You are on page 1of 17

4.

5 புதிய கற்பித்தல் முறைகள்

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு கற்பித்தலில் புதிய முறைகள் தோன்றின. கற்பித்தலைச்


சிறப்பாக்குவதற்கும் வெற்றிகரமாக முடிப்பதற்கும் முக்கியக் காரணியாக இருப்பது பாடங்களை
முறையாகத் திட்டமிடுதலாகும். எவற்றைக் கற்பிப்பது எவ்வாறு கற்பிப்பது என்பதையும் ஆசிரியர்
முன்கூட்டியே தெளிவுபெற்றிருக்கவேண்டும். கால மாற்றத்தால் கற்பித்தல் முறைகளில் பல்வேறு
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு மொழிக்கு எற்றவாறும் நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறும்
மொழிக் கற்பித்தலின் போக்கு மாற்றம்பெற்றுவருகிறது. புதிய கற்பித்தல் முறைகளாக விளையாட்டு
முறை, நடிப்பு முறை, செயல்திட்ட முறை, தனிப்பயிற்சி முறை போன்றவற்றைக் கல்வியாளர்கள்
குறிப்பிடுவர். இவ்வகையில் புதிய கற்பித்தல் முறைகளைப் பற்றியும் அவற்றை நாம் எவ்வாறு
பயன்படுத்தவேண்டும் என்பதையும் பார்ப்போம்.

4.5.1 விளையாட்டு முறை

குழந்தைகளுக்கு, விளையாட்டில் ஆர்வமும், ஈடுபாடும் மிகுதி. அத்தகைய விளையாட்டு மூலம்


கற்பித்தால், குழந்தைகளுக்குக் கற்பதில் ஆர்வம் மிகும். களைப்போ, சோர்வோ தோன்றாமல் கற்றுச்
சிறப்பார்கள். விளையாடுவதால் உடல் வளர்ச்சியடைவதோடு, மகிழ்ச்சியும், மன நிறைவும், கூட்டுறவு
மனப்பான்மையும், ஆளுமைத் திறனும் குழந்தைகளிடம் ஏற்படும். மேலும், தம் எண்ணங்களை
எளிமையாக வெளிப்படுத்துதல், ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுதல், திட்டமிடல், தலைமையேற்றல்,
தன்னுடைய முறை வரும் வரை காத்திருத்தல் முதலிய பண்புகளை விளையாட்டின் வாயிலாக
மாணவர்கள் பெறுகின்றனர். பள்ளியில் வகுப்பறையிலும் வகுப்பறைக்கு வெளியிலும்
விளையாட்டுகளை நடத்தலாம்.

ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! மொழி பயிற்றுவித்தலில், பெரும்பாலும் வகுப்பறை


விளையாட்டுகளே கடைப்பிடிக்கப்படுகின்றன. ‘எந்த விளையாட்டு, எல்லாக் குழந்தைகளும்
ஒன்றாகச் சேர்ப்பதோடு, ஒவ்வொருவரின் தனித்திறன் வளர்ச்சிக்கு உதவுகிறதோ, அதுவே
வகுப்பறைக்கு ஏற்ற விளையாட்டு’ என்பதை நினைவில் கொள்ளவேண்டும். வகுப்பறை
விளையாட்டுகளின்வழி, சொல் விளையாட்டுகளை வடிவமைத்தல், கேட்டல், பேசுதல், படித்தல்,
எழுதுதல், சொற்களஞ்சியம் பெருக்குதல் ஆகிய மொழித் திறன்களை வளர்க்கலாம்.

4.5.1.1 விளையாட்டு முறையைக் கையாளும் படிநிலைகள்


பயிற்றுவிக்கும் பாடப் பொருள், பாட வேளை, சூழல் முதலியவற்றிற்கு ஏற்ப மொழி
விளையாட்டுகளை ஆசிரியர் திட்டமிடல் வேண்டும்.

விளையாடுவதற்குத் தேவையான பொருள்களைத் தொகுத்து வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

ஒவ்வொரு விளையாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட திறன்கள் வெளிப்பட்டாலும் மொழித்


திறனுக்கே முன்னுரிமை அளித்தல் வேண்டும்.

விளையாட்டிற்கு ஏற்பவும் விளையாடுவோரின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் விளையாடும் முறை,


விளையாட்டிலிருந்து வெளியேறுதல், விளையாட்டின் பயன், குழுத்தலைவர், மதிப்பெண்
வழங்குபவர், நடுவர் என விதிமுறைகளை வகுத்துக்கொள்ளுதல் வேண்டும்.

சிந்திப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும்.

சிக்கல்கள் ஏற்படும்பொழுது மட்டும் ஆசிரியர் நடுவராக இருந்து வழிகாட்டுதல் வேண்டும்.

விளையாடும் மாணவர்கள் தவறு செய்யும்பொழுது, அவர் வெளியேறும்போது, தவற்றுக்கான


காரணத்தைக் கூறி வெற்றி பெறுவதற்கு வழிகாட்டுபவராகவும் ஊக்கமூட்டக் கூடியவராகவும்
ஆசிரியர் விளங்க வேண்டும்.

