You are on page 1of 5

பாரதியில் எனக்குப் பிடித்தது…

பிறந்து சிறந்த பல மொழிகளில் சிறந்து பிறந்த மொழி நம் தமிழ்மொழி.

இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம். இங்கு நான் பேசவிருக்கும் தலைப்பு
பாரதியில் எனக்குப் பிடித்தது என்பதாகும். பாரதியிடம் பிடித்தவையை பேசுவதற்கு இந்த ஒரு நாள் போதாது.
இருப்பினும் போட்டியின் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு மிகச் சுருக்கமாக எனக்கு அந்த ஞானியிடம்
பிடித்தவற்றை உறையாற்றுகிறேன்.

அவையோறே,

தமிழை நேசிப்பவர்கள் பாரதியை நேசிக்காமல் இருக்க முடியாது. புதுமையை ரசிப்பவர்கள் பாரதியை ரசிக்காமல்
இருக்க முடியாது. மடமையை வசை பாடுபவர்கள் பாரதிக்கு துதி பாடாது இருக்க முடியாது. தன்னை சுற்றி என்ன
நடக்கிறது என்பதை பிரதிபலிக்க விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாரதி இருக்கிறான். இந்த வார்த்தைகளே
என் தமிழாசிரியரின் காலை சுப்ரபாதம் எனலாம். அந்த வகையில் ஓடி விளையாடு பாப்பா எனும் பாடலின் மூலம்
பாரதியாரை எனக்கு அறிமுகம் செய்த என் தமிழாசிரியருக்கு இந்த வகையில் பெரிய நன்றி.

பாரதி வழி வந்த அவையோரே,

பாரதியிடம் மிக பிடித்தது அவரின் தோற்றம். அவருடைய முண்டாசு மற்றும் முறுக்குமீசை அந்த காலத்திலேயே நான்
வித்தியாசமானவன் என்பதை உணர்த்தி காட்டியவர். அதன்பால் கொண்ட ஈர்ப்புதான், பள்ளி மாறுவேட போட்டியில்
அவரைப் போலவே வேடமிட்டு, ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே என்ற வரிகளை முழக்கமிட்டு
முதல் பரிசைத் தட்டிச்சென்றேன். பயத்துடன் போட்டியில் கலந்த எனக்கு மனதில் வீரத்தை விளைத்த அவரின்
தோற்றம் பாரதியில் எனக்குப் பிடித்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கிறது.

பாரதியின் பாடல்களும் கவிதைகளுமாய் பாரதியை தெரிந்து கொண்ட எனக்கு பாரதி என்ற மனிதன் தெரிந்தது
பாரதி என்ற படம் பார்தத
் ப்போது தான். பள்ளிகளில் புத்தகத்தில் வரும் ஆசிரியர் குறிப்பின் மூலம் தெரிந்து கொண்ட
விடயங்கள் அவர் தந்தையார் பெயர் சின்னசாமி என்பதும், அவர் எட்டயபுரத்தில் பிறந்தார் என்றும், சிறிது காலம்
பாண்டிச்சேரியில் வாழ்ந்து வந்தார் என்பதை தவிர நான் வேறொன்றும் அறிந்ததில்லை. ஆனால் அப்படம் பாரதியின்
வாழ்க்கையை ஓரளவுக்கு படம் பிடித்து காட்டியது. அப்படத்தில் ஒளித்த பாடல்கள் என்னை ஏதோ செய்தன. அதன்
விளைவு பாரதியின் பாடல்களையும், கவிதைகளையும் படிக்க ஆரம்பித்தேன். பாரதியின் பெருமையை இந்த கூகுளும்
அறிந்துள்ளது என்னவோ, அவரின் பெயரை தட்டச்சு செய்தவுடன் அவரின் கவிதைகளும் பாடல்களும் என் வாசிப்பு
தாகத்தை போக்கியது எனலாம்.

பாப்பா பாட்டு, நல்லதோர் வீணை, சின்னஞ் சிறு கிளியே, காக்கைச் சிறகினிலே, அச்சமில்லை, பெண் விடுதலை என
பல்வேறு கவிதைகளும் பாடல்களும் எனக்கு அவரை மிகவும் பிடிக்கச் செய்தது. சில பாடல்கள் என் வயதுக்கு
புரியவில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும், அவற்றை படித்து புரிந்துக்கொள்ள என் மனதுகுள்ளே முயற்சி எனும்
விதையை விதைத்த அவரின் பாடல்களே பாரதியிடம் எனக்குப் பிடித்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்கிறது.

