You are on page 1of 10

கதையின் தூண்கள் 

==================================================
========================================
மெக்சிகோவின் எண்ணை கிணறு குடையப்படதில் நிகழ்ந்தது ஒரு பூகம்பம் ஆழியின் அடியில்.
எரிமலை போல் வெடித்து எரிந்து கொண்டிருந்தது  கடல் பரப்பு . கடல்வாழ் உயிரினங்களும் , சில
பறவைகளும் இதில் இறந்து கரையில்  ஒதுங்கி இருந்தது. மீட்புப்பணி ஆட்கள் இறந்த மீன்களையும்,
பறவைகளையும் குவித்து கொண்டிருந்தனர். இந்த கோரத்தை கண்களாலும் கேமராவிலும் படம் பிடித்து
கொண்டிருகிறாள் அந்த தேவதை எமிலி. எமிலி அமெரிக்காவின் 23 வயதான சுற்றுச்சூழல் பட்டதாரி
. உலகத்துக்கும் உலகின் உயிர்களுக்கும்  நடக்க போகும் அபாயங்களை தடுக்க போராடும் ஒரு
போராளி , மனிதர்களை விட பறவைகளை நேசிப்பவள், இயற்கையை காதலிப்பவள்.

சில தினங்களிலே ஜப்பானின் செண்டாய் நகரை சுனாமி தாக்கியது. டிசம்பர் 26, 2008 காரைக்காலில்
சுனாமியின் தாக்கத்தை நேரில் கண்டவள் நான் . செண்டாயின் சுனாமி தாக்கத்தை கவிஞர் தன்
எழுத்துப் பாங்கில் மற்றொருமுறை கடல் சீற்றத்தை கண் முன் நிறுத்திவிட்டார். உறவுகள் சடலங்களை
தேடி அலையும் பரிதாப நிலையல் தன் பெற்றோரை தேடி அலைகிறான் இஷிமூரா. சிக்கி சிதைந்த
அந்த காரில் இருவரும் மடிந்து கிடப்பதை பார்க்கும் மகனின் அழுகுரல் படிப்பவரையும் வருத்தத்தில்
ஆழ்த்துகிறது .ஜப்பானில் இயற்கை வேளாண்மை செய்யும் ஒரு குடும்பத்தின் ஒரே புதல்வன்
இஷிமூரா. இயற்கையையும் இயற்கை வேளாண்மையையும் பெருமையாய் கொண்டவன்.

இரண்டு தலைமுறையாய் மண் பொய்ததோ இல்லை மனிதன் பொய்தானோ என்று விளைச்சல் இல்லா
சாபக்கேட்டில் அட்டனம்பட்டி . விளைச்சல் இல்லை , வருமானம் இல்லை. கடனும் கடன்காரன்
தொல்லையும்  தவிர வேறொன்றும் இல்லை . கடன் கொடுத்த கவட்டைகாலன் தந்த அவமானத்தில்
குடும்பத்தோடு  தற்கொலை செய்கிறது சின்னசாமி எனும் விவசாயின்  குடும்பம் . அந்த குடும்பத்தில்
வாழும்  தகுதி இல்லாத ஒரு உயிர் (சுழியன் ) பிழைக்கிறது . வாழ்கையை கெடுத்த கவட்டை
காலனை கொன்று 7 வருட சிறைக்கு பின் வீடு திரும்புது இன்னொரு உயிர் - கருத்தமாயி. இவருக்கும்
சிட்டமாளுக்கும் பிறந்த மகன்கள் மூத்தவன் முத்துமணி இளையவன் சின்னபாண்டி. கடவுளும்
சாத்தானும் ஒரு கூட்டில் வாழும் என்றால் அது இவர்கள்தான். முத்துமணி சாத்தான், சின்னபாண்டி
கடவுள் .
 

சின்னப்பாண்டி, மதுரை காந்தி கிராமத்தில் விதை மேலாண்மையில் முதுநிலை பட்டய படிப்பு பயிலும்
மாணவன். படித்தாலும் பண்பாடு மாறாதவன் , பூர்விகம் மறக்காதவன். முத்துமணி -எத்தனுக்கு எத்தன்
. நரியின் தந்திரம் தோற்கும் இவன் காரியம் சாதிக்கும் செயல்களில் . " ஊர வித்ருவான்" ன்ற
சொல்லுக்கு இலக்கணம் . விலை நிலங்களை மில்லுக்காரனுக்கு பேரம் பேசுவது , தன் பதவியை
பயன்படுத்தி காடு மரங்களை வெட்டி விற்பது, பச்சோந்தி தைலம் தயாரிப்பது, காடு விலங்குகளின்
இறைச்சியை விற்பது , அப்பனின் உயிர் குடிப்பது என்று இருப்பவன் . தான் வாழ எதையும் செய்ய
துணிபவன் இவன் . நம் வாழ்வில் எத்தனையோ முத்துமணிகளை பார்க்கிறோம் சில நேரம்
அவர்களை smart worker , திறமை இருகிரவனு நாமே சொல்லியும் இருக்கிறோம் என்பது
நினைவில் வந்தது. 

மண்வாசனை வழியும் பேச்சும், கதை கூறு பாணியும் நெஞ்சை வருடுகிறது. படிக்க படிக்க பாத்திரங்கள்
உயிர் கொண்டு கண் முன் நடக்கிறது , படித்தபின்னும் நெஞ்சில் நிலைக்கிறது. 

எமிலி எழுதிய  The Inconvenient Truth எனும் சுற்றுசூழல் சம்பந்தமான  கட்டுரை உலகப் புகழ்


பெறுகிறது. காந்தி கிராமம் பல்கலை கழக துணைவேந்தர் சின்னபாண்டியிடம் நடக்கவிருக்கும்
கருத்தரங்குக்கு எமிலியை விருந்தினராய் அழைக்க சொல்கிறார் . எமிலிக்கும் சின்னபான்டிக்கும்
இடையே மின்னஞ்சல்கள் பறக்கிறது . அவரவர் பற்றிய விவரங்களும் பகிரபடுகிறது. இந்தியாவில்
புத்த கயாவில் பெற்றோருக்கு அஞ்சலி செலுத்த வருகிறான் இஷி . எமிலி , சின்னபாண்டி மற்றும்
இஷிமூராவும் சந்திக்கும் களமாய் கருத்தரங்கு அமைகிறது .

