You are on page 1of 13

19. கடைசி நம்பிக்கை..

நவம்பர் 1 ஆம் நாள் சற்று முன்னதாகவே நாங்கள் இமான் ஆற்றின்


கீ ழ்ப்பகுதிக்குப் பயணம் தொடங்கினோம்.

உதேஹிகள் சிறுவயதில் இருந்தே மலையோடைகளில் பயணிக்கக்


கற்றுக் கொள்கிறார்கள் -அதுவும் வாழ்வு சார்ந்த ஒரு கலை என்பதால்.
தொலைதூரத்தில் இருப்பதை அறிந்து கொள்ளவும், படகின் தன்மையைச்
சோதித்துக் கொள்ளவும், அபாயகரமான இடங்களில் தகுந்த வேகத்தில்
அதைச் செலுத்தவும் தெரியும் அவர்களுக்கு. சிறு கவனக் குறைவும் பெரும்
அழிவை ஏற்படுத்தி விடும். நீர்ச்சுழல்களில் அகப்பட்டுப் படகு கவிழ்ந்து
விடலாம். பாறைகளில் மோதவும் வாய்ப்புண்டு. கட்டுக்கடங்காமல் பெருகும்
நீரோட்டங்களில் படகு இருபுறமும் அசைந்து சமநிலை குலைந்து போகும்.

சரியான வழியைப் பனிக்கட்டி ஆக்கிரமித்துக் கொண்டதால் ஆற்றின்


கீ ழ்ப்பகுதி நோக்கிய எங்களின் பயணம் சிக்கலுக்கு உள்ளாகியது.
பனிப்பாறைகளைக் கடந்து செல்ல வழி கண்டுபிடித்தாக வேண்டும்,
குறிப்பாக, ஆற்றின் வளைவுகளில் உள்ள நீரோட்டங்களில். மேலும்
கரையிலிருந்து வெகுதூரத்தில் பனி பரவியிருந்ததால் நட்டாற்றில் உள்ள
நீரோட்டமானது வேகமானதாக இருந்தது.

மலைத்தொடரில் இருந்து பாயும் பிற ஆறுகளைப் போலவே, இமான்


ஆறும் நீரோட்டங்கள் மிகுந்தது. அதிலும் குறிப்பாக ஓர் இடம் மிகவும்
அபாயகரமானது. தூரத்திலேயே அதன் ஓசை கேட்டது. ஆற்றின்
அடிப்பகுதியில் ஒரு பள்ளம் இருப்பதும் கண்ணுக்கே தெரிந்தது. தொங்குவது
போன்ற ஓர் உச்சிப்பாறையும் அதன் ஒரு புறம் இருந்தது. நுரை
பொங்கியடித்துப் பாறையின் அடிப்புறம் உறைந்தும் திவலைகளாகச் சிதறியும்
கிடந்தது.

உதேஹிகள் படகைத் தமது கட்டுப்பாட்டில் வைத்து நன்கு ஆராய்ந்து


ஆலோசித்துப் பின் அதனை நீரோட்டத்தை நோக்கித் திருப்பினர். மெதுவாகச்
செல்ல வைத்தனர். ஆழ்நீரோட்டமொன்று ஓர் உச்சிப் பகுதியை நோக்கிப்
படகைத் தூக்கியெறிய இருந்தபோது அதைத் துணிச்சலுடன் தள்ளி ஒரு
புதிய பாதையில் செலுத்தினர். அபாயத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதை
அவர்கள் கண்களில் தெரிந்த கலவரத்தைக் கண்டு அறிந்தேன். டெர்சுதான்
எவ்விதச் சலனமுமின்றி அமைதியாக இருந்தான்.

`கவலைப் படாதீர்கள் கேப்டன்’ என்றான். `உதேஹிகள் மீ னைப்


போன்றவர்கள். நல்ல படகோட்டிகளும் கூட.’