அடுத்து, தமிழ் கற்பித்தலுக்கான சில விளையாட்டு முறைகளைக் காண்போம்.

(அ)

குறிப்பிட்ட எழுத்துகளை வட்டமிட்டுக் காட்டுதல்.

(ஆ)
விடுபட்ட எழுத்தை நிரப்பச் செய்தல்.

(இ)

படங்களையும் பெயர்களையும் பொருத்தச் செய்தல்.

(ஈ)

பொருள்களுக்கான பெயர் எழுதச் செய்தல்.

(உ)

பொருத்துதல். [உறுப்புகள்-அணிகலன்கள்; உறுப்புகள்-பயன்கள் போல்வன]

(ஊ)

மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி அமைத்தல்.

(எ)

எழுத்துக் கூட்டல்.

(ஏ)

ஓர் எழுத்தைச் சேர்த்து அல்லது நீக்கிப் புதிய சொல் உருவாக்குதல்.

(ஐ)

இரட்டைக் கொம்பு சேர்த்துச் சொல்லாக்குதல். [சாறு-சோறு; தாள்-தோள்]


இவற்றிற்கு அடுத்த நிலையில்,

(அ)

சொற்களை முறைமாற்றிக் கொடுத்து வாக்கியமாக்குதல்.

(ஆ)

வினாக்களுக்கு விடை கூறுதல் விளையாட்டு.

(இ)

எதிர்ச்சொல் கூறுதல்.

(ஈ)

ஒரே ஒலியில் அமைந்த சொற்களைக் கூறச் செய்தல்.

(உ)

கதை அமைத்தல்.

(ஊ)

பொருந்தாதவற்றை அல்லது அந்நியனைக் கண்டுபிடித்தல்.

(எ)
படம் காட்டித் தலைப்புக் கூற வைத்தல்.

(ஏ)

ஆத்தி சூடி அல்லது திருக்குறள் கூறச்செய்தல்.

(ஐ)

பாதி சொல்வேன்; மீதி கூறு! (இவ்விளையாட்டில் பாதிக் கதையை ஆசிரியர் கூறி மீதியைக் கூற
வைத்தல்)

(ஒ)

இரு பொருள் தரும் சொற்களைக் கூறுதல்

(ஓ)

விடுகதைகள் கூறுதல்

மாணவர்களின் தரம், வாழ்க்கைச் சூழல், ஆசிரியர் தம் தனித்திறன் முதலானவற்றிற்கு ஏற்ப மொழி
விளையாட்டுகளைப் பெருக்கவும் சுருக்கவும் செய்யலாம்.

4.5.1.2 விளையாட்டு முறையின் நிறைகள்

குழந்தைகள் மகிழ்வுடன் கற்பார்கள்.

கற்றல் விளைவுகளை உடனுக்குடன் அறிய இயலும்.


மாணவர்களிடையே ஒற்றுமையும், உதவும் பண்பும் ஓங்கும்.

கற்றல் விளையாட்டை முடித்ததும் வெற்றிப் பெருமிதம் ஏற்படும்.

தானே ஒன்றைச் செய்யும்பொழுது நினைவில் நிலை நிறுத்தப்படுகிறது.

முயன்று தவறிக் கற்பதால் மீண்டும் தவறு செய்ய வாய்ப்பு ஏற்படாது.

ஆசிரியர் திட்டமிடுவதால், பேசுதல் குறைகிறது.

குழந்தை மையக் கற்றலுக்கு இம்முறை உதவுகிறது.

கற்கிறோம் என்ற எண்ணம் தோன்றாமல் எளிதாகக் கற்பிக்க, விளையாட்டு முறை உதவுகிறது.

4.5.1.3 விளையாட்டு முறையின் குறைகள்

மொழித் திறன்கள் அனைத்தையும் விளையாட்டு முறையில் கற்க இயலாது.

ஒரே விளையாட்டு முறையைப் பின்பற்றும்போது குழந்தைகளிடம் கூச்சல், குழப்பம் ஏற்படும்.

பாடப்பொருள், விளையாட்டு முறை ஆகிய இரண்டினையும் ஒவ்வொரு நாளும் திட்டமிடுவதும்


செயற்படுத்துவதும் ஆசிரியர்க்குப் பணிச் சுமையை ஏற்படுத்தும்.

நாள் முழுவதும் தொடர்ந்து விளையாடாமல் கற்பதும் - கற்பிப்பதும் சோர்வைத் தரும்.

விளையாட்டு முறையில் பிற வகுப்புகளின் கவனம் சிதறும்.


ஆதலால் இவற்றை மனத்தில் கொண்டு அதற்கு ஏற்ப விளையாட்டு முறையைப் பின்பற்ற
வேண்டும்.

4.5.2 நடிப்பு முறை

நடிப்பு முறை விளையாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டது; மனத்தின் ஆற்றல்களில்


முக்கியமானதாகிய கற்பனையின் விளைவாக நடைபெறுவது. கற்பனை ஊற்றுப் பெருக்கு
இல்லையென்றால் எந்தக் கலையும் வளர்ச்சிபெற இயலாது. கற்பனை சக்தியினால்தான் குழந்தைகள்
அரிதான செயல்களை எளிதாக நிறைவேற்றுகின்றனர்; ஊனக் கண்ணால் காண
முடியாதனவற்றையெல்லாம் மனக் கண்ணால் காண்கின்றனர்; முன்னர்க் கண்டவற்றைக் திரும்பவும்
நினைத்துப் பார்க்கின்றனர்.