சின்னபாண்டியோடு அட்டனம்பட்டிக்கு வருகின்றனர் எமிலியும் இஷியும் . இவர்கள் காணும்


காட்சிகள் , உரையாடல்கள் , கருத்து பரிமாற்றங்கள் ,சந்திக்கும் சில மனிதர்கள் நம் நாட்டின்
தொலை கிராமங்களை எனக்கு நினைவூட்டியது . புவி வெப்பமாதல், உலகமயமாதல்,இயற்கை
விவசாயம்  என பேசிக்கொண்ட இவர்கள் சின்னப்பாண்டி வீட்டில் ஒரு நாள் தங்கி உறவாடுகையில்
நானும் அவர்களோடு ஒருத்தியாய் பயணிக்கிறேன் . தற்கொலை செய்து இறந்த தன் குடும்பத்தினருக்கு
3 மரங்களை நினைவு சின்னமாய் உயிராய் வளர்க்கும் கருதமாயியை கண்டு வியக்கும் இஷியின்
பெற்றோருக்கும் அரச மரக்கன்றுகள் நட்டு பேணி காத்து படிப்பவரின்  மனதை கொள்ளை
கொள்கிறார் ஏழை விவசாயி . 

விருந்தினர் உபசரிப்பு , வெள்ளை காரர் கண்டு வியக்கும் கிராமம் ,அரிசி மாகோலம், தக்காளி
ரசத்தின் மகிமை , நிலத்தை தன் அடையாளமாக கொண்டாடும் விவசாயி , கரகாட்டம், சிலம்பாட்டம்
இவை அனைத்தும் ரசித்து மதிப்பு கொள்கின்றனர் இஷியும் எமிலியும் .

ரசாயன உரங்களில் மலடாகி போயிருக்கும் மண் , கழிவுகளையும் குப்பைகளையும் சரியே அகற்றாத


மக்கள், குப்பை வாளி கொடுத்தாலும் புழக்கத்துக்கு வைத்து கொள்ளும் வறுமை, நிலம் விற்று நகரம்
சென்று நரக வேதனை அனுபவித்து ஊர் திரும்பும் குடும்பம் , இதெல்லாம் கண்டு  நல்ல  மாற்றம்
உருவாக்க  ஒவ்வொரு நிலையிலும் சின்னப்பாண்டியை  ஊக்குவித்து , தோற்று துவண்ட போது
மீண்டு வர வழியும்  சொல்லி அவன் செயலுக்கு பின் நிற்கின்றனர் மற்ற இருவரும் .  

அவனின் உயர் கல்விக்கு அமெரிக்கா அழைக்கிறாள் எமிலி. அட்லாண்டாவும் அட்டனம்பட்டியும்


எட்டாது என்று தெரிந்தே மலரும் சின்னபாண்டியின்  ஒரு தலை காதலை புதைத்து விட்டு
பெற்றோரின் ஆசியுடன் புறப்பட்டான். அவன் வாழ்வில் இது ஒரு சுபமான தொடக்கமோ என்று
பெருமிதம் கொள்ளும்முன் விமானம் ஏறியவனை ஒரு போன் கால் தடுத்து விட்டது பயணத்தை.

தவறுக்கு மேல் தவறு செய்து பாவங்களின் உச்சத்தில் நிற்கும் முத்துமணியை கொன்று விட்டார்
கருத்தமாயி என்ற தகவல் அறிகிறான் ஊருக்கு போனவுடன். போலீசில் சரண் ஆனார் கருத்தமாயி
மண்வேட்டியோடு வயலில் நடக்கிறான் சின்னப்பாண்டி .

போரில் நாம் ஏந்த போகும் அஸ்திரங்கள் 

புவி வெப்பமாதல் , உலகமயமாதல், பொருளாதார வீழ்ச்சி போன்றவைக்கு எதிரான முகத்தோடு முகம்


பாராமல் நடந்து கொண்டிருக்கும் இந்த போர் மூன்றாம் உலக போர்.  இதெல்லாம் தெரிந்த இளைஞர்
கூட்டத்தில் சிலர் என்ன செய்யவேண்டுமோ அதை சரியே செய்ய தொடங்கி விட்டனர் . எப்படி
செய்ய வேண்டும் என்று தடுமாறும் பல சின்னப்பாண்டிகள் இன்னும் இருகின்றனர். இந்த போரில்
அஸ்திரம் ஏந்த தேவை இல்லை . சிலவற்றை விடுத்தால் போதும் 

 பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் விடுப்போம் 


 மரங்கள் வளர்த்து வனங்கள் காப்போம்  
 இயற்கை வேளாண்மைக்கு கை கொடுப்போம்  
 முத்துமணி போன்ற அதிகாரிகளை ஒடுக்குவோம்
 முடிந்த அளவு நம் நாட்டு தயாரிப்புகளை வாங்குவோம் 
 நாம் செய்ய மறந்ததை இனி நம் சந்ததியருக்கு சொல்லியாவது கொடுப்போம் 
இது இயற்கைக்கும் மனிதனுக்குமான போர் அல்ல மனிதனுக்கும் மனிதனின் மாற்றதுக்குமான போர்.
நம்மால் இயன்றதை செய்து போராடுவோம் உலகை காக்க.

கலைஞர் உரை

கவிப்பேரரசு  வைரமுத்து  அவர்கள் இந்த நூலில்  நிலம், நீர், காற்று ஆகியவை  மாசு படுதலால்
சுற்றுச் சூழலும் மாசுபட்டு,  விவசாயமும் கெட்டு, மனித வாழ்க்கை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு
வருகிறது என்பதைப் பற்றி - ஒரு கிராமத்துக் கதையோடு  பின்னிப் பிணைந்து  - அற்புதமான ஒரு
சித்திரமாகத் தீட்டியிருக்கிறார்.

“மூன்றாம் உலகப் போர்”  -  “முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்;  ஆயுதங்களை ஒளித்துக்
கொண்டு நிகழ்த்தும் போர்;  மனிதனுக்கும் இயற்கைக்கு மான  போர்;  இது மனித குலம் சந்தித்திராத 
மோசமான முகமூடிப் போர்; புவி வெப்பமயமாதல்  -  உலகமயமாதல்  என்ற இரண்டு சக்திகளும் 
வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர்”  என்று  “மூன்றாம் உலகப் போரின்”
அடிப்படையை அலசுகிறார்  கவிஞர்.

“முதல் இரண்டு உலகப் போர்கள் முடிந்து விட்டன என்று  சரித்திரம் அறிவித்து விட்டது.  ஆனால்
மூன்றாம் உலகப் போர் தொடங்கி விட்டது என்பதை அது இன்னும் அறிவிக்கவே இல்லை. அது
கண்ணுக்குத் தெரியாத யுத்தம்;  கைகுலுக்கிக் கொண்டே நடக்கும் யுத்தம்.   இது மனிதனுக்கும்
மனிதனுக்கும் மட்டுமல்ல;  மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். மண்ணுக்கும் விண்ணுக்குமான 
போர்;”  என்று இப்போது நடந்து கொண்டிருக்கும்  போருக்கு   “மூன்றாம் உலகப் போர்” என்று
பெயரிட்டுப்  பிரகடனப்படுத்துகிறார் கவிஞர்.

