You are on page 1of 4

தமிழ் பேச்சுப்போட்டி

தாய் வாழ்க! தாய் தந்த தமிழ் வாழ்க!


மதிப்பிற்குறிய அவைத்தலைவர் அவர்களே, நீதியை
நிலைநாட்ட வந்திருக்கும் நீதிவழுவா நீதிபதிகளே,
மணிக்காப்பாளர் அவர்களே, அவையில் வீற்றிருக்கும்
பெரியோர்களே, சக மாணவ நண்பர்களே! உங்கள்
அனைவருக்கும் என் முத்தான முத்தமிழ் வணக்கத்தைச்
சமர்பித்துக் கொள்கிறேன்.

எட்டயபுர மண்ணிலே பிறந்த தமிழ்மகன், எழுச்சிமிக்க


கவிதைகளாலே சுதந்திர வேட்கையை ஊட்டிய தியாகி,
எங்கெங்கு காணிணும் சக்தியடா என தமிழ்த்தாயைப்
போற்றியவன், அஞ்சா நெஞ்சமுடையவன், “சாதிகள்
இல்லையடி பாப்பா” என அன்றே சாதிகளை அடியோடு
அழித்தவர், ஆங்கிலயரைக் கண்டு அஞ்சாதவன். பேனா
முனையின் சக்தியை உலகறியச் செய்தவன்,
பத்திரிக்கையாளனாய், கவிஞனாய், சுதந்திர போராட்டத்
தியாகியாய் பன்முகம் கொண்டவன், பாடல்களால் மக்கள்
மனதைக் கொள்ளைக் கொண்டவன், பாரதம் போற்றும்
பாடல்களைப் பாடியவன், என்றெல்லாம் பல சிறப்புகளைக்
கொண்டிருக்கும் மாமனிதன்! ஆம், வையகமே புகழும்
முண்டாசுக்கவிஞன் ‘பாரதி’ அவர்களைப் பற்றி பேசவே யான்
இங்கே விளைத்திருக்கிறேன்.

அவையோர்களே,
சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும்,
இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு 11 டிசம்பர்
அன்று தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள
எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்தார். அவருக்குப் பெற்றோர்
இட்ட பெயர் ‘சுப்பிரமணியன்’. அவரது 5 ஆவது
அகவையிலேயே அவருடைய தாயார் இயற்கையை எய்தினார்.
ஆதலால், அவர் தமது பாட்டியான பாகீரதி அம்மாளிடம்
வளர்ந்தார்.

சிறு வயது முதலே பாரதியாருக்குத் தமிழ் மொழி மீது அதீத


பற்றும் புலமையும் இருந்தது. தமது 7 ஆவது அகவையிலிருந்தே
கவிதையை இயற்றத் தொடங்கினார்; 11 வயதில் கவி புனையும்
ஆற்றலை வெளிப்படுத்தினார். இவருடைய கவிப்புலமையைப்
பாராட்டிய எட்டையப்புர மன்னர், இவருக்கு ‘பாரதி’ என
பட்டத்தை வழங்கி சிறப்பித்தார். அன்று முதல் அவர்
“சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.

சபையோர்களே,
பாரதியார் அவர்கள் பள்ளியில் பயிலும்போதே 1897 ஆம்
ஆண்டு செல்லம்மா என்பவரை மணமுடிந்தார். தமது
தந்தையின் மரணத்திற்குப் பின் பாரதியார் வறுமை நிலையை
அடைந்தார். சிறிது காலம் காசிக்குச் சென்று அங்கு
தங்கியிருந்தார். பிறகு எட்டயபுர மன்னரின் அழைப்பையேற்று
அரசவைக் கவிஞராக பணியாற்றினார்.

