You are on page 1of 4

திருப்பாவை – 7 ம் பாசுரம்

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து


பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்

கோதை: ம்ம்ம்…மார்கழி மாதசத்தோட பெருமையை நேற்றே எல்லோருக்கும் சொல்லி,


விடியற்காலைல நீராடப் போகனும் தயாரா இருங்கடின்னு சொல்லியும் இப்படித் தூங்கு
மூஞ்சியா இருக்காங்களே…
தோழி 1: கோதை இங்கே இவள் வீடும் கதவு சாத்தி இருக்குதே….
கோதை: அடியே பேய்ப் பெண்ணே!
தோழி 2: (பயத்துடன்) என்னது இவளைப் பேய் பிடிச்சிருக்கா? என்னடி சொல்ற?
கோதை: அடி அசடு! பேய்ப்பெண்ணே என்றால் இவளைப் பேய் பிடிச்சிருக்குன்னு
அர்த்தமில்ல. பேய் மாதிரி தூங்கறவளேன்னு சொல்ல வந்தேன்
தோழி 3: கோதை அப்ப நீ பேய் தூங்கறத பார்த்திருக்கியா என்ன?
கோதை: அப்படியில்லடி, பேய்கள் ராத்திரி முழுதும் முழிச்சுட்டு இருந்து விடியற்
காலைல அதாவது பிரம்ம முகூர்த்தத்துலதான் தூங்க ஆரம்பிக்குமாம். இவள் பிரம்ம
முகூர்த்த நேரம் கடந்தும் தூங்கறதனால, பேய் மாதிரி தூங்கறியான்னு கேட்கற
மாதிரி அப்படிச் சொன்னேன்
தோழி 1: ஓ…அப்படியா அர்த்தம்
தோழி 2: நான் பயந்தே போயிட்டேன்
தோழி 3: இவளை எழுப்பாம இப்படி பேசிகிட்டே இருந்தா எப்படி? கோதை நேற்று
‘புள்ளூம் சிலம்பின காண்” அப்படீன்னு சொல்லி ஒருத்தியை எழுப்பின. இவளை
என்ன சொல்லி எழுப்பப் போறடி?
கோதை: ஏ, பேய்ப் பெண்ணே! கீச்சு கீச்சென்று ஆனைச்சாத்தன் பறவை தன்
பெட்டையுடன் கலந்து பேசின பேச்சரவம் உன காதுக்குக் கேட்கலையா?
தோழி 1: ஆனைச்சாத்தன் பறவைன்னா?
தோழி 2: அது எப்படியிருக்கும் கோதை?
தோழி 3: இதோ பாருங்கடி…நம்ம கோதை சும்மா சாமி கும்பிட மட்டுமே சொல்லித் தர
மாட்டாள் கோதை! காதல், இயற்கை, பறவை/விலங்கு, வானியல், மனித வளம்,
அறிவியல், இப்படி கீச்சு கீச்சென்ற லோக்கல் பேச்சு, -ன்னு கண்டதையும் "ரசிக்க"
சொல்லித் தருவாள்! வாழ்க்கையை ரசிக்கச் சொல்லித் தருவாள்! அதுவே
திருப்பாவையின் சிறப்பம்சம்!
தோழி 1: காலையில் கதிரவன் உதிக்கும் வேளையில் காகம் கரையும், சேவற்கோழி
கூவும் என்றெல்லாம் சிந்ன வயசுல படிச்சிருக்கேன், அந்தப் பறவைகளையெல்லாம்
விட்டுட்டு, இப்படி என்ன பறவைன்னே தெரியாத ஆனைச்சாத்தன்ன்னு ஒரு
பறவையைச் சொல்றியேடி! அது என்ன?
கோதை: மற்ற பட்சிகளெல்லாம் ரொம்ப சோம்பேறிகள். சூரிய உதயம் ஆகிற
வேளையில் தான் சப்திக்கும். பாரத தேச ரிஷிகள் இவ்வளவு நேரங்கழித்து
எழுந்திருக்க மாட்டார்கள். ப்ரும்ம முஹூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும். இதற்கு
காகமும் சேவலும் உதவாது. பாரத்வாஜம் என்ற பட்சி சாத்விகமான குணங்களைக்
கொண்டது. அதுதான் ப்ரும்ம முஹூர்த்தத்தில் எழுந்து சப்திக்கும் சுபாவம் உடையது.
தோழி 1: இப்போ புரியுது…இதை வலியன் குருவிகள்ன்னும் சொல்வாங்கல்ல
கோதை: சரியாகச் சொன்னாய். அப்பறவையின் கண் மிக அழகாய் இருக்குமாம்.
இங்கு பரத்வாஜ மகரிஷியைப்போல் ஞானக்கண் என்பது உள்ளர்த்தமாகும். பகல்
முழுக்கப் பிரிந்து இருக்கப் போறோமேன்னு இந்தப் பறவைகள் தங்கள் துணையுடன்
கீச்சுக் கீச்சென்று கலந்து பேசிக் கொண்டிருக்கின்றன….அந்தச் சத்தமே
பேரரவமா, அதாவது பெரிய சத்தமா இருக்கே…அந்தச் சத்தம் கேட்டும் இவள்
இப்படித் தூங்கிகிட்டு இருக்காளே….
தோழி 2: கோதை, கீச்சு கீச்சு எனக் கத்தும் பறவைகள்! இப்படி எல்லாம் லோக்கலா
இது வரைக்கும் தமிழ்க் கவிஞர்கள் யாரும் எழுதலியே! இப்படி எழுதினா
இலக்கணத்தில் பிழை இருக்கு-ன்னு புலவர்கள் வந்து சண்டை போடுவாங்களே