மனித  நாகரிகத்தின்  பரிணாம  வளர்ச்சி  வேளாண்மையிலிருந்தே தொடங்குகிறது. வேளாண்மையே 


கலாச்சாரத்தின் அடையாளம் தான்.   வேளாண்மையே மனித குல வாழ்வாதார த்திற்கு  ஆணி
வேராக விளங்குவது -  அதனால் தான்  அய்யன் திருவள்ளுவர்  -   “சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம்
அத னால் உழந்தும் உழவே தலை”  என்று  -   வேளாண்மையை  முதன்மைப் படுத்தினார்.

“உலகெங்கும் உணவுகள் மாறும்;  உண்ணுதல் மாறாது;  எல்லோருக்கும்  உணவு வேண்டும்.


உலகெங்கும்  இல்லங்கள் மாறும்;  இருத்தல் மாறாது;  எல்லோருக்கும்  வீடுகள் வேண்டும்.
உலகெங்கும்  உடைகள்  மாறும்;  உடுத்தல்  மாறாது;  எல்லோருக்கும்  ஆடைகள் வேண்டும்” 
என்று  கவிப்பேரரசு எழுதியிருக்கிறார். உணவு,  உடை,  உறையுள்  ஆகிய  மூன்று அத்தியாவசியத்
தேவைகளுக்கும் ஆதி மூலமாய் விளங்குவது வேளாண்மை.

இந்த வேளாண்மைக்கெதிராக தொடுக்கப்பட்டிருக்கும்  போர் தான்  “மூன்றாம் உலகப் போர்”.


வேளாண்மை, நிலத்தைச் சார்ந்தது.   நிலம், மண்ணைச் சார்ந்தது.    மண்  என்பது ஓர் உயிரி.   அந்த
உயிரி,  ரசாயன உரப் பயன்பாடும்,  பூச்சி மருந்து பயன் பாடும்  அதிகரித்து  வருவதால்  கொஞ்சம்
கொஞ்சமாகச்  செத்துக் கொண்டிருக்கிறது. கவிஞரின்  மொழியில்,  மண்  மலடாகிப் போய்க்
கொண்டிருக்கிறது.   அதனால்  விவசாயம் பாழாகிப் போகிறது;  விளையும் உணவுப் பொருள்
விஷமாகிப் போகிறது.
வேளாண்மைக்கு எதிரான  விஞ்ஞானப் போர்  ஒரு புறம்.  சுற்றுச் சூழல்  பெருமளவுக்கு
மாசடைந்து,  ஓசோன் கூரை கிழிந்து வருகிறது.  அதனால் புவி வெப்பம் கூடிக் கொண்டே போகிறது.
ஓசோன் கூரையைப் பற்றி, கவிஞர் எழுதுகிறார். “பூமியின் சிறப்புக் காப்புறுதிகளுள்  ஒன்று,  இயற்கை
உச்சத்தில் கட்டிக் கொடுத்திருக்கும் ஓசோன் கூரை. காற்று  மண்டலத்திற்கு  மொத்தம் மூன்று
அடுக்கு. பூமிக்கு மேலே  12 கிலோ மீட்டர் உயரம் வரை உள்ளது முதல் அடுக்கு,  இதில் தான்
இருக்கிறது  பூமிக்கான காற்றின் 90 விழுக்காடு.   முதல் அடுக்கின் முடிவில் தொடங்கி,  50 கிலோ
மீட்டர் உயரம் வரை இருப்பது,  இரண்டாம் அடுக்கு;  இதில் ஓரளவு வரை தான் இருக்கும் உயிர்க்
காற்று.   60 கிலோ மீட்டருக்கு மேலே இருப்பது மூன்றாம் அடுக்கு;  அது காற்றற்ற  வெற்று
அடுக்கு.   ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்திற்கு மேலே இருப்பது வெட்ட வெளி  -   ஒளியும்,
ஒலியுமற்ற பாழ் வெளி.  விண்கலங் களும்,  செயற்கை கோள்களும்  விடப்படுவது  அங்கே தான்.  
இந்த நான்கு அடுக்குகளிலும், பூமிக்கு முக்கியமானது, பத்து முதல்  நாற்பது கிலோ மீட்டர் உயரம்
வரை அமைந்திருக்கும் ஓசோன் கூரை தான்.  
அந்தக் கூரையைத் தான்  இன்று கிழித்தெறிந்து விட்டான்  இந்த நு£ற்றாண்டு  தொழிற்புரட்சி
மனிதன்.   இதுவரை 29 மில்லியன்  சதுரக் கிலோ மீட்டருக்கு  கிழிந்து கிடக்கிறது ஓசோன் கூரை.  

புவி வெப்பத்தால்  ஒரு  மணி நேரத்திற்கு ஓர் உயிரினும்  அழிந்து கொண்டே இருக்கிறது.  இன்னும்
மூன்றே மூன்று டிகிரி  வெப்பம் கூடினால் போதும்;  உலகின்  33 விழுக்காடு விலங்கினங்கள் 
அழிந்து போகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். புவி  வெப்பம்  கூடிக் கொண்டே  போவதால்,  அது
உலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருக்கிறது.   இது  மற்றொரு புறத்தில்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்றாம் உலகப் போர்.

விஞ்ஞான ரீதியான இந்த மூன்றாம் உலகப் போரை,  அப்படியே  அறிவியல் உண்மைகளோடும்,


புள்ளி விவரங்களோடும்  சொன்னால் புரிந்து கொள்வது  சற்றுக் கடினம் என்பதற்காகவோ  - கதை
ஒன்றோடு இணைத்தும்  கலந்தும் சொன்னால், சுவையாக இருக்கும் என்பதற்காகவோ  -   மண்
வாசனை மிகுந்த  கதை ஒன்றையும்,   மாத்தமிழால் விளைந்த  கற்பனை யையும் 
சேர்த்து; நந்தவனத்தில்  பறித்த மலர்களைத் தொடுத்து,  கதம்பம் ஆக்குவதைப் போல; படிக்கப் படிக்க
நாவினிக்கும்  படைப்பு ஒன்றை நமக்கு அளித்துள்ளார்.

படிக்கப் படிக்க நாவினிக்கும் படைப்பு!

கவிப்பேரரசு வைரமுத்து இந்தக் கதையில்; இயந்திரங்களின் கைகளுக்குப் போகும் விவசாயம்,


பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு. சுருங்கி வரும் விளை நிலம் அருகி வரும் விவசாயம்
குறைந்து  வரும்  உற்பத்தி அட்டணம்பட்டியை  மாதிரிக் கிராமமாக மாற்றும்  முயற்சி
ஆகியவற்றைப் பற்றியெல்லாம் கதையின் போக்கில் அழகாக விவரித்துள்ளார்.

