You are on page 1of 9

பத்தி இலக்கியம்

பக்தி இலக்கியம் பெருமளவில் தோன்றியது பல்லவர் காலத்திலேதான். வேறு எம்மொழியிலும் தமிழில்


தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியம்
இருவகைப்பட்டது. தனித்தனிப் பதிகங்களால் பக்தி அனுபவங்களை வெளிப்படுத்துதல்,
பிரபந்தங்களாக வெளிப்படுத்துதல் என அவை இருவகையாக உள்ளன. தனித்தனிப் பதிகங்களுள்
சில, அகத்துறைகள் தழுவி அமைந்துள்ளன. பெரும்பாலானவை முன்னிலைப் பரவலாகக் கடவுள்
வாழ்த்தாக உள்ளன. பிரபந்தங்களுள் பெரும்பாலானவை அகத்திணை இலக்கணங்களுக்கு ஏற்ப
அமைந்தவை. பதிகங்களிலும் பிரபந்தங்களிலும் அன்பின் ஐந்திணை தழுவி வந்தவை சிலவே. ஏனைய
பல கைக்கிளை, பெருந்திணை சார்ந்தவை. பக்திப் பேரன்பை உணர்த்த அவை பொருத்தமான
திணைகள் என்பதே இதற்குக் காரணம் எனலாம்.

சங்க காலத்திற்குப் பிறகு:

சங்க காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் சமண, பௌத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்றன.


துறவறத்திற்குப் பெருமை ஏற்பட்டது. அதனால் மக்களின் காதல் வாழ்வுக்கும் இல்லறத்திற்கும் இருந்த
பெருமை குறையத் தலைப்பட்டது. இந்த உலகில் உள்ள இன்பங்களை வெறுத்து, மறுமையை மட்டும்
நாடுவதே கடமை என்ற மனப்பான்மை வலுத்தது. ஆடல் பாடல் ஓவியம் சிற்பம் முதலிய கலைகளின்
மதிப்புக் குன்றியது. இந்த நிலையிலும் சிலப்பதிகாரம் இருவகை நிலைகளையும் எடுத்துரைத்து
இரண்டிற்கும் பாலம் போலவே அமைந்தது.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்:

ஆழ்வார் நாயன்மார் பாடல்களில் துறவறம் பழிக்கப்படவில்லை; இல்லறம் வெறுக்கப்படவில்லை.


நிலையாமை உணர்தத
் ப்படுகிறது. கலைகளும் போற்றப்படுகின்றன. இந்த உலக இன்பங்களை
நுகர்ந்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்ற தெளிவைப் பக்தி இலக்கியம் தருகிறது.
உலக வாழ்வைக் கண்டு அஞ்சும் அச்சம் நீங்கி, மக்கள் கூடி வழிபாடு செய்து பக்தியுணர்ச்சியில்
திளைத்திருக்க ஊக்கமூட்டுகிறது. “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்கிறது திருஞான
சம்பந்தர் பாடிய தேவாரத்திலுள்ள அறிவுரை.

எல்லாம் இறைவன் தரும் இன்பங்களே:

சமணத்துறவியாக, துறவிகளின் தலைவராக இருந்து சைவ சமயத்திற்குத் திரும்பியவர் எனக்


கூறப்படும் திருநாவுக்கரசர் பாடியுள்ள பின்வரும் பாடலில் இயற்கை தரும் இன்பங்களும் இயற்கையைப்
பயன்படுத்திப் பெறும் இன்பங்களும் கலை இன்பங்களும் எல்லாம் இறைவன் தரும் இன்பங்களே என்ற
உண்மை விளங்குகிறது.

குருகாம் வயிரமாம் கூறு நாளாம்

கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்


பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்

பழத்தின் இரதமாம் பாட்டில் பண்ணாம்

ஒருகால் உமையாளோர் பாக னுமாம்

உள்நின்ற நாவிற்கு உரையா டியாம்

கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்

கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.