முன்னேறிச் செல்வதில் சிரமம் அதிகரித்தது. எங்கு பார்த்தாலும்


பனிதான். கிட்டத்தட்ட வழிகள் முழுதும் அடைபட்டு விட்டன. உதேஹிகள்
பனிக்கட்டிகளைத் திறமையாகக் கையாண்டு, கழிகளைக் கொண்டு விலக்கித்
தள்ளி முன்னேறினர். ஒரு கூர்விளிம்பான திருப்பத்தில் மிகப்பெரிய அளவில்
பனிக்கட்டிகள் திரண்டு வழியை அடைத்துக் கொண்டிருந்தன. ஆற்றின்
நடுவே மட்டும் ஒரு குறுகிய வழி எஞ்சியிருந்தது. அதில் போக முடியுமா
என்பதில் ஐயமேற்பட்டது. படகை நிறுத்தி, விளைவுக்கு அஞ்சாமல்
தொடர்ந்து போகலாமா எனக் கேட்டனர். தோள்பை, வேண்டிய அளவுக்குக்
கனமாக இருந்ததால், நல்வாய்ப்பைச் சோதித்துப் பார்க்கும் வகையில்
`போகலாம்’ என்று சொல்லி விட்டேன். டெர்சு அதை ஏற்கவில்லை. ஆனால்
கரையொதுங்கினாலும் தடுமாறி நடந்தாவது பயணம் தொடர முடியும் என்ற
நம்பிக்கை எனக்கிருந்தது. 15 அடி தூரத்தில் நாங்கள் பயணித்த குறுகிய வழி,
சந்து போலச் சுருங்கி விட்டது. ஆறும் கெட்டியாக உறைந்திருந்தது.
குவியலாகத் திரண்டிருந்த பனிக்கட்டிகள், உறுதியான எங்கள் படகிற்கு
எந்நேரமும் அழிவைத் தரக்கூடியதாக இருந்தது. நீரோட்டத்தின்
அழுத்தத்தால் தண்ண ீர் படகில் ஏறிவிடுமோ எனத் தோன்றியது. அந்தக்
குறுகிய வழியில் இருமடங்கு விரைவாக நாங்கள் திரும்பி விட வேண்டும்.
ஆனால் அதுவும் எளிதாக இல்லை. படகும் திரும்ப முடியாது. நீரோட்டத்தை
விரைவாகக் கடப்பது மட்டுமே சாத்தியம். நல்லூழ் நமக்கு இருந்தால்
நட்டாற்றில் துடுப்பு, நீருக்குக் கீ ழ் தரையைத் தொட்டுப் படகை முன்னேற
விடும். கடும் முயற்சியுடன் அந்தக் குறுகிய வழியில் பாதியளவு திரும்பி
விட்டோம். அப்போது எழுந்த கூக்குரலொன்று என்னைத் திரும்பிப் பார்க்க
வைத்தது. ஒரு மிகப் பெரிய பனிப்பாறை எங்களை நோக்கி வேகமாக வந்து
கொண்டிருந்தது. நாங்கள் வெளியேறும் முன் அது வழியை அடைத்துவிடும்
போலிருந்தது. உதேஹிகள் தமது முயற்சிகளை இரு மடங்காக்கியும்
பயனில்லை. விரைந்து வந்த பனிப்பாறை, வழியின் இரு விளிம்புகளிலும்
பெரும் சத்தத்துடன் மோதியது. மற்ற பனிக்கட்டிகளையும் நகர விட்டு
வழியின் பக்கப் பகுதிகள் எங்களை நோக்கி நெருங்க வைத்தது அந்த
மோதல்.

`அது நம்மை நசுக்கி விடப் போகிறது’ டெர்சு கூச்சலிட்டான். `வேகமாக


இறங்குங்கள்.’

மிதந்து வரும் பனிப்பாறையின் மீ து தாவிக் குதித்துக் கரையை நோக்கி


ஓடிப் படகின் கயிற்றைப் பின்னுக்கு இழுத்தான். பலமுறை தடுமாறித்
தண்ணரில்
ீ விழுந்தாலும் ஊக்கத்துடன் எழுந்து கொண்டான். நல்வாய்ப்பாக
அருகில்தான் கரை இருந்தது. வரர்கள்
ீ படகிலிருந்து இறங்கி வரிசையாகத்
தொடர்ந்து நடந்தனர். முன்னே சென்ற இருவர் பாதுகாப்பாகக் கரையை
அடைந்தனர். முர்சின் கீ ழே தண்ண ீரில் விழுந்து விட்டான். பனிப்பாறை
ஒன்றின்மீ து தொற்றியேற முயன்றவன் வழுக்கி மீ ண்டும் நீரில் விழுந்து
மேலே வரக் கடுமையாகப் போராடினான். மறுநிமிடம் விழுந்தான்.
தண்ணரின்
ீ தரைப்பகுதிக்கே போய் வந்தான். டெர்சு உதவிக்கு ஓடி வந்தான்.
அவனும் விழுந்து மூழ்கி விடுவானோ என்றும் ஒருகணம் தோன்றியது.
இதற்கிடையில் உதேஹிகளும் நானும் படகின் ஒரு பக்கத்தைப் பிடித்துக்
கொண்டே ஒவ்வொரு பனிப்பாறையாக ஓடி அதனை இழுத்தோம். அதன்
முகப்புப் பகுதி டெர்சு, முர்சின் இருவரும் எட்டக்கூடிய அளவில் வந்து
இருவரையும் காப்பாற்றி விட்டது. பிறகு, படகு தன் கட்டுப்பாட்டை இழந்து
தாறுமாறாக ஆற்றின் குறுக்கே ஓடியது. ஒரு நீரோட்டம் அதைக் கவர்ந்து
கொண்டு பனிப்பாறைகளோடு சேர்ந்து இழுத்து விட்டது. நாங்கள்
தோள்பைகளைக் கரையில் வசிவிட்டுத்
ீ தடுமாறி ஏறிக் கொண்டோம். சில
நிமிடங்களுக்குப் பிறகு எங்கள் படகு ஒரு பாறை உச்சியின் அருகே போய்க்
கொண்டிருக்கக் கண்டோம். உயிருள்ள பொருளைப் போலவே அது
பனிக்கட்டிகளைச் சிறிது நேரம் சமாளித்து, முடியாமல் மடங்கி வழ்ந்தது.