தோழி 3: அடியே, நம் கோதை, இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட இலக்கியப் பெண்!


கண்டதைக் கண்டபடி, உள்ளதை உள்ளபடி சொல்வதுதான் அவள் வழக்கம்.

தோழி 1: கரெக்டா சொன்னடி! மற்ற பாவைகளில் இருந்து ஆண்டாளின் பாவை மட்டும்


தனித்து நிற்க காரணம் என்ன தெரியுமா? ஆன்மீகத்தை ஆன்மீகமாப் பேசாதது
தான் காரணம்! அதுதான் கோதையின் தனித்துவம்!

தோழி 2: மற்றவர்களுடைய பார்வைகளில் இருந்து ஆண்டாளின் பாவை சற்றே மாறுபட்ட


ஒன்று! அதனால்தான் அவள் பாவை-யும் மாறுபட்டது! பார்-வையும் மாறுபட்டது! அது
ஆன்மீகப் பார்வை மட்டும் அல்ல! வாழ்க்கைப் பார்வை!

கோதை: காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து” ஆய்ச்சியர்கள் தயிர் கடையும் பேரவம்கூட


அடியே பெண்ணே…உனக்குக் கேட்கவில்லையா?

தோழி 1: கோதை காசும் பிறப்பும்ன்னா என்னடி?

கோதை: நம்மூர் ஆய்ச்சியர்கள் அணிகிற அச்சுத் தாலியும் ஆமைத்தாலிக்குத்தான் காசு,


பிறப்புன்னு பேரு. அச்சாலே அடித்துப் போட்டு மாலையாகக் கோர்த்து அணிவதை
அச்சுத்தாலி அல்லது வட்டத்தாலின்னு சொல்வாங்க. முளை முளையாகச் செய்து கோர்த்து
அணிவதை ஆமைத்தாலின்னு சொல்வாங்க

தோழி 2: கோதை நீ ஒரு வார்த்தை சொன்னா அதுக்கு மறுவார்த்தை இருக்குமா? நமக்கே


ஆய்ச்சியர்கள் தயிர் கடையும்போது அந்த ஆபரணங்கள் ஒன்றோடொன்று உராய்வதால்
ஏற்படும் ஒலி பேரரவமாக கேட்கிறதே!

தோழி 3: ஆமாம்…இந்தச் சத்தம் கேட்டும் இவள் இப்படிக் கும்பகர்ணன் போலத்


தூங்கிகிட்டு இருக்காளே! அப்படி என்ன தூக்கம் வேண்டிக்கிடக்கு?

கோதை: தயிர் கடையும் ஆய்ச்சியர்கள் வாச நறுங்குழல் ஆய்ச்சியர்கள்! திருக் காட்கரை


எனும் மலைநாட்டுத் திவ்யதேசத்தைக் குறிப்பிடும் போது ‘தெருவெல்லாம் காவி கமழ்
திருக்காட்கரை’ ன்னு சொல்வாங்க! அதுபோல இங்கே ஊரையே உறங்க
விடாமல்ஆய்ச்சியர்கள் தயிர் கடையும்போது கூந்தல் முடி அவிழ்ந்து கூந்தலின் வாசனை
வெள்ளம் போல வந்து கொண்டிருக்கிறது பாருங்கள்!
தோழி 1: ஆமாம்டி…ஆய்ச்சியர் கூந்தலில் பூசியிருக்கும் வாசனை வீசும் எண்ணெயும்,
சூடியிருக்கும் மலர்களின் வாசனையும் கூட கலந்து வீசுகிறதே!