குழந்தைகளின் விளையாட்டு உலகில் உண்மைக்கும் பாவனைக்கும் அதிக வேற்றுமை இல்லை.


பாவனையின் ஆற்றல் எல்லையற்றது. குழந்தைகளின் பாவனை உலகில், ஒரு சிறு கம்பு
மோட்டாராகும்; மரக்கட்டைகள் வண்டியாகும். குழந்தைகள் பெற்றோராகவும் ஆசிரியராகவும்
அரசனாகவும் ஆண்டியாகவும் கடைக்காரனாகவும் பால்காரனாகவும் வண்டி ஓட்டியாகவும்
நடிப்பதில் பேரின்பம் அடைகின்றனர். சாதாரணமாக வீடுகளில் ஆண் குழந்தைகள் இவ்வாறு
நடிப்பதையும் பெண் குழந்தைகள் சிறு சோறு சமைத்தல், சிற்றில் புனைதல், பொம்மைத் திருமணம்
போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் காண்கின்றோம்.

4.5.2.1 ஆசிரியருக்குச் சில குறிப்புகள்

குழந்தைகளிடம் காணப்படும் இந்த நடிப்பு உணர்ச்சியைப் பயனுள்ள வழிகளில் திருப்புவதுதான்


ஆசிரியரின் கடமை; அதில்தான் அவர் திறமை நன்கு புலனாகும். தமிழ் கற்பிப்பதில் வாய்மொழிப்
பயிற்சி, எழுத்து ஆகிய இரண்டிற்கும் வகுப்பில் நடிப்பதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
குழந்தைகளிடம் ஒரு திருத்தமான நாடகத்தை எதிர்பார்க்க வேண்டியதில்லை; எதிர்பார்த்தாலும்
தவறு. நாடகத்தை உருவாக்கல், நாடகத்திற்கு வேண்டிய பாட்டுகள் பேச்சுகள் தயாரித்தல் நாடகப்
பாத்திரங்களைத் தீர்மானித்தல், பாத்திரங்களுக்கு வேண்டிய உடைகள் தயாரித்தல், ஒத்திகை
வைத்தல் ஆகிய செயல்களால்தான் இம்முறையின் முழுப் பயனையும் பெறமுடியும்.
பொதுமக்களுக்கு நாடகத்தை நடித்துக்காட்ட வேண்டும் என்று நோக்கி இருந்தாலும், மேற்கண்ட
செயல்களின் மூலம்தான் என்பதை ஆசிரியர்கள் என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சிறு குழந்தைகளைக் கொண்டு அடிக்கடி வளர்ந்தவர்கள் முன்னால் நடிக்கச் செய்வதும்
சிறந்ததன்று. வேண்டுமானால் தம் வயதுள்ள பார்வையாளர்கள் முன்னர் நடிக்க ஏற்பாடுகள்
செய்யலாம். ‘வளர்ந்தவர்களுக்கு முன் நடிக்கப் போகிறோம்’ என்ற நினைவையே குழந்தைகளிடம்
எழச் செய்வது தவறு.

சிறு குழந்தைகள் நடிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் கதைகள், மிகவும் எளிமையாக இருக்க


வேண்டும்; விரிவான அரங்கு அமைப்பில் நடிக்கக் கூடியவையாகத்தான் இருத்தல் வேண்டும்
என்பதில்லை. குழந்தைகள் தாமாக விளையாடுவதைக் கூர்ந்து கவனித்தால் எத்தகைய கதைகள்
அவர்கள் நடிப்பதற்கு உரியது என்பது தெரியவரும். ‘ஓ நாயும் ஆட்டுக் குட்டியும்’ ‘சிங்கமும்
காக்கையும்’ ‘குரங்கும் பூனைகளும்’ என்பன போன்ற தகுதியான நிகழ்ச்சிகளைத் தரும், ஈசாப்
கதைகளையும் பஞ்சதந்திரக் கதைகளையும் சிறந்த முறையில் சிறு குழந்தைகளின் நடிப்பிற்குப்
பயன்படுத்தலாம்.