அது உடைபடும் சத்தத்தைக் கேட்டோம். கடுமையாகச் சேதமடைந்து, பின்
நீரில் அது எங்கோ மறைந்து போனது.

கரைக்கு வந்ததும் முதல் வேலையாக நெருப்பை உருவாக்கினோம்.


எங்களையும் ஈரம் காய வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. தேநீர்
குடித்தால் நன்றாக இருக்கும் என்றொருவன் நினைவூட்டியதால், அதற்குரிய
பொருட்களைத் தோள்பைகளில் தேடினோம். எதுவும் கிட்டவில்லை. ஒரு
துப்பாக்கியும் கூடத் தொலைந்து விட்டது தெரிந்தது. அவரவர் பைகளில்
ஏதாவது இருந்தால் அதுவே அப்போதைய உணவு என்றானது. இரவுக்குள்
குடில்களை அடைந்து விடலாம் என்று உதேஹிகள் கூறினர். அங்கே
பத்தாயத்தில் உறைந்த மீ ன்கள் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

மாலையில் ஒரு குடிசையை அடைந்தோம். அது காலியாக


இருந்தாலும் உள்ளே, காயவைத்த மீ ன்கள் இரண்டு இருந்தன. அவை
இரவுணவானது.

இமான் ஆறு தனது முதன்மைக் கிளையான ஆர்மு உடன் ஒரு கூரிய


திருப்பத்தில் இணைந்து கொள்கிறது. கீ ழே சமவெளியில் விழும்போது 250
அடி அகலமும், 7-10 அடி ஆழமும் கொண்டதாக மாறுகிறது. நீரோட்டத்தின்
திசைவேகமும் ஒரு மணிக்கு ஆறு மைல் என்றாகி விடுகிறது.

நவம்பர் 2 ஆம் நாள் பிற்பகலில் ஹூட்டாடோ ஆற்றைக் கண்டோம்.


மலைத்தொடரின் குறுக்கே இமான் ஆற்றின் எல்லையைப் போல ஒரு
கணவாய் வழியாக அது பெருகி வருகிறது.

வழியில் இரண்டு ஓடைகள் குறுக்கிட்டன. வடக்கு, மேற்குத்


திசைகளிலிருந்து அவை செல்கின்றன. அதில் இரண்டாவதைத்தான் நாங்கள்
தொடர்ந்து போக வேண்டும். ஆனால் நான் தவறானதைத் தேர்ந்தெடுத்து
விட்டேன். கணவாயைக் கடந்த பிறகு ஒரு சமதளத்தில் முகாம் அமைத்து,
விறகு தேடத் தொடங்கினோம்.
மறுநாள் எங்களிடம் இருந்த கடைசி மீ னையும் உண்ட பின், காலித்
தோள்பைகளுடன் பயணம் தொடர்ந்தோம். அப்போதிலிருந்து அடுத்த வேளை
உணவுக்காகத் துப்பாக்கிகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. டெர்சுவை
முன்னே அனுப்பி விட்டு நாங்கள் முன்னூறு தப்படி பின் தொடர்ந்தோம்-
அச்சம் தவிர்ப்பதற்காக.