(திருநாவுக்கரசர் தேவாரம்)

பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி:

ஆழ்வார் நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி ஒன்று; கடவுளுக்குமுன் மக்கள்


எல்லோரும் சமமானவர்கள். கடவுள் ஒருவரே எல்லா மக்களுக்கும் தலைவர் என்ற கருத்தைப் பரப்ப
அந்தப் பாடல்கள் உதவின. அதனால், அரசர்களையும் செல்வர்களையும் பாடுவதற்குப் பயன்பட்ட தமிழ்,
கடவுளைப் பாடுவதற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்ற கொள்கை வளர்ந்தது. அரண்மனையில்
நிகழ்ந்துவந்த விழாக்கள் பல, கோயில்களில் கடவுளுக்கு உரிய திருவிழாக்களாக மாறின.

பக்திப் பாடல்கள்:

வடிவம் என்ற அடிப்படையில் நோக்கும் போது, கற்றவர்களுக்கு உரியனவாகப் பாடப்பட்ட சங்கப்


பாட்டுகள் போலன்றிக் கற்றவர்களோடு மற்றவர்களும் கூடிப் பாடுவதற்கு ஏற்றவாறு தமிழ் எளியதாய்
நெகிழ்ந்து அமைந்தவை ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிய பக்திப் பாடல்கள். ஊர் தோறும்
பக்தர்கள் கூட்டம் கூட்டமாகப் பாடிக் கோயில்களைச் சுற்றிவந்து வழிபடுவதற்கு ஏற்ற வகையில்
இசைப்பாடல்களாய் அவை அமைந்தன. இவ்வாறு நடை எளிமையும் இசையினிமையும் கூடினமையால்,
தமிழ் இலக்கிய நோக்கிலும் போக்கிலும் மாறுதல் ஏற்பட முடிந்தது.

பதிகம்:

இக்காலத்தில் பெரும்பான்மை வகிப்பவை பதிகங்களே. பதிகம் என்பது பெரும்பாலும் பத்துப்


பாக்களைக் கொண்டது. பதிகம், அப்பர் காலம் தொட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்று
மாணிக்கவாசகர் காலத்தில் உச்சநிலை பெற்றது. சங்ககாலச் சான்றோர்கள் தெய்வானுபவத்தை
வெளியிடப் பரிபாடல் முதலிய இசைச் செய்யுள் வகைகளைப் பயன்படுத்தினர் என்பது நாம் அறிந்த
ஒன்று. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பதிகத்தைப் பயன்படுத்தினர். இது செய்யுள் வடிவத்தில்
வளர்ச்சியை உணர்த்துகிறது எனலாம். அடியார்கள் தாம் புலப்படுத்தும் உணர்ச்சியை வரிசையாக
அமைத்துக் காட்டுவதற்குப் பதிக முறையைப் பயன்படுத்தினர். இப்பதிக அமைப்பு சங்ககால யாப்பான
ஒத்தாழிசைக் கலிப்பாவிலிருந்து உருவானது எனலாம். தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி
வருவது. தாழிசையில் ஓசையிலும் பொருளிலும் ஒத்திருத்தல் போலவே பதிகத்திலும் அவை
ஒத்திருக்கின்றன. அக்கால மக்களைப் பக்தி நெறியில் ஈடுபடுத்த ஏற்ற கருவியாகப் பதிகம்
அமைந்தது.

அகவல், வெண்பா:

அகவல், வெண்பா முதலியனவும் பக்தி இலக்கியக் காலத்தில் கையாளப்பட்டாலும், பெருவழக்காகக்


கையாளப்பட்டவை தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்களே. பல்வேறு உணர்ச்சி
வேறுபாடுகளைக் காட்டப் பல்வேறு வகை ஓசைமுறைகள் பயன்படுத்தப்பட்டன. தமிழுக்கு அவை
புதுவரவுகள். காப்பியங்கள் அகவற்பாவில் எழுதப்படவேண்டும் என்ற மரபு மாறுபட்டமைக்கு பக்தி
இலக்கியக் காலப் பாவகைகள் காரணம் எனலாம்.

பழமையான இசைச் செல்வம்:

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பாடல்கள் எண்ணாயிரமும்


தேவாரம் என்ற பெயரால் சிறந்த பக்தி இலக்கியமாக விளங்குகின்றன. இன்ன பண் என்று
குறிப்பிடப்பட்டு அவை பாடப்படுகின்றன. இவ்வளவு பழைமையான இசைச் செல்வம் வேறுமொழிகளில்
இல்லை எனலாம்.