முக்கியமாக, ஆசிரியர் கவனிக்க வேண்டியது இது; குழந்தைகளுக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைகள்


அவர்கள் பட்டறிவை ஒட்டியதாக இருக்க வேண்டும்; கதையில் வரும் நிகழ்ச்சிகள் அவர்கள்
நன்கு தெரிந்துகொள்ளும்படி இருக்க வேண்டும். மேலும், கதையில் வரும் நிகழ்ச்சிகள்
தெளிவாகவும் குறிக்கோளை உடையனவாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளின் அனுபவத்தை
மீறிய கதைகளைக் குழந்தைகளைக் கொண்டு நடிக்கச் செய்வதில் பயன் இல்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட கதையை நாடகமாக்குவதில் குழந்தைகளின் பங்கு அதிகம் இருத்தல்


வேண்டும். குழந்தைகளின் விருப்பத்திற்கு இடம்கொடுத்தல் வேண்டும். ஆசிரியரின் முன்கூட்டிய
திட்டப்படி கதையை நாடகமாக்குவதால் பயன் ஒன்றும் இருக்காது. இவ்வாறு குழந்தைகளைக்
கொண்டு தீர்மானித்தலில் வழி விலகிப் போகக்கூடும் என்று ஆசிரியர் கருதினால் தம்முடைய
யோசனைகளைக் கூறி, அவர்களைச் சரியான முறையில் கொண்டுசெலுத்தலாம். பெரும்பாலும் சிறு
குழந்தைகள், தம் தவறுகளை எளிதாகக் கண்டுகொள்வர்.

நாடகம் உருவாகிக் கொண்டிருக்கும்பொழுது நேரிடும் உச்சரிப்புப் பிழை, எழுத்துப் பிழை,


சொற்றொடர் அமைப்பில் ஏற்படும் பிழைகள் ஆகியவற்றில் ஆசிரியர் சில சமயம் தலையிட்டுத்
திருத்தலாம். நாடகம் உருவாகும்பொழுது இதைச் செய்வதும் தவறு; ஒத்திகையின்பொழுது இத்
தவறுகளைத் திருத்தலாம். பெரும்பாலும் குழந்தைகளே நாடகத்தைத் தயாரித்தல் நன்று. ஆனால்,
சில சமயங்களில் குழந்தைகளின் நிலைக்கும், பட்டறிவிற்கும் ஏற்றபடி எழுதப்பெற்றுள்ள ஒருசில
நாடகங்களையும் நடிக்கச்செய்யலாம். பெரும்பாலும் அவற்றைப் புத்தகங்களிலிருந்து
தேர்ந்தெடுப்பதைவிட ஆசிரியரே எழுதுதல் நன்று.
ஆசிரியர் முன் ஆயத்தமில்லாமலேயே ஒரு கதையை நடிக்கும் வாய்ப்பினை வகுப்பில்
வழங்கலாம். ஒரு கதையை ஒரு முறை வகுப்பில் படித்து உணர்ந்தபின் வகுப்பிலேயே செய்யலாம்.
தேவையான பாத்திரங்களை நிர்ணயித்தல், யார் யார் எந்தெந்தப் பாத்திரமாக இருந்து நடிக்க
வேண்டும் என்பதைத் தீர்மானித்தல் ஆகியவை முடிவுற்றதும் குழந்தைகள் நடித்தலில் இறங்குவர்.
அவரவர் இடம் வந்தவுடன் வழக்கம்போல் உரையாடல்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்காமல்
இடத்திற்கு ஏற்றவாறு எப்படிப் பேச வேண்டும் என்பதை அவர்களே தங்களால் இயன்றவரை
கற்பனையில் உறுதி செய்துகொண்டு பேச வேண்டும்.

உரையாடல்கள் முதலில் ஆசிரியர் எதிர்பார்க்கும் நிலைக்கு அமையாவிட்டாலும், பழகப்பழக இதில்


நல்ல பயனைக் காணலாம். இதில் கற்பனை வளர்ச்சிக்கு மிகுந்த இடம் இருக்கின்றது. ஆசிரியர்கள்
இம் முறையைக் கையாளுவதற்கு நிறைந்த பட்டறிவு உடையவர்களாகவும் இம்முறையில்
தேர்ந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய நடிப்பை இரண்டாம் வகுப்பிலிருந்தே
தொடங்கலாம். அதிகமான பேச்சுக்கு இடமில்லாத மிகச் சிறிய கதையில் தொடங்கினால்
நாளடைவில் நல்ல பயனை அடையலாம். ஒரு திட்டப்படி பயிற்சி கொடுத்தால், குழந்தைகள்
ஐந்தாவது வகுப்பினை அடையும்பொழுது, இதில் நல்ல திறனை அடைவார்கள். இம் முறையில்
வகுப்பிலுள்ள ஒரு குழு நடிப்பில் இறங்கும்பொழுது, மீதியுள்ள குழந்தைகள் அதை நன்கு
கவனித்துக் குறைகளைக் களைந்து நல்ல திருத்தங்களைத் தரலாம். சிறிது நேரம் பயிற்சி பெற்றதும்,
நாடகம் நல்ல முறையில் அமையும். இம் முறையில் உருவாகும் நாடகங்களின் உரையாடல்கள்
இயற்கையாக இருக்கும். குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தாம்
மேற்கொண்ட பாத்திரங்களுக்கு ஏற்றவாறு குழந்தைகள் சொற்களையும் நடிப்பினையும்
கையாளுவர்.

