You are on page 1of 4

தலைப்பு: நாதன் தாள் வாழ்க

ஆர் உயிர்களின் மீது கொண்ட பரிவினால் காலம் காலமாகப் பெருமான் செய்து


வருகின்ற பேர் உதவியினை விளக்குவது மணிவாசகப் பெருமான் அருளிய
திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள சிவபுராணம். இச்சிவபுராணத்தில்
திருவைந்தெழுத்தான, ‘சிவயநம’ என்ற மந்திரத்தைப் பெருமானின் திருப்பெயராகவும்
திருவடிவாகவும் நம்மைக் காக்கும் மந்திரமாகவும் சித்தாந்த சைவம் குறிப்பிடும்
நடப்பாற்றல், மலம், சிவம், வனப்பாற்றல், யாக்கை என்ற ஐந்து உறுதிப் பொருள்களின்
தெளிவாகவும் குறிப்பிட்டப் பின், ‘நாதன் தாள் வாழ்க’ என்று மணிவாசகர்
குறிப்பிடுகின்றார்.

நாதன் என்பது தலைவன் எனும் பொருளையும் குறிக்கும் நாத வடிவாய் இருக்கின்ற


பெருமானே என்பதனையும் குறிக்கும். தமிழ்ச் சைவர்களின் இறைக் கொள்கையாகிய
சித்தாந்த சைவம் உயிர்கள் 84,00,000 வகையாக உள்ளன என்று குறிப்பிடுகின்றது. இதில்
வானவர் 11,00,000 வகை என்றும் மாந்தர் 9,00,000 வகை என்றும் விலங்குகள் 10,00,000
வகை என்றும் பறவைகள் 10,00,000 வகை என்றும் ஊர்வன 15,00,000 வகை என்றும்
நீர்வாழ்வன 10,00,000 வகை என்றும் தாவரங்கள் 19,00,000 வகை என்றும்
குறிப்பிடுகின்றது. இந்த 84,00,000 வகையான உயிர் இனங்களுக்கும் உடல், கருவிகள்,
வாழ் உலகம், நுகர்ச்சிப் பொருள்கள் ஆகியனவற்றைப் பெருமானே அளிப்பதால்,
அவனே உயிர்களுக்குத் தலைவன் என்று சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.
வடமொழியில் உயிர்களைப் பசு என்றும் பெருமானைப் பதி என்றும் குறிப்பிடுவர்.
இதனாலேயே பெருமான் பசுபதி என்று வடமொழியில் அழைக்கப் பெறுகின்றான்.

“நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று, பாதம் தொழுவார் பாவம்


தீர்ப்பார் பழன நகராரே” என்று திருஞானசம்பந்தப் பெருமானும் சிவபெருமானை
நாதன் என்று குறிப்பிடுவார். உயிர்கள், பெருமானே தங்களுக்குத் தலைவன் என்பதனை
அறிந்து அவனின் திருவடிகளைத் தொழுதால் பிறவிக்கு வித்தாக இருக்கின்ற தீவினைப்
பயனையும் நல்வினைப் பயனையும் தொலைத்துப் பிறவி அறலாம் என்று
திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இதைத்தான் மணிவாசகரும், ‘நாதன் தாள் வாழ்க’
என்று குறிப்பிடுகின்றார்.
எல்லா உலகங்களிலும் வாழ்கின்ற உயிரினங்களுக்கும் பெருமானே அந்தந்த
உயிரின் அறியாமைக்கு ஏற்பவும் செவ்விக்கு ஏற்பவும் உடல்களைப் பல்வேறாக
அளிக்கின்றான் என்பதனை உயிர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று
நினைவுறுத்துகின்றார் மணிவாசகர். ஓர் அறிவு முதல் ஆறு அறிவிற்கு ஏற்ப உள்ள
உடல்களைத் தோற்றுவித்து, அவ்வுடல்களுக்குள் உயிர்களைப் புகுத்தி, அவ்வுடல்களில்
உயிர்கள் நின்று அறிவு விளக்கம் பெறுவதற்குப் பெருமானே உதவி உள்ளான்
என்பதனை நினைவில் கொள்ள வேண்டும் என்பதனை உணர்த்துகின்றார்.
உயிர்களுக்குத் தாவரம், பூச்சி, புழு, விலங்கு, பறவை, பாம்பு, பேய், மாந்தர், வானவர்
போன்ற உயிரினங்களின் உடல்களைக் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல்
அவ்வுடல்களில் உள்ள உயிரின் அறிவு பெற வேண்டிய நிலைக்கு ஏற்ப
உட்கருவிகளையும் பெருமானே அளிக்கின்றான் என்பதனை மணிவாசகர்
நினைவுறுத்துகின்றார். அவ்வகையில் மாந்த இனத்திற்கு மனம், சித்தம், அறிவு,
மனவெழுச்சி எனும் உட்கருவிகளையும் பெருமானே கொடுத்து உதவி இருப்பதனைக்
குறிப்பிடுகின்றார். உயிர்களுக்கு ஒன்றைப் பற்றுவதற்கு மனமும் பற்றிய மனத்தில் ஏன்,
எது, எதற்கு என்பன போன்ற கேள்விகளை எழுப்பும் மனவெழுச்சியையும் ஆய்வு
செய்து முடிவு எடுக்கப் புத்தி என்ற அறிவையும் அறிந்த ஒன்றை அறிவாய்ச் சிந்தையில்
சேமிக்கச் சிந்தையையும் பெருமானே வழங்கி உள்ளான் என்பதனை உயிர்கள்
நினைவில் கொள்ள வேண்டும் என்பதனை மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு உடல்களையும் கருவிகளையும் உயிர்களுக்கு அவற்றின் உலக