நாட்டுப் பாடல்:

உருக்கமான திருவாசகப் பாடல்களைப் பாடிய மாணிக்கவாசகர், அக்காலத்தில் மக்களிடையே இருந்த


சில நாட்டுப் பாடல் வடிவங்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சிறப்பாக, இளம்பெண்கள்
ஆடிப் பாடும் பாடல் வடிவங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் விளையாடல்களுடன் பக்தி உணர்வை
கலந்து அமைத்துத் தந்திருக்கிறார். திருவாசகத்தில் உள்ள திருவம்மானை, திருப்பொற்சுண்ணம்,
திருக்கோத்தும்பி, திருத்தௌ¢ளேணம், திருத்தோணோக்கம், திருச்சாழல், திருப்பூவல்லி,
திருப்பொன்னூசல் ஆகியவை அவ்வாறு பாடப்பட்டவை. பெண்கள் உட்கார்நது
் ஆடுவது அம்மானை;
வாசனைப்பொடி இடித்தவாறே பாடுவது பொற்சுண்ணம்; மலர் பறிக்கும்போது பாடுவது பூவல்லி; ஊசல்
ஆடும்போது பாடுவது ஊசல்; தும்பி, தோணோக்கம், சாழல் முதலியனவும் மகளிர் ஆடல்களைக்
குறிப்பன. நாட்டுப்பாடல்கள் ஏட்டுப் பாடல்களாக வடிவம் பெறுவதற்கு முன்னோடியாக விளங்கியவர்
மாணிக்கவாசகர்.

் இசைப்பாடல்கள்:
மரபுசார்நத

ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலும் நாட்டுப்பாடல் மரபுசார்ந்த இசைப்பாடல்கள்


உள்ளன. திருமங்கையாழ்வாரும், மாணிக்கவாசகரைப்போல், நாட்டுப் பாடல்கள் சிலவற்றைப் பின்பற்றிப்
பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். மகளிர் விளையாடும் விளையாட்டில் சாழல் என்பது ஒன்று. தும்பியை
அழைத்துப் பெண்கள் பாடுவது ஒரு வகை. குயிலே கூவாய் என்று பாடுவது மற்றொரு வகை. வீட்டில்
பல்லி ஒரு திசையில் ஒலித்தால் யாரோ விருந்தினர் வருவார் என்று நம்பும் பழைய நம்பிக்கையை ஒட்டி,
‘திருமால் வருமாறு ஒலிசெய், பல்லியே!’ என்று பாடுவது இன்னெரு வகை. இவ்வாறு சாழல் முதலான
வகைகளில் நாட்டுப் பாடல் மரபில் பல பாடல்கள் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார்.
இடைக்காலத்தில் பல்லவர் காலம்

சங்க காலத்தையும் நீதி நூல் காலத்தையும் அடுத்து, பக்தி இலக்கியக் காலத்தைத் தெளிவாக
உணரலாம். கி.பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் சைவ சமயப் பெரியவர்களான
நாயன்மார்களும், வைணச் சமயப் பெரியவர்களான ஆழ்வார்களும் தோன்றி, பக்திப் பாடல்கள் பாடி
ஊர் ஊராகச் சென்று தத்தம் சமயங்களைப் பரப்பி வந்தார்கள். நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த
பௌத்த, சைன சமயங்களை எதிர்தது
் மக்களைத் திரட்டுவதற்குக் கலை நயத்துடன் கூடிய பக்திப்
பாடல்கள் பயன்பட்டன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தியையே போற்றி, அதற்கு இசைவான
ஆடல் பாடல் முதலான கலைகளைப் பாராட்டினார்கள். பல வகைக் கலைகளையும் வளர்க்கும் இடமாகக்
கோயில்கள் ஓங்குவதற்கு அவர்களுடைய பக்தி இயக்கம் துணை செய்தது. மக்களிடையே
அவர்களின் இயக்கம் பரவுவதற்கு இசையோடு அமைந்த தமிழ்ப் பாடல்கள் உதவி புரிந்தன.