மாதிரி கிராமமாக  மாற்ற  ஆரம்ப முயற்சிகள் தோல்வி கண்ட போது,  சின்னப்பாண்டியிடம் 


இஷிமுரா  சொன்ன சொற்கள்  அனைத்தும், கவிப் பேரரசு  வைர முத்துவால் எழுதப்பட்ட தங்கத்
துகள்கள். சின்னப்பாண்டியின்  லட்சியம் நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. எமிலி  -  இஷிமுரா 
இருவரிடமும்  சின்னப் பாண்டி,  “பாலித்தீன் இல்லாத கிராமம்  என் குறைந்த பட்ச லட்சியம்; 
கார்பன் இல்லாத கிராமம்  என் உயர்ந்த பட்ச லட்சியம்”  என்று சொன்னது;  இன்றைய நிலையில் 
ஒவ்வொரு ஊரிலும்  ஒருவராவது  மேற்கொள்ள வேண்டிய சபதம்.

வனத்துறையில் வேலை பார்த்துக் கொண்டே,  வனச் செல்வங்களைக் கொள்ளை அடித்திடும்


முத்துமணி யின்  கொடுமையான நடவடிக்கைகள்  -  எமிலியின்  அழைப்பையேற்ற  சின்னப்பாண்டி
வெளிநாடு செல்ல முயற்சி.  முறிந்து போன அந்த முயற்சி.    நிலத்தைப் பறிக்க வந்த  தன் மூத்த
மகன் முத்து மணியோடு  கருத்தமாயி மோதல்.   கொலையில் முடிந்த மோதல்   - இறுதிக் கட்டத்தில்
சிட்டம்மா,  தனது  கணவன் கருத்தமாயியுடன்  பேசி,  தனது  சபதத்தை  முடித்துக் கொள்ளுதல் 
என்று  கதை நிகழ்வுகளை  மனித உறவுகளின் மேல்  அடுக்கடுக்காக எழுப்பி;  ஏராளமான 
செய்திகளை  -  எச்சரிக்கைகளை  இந்த நு£லின் மூலம் தம்பி கவிப்பேரரசு   இந்நாட்டுக்கு
வழங்கியுள்ளார்.
விமர்சனம் 1

“விவசாயிகள் என்னும் சபிக்கப்பட்ட தெய்வங்களுக்கு ” சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள நாவல்


“மூன்றாம் உலகப் போர்”.  அதனாலேயே இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னுரையில் நாவலாசிரியர் வைரமுத்து தந்துள்ள தன்னிலை விளக்கத்தில், “இந்தப் படைப்பை
விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக எப்படிச் செய்ய முடியும்?மூன்றாண்டுகள்
ஆராய்ந்தேன் ; பத்துமாதங்கள் எழுதினேன் . எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்தை
பதிவு செய்தேன் .”என்கிறார்.

மேலும்  “இந்தப் படைப்பு உள்ளூர் மனிதர்களின் நாவினால் பேசப்படும் உலகக் குரல்  ; விழ
வேண்டிய செவிகளில் விழுந்தாக வேண்டும் . வாசிப்பு – ரசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி ,
தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது இந்தப் படைப்பு என்கிறார். “ அதுமட்டுமல்ல, “இந்தப் படைப்பின்
உள்ளடக்கம் பேசப்பட வேண்டும் . விவசாயத்தின் வீழ்ச்சி குறித்தும் மீட்சி குறித்தும் ஐ.நா வில் உலக
நாடுகள் விவாதிக்க வேண்டும்.”என அறைகூவல் விடுத்து –  அதைத் தொடர்ந்து கோரிக்கை 
சாசனத்தையும் முன் வைத்து – “ வேளாண்மையைக் காப்பது உலகக் கடமை.அந்த உலகக்
கடமையின் தமிழ்ப் பங்குதான் இந்த  மூன்றாம் உலகப் போர்  “என முன்னுரையில் ‘யதார்த்தக்
கனவுகளோடு’ என கையொப்பமிட்டுள்ளார் வைரமுத்து.அவரின் இந்த அளவுகோலோடு இந்நாவலை
அலசலாம்.

மெக்சிக்கோ வளைகுடாவில்  லூய்சியானா கடற்கரையில் நாவல் காலெடுத்துவைக்கும் போதே சுற்றுச்


சூழலை மனிதன் எப்படி துவம்சம் செய்துவருகிறான் என்கிற கோரப்பதிவோடு துவங்குகிறது. அடுத்து
ஜப்பானில் செண்டாய் நகரில் சுனாமிப் பேரலையின் ஊழிகூத்து நம்மை உறைய வைக்கிறது.
எமிலியும், இஷிமுரா இந்தத் துயரங்களூடேதான் நம்முடன் பரிச்சயம் ஆகிறார்கள். இப்படியே நாவல்
அட்டணம் பட்டிக்குள் அடியெடுத்துவைத்ததுமே விவசாயியின் அவலக்குரல் நம்மை பிசையத்
துவங்கிவிடுகிறது.

  “பாவக்கணக்குப் பண்ணுனவ எண்ணிக்கை கூடிப்போச்சு ; எடமில்ல நரகத்திலே ; என்ன


பண்றதுன்னு “  யோசிக்கிற எமதர்மனுக்கு  நாரதர் வழிகாட்டுகிறார் , “அட,நீங்க ஒண்ணு.. இவுகள
நரகத்துல தள்ளணும் அவ்வளவு தான ? நான் பறந்து பறந்து பார்த்த அளவுல பூலோகத்துல இந்தியா
இந்தியான்னு ஒரு தேசம் இருக்கு. இவுகள பூரா அங்க விவசாயம் பண்ண அனுப்பி வச்சீங்கன்னு
வச்சுக்குங்க வேலை முடுஞ்சது.” நாவலின் ஊடாக இப்படியொரு குட்டிக்கதையைச் சொல்லி இங்கே
விவசாயியின் பொழைப்பு நரகமாக நசிந்து கிடப்பதை நச்சென்று பதிவு செய்துவிடுகிறார்.