குழந்தைகள் தத்தம் பகுதிகளை மனப்பாடம் செய்த பின் நடிக்கும் நடிப்பிலும் பயன் உண்டு. இதில்
நினைவாற்றல் வளரும். இதையும் வகுப்பிலேயே நடிக்கலாம். வகுப்பில் நாடக உடை,
திரைச்சீலைகள், ஒப்பனைகள், காட்சிகள் முதலியன வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லா
நடிப்புகளிலும் உரையாடல்களில் எடுத்தல், படுத்தல், நலிதல்களைக் கொண்ட ஏற்றத்தாழ்வுகளை
உடைய குரல் அமையவேண்டும். செம்மையான உச்சரிப்பு, தெளிவான ஒலிப்பு முதலியன
முக்கியமான கூறுகள். நடிப்பு வலிந்தும் நலிந்தும் போகாமல் இயல்பாக உயிருள்ளதாக இருக்க
வேண்டும். உணர்ச்சிகளும் மன எழுச்சிகளும் உள்ளச்சுவைகளும், மெய்ப்பாடுகளும் பொங்கி
நிற்கவேண்டும். இசைக்கு அளவான வாய்ப்புகளைத் தரலாம்; அளவுக்கு மீறக்கூடாது. பாடத்
தெரிந்தவர்தான் நடிப்பில் கலந்து கொள்ளலாம் என்ற எண்ணமே குழந்தைகளிடம் வளரவிடக்
கூடாது. அனைவருமே நடிக்க வேண்டும் என்ற முறை வேண்டும். பள்ளி ஆண்டுவிழா, இலக்கியக்
கழகவிழா போன்றவற்றில் மட்டிலும் கதை நிகழ்ந்த காலத்திற்கு ஏற்ற திரைச்சீலைகள் ஒப்பனைகள்
முதலியவற்றை மேற்கொள்ளலாம்.

4.5.2.2 நடிப்புமுறையால் விளையும் நிறைகள்


இயல்பாகக் குழந்தைகளிடம் காணப்படும் அச்சம், கூச்சம், நடுக்கம், படபடப்பு, சொல்லின் கடைசி
எழுத்தையும் சொற்றெடரின் கடைசிச் சொல்லையும் விழுங்கல் ஆகிய குறைகளைப் போக்க நல்ல
வாய்ப்புகள் ஏற்படுகின்றன. பேச்சு, உரையாடல் முதலியவை வாய்மொழிப் பயிற்சிக்கு
வாய்ப்பினை வழங்குகின்றன. விளையாட்டு முறையில் கற்பதால் கற்றலில் பற்றை
ஏற்படுத்துவதுடன் கற்ற பொருள்களும் பசுமரத்தாணிபோல் மனத்தில் நன்கு பதியும். இம் முறை
பொறிகளுக்கும் கற்பனைக்கும் நினைவாற்றலுக்கும் உணர்ச்சிக்கும் நல்ல முறையீடு செய்கின்றது
என்று சொல்லலாம். மன எழுச்சிக்குரிய மெய்ப்பாடுகள் நன்கு வெளிப்பட வாய்ப்பினை
அளிக்கின்றது.

வாழ்க்கையின் உண்மைகளையும் முறைகளையும் பட்டறிவால் அறிந்துகொள்ள முடிகிறது. நல்லதன்


நலனையும் தீயதன் தீமையையும் நேரடியாகக் காண்பதால் குழந்தைகளின் ஒழுக்கம் நன்கு
மேம்பாடு அடையும். மாணவர்களின் மனப்பான்மையை விரிவடையச் செய்து அவர்களிடம்
படைப்பாற்றலை நன்கு வளர்க்கின்றது. சுருங்கக் கூறினால் நடிப்பு முறை ‘முத்தமிழின்’
உண்மையை, ஒரே சமயத்தில் நன்கு அறியத் துணை செய்கிறது.

4.5.3 செயல்திட்ட முறை

ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! இங்கு நீங்கள் காணவிருப்பது, கற்பித்தல் முறைகளுள் ஒன்றான


செயல்திட்ட முறை பற்றியாகும்.

மாணவர்க்குக் கற்பிக்கவேண்டிய பாடப் பகுதிகளைத் தனித்தனியாகத் தொடர்பற்ற முறையில்


கற்பிப்பதற்குப் பதிலாக, ஒரு செயல்திட்டத்தை மையமாகக் கொண்டு, பல பாடங்களையும்
இணைத்துக் கற்பித்தலே செயல்திட்ட முறையாகும்.

இதன் சிறப்புகளாவன,

செயல்திட்ட முறை என்பது, நேரடி அனுபவ முறைகளுள் மிகவும் பயனுடையது எனக்


கூறப்படுகிறது.
தம் குறிக்கோள் நிறைவேறும் என்பதை அறியும் மாணவர்களுக்குச் செயலில் கவர்ச்சி
ஏற்படுகின்றது; முழு ஆர்வத்துடன் வேலையில் ஈடுபட வாய்ப்பு அளிக்கின்றது.

கற்றலில் சிறந்த உளவியல் கொள்கையான ‘செய்து கற்றல்’ என்னும் கொள்கையை இம்முறை


பெரிதும் பின்பற்றுகிறது.

மாணவர்கள், தாமே திட்டமிட்டுத் தங்களால் முடிந்தவரை செயலைச் செய்துமுடிக்கிறார்கள்.