உறவுகளின் முலம் கொடுக்கும் உயிர்களின் நாதனான பெருமான், உயிர்களின்
செவ்விக்கு ஏற்ப உடல் முழுமை பெற்றவர்களாகவும் உடற்குறை உடையவர்களாகவும்
உயிர்களுக்குப் பொருத்தப் பட்டுள்ள உட்கருவிகள் நிறைவுடையதாகவும் குறை
உடையதாகவும் வேண்டியவர் வேண்டாதவர் என்று இல்லாமல் ஒவ்வொரு உயிருக்கும்
அதனின் தேவையை அறிந்து, குழந்தையின் தேவையைக் குறிப்பறிந்து பால் ஊட்டும்
தாயினும் மேலான அன்புடைய பெருமான் அளிக்கின்றான் என்பதனை மணிவாசகர்
நினைவுறுத்துகின்றார்.

உயிர்களின் தலைவனாக விளங்கும் பெருமானே உயிர்களுக்கு வாழும்


இடத்தையும் அளிக்கின்றான் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பூவுலகம்,
சொர்க்கம் நரகம், வானவர் உலகம், இறை உலகம் போன்ற உலகங்களைப் பெருமானே
அளித்து வழி நடத்துகின்றான் என்கின்றார். பூவுலகிலே எந்த நாடு, எந்த மாநிலம், எந்த
ஊர் என்பதனைப் பெருமானே உறுதிப் படுத்துகின்றான் என்பதனை நினைவு
கூறுகின்றார்.

நாதனே என்று குறிப்பிடுவதன் வழி உயிர்கள் ஒவ்வொரு பிறவியிலும் நுகரும் இன்ப


துன்ப நுகர்வுகளின் வாயில்களாக அமைகின்ற நுகர்ச்சிப் பொருள்களையும் பெருமானே
நமக்கு ஊட்டுகின்றான் என்பதனையும் உணர்த்துகின்றார் மணிவாசகர். பெருமானே
பெற்றோர், மனைவி, கணவன், மக்கள், உறவினர், நண்பர், அறிமுகமானவர் என்று
பலரையும் நமக்குக் காட்டி, இன்ப துன்ப நுகர்வுகளை அவர்களின் மூலம் நமக்கு
அளிக்கின்றான் என்று குறிப்பிடுகின்றார். உலகில் இன்ப துன்ப நுகர்வுகளின் வழிச்
செவ்வி அடைவதற்கும் பட்டறிவு பெறுவதற்கும் பெருமானே உயிர்களுக்கு உணவு,
உடை, உறையுள், பொன், பொருள், வீடு, மனை, என்று நமக்குக் கூட்டுவிக்கின்றான்
என்கின்றார். உயிர்களின் தலைவனான பெருமான் கூட்டுவிக்காவிடில் எதும் நமக்குக்
கிட்டாது என்பார் மணிவாசகர். இதனையே, “வகுத்தான் வகுத்த வழியல்லால் கோடி,
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” என்று பேராசான் திருவள்ளுவரும் குறிப்பிடுவார்.
கோடிக்கணக்கான பொருளைச் சேர்த்தவருக்கும் ஊழினால் வகுக்கப்பட்டத்
தன்மையினால் அல்லாது வெறும் முயற்சியால் மட்டும் எதுவும் வந்து கிட்டிவிடாது
என்று பேராசான் குறிப்பிடுவார்.