டெர்சுவின் துப்பாக்கியை ஆவலுடன் எதிர்பார்த்தோம். அதுவும்


பயனில்லை. பிற்பகலில் பள்ளத்தாக்கு அகலமாக விரிவது தெரிந்தது அங்கே
சிறிய, ஓரளவு தெளிவான கால்தடங்கள் தென்பட்டன. அவை ஒரு சதுப்பு
நிலத்தைத் தாண்டி வடதிசைக்கு இட்டுச் சென்றன.

கடும் பசியில் இருந்தோம். எதைக் குறித்தும் உரையாடல்கள் இல்லை.


காலி வயிற்றுடன் பேசும் மனநிலை யாருக்கும் இல்லை. தூரத்தில் டெர்சு
ஒவ்வோர் இடமாகத் தேடிச் சென்று, குனிந்து தரையிலிருந்து எதையோ
எடுத்துப் பார்ப்பது தெரிந்தது. அழைத்துப்பார்த்தேன் அங்கிருந்தே கைகளை
அசைத்தான்.

`என்ன கிடைத்தது.?’ வரர்களில்


ீ ஒருவன் கேட்டான்.

`கரடி மீ தம் வைத்த மீ ன்கள்’ என்று பதில் தந்தான் டெர்சு. `தலைகளை


மட்டும் விட்டு வைத்திருக்கிறது.’

ஏராளமான மீ ன் தலைகள் பனியில் சிதறிக் கிடந்தன. அண்மையில்


ஏற்பட்ட பனிப்பொழிவுக்குப் பின் கரடிகள் அங்கே வந்து விருந்துண்டு
சென்றிருக்கலாம்.

`யாசகனுக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக் கிடையாது’ என்கிறது


பழமொழி. கரடிகளுக்கு உணவாகி மீ ந்த அவற்றில் நாங்கள் சிறந்ததைத்
தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று. தெம்புடன் கால் மணி நேரத்திற்குள்
சேகரித்துப் பைகளில் போட்டுக் கொண்டோம். இதுபோன்ற ஒரு சிறிய
பள்ளத்தாக்கு எப்படி ஒரு பெரிய ஆற்றின் கரைக்குத் தன்வயப்படுத்தி
அழைத்து வந்திருக்கிறது என்று அந்த இடத்தைப் பார்த்து வியந்தோம்.
சினாட்சா ஆறு அது. அடுத்த நாள் நண்பகலுக்குள் இமான் ஆற்றை
அடைந்துவிட முடியும் என்று உதேஹிகள் கூறினர்.

அக்கரையில் ஓர் அடர்ந்த ஊசியிலைக் காட்டில் முகாமை


அமைத்தோம். மீ ன் தலைகள் அருமையான உணவாயின. சிலவற்றில்
இறைச்சி மிகுந்தும்கூட இருந்தன. சிரமக் காலத்தே கிடைத்த சிறந்த உணவு.
இருந்ததைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டோம். ஆகவே சுவை கூடி
இருந்தது. நேரத்திற்கு ஏதோ கிடைத்தது என்றெல்லாம் சொல்ல முடியாது
அந்த இரவுணவை.

இரவு நேரத்தில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து போனது. ஆயினும்


போதிய அளவு விறகு சேமிக்கப் பட்டிருந்ததால் நல்ல உறக்கம்
அனைவருக்கும் வாய்த்தது.

நவம்பர் 4 அதிகாலையில் பசியுடனே எழுந்தோம்.

முழங்கால் அளவு பனியில் நடந்து முன்னேறுவது கடினமாக இருந்தது.


ஒரு மணி நேரத்தில் இரண்டு மைல்களைத்தான் கடந்தோம்.

துன்பங்களையே கண்டிருந்த எங்களிடம் வேடிக்கை விளையாட்டுகள்


காணாமற் போயிருந்தன. எங்களின் தேடல் எல்லாம் இன்னும் அதிக மீ ன்
தலைகள் என்ற அற்பக் காரணத்திற்காக என்றானது. ஒரு வரன்
ீ கத்தூரி மான்
ஒன்றைச் சுட்டான். அதுவும் குறி தப்பி விட்டது.

நேரத்தைக் கணக்கிட்டுப் பார்த்தபோது, அந்நேரத்தில் நாங்கள் இமான்


ஆற்றை நெருங்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு திருப்பத்திலும் சினாட்சா
ஆற்றின் முகப்புப் பகுதியை நான் எதிர்பார்த்தேன். ஆனால் கண்ணில்
பட்டவையெல்லாம் காடுகள்தாம்.
மாலைநேரத்திற்குள் மரப்பட்டைகள் வேய்ந்த ஒரு வேட்டையாடிகள்
விடுதிக்கு வந்தோம். எனக்கு அது ஆறுதலாக இருந்தது. ஆனால், டெர்சு
என்னோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள முன்வரவில்லை. அங்கே
எந்தவொரு பொருளும் இல்லை. காரணம், வேட்டையாடிகள் இரவைக்
கழிக்க மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்பதை அது கூறுகிறது என்று டெர்சு
சொன்னான். மேலும் அது இன்னொன்றையும் சொல்கிறது ; இமானை
அடைய ஒருநாள் போதும் என்பதுதான் அது என்று விவரித்தான்.

