You are on page 1of 9

தவக்காலம் 2 ஆம் வாரம்

25 பிப்ரவரி 2024

வருகைப் பல்லவி
என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; உமது பார்க்க
விரும்பினேன்; ஆண்டவரே, உமது முகத்தை முகத்தைப் பார்க்க விரும்பினேன்;
அண்ட என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும்.

திருப்பலி முன்னுரை
அன்பார்ந்த இறைமக்களே! சென்ற ஞாயிறு சிந்தனையில் பாலை நிலத்தில்
இயேசுவைச் சந்தித்த நாம், இன்று மலையுச்சியில் அவரைச் சந்திக்க
வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, இருவேறு மலைகளில் நிகழும் இரு
வேறுபட்ட, முற்றிலும் மாறுபட்ட நிகழ்வுகள் இந்த ஞாயிறு, நமது சிந்தனைக்குத்
தரப்பட்டுள்ளன. இவ்விரு நிகழ்வுகளில் ஆபிரகாம் வாழ்வில் நிகழ்ந்த ஒரு
கொடுமையான சோதனையை நமது சிந்தனைகளின் மையமாக்குவோம்.

மகனைப் பலி கேட்ட இறைவன், ஆபிரகாமுக்கு மலையுச்சியில் இறை


அனுபவத்தை அளிக்கிறார். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு
மலையுச்சியில் சீடர்களும் இறை அனுபவம் பெறுகின்றனர். இயேசுவின்
உருமாற்றம் என்ற அந்த இறை அனுபவம் பெற்ற சீடர்களிடம் இறைவன் பலியை
எதிர்பார்க்கிறார். வேதனையை அனுபவித்தபின் இறை அனுபவத்தைப் பெறுவதும்,
இறை அனுபவத்தைப் பெற்றபின், வேதனைகளை அனுபவிக்க தயாராவதும்
வாழ்வில் நாம் சந்திக்கும் ஓர் உண்மை.

மலையின் உச்சியில் இறை அனுபவம் பெற்ற அந்த அற்புத உணர்வோடு,


மீண்டும் மலையைவிட்டு இறங்கிய சீடர்களைப் போல், நாமும் இந்த இறை
அனுபவத்தை இத்திருப்பலியில் பெற்று சராசரி வாழ்வுக்குத் திரும்ப வேண்டும்.
அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாமல்
தவிப்பவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.

உருமாறிய இறைமகனைக் கண்ணாரக் கண்ட சீடர்களை அழைத்துக் கொண்டு,


இயேசு மலையிலிருந்து இறங்குகிறார். எதற்காக? மக்களை உருமாற்ற. மக்களை
உருமாற்றும் பணியில் நாமும் இணைவோம் வாருங்கள்.
திருப்பலி முன்னுரை 2
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு திருப்பலியை இணைந்து நிறைவேற்ற
கூடியுள்ளோர் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம். மலை அனுபவம்
என்பது திருவிவிலியத்தில் பலமுறை பார்த்து படித்து தியானித்துள்ளோம். அது
நமக்கு அறிவுறுத்துவது மலைபோல் உயர்ந்த உள்ளமும் சிந்தனைகளையும்
தெளிவான கருத்துக்களையும் நாம் ஏந்தி தாங்கி வாழ அழைக்கின்றது.
இறைவார்த்தை மூலம் நமக்கு அறிவிக்கின்ற குரலுக்கு ஆழமாக செவிசாய்க்க
வேண்டும். செவிமடுப்பது மட்டுமல்ல செயலாக்கத்திற்கும் கொண்டு வர
வேண்டும் . அப்போதுதான் முழுமை பெரும் நம் வாழ்வு என்பதனை
ஆபிரகாமிற்கு அளித்த ஆசீர் மூலம் இறைவன் நமக்கு கூறுகின்றார். இதனையே
இன்றைய இரண்டாம் வாசக செய்தியும் தருகிறது. இறைவனைச் சார்ந்து
இருப்போருக்கு அனைத்து நலன்களும் பெருகும் என அறிகின்றோம்.

