Professional Documents
Culture Documents
Vansirappu
Vansirappu
குறள் 11:
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
மு.வ உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று
உணரத்தக்கதாகும்
கலைஞர் உரை:
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது
குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
மு.வ உரை:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர்
உணவாக இருப்பது மழையாகும்
கலைஞர் உரை:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை
அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது
குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
மு.வ உரை:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று
உயிர்களை வருத்தும்
கலைஞர் உரை:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்
குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்
மு.வ உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு
உழமாட்டார்
குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
மு.வ உரை:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய்
அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்
கலைஞர் உரை:
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின்
நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்
குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது
மு.வ உரை:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும்
காண முடியாது
கலைஞர் உரை:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்
குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
மு.வ உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம்
குன்றிப் போகும்
கலைஞர் உரை:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித
சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச்
சமுதாயம் வாழும்
குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
மு.வ உரை:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது;
நாள் வழிபாடும் நடைபெறாது
குறள் 19:
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
மு.வ உரை:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு
செய்யும் தவமும் இல்லையாகும்.
கலைஞர் உரை:
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு
மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்
குறள் 20:
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு
மு.வ உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும்
நிலைபெறாமல் போகும்
கலைஞர் உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின்
இன்றியமையாமையை உணர்நது் செயல்பட வேண்டும்