பள்ளி வாழ்க்கை, கற்பனை விளையாட்டாகவும் போலிச் செயலாகவும் இல்லாமல், வெளியுலக


வாழ்க்கையில் நிகழக்கூடிய செயல்களை ஒத்தனவாக அமைய இந்தச் செயல்திட்ட முறை பெரிதும்
உதவுகின்றது.

4.5.3.1 செயல்திட்ட முறையின் படிநிலைகள்

செயலைத் தேர்ந்தெடுத்தல்; திட்டமிடுதல்; நிறைவேற்றுதல்; மதிப்பிடுதல் என்னும் நான்கு


படிநிலைகளைச் செயல்திட்ட முறை கொண்டுள்ளது. இத்தகைய படிநிலைகளின் விளக்கங்களைப்
பின்வருமாறு காண்போம்.

4.5.3.1.1 செயலைத் தேர்ந்தெடுத்தல்

அ)

செயல்திட்டத்திற்குரிய செயலை மாணவர்களையே தேர்ந்தெடுக்கச் செய்தல் வேண்டும்.

(ஆ)

ஏற்ற செயலைத் தேர்ந்தெடுக்க உரிய பட்டறிவு இல்லாதவர்களாக மாணவர்கள் இருப்பராயின்


ஆசிரியர் வழிகாட்டலாம். ஆனால், மாணவர்களே தேர்ந்தெடுத்ததுபோல் உணரும்படி
ஆசிரியர் பணியாற்ற வேண்டும்.
(இ)

தேர்ந்தெடுக்கப்படும் செயல்திட்டம் மாணவர்களுடைய அறிவு, திறன் ஆகியவற்றுக்கு ஏற்றதாக


அமைதல் வேண்டும்.

(ஈ)

மாணாக்கரால் தேர்ந்தெடுக்கப்படாமல், ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சுமத்தப்பட்டதாயின்


செயல்திட்டத்தில் மாணவர்கள் விருப்பத்தோடு ஈடுபடும் வாய்ப்பில்லாமல் போகும்.

4.5.3.1.2 திட்டமிடுதல்

அ)

செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் திட்டமிடுதல், நிறைவேற்றும் வழிகளை ஆராய்தல்


ஆகியவற்றில் மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல் வேண்டும். மாணவர்களையே திட்டமிடச்
செய்தல் பெரும் பயனளிக்கும்.

(ஆ)

செயலைத் திட்டமிடத் தேவையான அறிவு பெற நூல் நிலையம் சென்று பன்னூலறிவு பெறச்
செய்தல் வேண்டும். எந்தெந்த நூல்களில் எந்தெந்தப் பகுதிகளைப் படிக்கலாம் என்பதற்கு
ஆசிரியர் வழிகாட்டலாம்.

(இ)

திட்டமிடலில் மாணவர்கள் சிறுசிறு தவறுகள் செய்தால் அவற்றின் விளைவுகளை, அவர்களே


அனுபவித்துத் திருத்திக்கொள்ளுமாறு விட்டுவிடலாம். பெருந்தவறுகள் நிகழும்படி
செயலாற்றுபவர்களாயின் ஆசிரியர் குறுக்கிட்டு வழிகாட்ட வேண்டும்.

(ஈ)
திட்டமிட்டதை, வரன் முறையாக மாணவர்கள் எழுதிவைக்கச் செய்தல் நலம் பயக்கும்.

4.5.3.1.3 நிறைவேற்றுதல்

அ)

செயல்திட்ட முறையில், செயலை நிறைவேற்றுதலாகிய நிலையே மிகவும் சுவையு உடையதாகும்.


இடையில் ஏற்படும் இடையூறுகளையும் சிக்கல்களையும் நீக்கிச் செயலை நிறைவேற்றுவதில்
மாணவர்கள் பெருவிருப்பத்துடன் ஈடுபடுவர்.

(ஆ)

மாணவர்கள் ஆர்வமிகுதியால், தவறான வழியில் சென்றுவிடாமல் ஆசிரியர் கண்காணிக்க


வேண்டும்.

(இ)

ஒவ்வொரு பகுதி நிறைவேறும்பொழுதும் ஆசிரியரின் மேற்பார்வையும் வழிகாட்டுதலும் அவசியம்.


செயலைச் சரிபார்க்கத் தூண்டுதல் வேண்டும்.

(ஈ)

இறுதிக் கட்டமான இந்நிலையில், சிக்கல் ஏதேனும் ஏற்பட்டு மாணவர்கள் திணறிச் செயலைக்


கைவிட்டுவிடாமல் ஆசிரியர் தகுந்த வழிகாட்டுதலைச் செய்ய வேண்டும்.

4.5.3.1.4 மதிப்பிடுதல்

அ)
செயல்திட்டத்தினை நிறைவேற்றிய பின்னர், அதன் நிறை, குறைகளை மாணவர்களே ஆராய்தல்
வேண்டும்.

(ஆ)

செய்யப்படாமல் விடுபட்டுப் போனவை, செய்யாமல் தவிர்க்க வேண்டியவை எவையெவை என


மாணவர்களையே ஆராய்ந்து கூறச் செய்தல் வேண்டும்.

