதிராகும் வரை பொழுதோடும், பின்


இருள்வெளி கவ்விக் கொண்டு செல்லும் கனாத்திரளில்.

சிறு சிறகுகளால் அச்சிட்டு கைகளிலிருந்து நழுவி


வான்பரப்பிற்குள் விலகியது.
உள்ளங்கைகளில் துளி வெப்பம்; நினைவென ஒரு
மென்மை; கொத்து கனமென கனவு.

இரா. வசந்த குமார். 12


சொல் அரும்பும் சோலை.

அம்முகம், அவ்விழி, அம்மொழி,


அச்சிரிப்பு, அவ்விரல், அக்குரல்,
அந்நாள், அவ்விரவுகள், அவ்வாழ்வு.

சென்று முடிந்த நேரங்கள்.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 13


சொல் அரும்பும் சோலை.

ஒரு கோப்பை தேநீர்.

‘வா...
ஒரு கோப்பை தேநீர்
அருந்திக் கொண்டே
நாம் பேசலாம்..’
என்று அழைக்கிறாய்.

ஒரு கோப்பை தேநீர்


தீர்வதற்குள்
அதன் நுரை அடங்குவதற்குள்
அதன் வெம்மை அணைவதற்குள்
அதன் ஒவ்வொரு துளியையும் விழுங்குவதற்குள்
அதன் அடியாழத்துக் கசடைத் தவிர்ப்பதற்குள்
பேசி முடிப்பவை தானா
நம் சிக்கல்களும்
நம் கருத்து வேறுபாடுகளும்
நம் கோபங்களும்
நம் வெறுப்புகளும்?

எனினும்
என்னை அலங்கரித்துக் கொண்டு
என் கைப்பையை நிரப்பி விட்டு
சென்ற பனியுருண்டை விழாவில்,
என் உடனிருப்புக்கு
நீ
பரிசளித்த
பழுப்பு நிற தணப்பு ஷூ அணிந்து கொண்டு
உன்னுடன்
கைகளைக் கோர்த்துக் கொண்டு
புன்னகை சூடிக் கொண்டு

இரா. வசந்த குமார். 14


சொல் அரும்பும் சோலை.

எதிர்ப்படுவோரின் ‘நல்ல மாலை’க்கு


மெல்லத் தலையசைத்து
நடந்து வருகிறேன்.

தேநீர்க் கடை
இன்னும்
எவ்வளவு தூரம்?

ஃஃஃ

இரா. வசந்த குமார். 15


சொல் அரும்பும் சோலை.

காலணி திருத்துனர்.

நடைபாதையில்
காலணி திருத்துனர்
கால் மடித்து
எப்போதும்
தலை குனிந்து
அமர்ந்திருக்கிறார்.

கடந்து செல்பவர்களின்
கால்களை மட்டுமே
கவலையுடன்
பார்க்கிறார்.

அறுந்து போன வார்கள்,


கிழிந்த தோலணிகள்,
ஊக்கு குத்தியவை,
ஓரம் விடுபட்டவை,
சேற்றிலூறி வாய் பிளந்தவை...

பிழைகளை ஏந்தி
அப்பிழை ஏந்தி வரும்
கால்களை மட்டுமே
அவர் தேடுகிறார்.

வெறும் கால்களை
மட்டும்
கொண்டவர்களை
அவரும் கூட
விரும்புவதில்லை.

இரா. வசந்த குமார். 16


சொல் அரும்பும் சோலை.

தையல் போட்டுப் போட்டு


நூல் கண்டாய் மட்டும்
தோன்றும்
அவ்விரு இணைக் காலணிகளுக்கு
மட்டும்
இலவசமாய்
இன்னுமொரு
தையல்
இட நினைக்கிறார்.
வயிற்றனல் விடுவதில்லை.

இளமென் சிவப்பு நிறத்தில்


மையத்தில் மலர் சேர்த்து
இரு
பிள்ளை செருப்புகளைத்
தைத்து
நெடுங்காலமாய் வைத்துள்ளார்.
தன் பெயரென்ன,
தான் உணவு உண்டேனா
என்று கேட்கும்
முதல் குரலுக்குப்
பரிசாய்க் கொடுக்க.

அவரிடம் வீசுமுன்
காலால் எத்தும் முன்
விரைவுபடுத்து முன்
கொஞ்சம் புன்னகையையும்
அவரிடம் வீசலாம்,
குறைவில்லை.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 17


சொல் அரும்பும் சோலை.

இரா. வசந்த குமார். 18


சொல் அரும்பும் சோலை.

இன்னும் மழை இருக்கிறது.

இரவின் சில்வண்டு ஒலி போல் கேட்கின்றது கோடை


வரும் ஓசை.

நிலம் உலர்ந்து வெடித்திருக்கின்றது.


பசுமை காய்ந்து பழுப்பாகிச் சுருண்டிருக்கிறது.
நிழல்கள் நீண்டு இருள் தீற்றல்களாய் விழுகின்றன.
வானம் தெளிந்த நீலமாய் மேகங்கள் அற்று
விரிந்திருக்கிறது.

முட்புதர்களில் சூடு பூத்து சுவை கரிக்கின்றது.


பாம்புகள் ஊரும் தடம் மணல் சரிந்து தூசு
அலைகின்றது.
சாலைகள் பிளந்து பிளந்து கூர்நுனிகளால்
கிழிக்கின்றன.
ஓங்கிய பெருமலைகள் சரளைக் கற்களால்
வரப்புறைந்த பாதைகளால் வடமிடப்பட்டிருக்கின்றன.

நீராழம் இன்னும் இன்னும் என சென்று


கொண்டிருக்கிறது.
நிழலும் சுடும் மதிய நேரங்களில் கூரை தேடித் திரிகிறது
காக்கை.
இரவுகளில் உறக்கமில்லாத நிழல்கள் சுவர்களில் படிந்து
படிந்து நகர்கின்றன.
கொடும் கோடை அணுகி வந்து கொண்டிருக்கிறது.

கொளுத்தும் வெயிலும் உருக்கும் அனலும் சூழ்,


அசையாக் காற்றும் கொப்பளிக்கும் புழுக்கமும்
என்றெரிக்கும் இப்பெரும் வெயில்காலம்
சென்ற பின்,

இரா. வசந்த குமார். 19


சொல் அரும்பும் சோலை.

ஒரு காலம் வரும்


அன்று,
இன்னும் மழை இருக்கிறது.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 20


சொல் அரும்பும் சோலை.