தோழி 2: இந்த வாசனை எட்டியும் கூட இவள் எப்படித்தான் உறங்குகின்றாளோ?

தோழி 3: அடப்போடி, கோகுலத்தில் நிலைமை முன்போல் இல்லை. கிருஷ்ணன் பிறந்தபின்


பசுக்கள் எல்லாம் வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்களாக அல்லவோ இருக்கின்றன.
அவை பொழியும் பாலைத் தயிராக்கி இங்கே இரவும் பகலும் இடைவிடாமல் தயிர் கடைதலே
பொழுதுபோக்காக இருக்கிறது.

தோழி 1: சரிதான்…ராப்பகலா இப்படி மத்தால தயிர் கடையற சத்தம் கேட்டுகிட்டே இருந்தா


உள்ள தூங்கறவளுக்கு இது பகல்னு தெரியுமா? ராத்திரின்னு தெரியுமா?

தோழி 2: ஆமாம்…எப்பவும் இதே சத்தம்னா அது கேட்கறவங்களுக்குப் பழகிப் போயிடும்ல.


அதான் இத்தனை சத்தத்துலயும் இவள் தூங்கிகிட்டு இருக்கா…

கோதை: நாயகப் பெண்பிள்ளாய்! நீ எங்களுக்குத் தலைவி போன்றவள்; நீ பக்தி மிக்கவள்;


நீ ஒளி படைத்தவள்; எம் கோஷ்டிக்கே நடுநாயகமாய் விளங்கும் உத்தமப் பெண் போன்றவள்;
இப்படிப் படுத்துக் கொண்டிருக்கலாமா? அட்டிகையின் நடுவில் பெரிய ரத்னம் நடுநாயகமாய்
விளங்குமே; நீயும் எங்களுக்கு அப்படிப்பட்ட நாயகப் பெண்பிள்ளை அல்லவா?

உள்ளே இருப்பவள்: (உறக்கம் கலைந்து) கோதை…. நான் உங்களுக்கெல்லாம்


அடிமையானவள். அப்படி இருக்கும்போது என்னை நாயகப் பெண்பிள்ளாய் என
அழைக்கலாமா? நீங்கள் அழைக்கும் போது நான் வராமலே இருப்பேனா? என்னைச்
சாதாரணமாகவே கூப்பிடலாமே!

தோழி 1: யம்மாடி, நீ பெரிய வீட்டுப் பொண்ணுடி…உன்னைப்போய் சாதாரணமா கூப்பிட


முடியுமா! அதனாலதான் கோதை உன்னை அப்படி அழைத்தாள்!

கோதை: பெண்ணே! நாங்கள் நாராயணன், மூர்த்தி கேசவன் என்றெல்லாம் பகவானுடைய


திருநாமங்கள் சொல்லியும் நீ பேசாமல் இருக்கலாமா?

கர தூஷணர்களை வெற்றி கொண்ட சக்ரவர்த்தித் திருமகனை ஆலிங்கனம் செய்ய ஓடி


வந்த சீதா பிராட்டியைப் போல நீ ஓடி வருவாய் என்றே கேசி என்ற குதிரை வடிவில் வந்த
அரக்கனைக் கொன்ற கேசவனின் வெற்றியைச் சொன்னோம்.

தோழி 2: அதுவே உனக்குக் காரணமாகி நீ பயமெல்லாம் தீர்ந்துபோய் மார்பிலே கை வைத்து


உறங்கிக் கொண்டிருக்கிறாயா?

தோழி 3: கோதை, இவளும் கேசம் உடையவள்தான்; அதாவது ஒளி பொருந்திய அழகிய


கேசத்தை உடையவள்தான்!

தோழி 2: அழகிய கேசத்தோடு கூடிய உன் ஒளி காட்டில் எரிந்த நிலவாய் ஆகாமல் உன்னைக்
காணோமே என்று இருட்டடைந்து கிடக்கிற எங்கள் மனதில் மண்டிக் கிடக்கும்
அந்தகாரத்தைப் போக்க உடனே வந்து கதவைத்திறடி!
(உள்ளே இருப்பவள் கதவைத் திறந்து வரவும் கோதை அவளையும் சேர்த்துக் கொண்டு
“வாருங்கள் அடுத்தவளைப் போய் எழுப்பலாம்” என்று சொல்வதாகவும் மற்றாவர்கள் அதை
ஆமோதிப்பதாகவும் முடிக்கலாம்)

You might also like