அக்கிணிச் சுடர்களே,
பெண்ணியம் பற்றி பேசாத நாடுகள் இல்லை எனலாம். அதற்கு அச்சாணியாக விளங்கியது பாரதியின் பெண்
விடுதலை புரட்சிதான். பெண்களை வீட்டை விட்டு வெளியே வருவதே பெரிய விஷயமாய் இருந்த காலக்கட்டத்தில்
அவர்களின் விடுதலைக்குப் போராடியவர் பாரதிதான். இவரின் போராட்டத்திற்கு தூண்டுகோலாக இருந்தவர் அவரின்
சகோதரி நிவேதிதை. போராடுவதும் மட்டுமின்றி அதற்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்துள்ளார். ஆம், பெண்களை
மூட நம்பிக்கையில் முடக்கி வைத்திருக்கும் காலத்திலே, தாம் எழுதிய “ஸ்வதேச கீதங்கள்’ முதல் பகுதியை தன்
சகோதரி நிவேதையை குருவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு சமர்ப்பணம் செய்தார் பாரதி. எழுத்தில் மட்டும்
பெண்களைக் கொண்டாடாமல் நிஜத்திலும் அவர்களை மதித்து வாழ்ந்து காட்டிய பண்பே எனக்குப் பிடித்த பாரதி
பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது.

மகாகவி சுப்பிரமணிய பாரதியையும், தேசத்தின்மேல் அவர் கொண்டிருந்த உணர்வையும் பிரித்துச் சொல்ல முடியாது.
பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட அவருடைய பாடல்கள் மிகப் பெரும்பான்மையானவற்றுள் தேசபக்தி கலந்து நிறைந்தே
இருக்கிறது.

‘நாட்டு மாந்தர் எல்லாம்,

தம்போல் நரர்கள் என்று கருதார்;

ஆட்டு மந்தையாம் என்றே

உலகில் அரசர் எண்ணிவிட்டார்’

என்பன போன்ற பகுதிகளில் பாஞ்சாலி சபதத்திலும் அவருடைய நாட்டுணர்வு வெளிப்பட்டுள்ளது. இருந்தபோதிலும்,


‘தேசிய இயக்கப் பாடல்கள்’(அல்லது ‘ தேசிய கீதங்கள்) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள அவருடைய
பத்தொன்பது பாடல்கள், நாம் அனைவரும் நினைவில் கொள்ளத் தக்கவை. அன்னிய ஆதிக்கத்தால் அல்லற்படுதல்,
விடுதலை வேட்கை தலைதூக்கி நிற்றல், இந்த நாட்டு விடுதலைக்காக, அருபாடு பட்ட தலைவர்கள் நடத்திய
போராட்டங்கள், போரால் மக்கள் அச்சமுடன் நலிதல், பஞ்சத்தால் வாடுதல் இன்னபிற உணர்வுகளால் நிறைந்து,
நம்மைத் தட்டி எழுப்பும் இவையாவும் பாரதீயங்களாகின என்பதுதான் உண்மை. பாரதியின் தீ போன்ற எழுத்துக்கள்
இக்காலத்திலும் நம் நாட்டு மக்களுக்கும் உகந்தவைதான் என்பதில் எனக்கு ஐயமில்லை.

செந்தமிழ் நாடெனும் போதினிலே- இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே,

மற்றும்

மாரத வீரர் மலிந்த நன்னாடு,

மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு

இப்படி பல வரிகள் ஜாதி, மதம், இனம் பாகுபாடின்றி நாட்டுப் பற்றினை என்னுள் விதைத்ததினால் அவரின்
நாட்டுப்பற்று எனக்குப் பிடித்த பாரதி பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடிக்கிறது.

என் உரையைக் கேட்டுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பற்றாளர்களே,


என் பார்வையில் பாரதி தமிழ்ப்பற்றுக்கொண்ட மாற்றுச்சிந்தனையுடைய தூரநோக்கு ஞானியாக திகழ்கிறார்.

பாரதி ஒரு பன்மொழிப் புலவர். தாய்மொழியாகிய தமிழைத் தவிர, ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், தெலுங்கு,இந்தி
முதலிய மொழிகளை நன்கு கற்றிருந்தார். எனவே, தமக்குத் தெரிந்த பிற மொழிகளுடன் தமிழ் மொழியையும்
ஒப்பிட்டுப் பார்க்கிறார். தம் தாய் மொழியாகிய தமிழ் மொழி இனிய மொழியாகவும் சிறந்த மொழியாகவும் இருப்பதை
எண்ணி மகிழ்கிறார்.