நற்செய்தியிலும் வரும் இறையனுபவம் இறைவனோடு ஒன்றித்து இருப்பதையும்,


அதற்கு தூய்மை தேவை என்பதை காட்ட வெண்மையும், மேகம் நிழலிடுவது
இறைபாதுகாப்பு உண்டு என்பதும் திண்ணமாக தெரிகிறது. இப்பேர்பட்ட
மாட்சிமையை பெற அமைதியை கை கொண்டு வாழவும் அழைக்கின்றது.
இதனையே இறைஇயேசு தம் திருத்தூதர்களுக்கு கட்டளையிடுகின்றனர்.
யாரிடமும் கூறாதிருங்கள் என இதனைக் கேட்ட அவர்களுக்கு குழப்பம்
வருகிறது. ஆனால் மனதில் இருத்தி சிந்திக்கின்றனர். அதுதான் பிற்காலத்தில்
அவர்களுக்கு உறுதுணையாக இருந்து சோர்விலும், சவால்கள் மத்தியிலும்
உலகெங்கும் திருத்தூதுரைத்து செயலாற்ற முடிந்தது, வெற்றியை தந்தது.

திருப்பலி முன்னுரை 3
அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நீதியையும் நேர்மையையும் விரும்புகின்ற நம்
இறைத்தந்தையின் திருப்பெயரால் நல்வாழ்த்துகள் கூறி இத்திருப்பலிக்
கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று நாம்
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

கடவுள் ஆபிராமை அழைப்பதையும், அவருக்கு ஆசீர்வாத வாக்குறுதிகளை


வழங்குவதையும் இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்கிக் கூறுகின்றது. அதன்
வழியாக இறைவனுடைய அழைப்பிற்கு தகுந்தமுறையில் கீழ்ப்படிபவர்களுக்கு
ஆண்டவர்தாமே பக்கபலமாய் இருப்பார் என்ற உறுதியான செய்தியொன்றும்
நமக்குத் தரப்படுகின்றது. அத்தோடு இன்றைய நற்செய்தியில், இயேசு தோற்றம்
மாறும் நிகழ்வும் குறிப்பிட்டுக் காட்டப்படுகின்றது. இத் திருப்பலியில் பங்கேற்கும்
நாமும் ஆபிராமைப் போல் கீழ்ப்படிதலும், நம்பிக்கையும் உள்ளவர்களாயும்,
இறையன்பை நமது முன்மாதிரிகையான வாழ்வு வழியாகப் பிறருக்கு
அறிவிக்கும் உண்மையான சீடர்களாயும் வாழ இத்திருப்பலியில் வல்லமை
கேட்டுச் செபிப்போம்.

திருக்குழும மன்றாட்டு
இறைவா, உம் அன்புத் திருமகனுக்கு நாங்கள் செவிசாய்க்க எங்களுக்குக்
கட்டளையிட்டு உமது வார்த்தையினால் எங்கள் உள்ளத்துக்கு ஊட்டம் அளிக்கத்
திருவுளம் கொண்டீரே; அகவொளியால் நாங்கள் தூய்மையாக்கப்பட்டு உமது
மாட்சியைக் கண்டு மகிழ்வோமாக. உம்மோடு….

முதல் வாசக முன்னுரை:


ஆபிரகாமை இறை நம்பிக்கையின் தந்தை என்கிறோம். நமது இறை நம்பிக்கை
எத்தகையது? இன்னல், இடர்ப்பாடுகள் நேரும்போது கடவுளை முழுமையாக
நம்புகிறோமா? நமது இறை நம்பிக்கை எத்தகையது என்பதைச் சிந்திக்க
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் ஒரு கொடுமையான சோதனையைச்
சந்திக்கிறார். இதனைக் கவனமுடன் கேட்டு நம்மைச் செம்மைப்படுத்த வேண்டிய
காலம் இத்தவக்காலம் என்பதை உணர்ந்துச் செயல்படுவோம்.

முதல் வாசகம்
நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலி.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 22: 1-2, 9-13, 15-18


அந்நாள்களில் கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி,
ஆபிரகாம்! என, அவரும் ‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “உன் மகனை, நீ
அன்புகூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப்
பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி
பலியாக அவனை நீ பலியிட வேண்டும்” என்றார். ஆபிரகாமுக்குக் கடவுள்
குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு
பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம்
மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின்மேல்
கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக்
கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ‘ஆபிரகாம்!
ஆபிரகாம்’ என்று கூப்பிட, அவர் ‘இதோ! அடியேன்’ என்றார். அவர், “பையன்மேல்
கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப்
பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று
இப்போது நான் அறிந்துகொண்டேன்” என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம்
கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடியில் கொம்பு மாட்டிக்கொண்டு
நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக்
கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரிபலியாக்கினார். ஆண்டவரின்
தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, “ஆண்டவர் கூறுவது
இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப்
பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது
உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப்போலவும் கடற்கரை மணலைப்
போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம்
பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக்கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச்
செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம்
தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு. - இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 116: 10,15. 16-17. 18-19


பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன்
வாழ்ந்திடுவேன்.

