You are on page 1of 3

மனிதநேயம்

அவையோர் அத்துணை பேரையும் வணங்கி, தமிழன்னை


மடியில் மயங்கி, எனது உரையைத் துவங்கி, பேசப்போகிறேன் என்
தலைப்பில் இறங்கி. கொடுக்கப்பட்ட தலைப்புகளில் நான்
தேர்ந்தெடுத்த ஓர் அருமையான தலைப்பு மனிதநேயம்.

மனிதன் பிற மனிதர்களிடத்திலும் பிற உயிர்களிடத்திலும்


காட்டும் நேயமே மனிதநேயமாகும். மனிதநேயம் என்றவுடன் நம்
நினைவிற்கு வருவது அன்னை தெரேசாவும் நெல்சன்
மண்டேலாவும் மகாத்மா காந்தியும் போன்ற சான்றோர்கள்தான்.
இவர்கள் தனக்கு போகத்தான் தானமும் தர்மமும் என்ற
தகைமையைத் தாண்டி தன் வாழ்வை முழுவதுமாக சமூக
பணிகளக்காக அர்ப்பணித்து கொண்டவர்கள். அகிம்சை
கொள்கையைத் தனது போராட்ட வழியாக நடைமுறைப்படுத்தி
வெற்றி கண்டார் மாமனிதர் மகாத்மா காந்தி. நம் கண்
முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை
என்றால் கண்களுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு
அன்பு செலுத்த இயலும் என்கிறார் அன்னை தெரசா.

கணியன் பூங்குன்றனார் கூறியதற்கொப்ப 'யாதும் ஊரே


யாவரும் கேளிர் ' என்று உலகத்திற்கே மனிதநேயத்தை
எடுத்துக்காட்டி வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். ஆனால்,
இன்றைய மனிதனின் மனிதநேயத்தின் நிலை என்ன? சாதி,
மதம், இனம், மொழி, நாடுகடந்து, உயர்ந்தவன் தாழ்ந்தவன்
பாகுபாடு மறந்து விருப்பு வெறுப்பற்று ஒன்றே குலம் ஒருவனே
தேவன் என்ற மனித நேய சிந்தனையோடு பவனிக்கும்
மனிதர்களை இன்று தேடித்தான் கண்டுபிடிக்க
வேண்டியுள்ளது. அதுமட்டுமா! விபத்தில் ஒருவர் சாலையில்
அடிபட்டு கிடந்தாலும் பசியால் ஒருவர் வீதியில் பரிதவித்து
கொண்டிருந்தாலும் உதவி கேட்டு ஒருவர் கதறி
கொண்டிருந்தாலும் கண் முன்னே என்ன அநீதிகள் நடந்து
கொண்டிருந்தாலும் உதவி செய்யாமல் போட்டிப்போட்டு
கொண்டு படம் பிடித்து அதனை புலனத்திலும் முகநூல்களிலும்
அனுப்புகிறார்கள். எங்கே போனது நமது மனிதநேயம்? மனிதன்
பொன்னை தேடுவதிலும் பொருளை தேடுவதிலும் மண்ணை
தேடுவதிலும் உள்ள அவனது நாட்டம் மனிதன் காக்கும்
மனிதநேயத்தைத் தேடுவதில்லையே. அதுமட்டுமா? மத
பிரச்சனை, மொழிப்பிரச்சனை, அரசியல் போராட்டம் , நிற
பேதம், சாதி பேதம் போன்றவை அப்பாவி மனிதர்களின் உயிரை
பறித்து மனிதநேயத்தையே அடியோடு கொண்று சாய்கின்றன.
பாரதியார் சொன்னதைப் போல 'மனிதர் நோக மனிதர் வாழும்'
கலி காலமாக இன்று மாறிவிட்டது. ஏழைகள் கண்ணீர்
சிந்துகின்றனர். பணக்காரர்களோ மிகவும் மகிழ்வாக
வாழ்கின்றனர். நாம் உலகில் வாழ்வது ஒரு முறை. அவ்வாழ்வு
பிறருக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும். இதனையே
விவேகானந்தர் 'மக்கள் சேவையே மகேந்திரன் சேவை' என்றார்.
நாம் மற்றவர்களிடம்தான் நம் அன்பை காட்டுவதில்லை. நம்மை
ஈன்ற அன்னை தந்தையிடமாவது நம் மனிதநேயத்தைக்
காட்டுகின்றோமா? பிள்ளைகள் இருப்பதோ அன்னையின்
இல்லத்தில். ஆனால், அன்னை இருப்பதோ அனாதை
இல்லத்தில்.