வெம்பாலை வாழ்வு.

பாலையில்
தனித்திருக்க
நேர்கையில்
வாளெடுத்து
நீ
சிரமறுத்துக்
கொள்ள மாட்டாயா?

***

வான் தீ
தின்னும்
முகிலின்
நிழல்கள்
நெளிந்தாடுகின்றன
கானலாய்!

***

பசி பிளக்கும்
ஓநாய்
பிணந்தேடும்
கழுகு
ஈரம் காய்க்கும்
வெக்கை
அடுக்கடுக்காய்
மணல்
நிழல் பதுக்கும்
என்னுடன்!

இரா. வசந்த குமார். 21


சொல் அரும்பும் சோலை.

***

வெம்மை நிறைந்த
நீல ஆகாயம்
யாதுமற்ற
பாழ்வெளி
நச்சரவம் ஊறும்
செம்மணல்
விஷம் ததும்பும்
உயிர்க் குகை
தூரப்பச்சை
எங்கோ எனும் கனவு
வெம்பாலையில் தனித்த
வாழ்வு.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 22


சொல் அரும்பும் சோலை.

அப்பாவாதல்.

அதே முடி
அதே மூக்கு
அதே முகம்
அதே சொல்
அதே சர்க்கரை

யாரோ ஒருவனாகப்
பிறந்து
மெல்ல மெல்ல
அப்பாவாதல் தான்
வாழ்வாகின்றது.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 23


சொல் அரும்பும் சோலை.

ஏக்கர் நிலம் வேண்டும்.

ஏக்கர் நிலம் வேண்டும் - சக்தி


ஏக்கர் நிலம் வேண்டும் - அங்கு
பாக்குத் தோட்டமும் கயல்
பாயும் குளிர்ச் சுனையும்
தேக்குத் தூண்களில் மாளிகை
தெள்ளிய நீர்க் கேணியும்
பூக்கும் ஆயிரம் பூக்களும்
பூமி மேலெலாம் பச்சையும்

ஆற்றங் கரையிலே வாயிலும்


ஆடிக் களித்திட ஓடமும்
போற்றி வாழ்த்திடப் பெண்டிரும்
போரை வென்றிட நண்பரும் - பூச்
சாற்றிக் கும்பிட சாமியும் - பால்
சாறு தந்திட ஆக்களும் - கொடும்
கூற்றம் வாரா வேலியும் - நல்
கூறல் கேட்கும் மக்களும்

மாடி மேலெழு சந்திரிகை


மாதம் முழுவதும் பறவைகள்
கூடி வாழ்ந்திடக் கூரையில்
கூவி அமைத்த அறைகளும்
ஓடி ஆடிட ஆற்றலும்
ஓய்வில் அருந்திட தென்னையும்
ஏடி உன்னைக் கேட்கிறேன்
எனக்குத் தருவ தெப்போது?

ஃஃஃ

இரா. வசந்த குமார். 24


சொல் அரும்பும் சோலை.

எழுவிழுதல்.

நீலப்
பனித்துகள்கள்
காலத்தின் போக்கில்
உறைந்து
சிவக்கின்றன
ரத்தமாய்.

சுழன்றுச் சுழன்று
கழன்று 
விழுந்த
புரவியின் வால்
கரைந்த இடத்தில்
முளைக்கின்றது
ஒரு
மரங்கொத்தி.

தீயைப் புகட்டி
வாயில்
அடக்கிக் கொண்ட
அசுரன் முகம்
பூப்பூவாய்
வெடிக்கும்
போது 
ஈரமாய் வானம்
மலர்கின்றது.

சிம்னியிலிருந்து 
கசியும் புகை,

இரா. வசந்த குமார். 25


சொல் அரும்பும் சோலை.

மஸ்லின்
மாராப்பை
நழுவ விடும்
நாட்டியக்காரி
மார்புகளைப் போல்
பொய்யாய்க்
கரைந்து
காணாமல் போகிறது.

வெண்குழல் திரவம்
ராட்சஸ வேகத்தில்
நகர்ந்து
உள்ளிழுக்கும்
வெட்டவெளியில்
துளித்துளியாய்ச்
சேகரமாகிறது.

புதிய நிழலைத்
திணிக்கும்
ஒரு ரகஸ்ய
வெய்யில்,
மந்தாரமாய்ப்
பெருகுகையில்,
இலைகளில் தேங்கும்
இரவின் இளமைத்துளி
பஸ்பமாகிறது.

அனலாய் 
அடித்துக் கொள்ளும்
வண்டின் சிறகுகள்
கூசும் வகையில்

இரா. வசந்த குமார். 26


சொல் அரும்பும் சோலை.

தொடையில்
துளைத்து
தலைநுழைக்கும் போது,

விழிப்பிலிருந்து
எழுந்து
கனவுக்குள்
விழுந்தேன்.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 27


சொல் அரும்பும் சோலை.

நன்று என்று ஆன பின்!

நீலக்கடலில் இருந்து 
உறிந்து கொண்டதா 
தனது அலங்காரத்தை 
வானம்? 
இல்லை, 
வானின் நிறத்தில் 
இருந்து 
தனக்கான ஆடையை 
அணிந்து கொண்டதா 
கடல்?

அசைந்தாடும் காற்றில் 
இருந்து 
அறிந்து கொண்டதா 
மஞ்சள் நிறத்தை 
வெயில்? 
இல்லை, 
கொதிக்கும் 
கதிரிலிருந்து 
கற்றுக் கொண்டதா 
பகலின் நிறத்தைக் 
காற்று?

பனியின் 
மினுமினுப்பில் இருந்து 
பறித்துக் கொண்டதா 
வெண்மையின் அழகை 
நிலா? 

இரா. வசந்த குமார். 28


சொல் அரும்பும் சோலை.

இல்லை, 
வெண்ணிலவின் 
அமுதிலிருந்து 
பகிர்ந்து கொண்டதா 
குளிர்மையை 
பனித்துளி?

பச்சைக் 
குளிர் நீரைப் 
பார்த்து 
பசியல் ஆனதோ 
தாவரம்? 
இல்லை, 
பச்சையம் கரைந்து 
பாசிகளால் 
ஆனதோ 
பாயும் நீர்?

பெண்மையின் 
மென்மையில் 
பதுங்கிக் கொண்டதோ 
ஆண்? 
இல்லை 
ஆணின் 
வன்மையில் 
வழுவிக் கொண்டதோ 
காதலின் பெண்?