அனைவரும் பசியால் வாடினோம். வரர்கள்


ீ கலக்கத்துடன் நெருப்பின்
முன் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்தனர். அரிதாகவே தமக்குள் பேசிக்
கொண்டனர். காலையில் முன்னதாகவே எழுந்து கொண்டனர். அடுத்த
நாளைக்குள் ஏதாவது வேட்டை விலங்கு அகப்படாமல் போனாலோ,
இமானை அடைய முடியாமற் போனாலோ நிலைமை கவலைக்குள்ளாகி
விடும். கோடைகாலத்தில் நாட்கணக்கில் உணவின்றிப் பயணிக்க முடியும்.
ஆனால் குளிர்காலத்தில் அது முடியாது. குளிரில் விறைத்துச் சாக
வேண்டியதுதான்.

காலையில் முதலில் விழித்துக் கொண்ட டெர்சு என்னையும் எழுப்பி


விட்டான். மிகுந்த கவலையோடு இருந்தான். கால்கள் தாங்குகிற வரை
நாங்கள் நடக்க வேண்டும். என் உயிராற்றல் குறைந்து கொண்டு வருவதாக
உணர்ந்தேன். தோள்பை இருமடங்கு எடைகூடி விட்டதாகத் தெரிந்ததால்
ஒவ்வொரு 150 அடிக்கும் ஓய்வு தேவைப் பட்டது. தரையில் படுத்துக்
கொள்ளலாம் என்றுகூடத் தோன்றியது. ஆனால் அது மோசமான அறிகுறி.
நண்பகலில் ஓரளவு முன்னேற்றம் காணப் பட்டது. போக்கைப் பார்த்தால்
அன்றைக்கு இமானை எட்ட முடியாதோ தெரியவில்லை. வழியில் சிறிய
பறவைகளைச் சுட்டுப் பிடித்தோம். எனது பையில் மூன்று நட்ஹேட்சர்களும்
ஒரு மரங்கொத்தியும் இருந்தன. ஆனால் அந்தச் சொற்ப உணவு, நன்கு
வளர்ந்த ஐந்து பேருக்குப் போதுமானதாக இல்லை.

இதற்கிடையில் வானிலை மோசமானது. வானம் மூடிக் கிடந்தது.


காற்று வசித்
ீ தரையில் இருந்த பனியை மேலெழுப்பிச் சென்றது.
பனித்துகள்கள் காற்றில் சிதறி ஆற்றின் மேல் சுழன்றடித்தன. பனி
தூய்மையாகவும் சில இடங்களில் வண்டல் போலவும் படிந்திருந்தது.
கடுமையான குளிர் வாட்டியது. உடைகள் நைந்து உறைபனியை ஓரளவே
சமாளித்தன.

இடப்பக்கம் பெரும்பாறைகளால் ஆன மலை தென்பட்டது. அதன்


செங்குத்துக் கற்கள் ஆற்றின் மேற்பரப்பிலும் பரவியிருந்தன. குகை போன்ற
ஓர் இடத்தைக் கண்டு அங்கே நெருப்பை மூட்டினோம். டெர்சு அதில் ஒரு
தேநீர்ப்பாத்திரத்தை வைத்துத் தண்ண ீர் விட்டுக் கொதிக்க வைத்தான். தனது
தோள்பையில் இருந்து ஒரு மான் தோலைத் தேடியெடுத்துத் தீயில்
வாட்டினான். பிறகு அதைச் சிறு பட்டைகள் போலத் துண்டுகளாக்கினான்.
பாத்திரத்தில் அவற்றை இட்டுச் சிறிது நேரம் வேக விட்டான். பிறகு அதை
எடுத்து வந்து அவன் சொன்ன வார்த்தைகள் :

`மனிதர்கள் கிடைத்த உணவை உண்டேயாக வேண்டும். நமது


வயிற்றை ஏமாற்றிக் கொள்ளவும் வேண்டும். கொஞ்சம் உறுதி மீ ளக்
கிடைத்தால் போதும். வேகமாகப் போகலாம். ஓய்வு கூடாது. இன்றைக்குச்
சூரியன் இறங்கும்போது நாம் இமானில் இருக்க வேண்டும்.’