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்’ என்று புகழ்ந்து பாடுகிறார் . மேலும், தாம் அறிந்த புலவர்களிலே தமிழ்ப் புலவர்களாகிய
கம்பனையும், வள்ளுவரையும், இளங்கோவையும் போலச் சிறந்த புலவர்களை வேறு எங்கும் பார்க்கவில்லை என்கிறார்
பாரதியார்.

இன்றைய சூழ்நிலையை அன்றே கணித்துவிட்டதுபோல, தமிழைக் கற்காமல் பிற மொழிகளையே கற்பவர்களையும்,


அவ்வாறு கற்பதையே பெருமையாகக் கருதுவோரையும் பார்த்து,

‘வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ

வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ’ என்று சினந்து கூறியது இன்றும் பொருந்துகிறது.

அதுமட்டுமின்றி, தமிழுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும். தமிழர்களுக்குத் தமிழ் உணர்வு ஊட்ட வேண்டும்.
அப்பொழுதுதான் தமிழ் மொழி வாழும், வளரும். அதற்கு பாரதி சில ஏடல்களை அப்போதே எழுத்துகளாக
பதிவுசெய்துள்ளார். ஆம், தமிழ்வழிக் கல்வி, தெருவெல்லாம் தமிழ் முழக்கம், புதிய படைப்புகள் உருவாக்கம், தரம்
வாய்ந்த இலக்கியங்கள் மொழி பெயர்ப்பு, உலகெல்லாம் தமிழோசை ஒலிக்கட்டும், மொழிவளம் சேர்க்கும் வழிமுறை என
பல மாற்றுச்சிந்தனையை அப்போதே ‘தேசிய கீதங்கள்” நூலில் எழுதியுள்ளார்.

இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில் தமிழின் நிலையை அக்காலத்திலே எழுதியது என்னை பிரமிக்க வைக்கிறது.

அறிவியலில் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில், அறிவியல் கூறுகள், மேலைநாட்டு மொழிகளில்


இருப்பதைப் போலத் தமிழில் இல்லை. அறிவியல் கூறுகளைப் பற்றிச் சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை
என்றும் தமிழ் மொழி மெல்ல மெல்ல அழிந்து விடும் என்றும் ஓர் அறிவிலி உரைத்தான். அந்த அறிவிலியின் சொல்
மெய்யாகி விடுமோ என்று பாரதி அஞ்சுகிறார். எனவே, அந்த அச்சத்தை

மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்…

என்று பாரதியார் குறிப்பிடுகிறார்.

இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? உலகிலுள்ள பல நாடுகளுக்கும் செல்லுங்கள். தமிழை
வளப்படுத்துவதற்காக, நீங்கள் செல்லும் இடங்களில் அல்லது நாடுகளில் உள்ள கலைச் செல்வங்கள் அனைத்தையும்
சேகரியுங்கள். நீங்கள் சேகரித்த அத்தகைய செல்வங்களை எல்லாம் தமிழில் சேர்த்துத் தமிழை வளப்படுத்துங்கள்
என்று

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர் ‘ பாடலில் பாரதி குறிப்பிடுகிறார்.

ஆக, பாரதியின் தமிழ்ப்பற்றும், அவரின் மாற்றுச்சிந்தனையும் தூரநோக்குச்சிந்தனையும் எனக்குப் பிடித்த பாரதி


பட்டியலில் முறையே இடம் பெறுகின்றன.

அவையோரே, நாம் அனைவரும் பாரதியை படிக்க வேண்டும். அவரின் எழுத்துகளில் அன்பு, பண்பு, வீரம், சோகம்,
மனிதநேயம், தமிழ்ப்பற்று, தேசப்பற்று, நேசம், இறையாண்மை, தூய உயரிய எண்ணங்கள் என மனிதன் நல்வாழ்வுக்கு
வேண்டிய அத்துனையும் இருக்கின்றன. பாரதியை படிப்போம், அதன்படி வாழ்வோம். உங்களிடமிருந்த
விடைபெறுவதற்கு முன்,

தேடிச் சோறு நிதம் தின்று – பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி

கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்

மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல

நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ?

(மீசையை முறுக்கிக் கொண்டு, கைகளைக் கட்டிக்கொண்டு சிரித்தவாரே)

நன்றி வணக்கம்.

You might also like