இரண்டென்று 
ஏது? 
எல்லாம் 

இரா. வசந்த குமார். 29


சொல் அரும்பும் சோலை.

ஒன்று 
என்று 
ஆன 
பின்! 

சேர்தலே 
நன்று 
என்று 
ஆன பின்!

ஃஃஃ

இரா. வசந்த குமார். 30


சொல் அரும்பும் சோலை.

மழைப் பொழுது – 1.

மழையோடும்,
என் மனதோடும்
நான்
மகிழ்ந்திருந்த
பொழுதுகள் சொல்லவா?

முதல் நாள்
பள்ளியில் சேர்கையில்
பெய்த மழை
சீருடையில்
வழுக்கிச் சென்றதில்
ஈரமானது
உள்ளங்கை!

சபித்த
மழை நாளில்
நிறுத்தப்பட்ட
இறுதிப் போட்டியின் வலி
கண்கள் வழி
கசிந்ததை
உணர்வாயா..?

கைக்கெட்டா
கொய்யாக் கனிகளை,
வெயில் பெய்த
ஒரு
மதியத்தின் மழை
பறித்துக் கொடுத்ததை
அறிவாயா..?

இரா. வசந்த குமார். 31


சொல் அரும்பும் சோலை.

வெள்ளமெனத் திரளும்
இருட்டில்,
மழைத்துளிகள் படிந்த
இரு இதழ்களின்
அருகாமையில்
இனித்தது
அந்த இரவு
என்பதை
புரிந்தாயா?

ஈரத்தில்
ஒட்டிப் போன இறகுகளோடு
கூண்டுக்குள்
இறந்து கிடந்த
குருவி கண்டு
திட்டிய
மழை நாள்,
நீ கண்டதுண்டா..?

வெயில் எழுதிய
வலி நிரம்பிய
எழுத்துக்களை
நெஞ்சில்
சுமந்து நடக்கும்
நீ அறிவாயா..?

எங்கள் மனம்
போல்,
விரிசல் கண்ட
நிலம் மேல்

இரா. வசந்த குமார். 32


சொல் அரும்பும் சோலை.

நீ நடந்து
தேடுவது
பானை நீரா?
எங்கள் கண்ணீரா?
வருந்தாதே!
கிடைக்கலாம்
இரண்டும் எப்போதாவது!

எங்கள்
நீராதாரங்களும்
வற்றிப் போய்,
நாங்களும்
உன் போல் ஆகும் வரை
மை ஈரம் தீர்க்க
எழுதிக் கொண்டிருப்போம் உனக்காக,
உடைந்த பானையும்,
உடையாத நம்பிக்கைகளுமாய்
தேடிக் கொண்டேயிரு
ஈரத்தை,
நிலத்திலோ,
எங்கள் நெஞ்சத்திலோ..!

ஃஃஃ

இரா. வசந்த குமார். 33


சொல் அரும்பும் சோலை.

மழைப் பொழுது – 2.

பெய்கின்ற 
பெரு மழைக்குப்
பயந்து,
இறுக்கச் சாத்திய
ஜன்னலின்
இடுக்கு வழி
நுழைந்து,
ஒற்றை அறைக்குள்
சுற்றிச் சுற்றி
அலைந்து,
'சொத்'தென
அடிக்கப்பட்டு
இறந்தது
தடி புத்தகத்தால்
ஒரு பூச்சி!

***
மழை நின்ற
நிமிடங்களுக்குப் பின்
அடியில் நின்ற
அனைவரையும்
நனைத்து,
மரம் பெய்தது.

***
எண்ணெய் வழியும் 
சாலை,

இரா. வசந்த குமார். 34


சொல் அரும்பும் சோலை.

குரல் கொடுக்கும் 
தகரக்கூரை,
நிறைத்துப் பாயும்
சாக்கடை,
தூசு நீங்கும்
கறுப்புக் குடை,
ஆவி பறக்கும்
மயானம்...
இல்லாத ஒன்றை
எடுத்துக் காட்டுகிறது,
திடுமென பொழியும்
மாமழை!

***
ஒரு கையில்
மழை பிடித்தேன்.
மறு கையில்
காகிதக் கப்பல்.
பார்த்தால்,
மழைக்கு 
உள்ளும் கப்பல்.
வெளியும் கப்பல்.

***
வானம் அழுகிறது
என்கிறார்கள்.
தேவாசுரப் போர்
என்கிறார்கள்.
வருண பகவான்

இரா. வசந்த குமார். 35


சொல் அரும்பும் சோலை.

வருகிறார் 
என்கிறார்கள்.
பகல் மழையில்
நரிக்கு கல்யாணம்
என்கிறார்கள்.
மேகம் மோதும்
மின்சாரம்
என்கிறார்கள்.
அம்மோனியா தூவினால்
அமோகப் பலன்
என்கிறார்கள்.
பாயும் குதிரை,
கோமாளி,
அரக்க முகம்,
பூந்திப் பொட்டலம்,
யானை,
ரோஜாப் பூ,
தேர்,
அப்பா முகம்...
என்னென்னவோ
வடிவங்கள் காட்டினாலும்,
பூக்குடையைப் பிடித்து
வீதியில் நடக்கும்
அந்தச் சிறுமியை
நனைக்காது
எல்லா மேகமும்
ஒரே
மழையாய்ப்
பெய்கின்றன.

இரா. வசந்த குமார். 36


சொல் அரும்பும் சோலை.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 37


சொல் அரும்பும் சோலை.

ஆகாயம்.

எறும்பு கடக்கும் தொலைவை


எறியும் பாறை வேகமாகப்
பாயும் புலி மிக வேகமாகப்
பறக்கும் பறவை மிக மிக வேகமாக
மிதக்கும் மேகம் மிக மிக மிக வேகமாகக்
கடக்கையில்,
ஆகாயம் அங்கேயே இருக்கிறது,
இரு புள்ளிகளிலுமாய்.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 38


சொல் அரும்பும் சோலை.

செய்க.

சிலுவைகள் தயாராகட்டும்.
ஆணிகள் அடிக்கப்படட்டும்;
கற்கள் எறியப்படட்டும்;
வெந்நீர் ஊற்றப்படட்டும்;
எரிகம்பம் ஏற்றப்படட்டும்;
பன்னூற்றாண்டுகளுக்குப் பின்னால்
உம் ரத்தம்,
எம் 
பெயர்களை
சொற்களை
மனனம் செய்யும்.
அதுவரை
எமை இழிவு செய்யும்
பொன்னான வாய்ப்பு
உமக்கே.