யாரும் வற்புறுத்தவில்லை. எதை வேண்டுமானாலும் விழுங்கத்


தயாராக இருந்தோம். நன்றாக வெந்திருந்தாலும் அந்தத் தோல் இன்னும்
கடினமாகவே இருந்தது. அரிதாகவே கடித்துச் சுவைத்தோம். அதைப்
பற்றியெல்லாம் கவலை இல்லை எங்களுக்கு. டெர்சு வந்து போதும் என்று
சொல்ல வேண்டியதாயிற்று.

அரைமணி நேரத்தில் கிளம்பி விட்டோம். விழுங்கிய மான் தோல்


பசியைப் போக்கவில்லை. ஆனாலும் அது உள்ளே போய்ச் செரிமான
உறுப்புகளின் மீ து சற்றே செயலாற்றியிருக்கிறது. பயணத்தில் பின்
தங்குபவர்களை அதட்டி முன்னே வரச் செய்தான் டெர்சு.
பொழுது மறைந்து கொண்டிருந்தது. பயணம் நிற்கவில்லை.
சினாட்சாவுக்கு எல்லை என்பதே கிடையாதா என்று ஐயம் கூடத் தோன்றி
விட்டது. மலைகளின் ஒவ்வொரு நீட்சியும் மற்றொன்றின் தொடக்கமாக
விரிந்தது. பயணத்தின் இறுதிக் கட்டம் இது. குடிகாரனைப் போலத் தள்ளாடி
நடந்தோம். டெர்சு இல்லாமல் போயிருந்தால் எப்போதோ முகாம்
அமைத்திருப்போம். மாலை ஆறு மணியளவில் மனித நடமாட்டம்
இருப்பதற்கான முதல் அறிகுறி தென்பட்டது. பனித் தரை வழுக்குக்
கட்டையும், ஸ்லெட்ஜ் வண்டி சென்றதற்கான தடயங்களும், வெட்டப்பட்ட
மரத் துண்டுகளும், சேகரித்து வைத்த விறகுக் குவியலும் அதை உறுதிப்
படுத்தின.

`இமானை நெருங்கி விட்டோம்’ வெற்றிக் களிப்புடன் கூவினான் டெர்சு.

தூரத்தில் எங்கோ நாய் குரைக்கும் ஒலி கேட்டது. அடுத்த வளைவில்


சீனர்களின் குடியிருப்பான சியான்-ஷி-ஹட்சா விலிருந்து வெளிச்சம்
மங்கலாகத் தெரிந்தது.

15 நிமிடங்களில் அந்தச் சிற்றூரை நெருங்கி விட்டோம். அந்த நாளைப்


போலச் சோர்வுடன் அதுவரை இருந்ததில்லை. முன்னால் இருந்த
குடிலுக்குள் நுழைந்து உடைமைகளை இறக்கி வைத்தோம். உணவு, தண்ணர்,

பேச்சு என எவையும் அப்போது தேவையிருக்கவில்லை.

எங்களின் தோற்றம் இயல்பாகவே அந்தச் சீனர்களுக்கு அச்சத்தை


ஏற்படுத்தி இருக்கும். குறிப்பாகக் குடிலின் உரிமையாளருக்கு. அந்த ஆள்
மறைவாகப் போய் இன்னோர் ஆளை அனுப்பி யாரையோ வரச் சொன்னான்.
வந்தவன் மற்றவர்களை விட நன்றாக உடுத்தியிருந்தான். மட்டு மீ றிய,
தேவையற்ற நட்பு பாராட்டும் விதத்தில் பேசினான். ஆதரவு கேட்டுக்
கெஞ்சும் தொனி அதில் இருந்தது. சரளமான, பிழையில்லாத ரஷ்ய
மொழியில் பழமொழிகள், மேற்கோள்களின் துணையுடன் இருந்தது அவனது
பேச்சு. இறுதியில், தனது குடிலுக்கு வருமாறு வற்புறுத்தினான். தனது பெயர்
லீ டாங் குயி எனவும், தான் லீ சிங் பு என்பாரின் மகன் என்றும் அறிமுகப்
படுத்திக் கொண்ட அவன், தனது குடில்தான் அந்தக் குடியிருப்பிலேயே
சிறந்தது ; நாங்கள் இருந்த குடில் நொடித்துப் போன ஒருவனுடையது என்று
தெரிவித்தான். பிறகு வெளியே போய்க் குடிலின் உரிமையாளனிடம்
காதுக்குள் ஏதோ பேசினான். திரும்பி வந்து சில ஆட்களைத் துணைக்கு
அழைத்து எங்களது உடைமைகளைத் தனது குடிலுக்குக் கொண்டு செல்லப்
பணித்தான். போகும் வழியில் டெர்சு என் தோளைத் தொட்டுச் சொன்னான் :

`இவன் தந்திரமான ஆள். வேறு வகையில் நம்மை ஏமாற்ற


நினைக்கிறான். இன்றிரவு நான் தூங்கப் போவதில்லை.’