இந்த நாவல் நெடுக விவசாயம் நொடிந்து வருவதை வேதனையோடும், விவரங்களோடும் பாத்திரங்கள்


மூலமாகவும் நேரடியாகவும் வைரமுத்து பேசுகிறார்.இந்த நாவலின் பலம் அதுவே. இதையே
பலவீனமாக இலக்கிய விமர்சன நக்கீரன்கள் நெற்றிக்கண்ணைத் திறக்கலாம்.குத்திக் காட்டலாம்.
ஒரு கட்டத்தில் கவிஞர் வைரமுத்துவே நேரில் வந்துவிடுகிறார். நாவலின் காதாநாயகன்
சின்னப்பாண்டியும்,எமிலியும்,இஷிமுராவும் கவிஞரோடு உரையாடும் காட்சி இடம் பெறுகிறது. “
சின்னப்பாண்டி!நீ கொடுத்துவைத்தவன்.நீ செயல் ; காட்டுத்தீ …காட்டுத் தீயைத் தூரிதப்படுத்தும்
காற்றாகும் இவர்கள் அறிவாற்றல் … திரட்டு மக்களை ; செயல்படு . விளைநிலங்களை விற்க விடாதே
; விவசாயத்தை இயற்கைப் படுத்து. காடுமலைகளை காவல்கொள் ; கன்று மரங்களை நடு. என் எளிய
துணை தேவைப்பட்டால் எப்போதும் வா.”ஆக நாவலின் நோக்கம் விவசாய நெருக்கடி குறித்து
வெறுமே கவலைப் படாமல்,களத்தில் இறங்கவேண்டும் என்பதாகவும் ஆகியுள்ளது தெளிவு.
கதை மிக எளிமையான திரைக்கதை. அட்டணம் பட்டியில் விவசாய கடன் தொல்லை தாளாமல்
மனைவி மகளுடன் தற்கொலை செய்து கொன்ட விவசாயி சீனிச்சாமி.தந்தை சாவுக்குக் காரணமான
கந்துவட்டிக்காரனை துண்டு துண்டாக வெட்டி எறிந்து விட்டு ஜெயிலுக்குப்போய் திரும்பும்
கருத்தமாயி.அவர் மனைவி சிட்டம்மா இருவரும் பாடுபட்டும் கடனிலிருந்து மீளமுடியவில்லை. இவரது
மூத்தமகன் முத்துமணியோ சுயநலத்தின் மொத்த உரு.கிராமத்தைச் சூறையாடும் கழுகுகளின்
கையாள்.இளைய மகன் சின்னப்பாண்டி விவசாய மாணவன் . சுயநலம் அற்றவன். புத்திசாலி.கல்லூரி
கருத்தரங்கு மூலமாக அறிமுகமாகும்  சுற்றுச்சூழல் ஆர்வலரும் இளம் அறிவுஜீவியுமான
எமிலியையும்,இயற்கை விவசாய ஆர்வலரும் இந்திய மற்றும் புத்தமத நேசரும் சுனாமியில்
பெற்றோரைப் பறிகொடுத்தவருமான இஷிமுராவையும்  அழைத்துக் கொண்டு அட்டணம்பட்டி
வருகிறான்.அவர்கள் வழிகாட்டுதலுடன் ஊரைத் தூய்மைப் படுத்துகிறான்.இரசாயண உரத்தினால்
மலடாகப் போயிருக்கும் நிலத்தை மீடக இயற்கை விவசாயத்தை நோக்கி அவர்களைத் 
திருப்புகிறான்.

முத்துமணி விவசாய நிலத்தை ஆலைக்கு வாங்கிக் கொடுக்க முயற்சிக்க – முதலில் சிலர் அதற்கு
இரையாக – பெரும் முயற்சியில் கருத்தமாயியும் சின்னப்பாண்டியும் அதை தடுக்க முயற்சிக்கின்றனர்.
“ ஒரு விவசாயிக்கு நிலம் என்பது நிலம் மட்டுமல்ல ; அடையாளம் ; பிடிமானம் . ஊரில் ஒரு
மனிதனை இருத்திவைக்கும் வேர் . ”என்பதில் விவசாயிகளிடையே எப்போதும் ஒத்த
கருத்துதான்.ஆனால் கட்டுப்படியாகாத விவசாயமும் கடன்தொல்லையும் அவர்களை நிலத்தைவிட்டு
படணம் போகத்துத் துரத்துகிறது.அப்படி திருப்பூருக்கு போயும் பிரச்சனை தீராமல் . வலியோடு
ஊர்திரும்பும் சொள்ளையனும் அவன் மனைவியும் ,இனி வெள்ளமை செய்து தேற முடியாது
என்பதால் வசதியாக பட்டணத்தில் இருக்கும் பிள்ளைகளோடு போகும் கோவிந்த நாயக்கர்
குடும்பத்தினரின் ஊர்பிரியும் வலி,கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொண்ட
பரமனாண்டி,இப்படிஅட்டணம் பட்டியின் விவசாயிகள் வாழ்க்கைப்பாடு விரிகிறது.
 
 “ அந்தக் காலத்துல வெள்ளாமை நல்லாயிருந்துச்சு . மனிதனுக்குச் சீக்கு வந்துச்சு. இந்தக்காலத்துல
மனுசனுக்கு மருந்து இருக்கு : வெள்ளாமைக்கு சீக்கு வந்துச்சு.” இப்படி நொந்து புலம்பும்
அவர்களுக்கு  மாற்றுவழி சின்னப்பாண்டி,எமிலி,இஷிமுரா வழியே வந்தது. ஆம், “போதிக்காதே ;
செய் . உங்கள் நாட்டில் குவித்துவைத்த போதனைகளின் குப்பையில் சிக்கி மூச்சுத் திணறி
செத்துவிட்டது செயல். இனி போதனை மொழியில் செயல் பேசப்படவேண்டாம் ; செயலின் மொழியில்
போதனை பேசப்படட்டும்.”என இமிலி முன் மொழிந்ததை இஷிமுரா வழிமொழிந்தான். சின்னப்பாண்டி
களத்தில் இறங்கி செயல்பட்ட விதம் ஒரு தொண்டு நிறுவன செயல்பாட்டை ஒத்திருந்தது.ஆனால்
ரியல் எஸ்டேட் சூதாடிகளை எதிர் கொள்ள அது போதுமானதாய் இருக்கவில்லையே. முத்துமணி
ரூபத்தில் வெடித்தது கொடுமை.இதற்கிடையில் எமிலி துணையோடு வெளிநாடு சென்று படிக்க
சின்னப்பாண்டி வாய்ப்புபெற்று விமானம் ஏறுகிறான்.
தமிழ் திரைப்பட இலக்கணப்படி கடைசிக் காட்சியில் கதாநாயகியோ கதாநாயகனோ
ஓடுகிறவண்டியிலிருந்து இறங்கிவரவேண்டும். இங்கும் சின்னப்பாண்டி விமானத்திலிருந்து
இறங்கவேண்டிய சூழல் உருவாக்கப்படுகிறது. இதற்கிடையில் கருத்தமாயி மண்ணைக் காக்க மகன்
முத்து மணியை கொலைசெய்துவிட்டு மீண்டும் ஜெயிலுக்குப் போகிறார்.பலவருடங்களாக அவருடன்
பேசாமலிருந்த மனைவி பேசுகிறார். சின்னப்பாண்டி மண்ணில் இறங்குகிறார்.கதை முடிகிறது.
கள்ளிக்காட்டு இதிகாசத்தில் கடைசி காட்சியில் பேயத்தேவர் தண்ணீரில் மிதந்தபோது என்
கண்ணிலிருந்து இரண்டு சொட்டு நீர்த்திவலைகள்  வெளியேறின.அந்த நாவலின்வெற்றி அது. 
“இதிகாசமெனில் இனி இதுவெனக் கொள்க” என தீக்கதிரில் அந்த நாவலுக்கு மதிப்புரை எழுதினேன்.
ஆனால் இந்த நாவலில் விவசாய வாழ்வின் துயரம் பக்கம் பக்கமாகப் பேசப்பட்டும் அடுத்தடுத்து பல
சோக நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டும் ; எனோ அந்த இறுக்கம் வரவில்லை. ஒருவேளை அந்த நாவல்
கவிஞரின் சொந்த வாழ்விலிருந்து பிறந்தது என்பதும். இந்த நாவல் அறிவுபூர்வமான
அக்கறையிலிருந்து பிறந்தது என்பதும் காரணமாயிருக்கலாமோ?. வாசகன் என்கிற முறையில்
இக்கேள்வி எழுகிறது.
விமர்சகனாக நோக்குகையில் கதைபாணியை கட்டுரைபாணியையும் இணைத்து நாவல் நெய்கிற யுத்தி
மேற்குலகில் எப்போதோ வந்துவிட்டது. வெற்றியும் பெற்றுவிட்டது.தமிழில் அம்முயற்சிகள் ஏற்கெனவே
துவங்கப்பட்டுவிட்டது.அதன் வாசகர்பரப்பு மிகவும் சொற்பம்.ஆனால்  ஒரு வெகுஜன வியாபாரப்
பத்திரிகையில் தொடராக எழுதும்போது அதைக் கையாண்டிருப்பதுதான் வைரமுத்துவின்
தனித்துவம்.இவரின் தண்ணீர்தேசமும் இத்தகைய முயற்சியே.