மனிதன் மனிதன்மேலே மனிதநேயத்தைக் காட்டவில்லை


என்றால் இயற்கையை என்ன சொல்வது? மனிதன் என்பவன்
இயற்கை தாயின் படைப்புகளின் உச்ச வரம்பு. பெற்ற தாயிடமே
நேயம் பாராட்டாத இன்றைய தலைமுறையினருக்கு இயற்கை
தாயைப் பற்றி என்ன கவலை இருக்க முடியும்? விஞ்ஞான
வளர்ச்சியால் நாம் வலது கையில் தொலைபேசியும் இடது
கையில் மடிக்கணினியாகவும் நமக்கு நாமே கலியுக கல்கி
அவதாரமாகத் தோன்றுகிறோம். பாட புத்தகம் எங்கோ
மூலையில் கிடக்க மூளையை ஈர்க்கிறது முகபுத்தகம்.
கதிர்வீசுகளால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை
அறிந்தும் சொகுசைக் கண்டு பழகிவிட்ட நமக்கு
தொலைப்பேசியைக் கீழே வைக்க மனம் வருவதில்லை. பாவம்
உலகில் நம்மோடு பிறந்த நம்மை போன்றே வாழ்வதற்கான
அனைத்து உரிமைகைளும் பெற்ற பிற விலங்குகளும்
பறவைகளும் மரங்களும் எந்த பாவத்திற்காக இந்த பழிகளை
சுமக்க வேண்டும்? இதற்கு இணையான இன்னொரு வளர்ச்சி
பிளாஸ்டிக், பொம்மையில் தொடங்கி பை எனும் பேயாகி இன்று
அரிசி வரை முன்னேறிவிட்டது. நெஞ்சை நெகிழ வைக்கும்
நெகிழியின் வளர்ச்சி. எஞ்சிய பகுதியிலும் பிளாஸ்டிக்
குப்பையை பரப்பி பூமித் தாயின் தாகம் தணிக்க தவறி அவளை
மூர்ச்சை ஆக்கிவிட்டோம். காலகாலமாய் பச்சை பசைலென்று
இருந்த கானகங்கள் இன்று திடீர் திடீர் என்று காணாமல்
போய்விடுகின்றன. என்ன நமது அறியாமையின் முன்னேற்றம்
அடடா அதிவேகம்!

மனிதநேயத்தைப் பற்றி பேசத் தொடங்கினால் பேசும்


வார்த்தைகளும் முடிந்துவிடும் நேரமும் முடிந்துவிடும். முடிவில்
நம் சமூகம் விடிந்ததா என்பதே கேள்வி. முடியும் என்று
எண்ணியதால்தான் விண்ணை முட்டி நிற்கிறது பல துறைகளில்
நாம் கண்ட வளர்ச்சி. அதே மனப்போக்குடன் நாம் செயல்பட
வேண்டும். பத்து முறை சுற்றினால் களிமண்கூட
பானையாகிவிடும். ஆனால், பல்லாயிரக்கணக்கான முறை பூமி
சுற்றியும் மனிதன் மாறவில்லை என்றால் எப்படி? மாற்றுவோம்
வாருங்கள்! நன்றி.

You might also like