You are on page 1of 12

தமிழ் மொழியின்

தனித்துவம்
 இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ் மொழிதான்.
2004ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இந்திய அரசு இந்த அறிவிப்பை
வெளியிட்டது. இந்த நாள் செம்மொழி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த அறிவிப்பு தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் கிடைத்த
மிகப்பெரும் வெற்றியாக அப்போது கருதப்பட்டது.
 முன்னதாக இந்தியாவில் சமஸ்கிருதமும் செம்மொழியாகக் கருதப்பட்டு
வந்தாலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் செம்மொழி தமிழ்
மொழிதான்.
 தற்போது தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 19 ஆண்டுகள்
நிறைவுபெற்றிருக்கும் நிலையில், தமிழின் தொன்மை குறித்தும், அதன் சிறப்புகள்
குறித்தும் பார்க்கலாம்.
செம்மொழி என்றால் என்ன?

 ஒரு மொழியைச் செம்மொழியாக வகைப்படுத்தும் பழக்கம் ஐரோப்பாவில்


தோன்றியது. அவர்கள் லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளை தங்களின்
செம்மொழிகளாக கருதுகின்றனர். லத்தீன் இல்லாமல் அவர்களால் தங்கள் பழைய
சமய இலக்கியங்களைப் படிக்க முடியாது என்று கருதுவதால் அதை செம்மொழி
என்று அங்கீகரித்தனர்.
 நவீன அறிவியலில் நிறைய கிரேக்கச் சொற்கள் உண்டு. இதனால், ஐரோப்பியர்கள்
முன்பெல்லாம் தங்கள் தாய்மொழி தவிர இந்த இரண்டு செம்மொழிகளைப்
படிப்பார்கள்.ஒரு மொழியின் இலக்கிய வளமே அதற்கு ‘செம்மொழி’ என்னும்
தகுதியைப் பெற்று தருவது குறிப்பிடத்தக்கது.
 அதாவது, செம்மொழியாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய அதன் இலக்கியப்
படைப்புகள் வளம் மிகுந்ததாகவும், மிக நீண்ட பழமையுடையதாகவும் மற்றும்
அந்த மொழியின் ஆதார தோன்றல் என்பது மற்ற மொழிகளைச் சாராமல் இருக்க
வேண்டும். இதில் நீண்ட பழமை என்பது குறைந்தது 1000 முதல் 2000 ஆண்டுகள்
வரை அந்த மொழி பழமைவாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
தமிழ்மொழி எப்படி செம்மொழியானது?

 தமிழைச் செம்மொழியாக அறிவிக்கும் முடிவைக் காங்கிரஸ் தலைமையிலான


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை 2004 ஆம் ஆண்டு
செப்டம்பர் 17ம் தேதி எடுத்தது. அந்த முடிவை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை
அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்தார். இந்தக் கோரிக்கையைப் பலகாலமாக
வலியுறுத்தி வென்ற அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் கருணாநிதி, பல
காலமாக இதற்காக வாதாடிய பரிதிமாற்கலைஞர் போன்ற அறிஞர்களுக்கு இந்த
வெற்றியை அர்ப்பணிப்பதாகக் குறிப்பிட்டார்.
 ஏனெனில் மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே தமிழை செம்மொழியாக
அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. பல தமிழ் அறிஞர்களும்,
ஆர்வலர்களும் அதற்காகத் தொடர்ந்து வாதிட்டிருக்கின்றனர்.
 தமிழைச் செம்மொழி ஆக்கவேண்டும் என்பது திமுக இடம் பெற்ற ஐக்கிய
முற்போக்கு கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்திலேயே இருந்தது. அந்த
அரசின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே ஜூன் 6-ம் தேதி தமிழ்
செம்மொழிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நாள் செம்மொழி
தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ் எவ்வளவு தொன்மையானது?