செய்க.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 39


சொல் அரும்பும் சோலை.

அழைப்பு.

தள்ளுவண்டியில் குவித்து
ஆப்பிள் விற்பவரை
ஆப்பிள்..ஆப்பிள்..
என்றே அழைக்கிறார்கள்.
கூடைக்குள் வைத்துக்
கீரை விற்பவளை
கீரை...கீரை...
என்றே கூப்பிடுகிறார்கள்.
விற்பதைக் கொண்டே
விற்பவனைக்
குறிப்பிடுவதென்றால்,
நடுத்தெருவில் நின்று கொண்டு
உங்களை
என்ன சொல்லிக் கூவுவது?

ஃஃஃ

இரா. வசந்த குமார். 40


சொல் அரும்பும் சோலை.

உன் பொன் சொல்.

இறுக்க மூடிய
கண்ணாடிக் குடுவைக்குள்
இட்ட
பொன் சொட்டு போல்
உன் 
ஒரு சொல் குறுஞ்செய்தி.

என்னவென்று 
தெரிந்த பின்
எடுக்கத் தயக்கம்.
தொட்டவுடன்
பட்டாம்பூச்சியாய்ச்
சிறகடித்து 
விரல் விட்டு விலகிவிடக்கூடும்.
அல்லது
பொருளிலா என்னுலகின்
ஏதோ ஒரு பொருளுக்கு
ஒப்பாகி
மதிப்பு குறையக்கூடும்.

விற்கும் வரை
நிலத்தின் விலை போல்
உயர உயர
அப்பொன் சொல்
மிதந்து கொண்டிருக்கட்டும்.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 41


சொல் அரும்பும் சோலை.

சிறு கோடு.

எதுவோ எப்போதோ
கைமூட்டில்
கீறிய சிறு குருதிக்கோடு,
வைக்கும் இடத்திலெல்லாம்
தன் செந்தடத்தைப்
பதிக்கிறது.

என் இருப்பை
என் வரவை
என் கையை
என் பதிவை
அச் சிவப்பு
காயும் முன்
கழுவும் முன்
காய்ந்த பின்
சுரண்டும் முன்
அறிவித்துக் கொண்டிருக்கும்.

நீக்காதீர்,
ஓர் ஈ 
ஊர்ந்து உண்டு
அதன் சிற்றுடலே
நானாகட்டும்.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 42


சொல் அரும்பும் சோலை.

ஞாயிறு போற்றுதும். 

நகரின் புலர் பொழுது.


விடிகாலை வான்.
முதற்கதிர்த் தீண்டல்.
விழி தொடும் விசும்பின் விளிம்பு.
விழித்தெழும் இயக்கம்.
செவ்வுருண்டை பவனி.
செஞ்சாந்துத் தீற்றல்.
ஞாயிறு போற்றுதும். 

ஃஃஃ

இரா. வசந்த குமார். 43


சொல் அரும்பும் சோலை.

திங்கள் போற்றுதும்.

தனிநிலவு.
எரிக்கும் வெளி.
ஒளிச்சுழல்.
முகில்மறை மகிழ் நினைவு.
இருள் திரை வெண் சுடர்.
மெளனக்குழிம் மர்மச்சிமிழ் முத்துத்திரள்.
இரவுத்துணை.
தேய் வளர் ஒற்றைத்துளி.

பாற்கடல் சிந்திய ஒரு சொட்டு.


நுரை குவிந்த வான் கன்னி.
காலடி தொட்ட மற்ற ஒரே மண்.
கடன் ஒளிக் கலயம்.
எழுதித் தீரா
எழில் தீ.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 44


சொல் அரும்பும் சோலை.

மாமழை போற்றுதும்.

நீணாள் காத்திருந்த மழை இன்று பெய்தது.

மதியத்தில் வெயில் மறைத்து


கருந்திரை குழுமி
சாரலாய்த் துவங்கிச் 
சடுதியில் 
பெருந்துளிகளாய் இறங்கி
பேரொலியெழுப்பி
அரை மணிக்குள் ஆடை குளிப்பித்து
உள் அனலைக் குளிர்வித்து
மெதுவாய் 
நின்ற பின் 
அம்மழையின் குட்டி,
மாலையில் துவங்கி
சாவகாசமாய் ராவெல்லாம்
நனைக்கின்றது,
நகரை.

நீணாள் காணா மழையில் 


சாண மணங்கமழ்
அம்மிருதுவான
எருமைக்குட்டி 
நனைந்தவாறே ‘ம்பே..’
என்று கொண்டிருக்கின்றது.

ஒரு மீமாடு

இரா. வசந்த குமார். 45


சொல் அரும்பும் சோலை.

புதுக் கட்டிடமொன்றுக்குள்
புகுந்து கொண்டது.

நீணாள் வாரா மழை என்பதால்,


மாடியில் காயவைத்த துணிகள்
மறுகுளியல் இட்டன.

சாலைகளில் சேற்றுத் தேக்கங்களில்


மின் பிம்பங்கள்.

செம்பூ மட்டுமே பூக்கும் அம்மரம்


அழுக்ககற்றிப் புதுப்பித்துக் கொண்டது.
மரத்தடி நாற்காலிகளில் காதலிகள் உற்சாகமாய்.
தெருநாய்க் கூட்டமொன்று சிலிர்த்துக்
கொண்டேயிருந்தது.

நீணாள் இல்லா மழை என்பதால்,


நீணாள் எழுதா கவிதை
ஒன்றை
எழுதி வைக்கிறேன்.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 46


சொல் அரும்பும் சோலை.

சொல் செல்லும்.

கால்கள் செல்லாத இடத்திற்கும் கைகள் செல்லும்;


கைகள் செல்லாத இடத்திற்கும் விரல்கள் செல்லும்;
விரல்கள் செல்லாத இடத்திற்கும் நீர் செல்லும்;
நீர் செல்லாத இடத்திற்கும் காற்று செல்லும்;
காற்று செல்லாத இடத்திற்கும் சொல் செல்லும்;

ஃஃஃ

இரா. வசந்த குமார். 47


சொல் அரும்பும் சோலை.

உன் இடை.