பல்லவர் காலத் தமிழ்மொழி:

இடைக்காலத் தமிழில் முதல் காலப் பகுதியாக விளங்குவது பல்லவர் காலம். அக்காலத் தமிழ்
மொழியை அறிவதற்கு இலக்கியங்கள், இலக்கணம், கல்வெட்டுகள், செப்பேடுகள், சாசனங்கள்
முதலியன மிகவும் துணை புரிகின்றன. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஏராளமான இலக்கியங்கள்
தோன்றிய காலமும் இதுவேயாகும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

அ) சைவ நூல்கள்:

தெய்வத் தமிழ் என வழங்கிய பக்தி இலக்கியத்தை வளர்தத


் பல்லவர்கள் கி.பி. ஆறு முதல் கி.பி.
ஒன்பது வரை தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் தமிழுக்குப் பல சிறப்புகள் வந்து சேரக்
காரணமாயிருந்தனர். இவர்கள் காலத்தில்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தி
இலக்கியங்களைப் பாடிப் பரப்பினர். ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், பிற
நாயன்மார்களும் பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. தமிழ்நாட்டின் பல சிவன் கோயில்கள்
இவர்களின் பாடல் பெற்ற இடங்களாக உள்ளன. மறைந்த பாடல்கள் போக, இப்போது உள்ள இவர்தம்
பாடல்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஏழாயிரம் இருக்கும். அடுத்த நூற்றாண்டில் வாழ்நத
் சுந்தரரின்
பாடல்கள் ஆயிரம் ஆகும். இந்த மூன்று நாயன்மார்களின் பாடல்கள் எண்ணாயிரமும் தேவாரம் என்ற
பெயரால் சிறந்த பக்தி இலக்கியமாக விளங்குகின்றன. எட்டாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர்
சிவபெருமானைப் பற்றிப் பாடிய பக்திப் பாடல்கள் திருவாசகம் எனப்படும். திருக்கோவையாரும் இவர்
தம் நூலேயாகும். இவையிரண்டுமாக 1050 பாடல்கள் தமிழ்மொழிக்குக் கிடைத்த களஞ்சியம்
எனலாம்.

இவை தவிர, பன்னிரு திருமுறைகளில் தொகுக்கப்பட்ட தனியடியார்கள் பலர் பாடிய பாடல்களும், பக்தி
இலக்கியக் காலத்தில் சைவத்தை வளர்த்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்மொழி வளரவும் பெருந்துணை
புரிந்தன எனலாம்.

ஆ) வைணவ நூல்கள்:

ஆழ்வார்கள் பன்னிருவர் இயற்றிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் நூல் தொகுதியைப் பல்லவர் காலத்
தமிழ்மொழியை அறிய உதவும் மற்றோர் ஆதாரமாகக் கொள்ள முடியும். எளிய தமிழ் உருவாக
இந்நூல்கள் காரணமாக அமைந்தன என்றும் கூறலாம். சங்கம் மருவிய காலத்தை அடுத்த இருண்ட
காலத்தில் களப்பிரர் ஆதிக்கத்தில் வைணவ சமயமும் ஒளி குன்றி இருண்டது. களப்பிரர் ஆட்சி
அகன்று, பல்லவரும் பாண்டியரும் செந்தமிழ் நிலத்தே செங்கோல் ஓச்சிய போது, சைவம் புத்துயிர்
பெற்றது போல வைணவமும் புத்துயிர் பெற்றது.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார்,


மதுரகவியாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார்,
திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகிய பன்னிருவர் இயற்றிய இலக்கியங்களும் தமிழ்
மொழியின் வளர்ச்சியை நன்கு உணர்நது
் கொள்ளும் சான்றுகளாக விளங்குகின்றன. பல்லவர்
காலத்தில் எழுதப்பட்ட அவிநயம், யாப்பருங்கல விருத்தி ஆகிய இலக்கண நூல்களும் இலக்கண
அமைப்பினை அறிந்து கொள்ளச் சிறப்பாக உதவுகின்றன.

தமிழை வளர்த்த பக்தி இலக்கியங்கள்

பக்தி நெறி:

பக்தி இலக்கியம் ஒரு தனி உலகம். இதில்தான் எண்ணில் அடங்கா ஞானிகளும், யோகிகளும்,
சித்தர்களும், அருளாளர்களும் தோன்றி மண் நிறைந்த இந்த பூமியை புண்ணிய பூமியாய், புனித
பூமியாய் மாற்றியிருக்கின்றார்கள். வாழ்ககை
் யில் வறுமை வாட்டுகின்றது. நோய் துயரம் செய்கின்றது.
வயதின் மூப்பு முதுமையைத்தருகின்றது. மரணம் அச்சுறுத்துகின்றது. உண்மைதான், ஆனால்
அதற்காக ஒதுங்குவதா, ஓடுவதா, இது கூடாது. நிற்போம், நிலைப்போம். இந்த மண்ணில் நல்ல
வண்ணம் வாழலாம். இன்பமும் துன்பமும் இறையருளே. தீமை நன்மை முழுவதும் அவன் செயலே.
வறுமையும், செல்வமும் அவன் இன்னருளே. நோயைத்தருவதும், அந்நோயை நீக்கி நம்மை
ஆட்கொள்வதும் அவன் கடமையே. இலைகள் காய்ந்து சருகாவதைப்போல் மூப்பும் இயற்கையானது
தான். மரணத்தைக்கண்டு ஏன் அஞ்சவேண்டும். மரணம் நெருங்கும் போது எமன் வருவதைத்
தடுப்போம். இன்று முதல் கொண்டே இறைவனை வழிபட்டால் அவன் நம்மிடம் வந்து காத்தருள்வான்.
அவனுடைய திருவடி நிழலில் உயிர்கள் இன்பமடையும் என்பதே அவர்களின் நம்பிக்கை. இந்த
நம்பிக்கைதான் பக்தி நெறி எனப்படும்.

தமிழில் பக்தி இலக்கியங்கள்:

உலகில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. அவற்றுள் சில மொழிகள் பேச்சு வழக்கும், சில எழுத்து
வழக்கும், சில எழுத்தும், பேச்சும் கலந்த வழக்கும் பெற்றுள்ளன. இலக்கிய வழக்குப் பெற்ற
மொழிகளுள் சில தனிச்சிறப்புப் பெற்றுள்ளன. அவற்றின் சிறப்புகளைப் பற்றி அறிஞர் தனிநாயக
அடிகளார். 'ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றும், லத்தீன் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம்
இசையின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழியென்றும், இத்தாலி காதலின் மொழி என்றும்
கூறுவது பொருந்தும் என்றால்... தமிழ் பக்தியின் மொழி என்று கூறுவது பொருந்தும்' என்பார்.
இத்தகைய சிறப்புமிக்க பக்தியின் மொழியாகத் தமிழ் மொழி திகழ்வது நமக்கெல்லாம்
பெருமைக்குரியதாகும். இந்தப்பெருமை சும்மா வந்து விடவில்லை. பக்தியின் வரலாற்றைப் புரட்டுகின்ற
போது அடியவர்கள் பட்ட வேதனையும், இறைவன் ஆட்கொண்ட அருள் தன்மையும் நெஞ்சத்தை
நெகிழ வைக்கின்றன. நிம்மதியையும் தருகின்றன.

பக்தி இலக்கிய வரலாறு:

சங்கம் மருவிய காலம் இக்காலத்தில் தமிழகத்தில் களப்பிரர் என்ற அயல் இனத்தவர் ஆட்சியைக்
கைப்பற்றினர். அப்போது தமிழர்களின் இரு கண்களாகப் போற்றப்படும் சைவமும், வைணவமும்
செல்வாக்கிழந்தன. புறச்சமயங்களான சமணமும், பவுத்தமும் செல்வாக்குப்பெற்றன. இதனால்
தமிழும், இலக்கியமும் தேக்கநிலைக்குத் தள்ளப்பட்டன. கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில்
களப்பிரர்கள் அரசியல் செல்வாக்கை இழந்தனர். பல்லவர் ஆட்சி செல்வாக்குப் பெற்றது.
களப்பிரர்காலத்தில் காலூன்றிய சமணம் பல்லவர் காலத்தில் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றியது.
அப்போதும் தமிழும், தமிழ்ச் சமயங்களும் ஒடுக்கப்பட்டன.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மாபெரும் சமயப்புரட்சி தோன்றியது. இப்பெரும் புரட்சிக்கு


மூலகாரணமாகத் திகழ்ந்தவர்கள் சைவ, வைணவ பெரியோர்களே. இவர்கள் சிவன், விஷ்ணு
எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று சமய உயிர்ப்பூட்டும் பக்திப்பாடல்களைப் பாடிப்பாடி
மக்களைப் பரவசப்படுத்தினர். இதனால் சமய எழுச்சியும், தமிழ் உணர்வும் தழைத்தோங்கின.