‘மிகவும் துன்புறுகிறேன்!’ என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு


இருந்தேன். ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக
மதிப்புக்குரியது. - பல்லவி

ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம்


அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். நான் உமக்கு நன்றிப்
பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். - பல்லவி

இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என்


பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; உமது இல்லத்தின் முற்றங்களில்,
எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை
நிறைவேற்றுவேன். – பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை


இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியானர் கடவுள் நம்மோடு
இருக்கையில் நமக்கு எதிராக யார் செயல்பட முடியும்? என்ற வினா
எழுப்புகின்றார். அவரின் உடனிருப்பு நம்பும்பொழுது நம்மை யார் குற்றம்
சொல்லமுடியும? சிலுவையில் தன் சாவை ஏற்று இறந்த பின் உயிருடன்
கடவுளின் வலப்பக்கம் இருக்கும் இயேசுவின் உடனிருப்பை நம்பும்படி நம்மை
அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகம்
கடவுள் தம் சொந்த மகனென்றும் பாராமல், அவரை நமக்காக ஒப்புவித்தார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-34


சகோதரர் சகோதரிகளே, கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக
இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம்
அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு
அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம்
சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே.
அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன்
எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப்
பரிந்து பேசுகிறார் அன்றோ!
ஆண்டவரின் அருள்வாக்கு. - இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வசனம்


ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த
மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.”

நற்செய்தி வாசகம்
என் அன்பார்ந்த மைந்தர் இவரே.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 2-10


அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து,
ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களை மட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு
போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள்
இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை
வெளேரென ஒளிவீசின. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத்
தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தார்கள். பேதுரு
இயேசுவைப் பார்த்து, “ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும்
மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்”
என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில்
அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மேகம் வந்து
அவர்கள் மேல் நிழலிட, அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே;
இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள்
சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு
எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கி
வந்துகொண்டிருந்தபோது அவர், “மானிடமகன் இறந்து உயிர்த்தெழும்வரை, நீங்கள்
கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” என்று அவர்களுக்குக்
கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி,
‘இறந்து உயிர்த்தெழுதல்’ என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர்
பேசிக்கொண்டார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு. - கிறிஸ்துவே உமக்கு புகழ்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
குரு: அன்பார்ந்த இறைமக்களே! நம் மீது அளவற்ற அன்பும் இரக்கமும் கொண்ட
இறைவன் நமது மன்றாட்டுகளுக்கு செவிமடுக்கக் காத்திருக்கிறார். அவரிடம்
நமது தேவைகளை எடுத்துரைப்போம்.

1. அருட்கொடைகளின் நாயகனே எம் இறைவா! எம் திருஅவையின் திரு


ஆட்சியாளர்கள், தங்கள் வாழ்வில் உம் சொற்களால் ஊட்டம் பெற்று நம்பிக்கை
வாழ்வில் தளர்ச்சியுற்ற வேளையில் சோர்ந்து விடாமல், உம் நம்பிக்கை உன்னை
நலமாக்கியது என்றும் வார்த்தையை வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பின் அரசரே இறைவா, நாட்டையாளும் தலைவர்கள் தன்னலம் கருதாமல்


நாட்டு மக்கள்மீது கவனம் செலுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும்,
எவ்விதமான பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல் தேவையில்
இருப்போர் அனைவருக்கும் அவர்களின் குறைகளை நீக்கி மனமகிழ்வினை
ஏற்படுத்த வேண்டிய நல்லுள்ளத்தை அளித்தருள வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.