இந்த உடை,
உன் திரண்ட இடையை
மறைக்கும்
என 
நீ நினைத்திருக்கலாம்,
நினைக்காமலும் இருந்திருக்கலாம்.
அது,
அவ்வாறு எதையும்
நினைக்கவில்லை
என்பதே
எனக்குப் பிடித்திருக்கிறது.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 48


சொல் அரும்பும் சோலை.

A Stray Dog.

Once upon a time in the park


When the sky turned into dark
I tried my bicycle to park,
Alas, I could not hear a single bark.
"Oh stray dogs, where did all you go?
My poor soul wants that to know.
Had you all been caught?
Say atleast one of you, "No, not!"
Did you go behind a beauty?
Did you do all the naughty?
Did you have set of babies?
Did you start spreading rabbies?"
"When the cloud opens, 
We dont have shelter to hide
When the sun shines, 
We dont get water to tide.
We are orphans roaming in the road
We are creatures have none to feed
We draw our borders in the street
Whoever comes, we look their feet
We speak eachother, we fight eachother
We cuddle eachother, we kill eachother
Oh Man! whenever you hear when we speak,
You term it in a single word as bark
After the last dog dies because of starvation
You will feel the painful silence as salvation
With the help of a stray dog's instinct
I say, one day we all will go into extinct
Until then, why don't you feed me
Until then, why don't you care me

இரா. வசந்த குமார். 49


சொல் அரும்பும் சோலை.

Until then, why don't you share a kiss


Until the mighty dark fall upon all of us"
"Oh stray dog! you opened my eyes
Further I will treat you as much as nice
Now, like the sun rays kill the chill fog
Clear the silence and bark like a true stray dog"
Lol..Lol...Lol...

ஃஃஃ

இரா. வசந்த குமார். 50


சொல் அரும்பும் சோலை.

அறத்தாறிது.

கொன்றவனும் கொன்றுவா என்றவனும் செய்தது


நன்றிதுவே என்போரும் எண்ணிக்கொள் -
வென்றிட்டோம்
என்றிறு மாப்புடை எய்தியோரே, நீர்தினம்
தின்றமலம் நாறும் நினையாது சென்றுசேர்வீர், 
மேலெலாம் தீராப்புண் தோலெலாம் சீழ்நொதி
காலெலாம் கீறலெழும் காத்திரு - ஊழென
உங்குருதி வற்றி மயிர்கொட்டிப் பல்லுதிர்த்து
உன்மகன் தீண்டா நரகு.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 51


சொல் அரும்பும் சோலை.

தனி மலரே.

காற்றில்
குளிர் கனத்திருக்கும்
உன் மாநகரில்
செம்பொளி
பொழிந்து
மௌனித்திருக்கும்
உன் வீதியில்
பனிசூடிய மலர்கள்சூழ்
உன் வீட்டில்
உன் மூச்சுக்காற்று
வட்டமிடும்
உன் அறையில்
வெண்ணுரை மெத்தை
இட்ட
உன் படுக்கை மேல்
கடல் நீலத்தில்
பூக்கள் வரைந்த
உன் போர்வைக்குள்
கதகதப்பாய்
உறங்குகிறாய்.

மேகங்கள்
விரைந்து நகரும்
இருள் விடிகாலை
வான் கீழ்
தனித்திருக்கிறேன்.

இரா. வசந்த குமார். 52


சொல் அரும்பும் சோலை.

உன் வீடு
உன் இருப்பால்
உன் இன்மையால்
உன் சொற்களால்
உன் மௌனங்களால்
உன் சிரிப்புகளால்
உன் கண்ணீரால்
நிரம்பியுள்ளது.

நான்
உன்னால்
நிரப்பப்பட்டுள்ளேன்.

இம்மொழியிலா
நீ
வெளிப்பட்டாய்?

இச்சொற்களிலா
உனைப்
பேசினாய்?

உன்
இதழ்வழி
கசியும்
பேறுற்ற
மதுர பாவனைகள்
இவ்வார்த்தைகள் தாமா?

கனி மேலமர்ந்த

இரா. வசந்த குமார். 53


சொல் அரும்பும் சோலை.

பழஈ போல்
நானும்
சுவைத்தினிக்கிறேன்.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 54


சொல் அரும்பும் சோலை.

களிமனம்.

நீ என் முடிவுறாத மெளனம்


நான் உன் முடிவிலாத நாணம்

கனவுகளில் ஓராயிரம் கணங்கள்


காண்கையில் மோதிடும் எண்ணங்கள்

பாதைகளில் பதியன் போடும் பூக்கள்


பதிகையில் குருதி வழியும் முட்கள்

வர்ணமழிந்த ஓவியத்தின் நகல்


வாசமிழந்த மலரின் நிழல்

இரவுகளில் நிழல்களின் பயணம்


இருக்கையில் தனிமையின் சலனம்

இதயமே வலியின் இருப்பிடம்


இருக்கும்வரை துயரத்தின் வசிப்பிடம்

போரிடும் களத்தின் விதிகள்


பொம்மைக் கரங்களில் வாட்கள்

வேனில் மரத்தினடி விழுகனி


கானல் நதியினுள் களிமனம்.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 55


சொல் அரும்பும் சோலை.

மனப்பாறை.

குறுவாளின் நுனிநாணும் விழிகொண்டு வந்தாய்!


குறுந்தோகை நனிகாணும் நிறம்கொண்டு வந்தாய்!

சிறுமுருங்கை மரம்போலே தோள்கொண்டு வந்தாய்!


சிவப்பான பழம்போலே முகம்கொண்டு வந்தாய்!

வளைந்தாடும் மலைபோலே இருபுருவம் கொண்டாய்!


வளையாத வாள்போலே ஒருநாசி கொண்டாய்!

கலையாத கனிபோலே இருகன்னம் கொண்டாய்!


களியூறும் செழிப்பாலே இருவிதழ்கள் கொண்டாய்!

சறுக்காத வழிபோலே பனிக்கழுத்து கொண்டாய்!


சலிக்காத மதயானை இருமார்பு கொண்டாய்!

முளைக்காத கொழுந்தாக இருகூர்மை கொண்டாய்!


முழுதாகச் சுவைக்காத இருவமுது கொண்டாய்!

(வேறு)

சரியாத பெரும்பாறைச் சிலையொட்டி நிற்க


சரியாகக் குறும்பாறை அதன்மேலே நிற்க
வரையாத இருவட்டக் குமிழ்நுனியோ நிற்க
வனையாத தழல்மூச்சு அதைச்சுற்றி நிற்க

இணையாத ஒருபாதை இடையினிலே ஓட


இணையான இருமதலை இறுக்கங்கள் கூட
இனிமைத்தீ அனலோடு அருகினிலே வாட
இனிக்காத இளமைநதி தீராது நாட

இரா. வசந்த குமார். 56


சொல் அரும்பும் சோலை.