(இ)

செயல்திட்டத்தைச் சிறப்புடையதாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், மாறுதல்கள் பற்றிக்


குறித்துவைத்துக்கொள்ள ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வேண்டும்.

4.5.3.2 செயல்திட்ட முறையின் நிறைகள்

அ)

பொறுப்புணர்ச்சி, திட்டமிட்டு நிறைவேற்றுதல், மதிப்பிடுதல், கூட்டுறவு மனப்பான்மை முதலான


நற்பண்புகளை மாணவர்களிடம் வளர்க்கின்றது.

(ஆ)

‘உடல் உழைப்புத் தாழ்வானது’ என்னும் கருத்து நீங்கி, உழைப்பின் உயர்வை மாணவர்கள் உணர
இத்திட்டம் வழிவகுக்கிறது.

(இ)

நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ளும் பயிற்சி பெறவும்


தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் செயல்திட்ட முறை உதவுகிறது.

(ஈ)
மாணவர்களிடம் படைப்பாற்றல் திறன் வளரவும் புதியன செய்யும் திறன் ஊக்குவிக்கப்படவும்
செயல்திட்ட முறை உதவுகிறது.

4.5.3.3 செயல்திட்ட முறையின் குறைகள்

அ)

செயல்திட்ட முறையில், பாடத்திட்டத்தி உள்ள பாடப் பகுதிகளை ஓர் ஒழுங்குக்கு உட்பட்டு


மாணவர்கள் அறிந்துகொள்ள முடிவதில்லை.

(ஆ)

எல்லாப் பாடங்களையும் இம் முறையில் கற்பிக்கும் வாய்ப்புக் குறைவு.

(இ)

செயல்திட்ட முறையைச் செம்மையாகச் செயல்படுத்த பொருட்செலவு அதிகமாகும்.

(ஈ)

குறித்த செயல்திட்ட வேலை, குறித்த காலத்திற்குள் முடியும் என்று சொல்ல முடியாது; காலம்
அதிகமாகும்.

(உ)

வகுப்பறைக்கு வெளியில் செயல்திட்ட முறையில் செயல்படுவதால் மாணவர்களிடையே


கட்டுப்பாட்டு உணர்வைக் கொண்டுவருவதில் ஆசிரியர் சிரமப்படுவர். ஆசிரியர் திறம்படச்
செயல்படாவிட்டால், மாணவர்கள் ஓரிருவர் செயல்பட, மாணவர்கள் பலர் ஒன்றும் செய்யாமல்
இருக்கும் சூழலும் உருவாகிவிடும்.
செயல்திட்ட முறையில் சில குறைகள் இருந்தாலும் சிறப்பான நன்மைகள் இருப்பதால், பத்து
வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, செயல்திட்ட முறையைப் பயன்படுத்துவது நலம்
உண்டாக்கும்.

4.5.4 தனிப் பயிற்சிமுறை

ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! அடுத்து, நீங்கள் காணவிருப்பது தனிப் பயிற்சி முறை (அல்லது)
தனிப்படிப்பு முறை. வகுப்பிற்கு 60 மாணவர்கள் இருப்பின் அவர்களுள் பத்துப்பேரே சிறந்தவராக
இருக்கலாம்; இருபதுபேர் வகுப்பிற்கு ஏற்றவராக இருக்கலாம். பிறர் பின்தங்கியவராகவே
இப்பொழுது இருப்பதால் அவர்களிடத்திலே பெருங்கருத்துச் செலுத்துவது ஆசிரியர்
கடமையாகின்றது. பழங்காலத்திலே ஒருசில நல்ல மாணக்கர்களைக் கொண்டு கல்வி புகட்டிய
பேராசிரியர்களுக்கு எளிதாகியிருந்த இத் தனிப் பயிற்சி முறை இக்காலத்தில் எளிதானது இல்லை.

இருப்பினும் இம் முறைப்படி அறிவுநிலை உணர்வுநிலை சூழ்நிலைக்களுக்கு ஏற்ப மாணவர்களைப்


பல குழுக்களாகப் பிரித்து, ஒரு பாடத்திலுள்ள செய்திகட்குப் பல்வேறு குழுக்களுக்கு ஏற்றவாறு
வினாக்களையும் பிற பாடக் குறிப்பினையும் ஆசிரியர் எழுதி அந்தந்தக் குழுவினரிடம்
ஒப்படைத்து, அந்தப் பாடக் கூறுகளைப் படித்து முடிக்க வேண்டும் என்று கூறிவிடுவார். அதன்பின்
அந்தந்தக் குழுவினர் அவற்றை, ஒருவர்க்கொருவர் கலந்தும், நூலகத்தை அடுத்தும், பிறரிடத்தில்
விசாரித்தும் செய்திகளைத் தெரிந்து, வினாக்களுக்கு விடைகளைத் தாமே எழுதி ஆசிரியரிடம்
கொடுக்க வேண்டும். ஆசிரியர் குறிப்புத் தந்த நாளையும் மாணவர்கள் திரும்பக் கொடுத்த
நாளையும் ஆசிரியரும் மாணாக்கரும் தத்தம் குறிப்பேடுகளிலே குறித்து வைத்துக்கொள்வர்.