3. வாழ்வை வழங்கும் தந்தையே இறைவா! இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு


நாள் என்று அழைத்தீரே. நாங்கள் கிறிஸ்துவின் தூதர்களாய் இருக்கிறோம்
என்பதை உணர்ந்து, இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்திக் கடவுளோடு
ஒப்புரவாகி, இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்படையவர்களாய் மாற நல்ல
மனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அனைத்திற்கும் ஊற்றான எம் இறைவா! இன்று எம்நாட்டில் நிலவும்,


சிறுபான்மை மத மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை, தீவிரவாதம்
இவைகள் உம் அருள் இரக்கத்தினால் ஒழிந்திடவும், எல்லோரும் இந்தத்
தேசத்தின் மன்னர்கள் என்ற தெளிந்தச் சிந்தனையை மதவாத சக்திகள் புரிந்து
கொண்டு செயல்பட உம் தூயஆவியினால் அனைவரும் உண்மையான
மனமாற்றத்தை உணரத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா, அரசு பொதுத் தேர்வுக்குத் தயாராகிக்


கொண்டிருக்கிற மாணவச் செல்வங்களுக்கு ஆசியளித்தருளும். உம் தூய
ஆவியாரின் ஞானத்தைக் கொடுத்து, அவர்கள் நல்லமுறையில் தேர்வு எமுதித்
தேர்ச்சி பெறவும், ஒளிமயமான எதிர்கால வாழ்வைப் பெறவும் வரம் அருள
உம்மை மன்றாடுகின்றோம்.

6. பாதுகாக்கும் பரமனே! உலகில் வாழும் அகதிகள், ஏழைகள், வாழ்வினை


இழந்தோர் அனைவருக்கும் வாழ்வளிக்கும் ஊற்றாக இருந்து, அவர்களின்
வாழ்வில் ஒளியேற்றி, உமது அன்பை அவர்கள் சுவைக்க தேவையான அருளைத்
தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

7. ஓளியான இறைவா, இத்தவக் காலத்தில் பயணிக்கும் நாங்கள், எங்கள் நல்ல


சிந்தனை, சொல், செயல்கள் மூலம் ஒளியான உம்மை எம் இதயத்தில் தாங்கி,
மற்றவர்கள் வாழ்வில் அதை பிரதிபலிக்கத் தேவையான உம் ஆவியின்
கொடைகளை தரவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

செபிப்போமாக:
எம் வேண்டுதல்களுக்கு செவிசாய்ப்பவரே! உம் மக்களாகிய நாங்கள் உம் முன்
கொண்டு வந்த எங்கள் விண்ணப்பங்களையெல்லாம் நிறை வேற்றி, எமது
விசுவாசத்தை உம்மில் அதிகரிக்க செய்யவேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய
கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இப்பலிப்பொருள் எங்கள் பாவங்களைக் கழுவிப்போக்க உம்மை
வேண்டுகின்றோம்: பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்கு, உம்மீது நம்பிக்கை
கொண்டோரின் உடல்களையும் மனங்களையும் அது புனிதப்படுத்துவதாக.
எங்கள்….

தவக் காலத்தின் தொடக்கவுரை: ஆண்டவரின் உருமாற்றம்


மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,


எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

கிறிஸ்து தமது சாவைச் சீடர்களுக்கு முன்னறிவித்து,


புனித மலையில் தமது பேரொளியை வெளிப்படுத்தினார்.
அதனால் சட்டமும் இறைவாக்குகளும் சான்று பகர்ந்தவாறு
தம் பாடுகள் வழியாகவே உயிர்ப்பின் மாட்சிக்குத்
தாம் வந்து சேர வேண்டும் என்பதை அவர் விளங்கச் செய்தார்.

ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து


நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி,
முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது:
தூயவர்… தூயவர்…

திருவிருந்துப் பல்லவி
என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்.
இவருக்குச் செவிசாயுங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, இவ்வுலகில் வாழும் நாங்கள் ஏற்கெனவே விண்ணுலக வாழ்வில்
பங்குபெற அருள்கூர்ந்தீர்; மாட்சிக்கு உரிய மறைநிகழ்வுகளைப் பெற்றுக்கொண்ட
நாங்கள் உமக்குச் செலுத்தும் நிறை நன்றியை ஏற்றுக்கொள்வீராக. எங்கள்….

மக்கள்மீது மன்றாட்டு (விருப்பமானால்)


ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளோரை முடிவில்லா ஆசியால்
புனிதப்படுத்தி உம் ஒரே திருமகனின் நற்செய்தியைக் கடைப்பிடிக்கச்
செய்தருளும்; அதனால் அவர் தம் திருத்தூதர்களுக்குத் தம்மில் வெளிப்படுத்திய
அந்த மாட்சிமீது அவர்கள் என்றும் ஆர்வம் கொள்ளவும் அதை மகிழ்வோடு
வந்தடையவும் தகுதி பெறுவார்களாக, எங்கள்…..

You might also like