(தொடர்)

பிறக்காத நிழல்களுக்குள் பதுங்கி வந்த இருள் நீ!


பிதற்றாத மொழிகளுக்குள் மிதந்து வந்த பொருள் நீ!

திறக்காத கதவுகளைத் திறக்க வந்த கரம் நீ!


திகட்டாத உதடுகளைச் சுரக்க வந்த சுரம் நீ!

இமையாத இரவுகளில் இணைக்க வந்து படர் நீ!


அமையாத உறவுகளில் அணைக்க வந்த சுடர் நீ!

மதுப்பார்வை உருக்க வந்த ஒரு கள்ளிமலர் நீ! என்


மனப்பாறை பிளக்க வந்த சிறு மல்லிச்செடி நீ!

ஃஃஃ

இரா. வசந்த குமார். 57


சொல் அரும்பும் சோலை.

பெருமூச்சுகள்.

சில கவிதைகளையும்
தனித்த இரவில்
பெருமூச்சுகளையும்
கொடுத்தபின்
ஒரு
முத்தமாவது
தரலாம் நீ.

உன் மெளனம்
ஒரு பிடிவாதம்.
உன் தவிர்த்தல்
ஒரு நிழல்வெளி.
உன் பார்வை
ஒரு மறைபொருள்.
உன் மறைபொருட்கள்
கற்பனையின்
கல்லணைகள்.

நழுவி விழுந்து
தெறித்த
கண்ணாடிக் குடுவை
உன் சொற்கள்.
தொடாமல் கால்
படாமல்
நடக்கத் தெரியா
பிள்ளை நான்.

குருதி பூக்கும்
முட்செடிகளை

இரா. வசந்த குமார். 58


சொல் அரும்பும் சோலை.

மெளனத்தால்
மூடி வைக்கிறாய்.
தொட்டுத்தொட்டு
சுவைக்கும்
செந்நா எனது.

நதிக்கரையில்
ஒற்றை மரமென
நின்றிருக்கும் வேளையில்,
அலையடிக்கும்
வெண்புறா போல்
சிலநேரம்
அமர்ந்தபின்
பறந்து விட்டாய்.
வானைக் கிளைகளாலும்
மண்ணை வேர்களாலும்
துழாவுகிறேன்.

நில்
பசிக்கிறேன்
சொல்
ரசிக்கிறேன்
கொல்
ருசிக்கிறேன்.

வழியில்
விழியால் சிரித்தாய்.
மரங்களெலாம் பூத்து
மண்ணெலாம் இனித்து
நீரெலாம் குளிர்ந்து
நீயின்றிப் பிறரிலை.

இரா. வசந்த குமார். 59


சொல் அரும்பும் சோலை.

மலைச் சிகரங்கள்
கூழாங்கற்கள்.
எரிமலைத் தீ
எறும்புக் கடி.
இமயப் பனி
இலைநுனித்
துளி.
உன் பார்வை
பிரபஞ்ச விரிவு.

அலைகள்
கொந்தளிக்கும் ஆற்றில்
விழுந்த சிற்றிலை
போல்
நீந்திச் செல்கின்றன
உன் சொற்கள்.

வானவில் நிறங்களில்
இல்லா ஒரு
நிறம்
உன்
நீ.

இளங்காலைக் குளிர்த்தென்றல்
முதிர்காலைத் தெளிவொளி
முன்மதியப் பனிமழை
பின்மாலைக் கிளிக்கூட்டம்
அந்தியிரவு மலையிணைவு
நள்ளிரவு மெளனத் தூறல்
நாளும் இரவும்

இரா. வசந்த குமார். 60


சொல் அரும்பும் சோலை.

நினைவின் பாரம்.

பொற்றேரில்
பயணிக்கும் இளவரசி
வெண்ணிலவில் வழியும்
அமுதை விரும்பினாள்.
மண்புழு நிமிண்டும்
மனமெனது.

ஃஃஃ

இரா. வசந்த குமார். 61


சொல் அரும்பும் சோலை.

எங்கெங்கிலும்.

என்
தோட்டத்தின்
மரங்களிலிருந்து
இலைகளாய் 
நீயே 
உதிர்கின்றாய்.!

என்
காலைப்
புல்வெளியில்
பனித்துளிகளாய்
நீயே
பூத்திருக்கிறாய்.!

நான்
பார்க்கும்
இடங்களிலெல்லாம்
நீயே இருக்கின்றாய்,
பாதி புகைந்த
பீடித் துண்டுகளாகவும்,
முற்றும் கிழிந்த
பயணச்
சீட்டுகளாகவும்..!

ஃஃஃ

இரா. வசந்த குமார். 62


சொல் அரும்பும் சோலை.

சில துளிகள்.

பெருமழையின்
பொழிதலில் உடைகின்ற,
அணைக்கட்டுகள்
போல் அல்ல,
சிறு தூறலில்
நனைகின்ற
மஞ்சள் சுவர் போல்
நான் இருக்கின்றேன்.
நீ
எப்படி வருகின்றாய்.?

தவிர்த்து விட்டு
நீ போகையில்,
தவிக்கத் தவிக்கப்
பற்றும் 
என் மனத்தை
மரணத்தின் வலி.!

விடியலில்
உடைகின்ற
கனவுகளின் நுரைகளின்
மேல்
மாறுகின்ற
வண்ணப் படலமாய்
நீ...!

தாயற்ற
கைக் குழந்தையுடன்
தகப்பன் போல்

இரா. வசந்த குமார். 63


சொல் அரும்பும் சோலை.

தவிக்கிறேன்
நீயற்ற
நம் காதலுடன்..!

என்னைத்
தவிர்க்கப் பார்ப்பதிலும்
தள்ளி
வைப்பதிலும்
நீ
சொல்லும்
பொய்களின்
சாயம்
வெளுக்கும் போதெல்லாம்
கூசிப் போவது
நீயில்லை..!

ஃஃஃ

இரா. வசந்த குமார். 64


சொல் அரும்பும் சோலை.

வரமாட்டேன்.