என் ஐயமும் அதேதான். அவனது கெஞ்சும் தோரணை எனக்குப்


பிடிக்கவேயில்லை.

இரவில் என்னை எழுப்பி விட்டான் டெர்சு. அரவமில்லாமல் இருக்க


வைத்தான். உதேஹி பழங்குடிகள் வாழும் வாகுங் பூ என்ற ஊரின் வழியாகச்
செல்லாமல் வேறு வழியில் கூட்டிச் செல்லத் தனக்கு அவன் பணம்
தருவதாகச் சொன்னானாம். மேலும், இன்னும் சில வழிகாட்டிகள், சுமைப்
பணியாளர்களை ஏற்பாடு செய்து தருவதாகவும் வாக்களித்திருக்கிறான்.
ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்வது தன் கையில் இல்லை என்பதை
அவனிடம் தெளிவு படுத்தி விட்டதாகச் சொன்னான் டெர்சு. பிறகு, அவன்
டெர்சு உறங்குவதை உறுதிப் படுத்திக் கொண்டு குடிலை விட்டுத் தனது
குதிரையில் ஏறிப் போய் விட்டானாம். உண்மையில் டெர்சு உறங்கவில்லை.

`நாளைக்கு நாம் வாகுங் பூவுக்குப் போகிறோம். அங்கே ஏதோ தவறாக


நடக்கிறது’ என்றான் டெர்சு.

அதே நேரம் குதிரையின் குளம்பொலி கேட்டு இருவரும் தூங்குவது


போலப் பாவனை செய்தோம். குடிலுக்குள் நுழைந்த லீ தன் உடைகளைக்
களைந்து கொண்டு உறங்கப் போனான். அதன் பிறகு நான் அயர்ந்து தூங்கி
விட்டேன். சத்தம் கேட்டு விழித்தபோது சூரியன் தலைக்கு மேல் இருப்பது
தெரிந்தது. உதேஹிகள் பலர் அந்தக் குடிலுக்கு வந்திருப்பதாக எனது வரர்கள்

தெரிவித்தனர். உடையணிந்து கொண்டு வெளியே போனேன். வந்திருந்த
உள்ளூர்வாசிகள் எனக்கு முகமன் கூறினாலும் அவர்களின் கண்களில் ஏதோ
வெறுப்பு இருப்பதைக் கவனித்தேன்.

தேநீர் அருந்திய பிறகு, பயணம் தொடரப் போவதை அறிவித்தேன்.


இன்னும் ஒரு நாள் இருக்கவும், இரவு பன்றியிறைச்சி விருந்தளிப்பதாகவும்
லீ சொன்னான். டெர்சு கண்ணசைத்து மறுக்கச் சொல்லி விட்டான். அவன்
விடவில்லை. தானும் வழிகாட்டியாக வருவதாகக் கூறினான். அதையும்
மறுத்தேன் எங்களை ஏய்க்க அவன் தீட்டிய திட்டங்கள் இவ்வாறாகப்
பொய்த்துப் போயின.

அங்கே சீனர்கள் செல்வச் செழிப்புடனும் தகுந்த ஆயுதங்களுடனும்


இருந்தார்கள். எங்களைப் பார்த்தும் அவர்கள் தம் எதிர்ப்பையும்
பகைமையையும் மறைத்துக் கொள்ள அவர்கள் முயலவில்லை. அவர்களிடம்
சாலைகள், உள்ளூர் மக்கள் தொகை போன்ற எந்த விவரத்தைக் கேட்டாலும்
ஒரே பதிலைத்தான் சொன்னார்கள் : `பு ச்சி டாவோ’ அதாவது `எனக்குத்
தெரியாது.’ இன்னும் சிலரோ `எனக்குத் தெரியும். ஆனால் சொல்ல
மாட்டேன்’ என்னும் பொருள்படச் சொன்னார்கள்.