இவரின் கவித்துமான நடை சில இடங்களில் நறுக்கென்று விழுகிறது. “எரியும் மூங்கில் காட்டில் சிறகு
கருகும் ஒரு பட்டாம் பூச்சியை எந்தப்பறவை விசாரிக்கும்?”, என்றும், “மேட்டுக்குடி மக்கள்  மது
அருந்துகிறார்கள். ஆனால் உழைக்கும் மக்களை மது அருந்துகிறது”என்றும் ,  “இந்திய நதிகளை
இணைப்பது இருக்கட்டும் ; முதலில் நதிகளை வாழ விடுங்கள்’’,என்றும்,“உள்ளங்கை மாதிரி நிலம் ;
அதில் சரிபாதி அரிவாள் வெட்டு. உழக்கு மாதிரி ஒரு வீடு ; இன்று உழக்குக்குள் ஒரு சுவரு” 
இவ்வாறெல்லாம் மொழிநடை கதைக்கு வலு சேர்த்த இடங்கள் உண்டு.அலுப்புத்தட்டும் இடங்களும்
உண்டு.இந்த நாவல் இன்னும் விரிந்திருக்கவேண்டும் என்று சொல்வோரும் உண்டு.என்னைப்
பொறுத்தவரைக்கும் இன்னும் சுண்டக்காய்ச்சியிருக்கவேண்டும் என்பதே என் கருத்து.

காட்சிச் சித்தரிப்பில் நூலாசிரியர் பல இடங்களில் வியக்க வைக்கிறார்.இன்னும் சொல்லபோனால்


நாவல் ஆரம்பமே அப்படித்தான்.அது பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.உள்ளேயும் ஆடு
மேய்த்தல் ,பன்றி மேய்த்தல் ,முயல்கறி சமைத்தல்,நாவால் உருட்டிய வெற்றிலையை நாக்கு
படாமலெடுத்தல் என பலபல.

கருத்தமாயி-சிட்டம்மா காதல் சிறை சந்திப்பில் உருவாகி திருமணத்தில் முடிந்தது.அந்த


திருமணக்காட்சியைப் பாருங்கள். “ஒரு ஆவணி மாசம் ;தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோயிலு
; எண்ணி ஏழே பேரு ; ரெண்டே சம்பங்கி மால ;அதுல அங்கங்க ரெண்டு மூணு ரோசாப் பூவு ஒரு
ஆடம்பரத்துக்கு …. மஞ்சக் கெழங்கு கட்டின ஒரு தாலிக் கயிறு. பொண்ணும் மாப்பிளையும் சேத்து
ஒம்பது பேருக்கு காப்பிகடையில் கல்யாணப் பலகாரம். முடுஞ்சது முகூர்த்தம்.ஒரு ஆணும் பெண்ணும்
கூடிவாழ இம்புட்டே போதும். இதுக்கு மேலே அவன் அவன் பவுசு காட்டறதெல்லாம் திமிரு –
தெனாவட்டு- வீம்பு-விறைப்பு. வேறென்ன.” இதைவிட நெற்றியடி வேண்டுமா?

புவிவெப்பமாதல் , காடுகள் அழிக்கப்படுதல், சுற்றுச் சூழல் மாசுபடுதல், இரசாயண உரங்களால் நிலம்


சக்தியை இழற்றல், நகரமயமாதல், ரியல் எஸ்டேட் கொள்ளை என கிராமத்தை நசுக்கி நாசப்படுத்தும்
போக்குகளை இந்நாவலில் சொல்லுகிறபோது பிரச்சாரவாடை அடிப்பதாக சில விமர்சகர்கள்
கூறக்கூடும்.அவர்கள் கூச்சலிடட்டும்.ஆனால் அதைப் பேசியாகவேண்டிய காலகட்டத்தில்
பேசித்தானே ஆகவேண்டும்.அதே சமயம் கதை நகரும் காலம் கதைப்போக்கில் பதிவு
செய்யப்பட்டிருக்க வேண்டாமா?

தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது இந்தப் படைப்பு என்று முதலிலேயே வைரமுத்து


சொல்லிவிட்டார்.ஆகவே இலக்கியவாதியினும் களப்போராளியே இந்நாவலை அதிகம் வாசிக்க
வேண்டும். விவாதிக்கவேண்டும் இல்லையா?.