 ”அறுபடாத இலக்கிய மரபோடு தமிழ் ஒரு பேச்சு மொழியாகவும், இத்தனை


நீண்டகாலமாகத் தொடர்ந்து வருவதே தமிழின் மிகப்பெரும் சிறப்பு,” என்கிறார்
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்
கோ.பாலசுப்ரமணியம்.
 பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தமிழ் தொன்மையின் மிகச் சிறப்பான விஷயமாக
நான் பார்ப்பது அது கொண்டிருக்கும் வேர்ச்சொல்கள். இன்று தெலுங்கு, கன்னடம்
போன்ற எந்தவொரு இந்திய மொழிகளும் புதிதாக ஒரு சொல்லை உருவாக்க
வேண்டுமென்றால் அவர்கள் சமஸ்கிருதத்தை நோக்கித்தான் செல்கிறார்கள்.
ஆனால் தமிழில் மட்டும் அந்த நிலை இல்லை. தமிழுக்கு தேவையான வேர்ச்
சொற்கள் அதனிடமே கொட்டிக்கிடக்கின்றன,” என்று குறிப்பிடுகிறார்
 அதேபோல் “மற்ற மொழிகளில் இருக்கும் பண்டைய இலக்கண, இலக்கியங்களில் அரசர்கள்,
கடவுள்கள் குறித்து மட்டும் பேசப்பட்டு வந்தபோது, தமிழ் மொழியில் கிடைத்திருக்கும்
இலக்கண, இலக்கியங்களில் மட்டுமே பாமர மக்களைப் பற்றி பேசப்பட்டிருக்கிறது. இதுவே
தமிழின் மாபெரும் தனித்துவம்,” என்கிறார் மத்திய தொல்லியல் துறை இயக்குநரான தயாளன்
துரைசாமி.
 பிபிசியிடம் பேசிய அவர், “கிமு 3ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் மொழிகள் இருந்திருந்தாலும்,
அது நிரந்தரமாக இருக்கும் வகையில் எழுதப்படவில்லை. பனை ஓலை, பட்டை போன்றவற்றில்
மொழிகள் எழுதப்பட்டு வந்திருக்கலாம். கிமு 3ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் அது கற்களில்,
கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டது. அதேபோல் கிமு 4, 5 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த
எத்தனையோ பானை ஓடுகள் மற்றும் குடவறைகளில் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன.
 எனவே இந்தச் சான்றுகளைப் பார்த்தால், அதற்கும் முந்தைய எத்தனையோ ஆண்டுகளாகத் தமிழ்
மொழி பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது என்பதை உணர முடியும். ஏனென்றால்
திடீரென மொழி தோன்றியிருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை,” என்று குறிப்பிடுகிறார்.
மற்ற இந்திய மொழிகளை விட தமிழ் எப்படி
தனித்துவமாக இருக்கிறது?

 தமிழைச் செம்மொழியாகக் கூறுவதற்கு ஹார்ட் சில முக்கிய காரணங்களை


அன்றைய காலகட்டத்திலேயே முன்வைத்தார்.
 “முதலாவதாக, தமிழ் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பழமை உடையது. நவீன
இந்திய மொழிகளின் இலக்கியங்களைவிடத் தமிழ் (இலக்கியம்) ஆயிரம்
ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. பழைய தமிழ் கல்வெட்டுகளைக்
கொண்டு ஆராயும்போது, தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியத்தின்
பகுதிகள் கி.மு. 200-ம் ஆண்டினைச் சேர்ந்தவை என்பது தெரியவரும். தமிழின்
மிகச் சிறந்த படைப்புகளான சங்கப் பாடல் தொகுப்புகள், பத்துப்பாட்டு
போன்றவை கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. இவைதான்
இந்தியாவில் எழுதப்பட்ட மிகத் தொன்மையான மதச்சார்பற்ற கவிதைகள்.
காளிதாசரின் படைப்புகளைவிட இவை 200 ஆண்டுகள் மூத்தவை," என்று
குறிப்பிடுகிறார்.
 "இரண்டாவதாக, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட, ஆனால் சமஸ்கிருத்ததில்
இருந்து தருவிக்கப்படாத ஒரே இலக்கிய மரபு தமிழுடையதுதான்.
சமஸ்கிருதத்தின் செல்வாக்கு தெற்கில் வலிமையாக மாறும் முன்பே தமிழ்
இலக்கியங்கள் எழுந்துவிட்டன. இந்த தமிழ் இலக்கியங்களுக்குச் சொந்தமாக
கவிதை (செய்யுள்) கோட்பாடுகள், சொந்தமாக இலக்கண மரபு, சொந்தமாக
அழகியல், எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் தனித்துவமான மிகப்பெரிய
இலக்கியத் தொகுப்பு உண்டு. சமஸ்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளில்
இருப்பவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இந்திய உணர்வியலைக்
காட்டுகின்ற ஒன்றாக இவை இருக்கின்றன. தமக்கென சொந்தமாக மிக
வளமையான, பரந்த அறிவு மரபை இவை கொண்டிருக்கின்றன," என்றும் ஹார்ட்
சுட்டிக்காட்டுகிறார்.
 2000ஆம் ஆண்டு அவர் வெளியிட்டிருந்த அந்த அறிக்கையில், அவர் மேலும் பல
சான்றுகளை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அன்றைய அரசியல் காலகட்டத்தில்
தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று எழுந்து வந்த கோரிக்கைக்கு,
சில தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அப்போது நிலவிய இந்த
அரசியல் குழப்பங்களை கலைவதற்கும், தமிழ் மொழியின் சிறப்பை
நடுநிலையான முறையில் எடுத்துரைப்பதற்கும் ஹார்ட் இந்த அறிக்கையை
வெளியிட்டார்.

You might also like