மாணவர்கள் குழுக்கள், இந்த வேலையைப் பள்ளியில் குறிப்பிட்டு ஒதுக்கப்பட்ட வேளைகளிலும்,


வீட்டிலுமாகச் செய்து முடிப்பர். ஆனால், குழுவிலுள்ள பிற மாணவர்கள் குறித்ததைப் பார்த்து
எழுதக் கூடாது என்பது விதி.

மாணவர்கள், ஆசிரியர் தந்துள்ள குறிப்பில் மாணவர்கள் படிக்கவும் எழுதவும் வேண்டிய மொழிப்


பயிற்சிப் பகுதியும், வாய்மொழிப் பயிற்சிப் பகுதியும், நூலகங்களுக்குச் சென்று குறிப்பெடுக்கும்
பயிற்சிப் பகுதியும் இடம்பெறும். இக் குறிப்பில், பாடத்தைப் படித்தற்குரிய துணைக் குறிப்புகளும்
சில விளக்கங்களும் இருக்கும்.
இடையிடையே மாணவர்கள் தம் அறிவு வயது சூழ்நிலைகளுக்கேற்ப ஆசிரியர் நேரில் சென்று
அவர்களுக்கு உதவுகின்றனர். தாமாகவே முயன்று பணியாற்றி முடித்த உணர்வு மாணவர்கள்களுக்கு
ஏற்படுகின்றது. ஆதலால், கல்வியைக் கற்பதில் ஊக்கமும் ஆக்கமும் பெறுகின்றனர்.

4.5.5 மேற்பார்வைப் படிப்பு முறை

ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! மேற்பார்வைப் படிப்பு முறை என்பது படிப்பில் பின்தங்கிய


மாணவர்கள்களுக்கு ஏற்படுத்தப்பட்ட முறையாகும். சில நேரங்களில் படிப்பில் ஆர்வமுள்ள
மாணவர்கள்களுக்கும் வீட்டுச் சூழ்நிலையால் நன்கு படிக்க முடியாதவாறு ஏற்பட்டுவிடும்.
போக்குவரத்து மிக்க நெடுஞ்சாலையாகவோ, தொழிற்சாலைப் பட்டரைகளோ, கடை வீதிகளோ,
பொதுத் தண்ணீர்க் குழாயோ அமைந்த சூழ்நிலையிருப்பின் அதன் பக்கத்திலே குடியிருக்கும்
மாணவர்கள்கள் அமதியாகப் படிக்க இயலாது. வீட்டிலே குழந்தைகளும் உறவினர்களும்
மிகுந்திருப்பினும் வீடு சிறியதாயிருப்பினும் பல சிறு வீடுகள் ஒரே வளைவுக்குள் இருப்பினும்
படிப்பதற்கு அமைதி கிடைக்காது. மேலும், வீட்டிற்குச் சென்றவுடன், வீட்டு வேலைகளில் ஈடுபட
வேண்டியிருப்பினும் படிக்க முடியாது. அத்தகைய மாணவர்கள்களுக்கு எனப் பள்ளியிலேயே
இரவுப் பெழுதில் சில மணி நேரம் அமர்ந்து அமைதியாக ஒருமுகப்படுத்திப் படிப்பதற்காகச்
செய்யப்பட்ட ஏற்பாடே மேற்பார்வைப் படிப்பு முறை. இதைச் சில ஆசிரியர்கள் முறை
வைத்துக்கொண்டு மேற்பார்த்து உதவுவர். ஆதலால் இந்த ஏற்பாட்டிற்கு மேற்பார்வைப் படிப்பு
என்னும் பெயர் வழங்கிவருகிறது.

பள்ளிக்கூடத்திலோ அல்லது வேறு இடத்திலோ மாணவர்கள்கள் எளிதில் சென்று படிக்கும்


இடத்தில் இந்த ஏற்பாடுகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர் செய்து வைப்பர். தலைமை
ஆசிரியரும் பிற ஆசிரியர்களும், முறை வைத்துக் கொண்டு பல வகுப்பு மாணவர்கள்களையும்
ஒழுங்காகப் படிக்கின்றனரா எனக் கண்காணித்து வருவர். இடையிடையே தனிப்பட்ட
குறைபாடுடைய மாணவர்கள்களிடம் தனிக் கருத்துக் காட்டி வினாவிடை விளக்க முறைகளில்
அவர்களது ஐயங்களைத் தீர்த்து உதவுவார்.

சிறு வகுப்பு மாணவர்களாக இருப்பின் பக்கத்திலுள்ள, ஆசிரியர் கல்லூரிப் பட்டவகுப்பு


மாணவர்கள்கள், வந்து முறை வைத்து அவரவர் விருப்பப் பாடங்களைப் படிப்பார்கள். கூட்டங்
கூட்டமாகப் படிக்கும் இக் காலத்தில் இத்தகைய ஏற்பாடுகள் வேண்டியனவே. இதன்வழி
உண்மையாகவே பின்தங்கிய மாணவர்கள்கள் ஊக்கமும் ஆக்கமும் பெறுவர் என்பதில் ஐயமில்லை.

You might also like