 மூன்றாம் உலகப் போர் தண்ணீரால்த்தான் மூளும் என்கிற கருத்து மேலைநாட்டு  தொண்டு


நிறுவனங்களின் மூலமே விதைக்கப்பட்டது. மறுபுறம் தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கிவிட்டது
பன்னாட்டு நிறுவனங்கள். தொண்டு நிறுவனங்களின் வழிகாட்டுதல் பேரியக்கமாக பேரெழுச்சியாக
வளர வேண்டிய மக்கள் சக்தியை சின்னச் சின்னப் பாத்திகளுக்குள் அடைத்துவைப்பதே ஆகும்.
அப்படியிருக்க வைரமுத்து வழிமொழியும் பொத்தாம் பொதுவான கோரிக்கைகளும் தீர்வுகளும்
யதார்த்தத்துடன் சரியாகப் பொருந்துமா?அரைகிணறு தாண்டும் நிலையல்லவா? என்சால்படான்
பாதிப்புக்கெதிராக கேரள அனுபவம் கற்கப்பட்டதா?இந்தியாவின் நிலக்குவியலும் நிலவிநியோகமும்
ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை?எல்லாவற்றையும் இறுதியாகத் தீர்மானிப்பது அரசியல்
அன்றோ?அது ஏன் புறக்கணிக்கப்பட்டது?இப்படி எழும் எண்ணற்றக் கேள்விகளோடு விவசாய
இயக்கங்கள் இந்த நூலை முன்வைத்து வலுவான விவாதத்தை பரவலாக முன்னெடுத்துச் செல்ல
முடியமாயின் இந்நூலின் இலக்கு நிறைவேறும்.அது காலத்தின் தேவையாக இருக்கிறது .

களப்போராளிகளிடம் இந்நாவல் போய்ச் சேர மலிவுப்பதிப்பு கொண்டுவரப்படவேண்டும்.விவசாய


இயக்கங்களைச் சார்ந்தவர்கள் கூட்டங்களில் இந்நூல் பேசப்படவேண்டும்.அதில் வைரமுத்து பங்கேற்க
வேண்டும்.

தலித்தியம்.பெண்ணியம் என சில இலக்கியக் கோட்பாடுகளும் போக்குகளும் எப்படிக் காலத்தின்


தேவையாக இருக்கிறதோ அதுபோல மண்ணை நம்பி வாழும் விவசாயிகள் குறித்த  “மண்ணிய
இலக்கியம்” அல்லது  “”வேளாண்மை இலக்கியம் ”பேசப்படவேண்டாமா?
முற்போக்காளர்களே ! உங்களுக்கொரு கேள்வி.விவசாயத்தை மையமாக வைத்து எத்தனை நாவல்கள் 
தமிழில் வெளிவந்துள்ளன?செல்வராஜின் மலரும் சருகும், சின்னப்பபாரதியின் தாகம்,சர்க்கரை,சோலை
சந்தரப் பெருமாள் எழுதிய செந்நெல், ராஜம் கிருஷ்ணனின் சேற்றில் மனிதர்கள்,கோலங்களும்
கோடுகளும்,மணச்சநல்லூர் மணியம்மை வாழ்வைப் பேசும் உன் பாதையில் பதிந்த
அடிகள்,மேலாண்மை பொன்னுச்சாமியின் இனி, உயிர்நிலம்,சூரியகாந்தனின் மானாவரி
மனிதர்கள்,அழியாச் சுவடுகள்,பூமணியின் பிறகு,நெய்வேத்தியம்,சு.தமிழ்ச்செல்வியின் ஒரு
நாவல்,முருகவேல் மொழியாக்கத்தில்  எரியும்பனிக் காடுகள், பாவைச் சந்திரனின் நல்லை நிலம்
[இவை என் நினைவில் உள்ளவை.நண்பர்கள் சொன்னவை.இன்னும் சில இருக்கலாம்].இது போதுமா?
விவசாயிகள்  மிகுந்த நாட்டில்-வேளாண்மை நெருக்கடி முற்றியுள்ள நாட்டில் இவ்வளவு போதுமா?
மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.ஊடகங்கள் விவசாயிகள் தற்கொலையையைவிட பங்குச்
சந்தைச் சரிவைப்  பற்றித்தான் கவலைப்படுகின்றன என்று விமர்சிக்கிறோம். ஆனால்
படைப்புத்துறையில் நாம் நியாயம் வழங்கியுள்ளோமா ? இத்தகு நாவல்களைத் திரட்டி ஒரு
ஆய்வரங்கு நடத்த முற்போக்காளர்கள் ஏன் முயலக்கூடாது.அது மண்ணியம் அல்லது வேளாண்
இலக்கியம் என்றொருபோக்காக ஏன் காலப்போக்கில் மாறக்கூடாது ?
 
இங்கேதான் விவசாய நெருக்கடியை நாவலாக – அதுவும் வெகுஜன இதழில் எழுதத்துணிந்த
வைரமுத்து பாரட்டுக்குரியவர் ஆகிறார்.ஆகவே இந்த நாவலை படிப்பதும்,விமர்சிப்பதும்,களம்
காண்பதும் விவசாயத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

விமர்சனம் 2
புவி வெப்பமயமாதலும், உலகமயமாதலும் சேர்ந்து வேளாண்மையின் மீது தொடுத்திருக்கும்
போர் தான் மூன்றாம் உலகப் போர் என்றும், அதற்கு “வரப்புகள் அழிக்கப்பட்ட கூட்டுப்
பண்ணைகளில் பாட்டாளிகள் பங்குதாரர்களாக வேண்டும்” என்பது அதற்கான தீர்வுகளில்
ஒன்று என்றும் எழுந்தருளியிருக்கிறார். ஆகா ஒரு கவிஞன் சமூக அக்கரையோடு
எழுதியிருக்கும் நூலா எனும் உணர்வின் உந்துதலால் ஆர்வத்துடன் உருப் பெருக்கி
கண்ணாடி கொண்டு தேடியும் புவி வெப்பமடைதலை வெகுவாகத் தூண்டும் முதலாளித்துவ
தொழில் வளர்ச்சிப் போக்கு குறித்தும், உலகமயமாக்கம் எப்படி வேளாண்மையை வதைக்கிறது
என்பது குறித்தும் கொஞ்சமும் இல்லை. ஆனால் எழுதப்பட்டிருக்கும் உள்ளடக்கத்திற்கு
சற்றும் பொருத்தமற்று கம்பஞ்சங்கு கண்ணில் விழுந்தது போல் (நன்றி முதல்வன் படப்பாடல்
வைரமுத்து) உருத்தலாய் ஒரு விசயம் சேர்க்கப்பட்டிருந்தது. அதைப் பற்றி கடைசியில்
பார்க்கலாம்.
 