இந்த எழுச்சியே பக்தி இயக்கமாக மாறியது. பக்தி இயக்கத்தால் தமிழகத்தில் தமிழுக்கு


மீண்டும் புதுப்பொலிவு ஏற்பட்டது. இயல் தமிழ்ப்பாடல்கள் பண்ணோடு இயைந்து இசைத்
தமிழ்ப்பாடல்களாக மாறின. கற்றோர் நாவில் மாத்திரம் நடனமாடிய தமிழ், கல்லாதார் நெஞ்சிலும் களி
நடனம் புரிந்தது. வடமொழிச் சொற்களும் தமிழுடன் இணைந்து புதிய மரபினைத் தோற்றுவித்தது.
சொல் வளமும் உணர்ச்சிப் பெருக்கும், இசை இனிமையும் சேர்நது
் தமிழ் இலக்கியம் புது மெருகு
பெற்றது. இந்த பெருமைமிகு எழுச்சியினால்தான் பல்லவர் ஆட்சிக்காலம் பக்தி இலக்கியத்தின்
மறுமலர்ச்சிக்காலம் என்று போற்றப்படுகிறது.

பன்னிரு திருமுறைகள்:

தமிழில் தோன்றிய சமயப் பாடல்களைச் சமயத்தின் அடிப்படையில் சைவம், வைணவம் என இருபெரும்


பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். சிவபெருமானை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொண்டு பாடல் களைப்
பாடியவர்கள் நாயன்மார்களாகவும், திருமாலை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள்
ஆழ்வார்கள் எனவும் அழைக்கப்பட்டனர். நாயன்மார்கள் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளாகவும்,
ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனவும் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டன.

சோழர் காலம்:

'முறை' என்றால் 'நூல்'. 'திருமுறை' என்றால் 'புனிதமான நூல்' என்று பொருள்படும். சிவபெருமானைப்
பற்றி சைவ அடியவர்கள் பாடிய பாடல்களே பன்னிரு திருமுறையாகும்.

 சம்பந்தர் - தேவாரம்: முதல் மூன்று திருமுறைகள்


 திருநாவுக்கரசர் - தேவாரம்: 4, 5, 6 திருமுறைகள்
 சுந்தரர் - தேவாரம்: 7 ஆம் திருமுறை
 மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவையார் 8 ஆம் திருமுறை
 ஒன்பது பேர் பாடிய - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை
 திருமூலர் - திருமந்திரம் 10 ஆம் திருமுறை
 பன்னிரண்டுபேர் பாடிய பாடல்கள் - 11 ஆம் திருமுறை
 சேக்கிழார் - பெரியபுராணம் 12 ஆம் திருமுறை

இவ்வாறு சோழர்களின் ஆட்சிக்காலத்தில் முதல் பதினோரு திருமுறைகளைத் தொகுத்தளித்தவர்


நம்பியாண்டார் நம்பி ஆவார்.

பாடல் தரும் இன்பம்:

பல்லவர் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பவுத்த, சமண சமயங்களை எதிர்த்து


மக்களைத் திரட்டுவதற்குக் கலை நயத்துடன் கூடிய பக்திப் பாடல்கள் பயன்பட்டன. நாயன்மார்கள்
இசையோடு பாடல்களைப்பாடி கோவில்கள் தோறும் இறைவனை வழிபட்டார்கள். 'ஏழிசையாய்
இசைப்பயனாய் உள்ளவன்' என்றார் சுந்தரர். 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்'
என்று சம்பந்தர் போற்றப்பட்டார். 'தமிழோடு இசைப்பாடல் மறந்து அறியேன்' என்று திருநாவுக்கரசர்
வாழ்ந்துள்ளார். இப்படி இவர்கள் பாடிய பாடல்கள் தேவாரம் எனப் போற்றப்படுகின்றது.