நாதன் என்பதால் பெருமான் உயிர்களின் தலைவன் என்று குறிப்பிடும்


மணிவாசகர், அப்பெருமான் நாதவடிவாகத் தோன்றி அருள் புரிவான் என்பதனையும்
உணர்த்துவதாக உள்ளது. தன்னுடைய சிறப்பு நிலையில், உயிர்களின் கற்பனைக்கும்
அப்பாற்பட்டு இருக்கின்ற பெருமான், உயிர்களுக்கு உதவுவதற்காகத் தன் சிறப்பு
நிலையில் இருந்து பொது நிலைக்கு இறங்கி வந்ததாகச் சித்தாந்த சைவ மெய்கண்ட
நூல்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறு தமது சிறப்பு நிலையில் வடிவம், பெயர்,
அடையாளம் என்று ஒன்றும் இல்லாத பெருமான், தனது அருளை ஆற்றலாக
வெளிப்படுத்தி மேலான சிவம், மேலான சத்தி என்று இரண்டாக ஆகினான் என்று
அந்நூல்கள் குறிப்பிடுகின்றன. தானும் தன் ஆற்றலுமாய் நின்ற அப்பெருமான்,
உயிர்களுக்காக இயங்கிய போது கொண்ட முதல் வடிவம் நாத வடிவம் அல்லது ஓசை
வடிவம் என்பர். பின்பு ஒளி வடிவம் அல்லது விந்து வடிவம் கொண்டான் என்பர்.
இவற்றையே மேலான ஓசை வடிவம் (பரநாதம்), மேலான ஒளிவடிவம் (பரவிந்து) என்று
குறிப்பிடுவர். நாத வடிவில் தோன்றிப் பெருமான் உயிர்களுக்குத் தலைவனாக,
முதல்வனாக இருக்கின்றான் என்று உணர்த்தும் குறிப்பும் இங்கு உணரத்தக்கது.

பெருமானின் தாளையும், “நாதன் தாள் வாழ்க” என்று மணிவாசகப் பெருமான்


குறிப்பிடுகின்ற சீர்மை போற்றுதற்கு உரியது. பெருமானின் தாள்கள் அவனின்
திருவடிகளைக் குறிப்பன. உலகப் பேராசான் திருவள்ளுவரும் கூட பெருமானின்
திருவடிகளை, “நற்றாள் தொழார்”, “தாளை வணங்காத் தலை” என்றெல்லாம்
குறிப்பிடுவார். பெருமானின் திருவடிவம் என்பது நம்மைப் போன்ற உயிர்களின்
உடல்களைப் போன்று குருதியும் தசையும் உடையது அன்று என்று சிவஞானசித்தியார்
என்ற மெய்கண்ட நூல் குறிப்பிடுகின்றது. பெருமான் தனது திருவருளையே தமக்குத்
திருவடிவாகக் கொள்கின்றான் என்று குறிப்பிடப்படுகின்றது. பெருமானின் திருவடிவு
என்பது பெருமானின் இயல்புகளை உணர்த்துகின்ற அடையாளங்களே என்று உண்மை
விளக்கம் என்ற மெய்கண்ட நூல் குறிப்பிடுகின்றது. அவ்வகையில் பெருமானின்
திருவடிகள் அல்லது தாள் என்பவை பெருமானின் அன்பு மற்றும் அருள் எனும்
இயல்புகளைக் காட்டும் அடையாளமாக உள்ளன என்பர். பெருமானின் வலது திருவடி
அன்பையும் பெருமானின் இடது திருவடி அவனின் அம்மை வடிவான அருளையும்
குறித்து நிற்பதனை மணிவாசகர் உணர்த்தினார் எனக் கொள்ள வேண்டும்.

மணிவாசகப் பெருமான், ‘நாதன் தாள் வாழ்க’ என்றமையினால் உயிர்களின்


தலைவனாகவும் உயிர்களுக்கு ஓசை வடிவில் தோன்றி அருளிய முதல்வனாயும்
பெருமான் இருக்கின்றான் என்பதனை உணர்த்தினார். மேலும் உயிர்களுக்கு அன்பையும்
அருளையும் வாறி வழங்குன்ற பரிவுடைப் பரம்பொருளாய்ப் பெருமான்
விளங்குகின்றான் என்பதனையும் உணர்த்தினார். அத்தகைய பேரறிவுப்
பெருங்கருணையின் திருவடிகளை நாமும் வாழ்த்தி வணங்கி நலம் பெறுவோம்

இனபமே எந்நாளும் துன்பம் இல்லை!

You might also like