காஞ்சு போன கருவேல முள்ளுக,


காரம் போட்டு கன்னி சொன்ன சொல்லுக,
கண்ணுக்குள்ள குத்துது, நெஞ்சுக்குள்ள நிக்குது!
குலை வரைக்கும் நொழஞ்சு, கடைசி வரைக்கும்
கொல்லுது!

பச்சைப் பசும் பாறை போல வழுக்குது,


பகல்வேசம் போட்டு, நல்லாத் தான் நடிக்குது,
பர்சாக் கொடுத்திருச்சு, பதுக்கி வெச்ச ஒரு நெனப்பு,
தரிசாப் போயிடுச்சு, ஒதுக்கி வெச்ச ஒரு மனசு.!

எரு போட்டு, ஒரம் போட்டு, வளத்து வத்தேன்,


எதமான நெனப்புகள் எடுத்துச் சொல்லி நெனச்சு
வந்தேன்,
எடுத்துச் சொல்லயில, எடுத்தெறிஞ்சு வீசயில, இருந்த
எடம் தெரியாம போயிடுச்சு, எதயும் தாங்கற எம் மனசு.!

நேத்து வரைக்கும் நெனக்கலயே, நெஞ்சுக்குள்ள


தோணலியே,
பாத்து வெச்ச சிரிப்பெல்லாம் பஞ்சாப் போகுமின்னு,
காத்தடிச்சு கலஞ்சு போன கருமேகக் கூட்டம்போல,
சேத்து வெச்ச கனவெல்லாம், செதறி செதறிப்
போனதம்மா.!

உருப் போட்டு, உருப் போட்டு, உம் முகத்தைப் பதிச்சு


வெச்சேன்,
கருப் போல, கருப் போல, கவனமாத் தான் காத்து
வெச்சேன்,

இரா. வசந்த குமார். 65


சொல் அரும்பும் சோலை.

தெருவோரம் போகயில, தெறிச்சு விழுந்த சேறு போல,


ஒரு வார்த்த கேட்கயில, ஒதறிப் போச்சு, என் உசிரு.!

ஆனப் பசி கொண்ட என் வீடு அடுப்புக்குள்ள,


பூன வந்து தூங்குதம்மா, புழுவெல்லாம் ஊறுதம்மா!
வானம் பாத்த பூமி போல, வறண்டு போன கெணறு
போல,
ஊனமாகிப் போனேனம்மா, உருப்படாம ஆனேனம்மா.!

பக்கமிருந்தும் பாத்துக்கல, பாத்திருந்தும் பேசவில்ல,


திக்கித் திக்கிச் சொன்ன வார்த்தை, தீயா பதிலை,
துக்கத்தோடு கேட்டுக்கறேன், தூரமாப் போயிக்கறன்,
அக்கம்பக்கம் நகந்திடறன், ஆயுசுக்கும் வரமாட்டன்..!

ஃஃஃ

இரா. வசந்த குமார். 66


சொல் அரும்பும் சோலை.

வாய்க்கா வரப்போரம்.

கெழக்க மொளச்ச கதிரும் மேக்க மறஞ்சாச்சு! 


வெளக்க ஏத்தி வெக்க, வேதனயும் சேந்தாச்சு!
பாத வழியப் பாத்து பூத்த கண்ணும்
வேத்து வேத்து தண்ணி பொழிஞ்சாச்சு!

ஈர வெறகு மேல சேந்த ஈசலு போல


கூரக் கீத்து மேல தூத்துன தூறலு போல
பாற மேல பூத்த பச்சல போல்
ஊறிப்புட்டீரு உள் மனசுல..! 

வெள்ளாம வெளஞ்சு நிக்க 


வெள்ளாடு மேயாம காத்து நிக்க
கை கொள்ளாம கொண்டு போக
வெள்ளன வருவிகளோ, வராம போவீகளோ?

ஆத்தோரம் நடக்கயில, அல வந்து அடிக்கயில


சேத்து சேத்து நடக்க, சேத்து வெச்ச காலுல
சேத்து தடம் பதியப் பதிய 
பாத்து பாத்து நடந்த பழய நெனப்பும்,

வாக்கா வரப்போரம் வக்கணயா ஒக்காந்து


எக்காளமா எசமானமா எட்டி எட்டிப் பறிச்சு
நிக்காம கொள்ளாம ஒடிப் போயி
பக்கா பக்காவா தின்ன மாங்காவும்,

அய்யனாரு சாமி அருவா பாத்து பயந்ததும்,


பொய்யா மீச வரஞ்சு மெரள வெச்சதும்,
அய்யா அம்மானு அலறியடிச்சு ஓடுனதும்,
மெய்யா நெனப்பில்லயா மச்சான் நெஞ்சுக்குள்ள..?

இரா. வசந்த குமார். 67


சொல் அரும்பும் சோலை.

திருவிழாவுல சீனிமுட்டா வாங்கித் தந்து


தெருமுச்சூடும் திமிரா காட்டுனதும்,
உருமா மாமன் கையில மாட்டி, ஓடி
பெருமா கோயிலுல பதுங்குனதும்,

ஏதேதோ பேசிப் பேசி ஏரிக்கர வர


போதம் ஏறிய கரயோரம் நின்னு
வாதம் விவாதம் பண்ணி உள்ள குதிச்ச
பாத தடமெல்லாம் பதராப் போச்சா?

ஃஃஃ

இரா. வசந்த குமார். 68


சொல் அரும்பும் சோலை.

பாடுகிறேன்...! 

அலையொதுக்கும் நுரையொதுங்கும்
ஆற்றங்கரையோரம்
அழகான நிலவுதிக்கும் அந்தி மாலை நேரம்
ஆசைமனம் வாடுதடி ஆரும் சொல்லலியா? என்
ஆவல் எல்லாம் தூது விட்டேன், அன்பைச்
சொல்லலியா?

கருக்கலிலே இருள்கவிழ்ந்து கருகும்முனு ஆச்சு,


வருத்துகின்ற புயலெல்லாம் உன் வாச மூச்சு!
செருக்கழிந்த வாழையெல்லாம் செதில்செதிலாய்ப்
போச்சு,
செத்திருந்த புஞ்சை நிலம் செவச்செவனு ஆச்சு!

ஓடொழுகும், வீடொழுகும், ஓசையோடு சேர்ந்தொழுகும்,


பாடுகின்ற பறவையெல்லாம் பதுங்கப் பதுங்க
இசையொழுகும்!
ஓடிவந்த வெள்ளமெல்லாம் ஓடையோடு சேர்ந்திருக்க,
ஒதுங்கி நிற்பதேனடி, நீ ஒளிந்து கொள்வதேனடி..!