விவசாயத்திற்கு இருக்கும் மிகப்பெரிய எதிரி யார்? அறுபதுகளில் திணிக்கப்பட்ட பசுமைப்
புரட்சி தொடங்கி இன்றுவரை விவசாயத்தை கருவறுத்துக் கொண்டிருப்பது எது? கடந்த சில
பத்தாண்டுகளில் மூன்று லட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய தூண்டியது எது?
உலகமயம் தான் இதற்குக் காரணம் என்று ஒற்றை சொல்லில் கடந்து சென்றுவிட்டால்; புவி
வெப்பமடைவதும், உலகமயமாவதும் எதோ இயற்கைச் சீற்றம் என்பது போல் கவிதைநடை
குழைத்து இலக்கியமாய் சொல்லிச் சென்றால் அது கதைவிடலாக இருக்குமேயன்றி
ஒருபோதும் சமூகத்தை பதியனிட்டதாக ஆகாது. புவி வெப்பமடைதலும், உலகமயமாதலும்
சேர்ந்து விவசாயத்தின் மீது தொடுத்திருக்கும் போர் தான் ‘மூன்றாம் உலகப் போர்’ என்றால்
அதை தொடுத்திருப்பவர்கள் யார்? தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் யாரால்,
யார் பலனடைவதற்காக தோற்றுவிக்கப் பட்டிருக்கின்றன? உலமயத்தால் யார்
பலனடைகின்றார்களோ அவர்களே விவசாயத்தின் மீது போர் தொடுத்திருக்கிறார்கள்.
முதலாளிகளின் ஒப்பந்த விவசாயம் உள்ளிட்ட விவசாய்த்துக்கு எதிரான திட்டமிடல்களை
ஒரு அத்தியாயத்திலேனும், வேண்டாம் ஒரு பக்கத்திலேனும் விவரித்திருக்குமா மூன்றாம்
உலகப் போர்.
 
புவி வெப்பமடைதல் குறித்த பேச்சுகள் எப்போது தொடங்கியது? பசுங்குடில் விளைவினால்
கார்பனின் அளவு அதிகரித்திருப்பதே புவிவெப்பமடைவதற்கான முதல் காரணி என்கிறார்கள்.
க்வெட்டா தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்க பிடிவாதமாக மறுத்து வருகிறது.
அத்தீர்மானங்களை அமெரிக்கா ஏன் ஏற்க மறுக்கிறது என்பது குறித்து மூன்றாம் உலகப்
போரில் ஏதேனும் குறிப்பிடப் பட்டிருக்குமா? இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி தான்
குளோரோஃபுளோரோ கார்பன் மிக அதிக அளவில் உற்பத்தி செய்தது; அதனால் தான்
ஓசோன் படலம் பாதிக்கப்பட்டது. இதற்கும் வேளாண்மையின் அழிவுக்கும் உள்ள தொடர்பு
குறித்து மூன்றாம் உலகப் போர் ஆராய்ந்திருக்குமா? வெறுமனே ஒரு கிராமத்துக் கதை, பேரு
மட்டும் உலகப் போர். கிராமத்து வாழ்க்கையை உள்ளது உள்ளபடி எழுதுகிறேன் என்று
சாராயம் காய்ச்சுவது எப்படி என்று நுணுக்கமாக எழுதியது போல், கிராமத்து விவசாயியின்
கதையை கற்பனையாக எழுதி அதன் சர்வதேச கவனம் வேண்டி மூன்றாம் உலகப் போர்
என்று பெயர் வைத்திருக்கிறார். இதற்கு முட்டுக் கொடுப்பது போல் வியட்நாமின்
நெற்பயிர்களின் தாக்குப்பிடிக்கும் தன்மை குறித்தெல்லாம் தோரணங்களைப் போல தகவல்கள்.
ஒருவேளை எலக்கியத்திற்கான சர்வதேச விருதுகளை வளைக்கும் வித்தைகளும்
வைரமுத்துவுக்கு அத்துபடி தாமோ. ஆனால், முதலாளிகளின் லாபவெறிக்காக விவசாயம்
உள்ளிட்டு அனைத்துமே அழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதன்
விளைவுகளை மக்கள் உணர்ந்து போராடி வரும் வேளையில் உலகமயமும், வெப்படைதலும்
இயற்கைச் சீற்றங்கள் என்பது போல் வைரமுத்து கரடி விடுவது ஏன்? முதலாளிகள் உலகின்
வளங்களையும், மக்களையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள், அதன் விளைவாகவே மக்களுக்கு
பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படுகின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் விவசாயம்
அழிவது என்பதை வைரமுத்து மறைக்க முற்படுகிறார். வைரமுத்து மட்டுமல்ல எல்லா வண்ண
அறிவுஜீவிகளும் இதை மறைத்து மக்களை திசை திருப்பவே முயல்கிறார்கள். மூன்றாம்
உலகப் போர் இலக்கிய வகையிலான திசைதிருப்பல். சரி, இதை வைரமுத்து ஏன் செய்ய
வேண்டும்? தமிழகத்தின் வானவில் கூட்டணியில் வைரமுத்துவும் சேர்ந்துவிட்டாரா? இந்த
ஐயத்தைத்தான் மேலே குறிப்பிட்ட கம்பஞ்சங்கு எழுப்புகிறது.
 
மேலைநாட்டு ரஸ்ஸல் தொடங்கி தமிழ்நாட்டு சு.ரா வரை மார்க்கிசியத்தின் மீது
அவதூறுகளைப் புனையும் போதெல்லாம், தங்களை மார்க்சியவாதிகளாகவே காட்டிக்
கொண்டனர். அதை அடியொற்றித் தான் வைரமுத்துவும் கூட்டுப்பண்ணைகளின் பாட்டாளிகள்
பங்குதாரர்களாக வேண்டும் என்கிறார். அதே நேரம் சற்றும் பொருத்தமில்லாத ஒரு
பொய்யையும் சந்தடி சாக்கில் அவிழ்த்து விட்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போரில் இரண்டு
கோடிக்கும் மேற்பட்ட வீரர்களை இழந்து ஹிட்லர் எனும் பாசிச சர்வாதிகாரியிடம் இருந்து
உலகை காப்பாற்றியது சோவியத் யூனியன். மட்டுமல்லாது, ஜெர்மனியிடம் பிடிபட்ட 18
ஆயிரம் சோவியத் போர்க்கைதிகளை ஹிட்லரின் ஜெர்மன் அரசு பட்டினி போட்டே
கொன்றது வரலாறாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் வைரமுத்து எழுதியிருக்கிறார்.
சோவியத் யூனியனிடம் பிடிபட்டு சைபீரியாவில் அடைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ஜெர்மன்
போர்க்கைதிகள் முதல் இரண்டேகால் ஆண்டுகள் விலங்குகள், பறவைகள், எலிகளை தின்று
உயிர் பிழைத்தார்களாம், அதன் பிறகு தாக்குப் பிடிக்க முடியாமல் சக கைதிகளையே
உணவாய் திண்ணத் தொடங்கினார்களாம். இப்படி அவர்கள் தின்று தீர்த்தது ஐந்தாயிரம்
பிணங்களையாம். மூன்றாம் உலகப் போரை வைரமுத்து மூன்றாண்டுகள் ஆராய்ந்து பத்து
மாதங்களாய் எழுதினாராம். இதில் மூன்று வினாடிகள் சிந்தித்திருந்தாலே இவர் எழுதியிருக்கும்
கணக்கு எவ்வளவு அபத்தமானது என்பது விளங்கியிருக்கும். .. ம்ம் .. புச்சு புச்சா
கிளம்பிடுறாய்ங்க.. .. ..

You might also like