அன்புச் சகோதரர்களே,
“மீசை கவிஞன்” என்றும் “முண்டாசு கவிஞன்” என்றும்
தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம்
தமிழ் மொழியின் பால் மிகுந்த பற்றுடையவராகத் திகழ்ந்தார்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது
எங்கும் காணோம்” என்று போற்றிப் பாடியுள்ளார். அதோடு,
இவர்
“ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா”
எனும் குழந்தைகளுக்கான பாடலையும் இயற்றியுள்ளார்.
இப்பாடல் குறித்து பாரதியாரின் மகள் “இப்பாடலை என் தந்தை
எனக்காக நான் செய்ய வேண்டியதெற்கெல்லாம்
அட்டவணையாகப் பாடிக் கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.
மேலும், “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”
என வீரத்தைத் தூண்டும் படைப்பும், “சுட்டும் விழிச் சுடர் தான்
கண்ணம்மா” என பெண்மையின் வருனணையும், “காக்கைச்
சிறகினிலே நந்தலாலா” என்று மனதை வருடும் கவியையும்
இயற்றியுள்ளார் இவர். தொடர்ந்து, பாரதியார் சமஸ்கிருதம்,
வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனிப்
புலமைப் பெற்று விளங்கியுள்ளார். 1912 ஆம் ஆண்டு கீதையைத்
தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’,
‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’, ‘புதிய ஆத்திச்சூடி’ போன்ற
புகழ் பெற்ற காவியங்கள் பாரதியால் எழுதப் பெற்றன.

சபையோர்களே,
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற்கு குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”
சுதந்திரப் போரில் பாரதியாரின் பாடல்கள் உணர்ச்சி
வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை
வீருகொள்ளச் செய்தது. பாரதியார் இந்திய பத்தரிக்கையின்
மூலம் மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டும்
வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
அவரது எழுச்சிக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக்
கண்ட பிரிட்டிஷ் ஆட்சி, இந்திய பத்தரிக்கைக்குத் தடை விதித்து
அவரைக் கைது செய்து சிறையிலும் அடைத்தது.
அதுமட்டுமின்றி, விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய
உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை
ஒருங்கிணைத்தக் காரணத்தால், பாரதி “தேசிய கவியாக”
அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில்
உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட்டு 1906 வரை
பணியாற்றினார்.
அவையினரே,
இத்தோடு, பாரதியாரின் வாழ்வில் எதிர்பாரா
திருப்புமுனை ஏற்பட்டது. 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம்
திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதி கோவிலுக்குச்
சென்றபோது, எதிர்பாராதவிதமாக அக்கோவில் யானையால்
தூக்கியெறியப்பட்டதால் பலத்தக் காயமுற்று
நோய்வாய்ப்பட்டார். பிறகு, செப்டம்பர் 19, 1921 ஆம் ஆண்டு
தமது 39 ஆவது அகவையில் அவர் இறைவனடி சேர்ந்தார்.

இப்படி பேனா முனையைத் தம் எழுத்தாற்றலை


வெளிப்படுத்தும் களமாக மட்டுமல்லாமல், சுதந்திர
ஆயுதமாகவும் பயன்படுத்தியுள்ளார். இன்று இவ்வையகத்தில்
வீரத் தமிழச்சி உருவெடுக்கிறாள் என்றால், அநீதிகள்
நேர்கையில் அதன் நீதிக்காக தைரியமாய் போராடும் மாந்தன்
உருவாகிறான் என்றால், பள்ளிப் பருவத்தில் தன்
எழுத்தாற்றலை வலுபடுத்திக் கொள்ளும் மாணவன்
உருவாகிறான் என்றால் அதற்குப் பின் இருப்பது முண்டாசுக்
கவிஞரே என்று மார்தட்டிச் சொல்வேன். உலகத் தமிழர் நாவில்
பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது என்றால் அது
மிகையாகாது.

முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியாரின் புகழைக் கூறவே


என் மேனி சிலிர்க்கிறது. ஒன்றா, இரண்டா?
பல்லாயிரக்கணக்கான சிறப்புகள் உடைய இவரால் பல
இளஞ்சிற்பிகளை உருவெடுக்கப்பட்டுள்ளன. இவரின்
சிறப்புகள் கூற வேண்டும் என்றால் ஒரு புத்தகமே தொகுத்து
விடலாம். கால தேவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு என்
உரைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து இரு கரங்கள் கூப்பி
நன்றி கூறி விடைப்பெறுகிறேன்.
“தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!”
நன்றி, வணக்கம்.

You might also like