You are on page 1of 2

கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை

விழுக் கோள் பலவின் பழுப் பயம் கொள்மார்

குறவர் ஊன்றிய குரம்பை புதைய

10 வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்

புலி செத்து வெரீஇய புகர் முக வேழம்

மழை படு சிலம்பில் கழைபடப் பெயரும்

நல் வரை நாட!

அடிநேர் உரை

கிளிகள் (தம் இனத்தை) பலமுறை அழைத்துக் கூவும் அணில் ஆடும்


பெரிய கிளைகளில்சிறந்த குலைகளைக் கொண்ட பலா மரத்தின்
பழங்களின் பயனைக் கொள்வதற்கு குறவர்கள் எழுப்பிய குடிசை
மறையுமாறு வேங்கைப் பூக்கள் உருவாக்கிய தேன் சிந்தும்
தோற்றத்தைப் புலியென்று எண்ணி வெருண்ட புகர்முக யானை
மேகங்கள் படர்ந்த மலைச்சரிவில் மூங்கில்கள் முறிபடப் பெயர்ந்து
செல்லும் நல்ல மலை நாட்டைச் சேர்ந்தவனே!

பொருள்

தினைப்புனம் விளைந்திருக்கும் காலத்தில், புனத்திற்குரியவரின் மகள்


தன் தோழியருடன் பகலில் காவலுக்குச் செல்வது வழக்கம்.
தினைப்புனம் என்பது மலையின் சமதளப் பகுதிகளில் தினை
பயிரிடப்படும் நிலம். அப்போது பயிரை மேயக் காட்டு விலங்குகளும்,
கதிர்களைக் கொத்தித் தின்ன காட்டுப் பறவைகளும் வரும். காட்டு
விலங்குகளைத் துரத்த, உயரமான மரத்தில் காவல் பரண் அமைத்துக்
குறவர் காவலிருப்பர். பறவைகளை விரட்ட, புனத்தின் நடுவே ஓர்
உயரமான மேடை அமைத்து, அதில் அமர்ந்த வண்ணம் மகளிர், கவண்
மூலம் கல்லெறிந்தும், பல்விதத் தோற்கருவிகளைத் தட்டி ஒலி
எழுப்பியும், கைகளை உயர்த்தி ஆரவாரக் கூச்சல் போட்டும்
பறவைகளை விரட்டுவர். அப்போது, காட்டு விலங்கை வேட்டையாட,
வேறு ஊரைச் சேர்ந்த ஓர் இளைஞன் அந்தப் பக்கம் வருவான்.
தற்செயலாகத் தலைவியைச் சந்திப்பான். இருவரும் காதல்கொள்வர்.
இதுவே குறிஞ்சிநிலக் காதல் கதைகள் பலவற்றுக்குப் பின்புலமாக
அமையும். இதை ஒட்டி ஏற்படும் பல்வேறு பின்விளைவுகளைப் பற்றிப்
புலவர் தம் கற்பனைக்கு ஏற்றவாறு பாடல்கள் புனைவர். அப்படிப்பட்ட
பாடல்தான் இதுவும்.

பூக்களைப் பார்த்துப் புலியென நினைத்து யானை வெருண்டோடும்


மலையைச் சேர்ந்தவனே என்று தோழி தலைவனை விளிக்கிறாள்.
ஏதேனும் வேண்டாத ஒன்றனுக்கு வீணாக அஞ்சி மிரண்டால்,
‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்று சொல்லக்
கேட்டிருக்கிறோம். ஒரு பெரிய செல்வர் வீட்டுச் செல்லக் குழந்தையைக்
காதலிக்கிறோமே என்ற எண்ணத்தில் அவளின் வீட்டாருக்கு அஞ்சித்
திரிகிறானோ தலைவன் என்ற ஐயம் தோழிக்கு உண்டு போலும். யானை
வீணாக வெருண்டு ஓடுவதைப் போல நீயும் தேவையில்லாமல்
அஞ்சிக் கொண்டு தயங்க வேண்டாம் என்ற பொருளில்
உள்ளுறையாகத் தோழி கூறுகிறாற் போல் கபிலர் இந்த உவமையைப்
படைத்திருக்கிறார்.
தரையில் உதிர்ந்து கிடக்கும் பூக்கள் புலிபோல் தோன்றாது. எனவே
அதற்கு ஓர் உருவம் கொடுக்க, குடிசைக் கூரையின் மேல் உதிர்ந்து
கிடக்கும் பூக்கள் என்று சொல்கிறார் புலவர். காட்டுக்குள் குடிசை எப்படி
வரும்? எனவே குறவர் அமைத்த குடிசை என்கிறார். குறவர் அங்கு
குடிசை ஏன் போட வேண்டும்? பலாக் காய்களைப் பழுக்கவைக்க
என்கிறார் புலவர்.

You might also like