தேவாரம் என்னும் சொல்லைத் தே+வாரம் எனப் பிரித்துத் 'தெய்வத்தன்மையை உடைய


இசைப்பாடல்கள்' என்றும், தே+ஆரம் எனப்பிரித்துத் 'தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பா மாலை'
என்றும் பொருள் கூறுவர். இப்படிச் சொல்லைப் பிரித்து பொருள் காண்பதில் தான் இலக்கியச் சுவை
பிறக்கின்றது. திருஞானசம்பந்தர் பிள்ளைப் பருவத்திலேயே இறைவனைப் பாடியவர். ஆடல், பாடல்,
கலைகளை வழிபாட்டுக்கு உரியவராக மாற்றியவர். சங்க இலக்கியத்தில் பாடப்பெற்ற இயற்கை
இன்பத்தை இணைத்தே பாடியவர். சமணமும், பவுத்தமும் துறவறத்தையே பேசிக்கொண்டிருந்த
அக்காலத்தில் இல்லறத்தின் இனிமையைப் பாடியவர். மனித மனதில் உணர்வு உள்ள வரையில் அறத்தை
அழிக்க முடியாது. இன்னொருவர் படும் துன்பத்தைக் கண்டால் நெஞ்சில் நெகிழும் மனம்
உள்ளவரையில் அறம் இருந்தே தீரும். பசி உள்ளவரையில் சமையலை மறக்க முடியாதது போல
மனப்பண்பு உள்ள வரையில் அறத்தை மறக்க முடியாது. இல்லறத்தில் இருந்து கொண்டே இன்பமாக
வாழலாம். எந்தத் தொழிலைச் செய்தாலும் உள்ளத்தை இறைவனுக்கு உரியதாக வைத்து வாழ்ககை

நடத்தினால் போதும் என்று இல்லறத்தின் மேன்மையை போற்றியவர் திருஞானசம்பந்தர். அவர் பாடிய,
'மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணின் நல்லாளடும் பெருந்தகை இருந்தே...'

என்ற இப்பாடல் சைவர்களின் திருமணங்களின் போது ஓதுவர்களால் பாடும் பாடலாகும்.

அது மட்டுமல்ல இறைவன் உமையருபாகனாய் இருக்கும் கோலத்தைக் காட்டி மகாகவி பாரதி


பாடியதுபோல் ஆணும், பெண்ணும் சரிநிகர் சமமாய் இருந்தால் இல்லறம் நல்லறமாக இருக்கும். அப்படி
வாழ்பவர் களுக்கு எந்தக் குறையுமில்லை என்ற நம்பிக்கையையும் தருகின்றது இப்பாடல்வரிகள்.
இதோ, படிக்கின்ற வாசகருக்கும் நம்பிக்கையைத் தரும். இவரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
இவர் ஒரு முறை பாண்டிய நாட்டிற்குப் புறப்பட்டபோது அந்த நேரம் ஜோதிடப்படி நல்ல நாளாக இல்லை
என்று உடனிருந்தவர்கள் குறிப்பிட்டனர். அப்போது அவர் எங்கள் தலைவன் சிவபெருமான் பெண்ணை
ஒரு பாகமாகக் கொண்டவன். விஷத்தையே உண்டு கண்டம் கறுத்தவன். அதனால் திருநீலகண்டர்
என்ற பெயரையும் பெற்றவன். கங்கையையும், பிறைச் சந்திரனையும் தலையில் தரித்தவன்.
அப்படிப்பட்டவன் என் உள்ளத்தில் குடிபுகுந்துள்ளான்.

அவ்வாறு அவன் என் உள்ளத்தில் இருப்பதால் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்,
வெள்ளி, சனி ஆகிய நாள்களும் ராகு-கேது என்பன போன்ற கோள்களும் ஒரு தீமையும் செய்யாது.
அவையெல்லாம் நல்லவைகளே. அடியவர்களுக்கு மிக நல்லவையே என்று அச்சமின்மையையும்,
ஊக்கமும் பிறக்குமாறு ஒரு பதிகம் பாடியுள்ளார்.

வேயுறு தோளிபங்கன் விட முண்ட கண்டன்

மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென்


உளமே புகுந்த அதனால்

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி

சனி, பாம் பிரண்டும் உடனே

ஆசறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே

என்று இன்னல்கள் நீக்கும் கோளறு திருப்பதிகப் பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடலைப்படிக்கும்


போது, 'நாள் என் செய்யும், கோள் தான் என் செய்யும்' என்ற நம்பிக்கை நம் மனதிலும் பிறக்கின்றது.
மனதை ஆள்பவர்களால் தான் உலகையும் ஆளமுடியும். இதைத்தான் பக்தி இலக்கியங்கள்
பாடல்களாய்ச் சொல்லுகின்றன.

You might also like