திண்ணையெல்லாம் ஈரமாச்சு, திசையெல்லாம்


சாரலாச்சு,
தீயாக உன் நினைப்பு குளிர்காய வரலாச்சு!
முற்றமெல்லாம் நீர் தேங்க, முன்பார்த்த நினைவாக,
முத்தமிடும் என் மனசு, முழுதாகப் பழுதாக...!

மின்னலிங்கு சிரிப்பாக, மிச்சமெல்லாம் நெருப்பாக,


பின்னலிட்ட கோலமயில், பிரிந்து நிற்பதேனடி?
விளக்கொண்ணு ஏத்தி வெச்சேன், விடியலின் துளியாக,

இரா. வசந்த குமார். 69


சொல் அரும்பும் சோலை.

விளங்கலையே உன்மனசு, விளக்கமேதுமுண்டோ?

புளியமரப் பேயாக புரண்டாடும் மனசடங்க,


பூக்களெல்லாம் வேண்டாம், உன் புன்னகையே போதும்.
கலிமனுஷச் சதியாக, கதை முடியும் நேரத்தில்
கவிதையெல்லாம் வேண்டாம், உன் கண்ணிமையே
போதும்!

சில நேரம் சிலையாக, சில நேரம் உலையாக,


சிந்துகின்ற பார்வையில் உடல் சிக்கிப் போகும்!
மழை நனைத்த பாதங்கள், மண்ணில் போடும்
கோலங்கள்
மணம் கொஞ்சம் வீசும், என் மனதோடு பேசும்!

மேகமெல்லாம் மழையாச்சு, மண்ணோடு சேர்ந்தாச்சு,


மேற்குத்திசை ஒளியெல்லாம் மெல்ல மெல்ல
மறைஞ்சாச்சு,
கதவடைக்கும் பொழுதாச்சு, கருங்குயிலும் களைச்சாச்சு,
மனசடைக்க முடியலையே, மருகிமருகிப் பாடுகிறேன்...!!

ஃஃஃ

இரா. வசந்த குமார். 70


சொல் அரும்பும் சோலை.

போறவளே பொன்னுத்தாயி...!

கொத்துக் கொத்தாய்க் காய்ச்சிருக்கு மஞ்சக் கொல்லை


- உன்னைப்
பொத்திக் பொத்தி வெச்சுக்கிட்டேன் நெஞ்சுக்குள்ள!
முத்து முத்தாய்ச் சிரிச்சிருக்கு தென்னம்புள்ள - வந்து
முத்தம் எல்லாம் கொடுத்துவிட்ட சின்னப்புள்ள!

தேடித் தேடிக் காலெல்லாம் கருப்பாச்சு - உசுரத்


தேடித் தேடி உடம்பு உருக்குலைஞ்சாச்சு!
உண்ணாம உறங்காம கண்ணு நெருப்பாச்சு - அழகு
உருவம் பாத்தபொறவு உறக்கம் தொலஞ்சாச்சு!

சிரிச்சு சிரிச்சு நீ மனசுக்குள்ள வந்தாச்சு - உன்


சிரிப்பு சத்தம் கேட்காம காதுக செவுடாச்சு!
வெடிச்சு வெடிச்சுப் போகும் பருத்தி குரலாச்சு - காய்ச்ச
வெண்டக்கா வெளஞ்சு நிக்கும் வெரலாச்சு!

தொட்டுத் தொட்டுப் போகும் நுரை ஆத்தோடு - உன்னத்


தொட்டுத் தொட்டுப் பேச வரவா மூச்சுக் காத்தோடு!
பட்டுப் பட்டுத் துணியெல்லாம் எதுக்காக - உம்மேல
பட்டுப் பட்டு வரும் தென்றல் எனக்காக!

சிந்த சிந்த வார்த்தையெல்லாம் பொறுக்கிக்கிட்டேன் - நீ


சிந்தாத எழுத்துக்கென்னை உருக்கிக்கிட்டேன்!
நீ நனஞ்ச மழைக்காக குடையாவேன் - நீ

இரா. வசந்த குமார். 71


சொல் அரும்பும் சோலை.

நனயாத இரவுகளில் உடையாவேன்!

நீ சிரிக்கும் போதெல்லம் எங்கோ சறுக்கறேன்!


உன் சிதறி விட்ட புன்னகையைப் பொறுக்கறேன்!
என் பேனா மை தீரும்வரை கிறுக்கறேன்!
உன் பெண்மை எனக்காகும் வரை இரவைக்
குறுக்கறேன்!
ஃஃஃ

இரா. வசந்த குமார். 72


சொல் அரும்பும் சோலை.

மொட்டுகள்.

கொத்திக் கொத்திச்
செதுக்கிய
என் இதயத்துக்குள்
குடியேறும்,
சின்னக்குருவியா நீ..?

விழித்திருக்கையில்
தூக்கிக் கொண்டு
அலைகிறேன்,
உறங்கையிலோ
சுருண்டு
படுத்துக் கொள்கிறேன்,
உன் காதலுக்குள்.

உன்
இதழைச் சுவைக்கும்
ஆப்பிளை அனுப்பியது,
மறுபடியும்
அதே சாத்தானா..?

உன் விரல்
தீண்டும்
மயக்க நொடிகளில்,
மண்ணில் பதியாத
இந்தக் கால்கள்
எங்கே
நடந்தன..?

இரா. வசந்த குமார். 73


சொல் அரும்பும் சோலை.

உன் சிரிப்பில்
நனைகின்ற
பார்வைகள்,
கண்களில்
எங்கே
கரைகின்றன?

இதுவரை சொன்ன
வார்த்தைகளில் மட்டுமல்ல,
இன்னும்
சொல்லப் போகும்
வார்த்தைகள் மேலும்
காத்திருக்கிறது
காதல்...!

சின்னப் பூக்கள்
தீண்டும்
உன் கூந்தலில்
சறுக்கி
விளையாடுகிறது
என் மனம்...!

ஃஃஃ

இரா. வசந்த குமார். 74


சொல் அரும்பும் சோலை.

இறுதிப்புள்ளி.

ருசியின்மைக்கு
வந்து சேர்ந்தவனைப் போல
இரக்கத்திற்குரியவன்
யார்?

ஃஃஃ

இரா. வசந்த குமார். 75


சொல் அரும்பும் சோலை.

இரா. வசந்த குமார். 76

You might also like