வாகுங் பூ குடியிருப்பில் 85 உதேஹிகள் வசித்து வந்தனர். அனைவரும்


எங்களை நேரில் சந்திக்க வந்தனர் -நட்பு ரீதியாக அல்லாமல். எவரும் தமது
கூடாரங்களில் தங்கிக் கொள்ள அழைக்கவேயில்லை.

அவர்களின் முதல் கேள்வியே, எதற்காக லீயின் குடிலில் நாங்கள்


தங்கினோம் என்பதுதான். காரணத்தைச் சொல்லி அவர்கள் ஏன் நட்பாக
இருக்க விரும்பவில்லை எனக் கேட்டேன். நீண்ட நாட்களாக என்னை
எதிர்பார்த்து இருந்ததாகவும், திடீரென நான் சீனர்களோடு தங்கி விட்டதால்
விலகிக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

உள்ளபடியே ஒரு மெய்யான சோகம் அந்தக் குடியிருப்பைச்


சூழ்ந்திருக்கிறது என்பதைக் கண்டு கொண்டோம். இமான் பள்ளத்தாக்கில் லீ
ஒரு செல்வாக்கான ஆள் என்பதைக் கூறினர். உள்ளூர்வாசிகளை அவன்
தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதையும், மறுத்தபோது பல முறை
அவன் கொடூரமாகத் தாக்கியிருப்பதையும் விரிவாகச் சொன்னார்கள். பல
குடும்பங்கள் அவனால் சீரழிக்கப் பட்டிருக்கின்றன. பல குழந்தைகளைத்
தூக்கிப் போய் விற்றிருக்கிறான். மெசண்டா, சோமோ எனும் இரு உதேஹி
பழங்குடிகள் கபரோவ்ஸ்க் சென்று கவர்னர் ஜெனரலைப் பார்த்து முறையிடப்
போயிருக்கின்றனர். அவர், தாம் உதவுவதாக உறுதியளித்திருக்கிறார்.
குறிப்பாக நான் கடற்புரத்தில் இருந்து வர இருப்பதையும், பிரச்சினையை
என்னிடம் சொன்னால் நான் எளிதாக அதைத் தீர்த்து வைத்து விடுவேன்
எனவும் சொல்லியிருக்கிறார். அந்தப் பழங்குடிகள் அங்கிருந்து திரும்பித்
தமது இனத்தாரையும் சேர்த்துக் கொண்டு என் வருகைக்காகக் காத்திருந்து
கொண்டிருந்திருந்தார்கள். அவர்கள் முறையிடப் போவதை லீ எப்படியோ
அறிந்து நேராக வந்து அவர்களில் இருவரைக் கனமான தடிகளால்
தாக்கியிருக்கிறான். அதில் ஒருவன் இறந்தே போனான். மற்றவன், முடமாக
வாழ்நாளெல்லாம் திரியும்படி ஆனான். இறந்தவனின் சகோதரன் நீதி கேட்டுப்
போக இருப்பவனை, லீ வழிமறித்து ஆற்றில் மூழ்கடித்து விடத்
திட்டமிட்டிருக்கிறான். ஆனால் உதேஹிகள் தம் இனத்தானைக் காப்பாற்ற
ஆயுதங்களுடன் தயாராகினர். சுற்றி வளைத்தலும் முற்றுகையிடலும்
தொடங்கி விட்டது. உள்ளூர் உதேஹிகள் 15 நாட்கள் வெளியே எங்கும்
போகாமல் வட்டிலேயே
ீ இருந்தனர். வேட்டைக்குச் செல்லாமல்
உணவின்றித் தவித்தனர். சியான்-ஷி-ஹெட்சாவுக்கு நான் வந்துவிட்ட
போதிலும் லீயுடன் தங்கியது அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகி விட்டது.
இமானில் நடந்த நிகழ்வுகள் எதுவும் எனக்குத் தெரியாது என்பதையும் அது
சீனக் குடியிருப்பு என்றாலும், பசியால் தளர்ந்து தடுமாறி வந்த நாங்கள்
முதலில் தென்பட்ட குடிலுக்குச் சென்றுவிட நேர்ந்ததையும் விரிவாக
அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்.

அன்று மாலையில் உதேஹி இனத்தின் மூத்தவர்கள் ஒரு கூடாரத்தில்


கூடினர். கபரோவ்ஸ்க் நகருக்கு நான் திரும்பும் போது இமான் குடியிருப்பின்
நிலைமையை அங்கு எடுத்துக் கூறிப் பழங்குடி மக்களின் பாதுகாப்புக்கு
உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

You might also like