You are on page 1of 4

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றிய மூத்த குடி”

என்பதற்கேற்ப பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இனம் நமது தமிழினம். அவ்வினம்


பேசிய மொழி தமிழ்மொழி ஆகும். அறிந்த கருத்துகளையும் உணர்ந்த உணர்ச்சிகளையும் பிறருக்கு
எடுத்துக்கூற உதவுகின்ற ஒரு கருவி மொழியாகும். அம்மொழியைப் பேசுகின்ற மக்களது
கொள்கைகளையும் குறிக்கோள்களையும் எடுத்தியம்புவது இலக்கியமாகும். இவற்றினை வைத்து
நோக்கும் போது, இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தின் நிலைக்கண்ணாடி என்ற உண்மை
புரியவரும். இதனாலேயே இலக்கியம் வாழ்க்கையின் எதிரொலிகள், சமுதாயத்தின் வளர்ச்சியைக்
காட்டும் மைல் கற்கள், மனித இலட்சியத்தின் உயிர்நாடி என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.
தமிழ்மொழியின் இலக்கிய படைப்பில் காலத்தால் தோன்றியது சங்க இலக்கியம், தற்கால இலக்கியம்
மற்றும் பக்தி இலக்கியம் ஆகும். இந்தத் தமிழ் இலக்கியங்கள் பல வாழ்வியல் நெறிகளை
மனிதர்களிடையே குறிப்பாக இளைஞர்களுக்கு ஊட்டும் வகையில் அமைந்துள்ளன. ஆகவே
முருகுணர்ச்சி நிறைந்த தமிழ் இலக்கியங்கள் இளையோர் நெறியான வாழ்வை மேற்கொள்ளத்
துணை புரிகின்றன என்று கூறினால் அது மிகையாகாது.

முதலாவதாகப் பக்தி இலக்கியங்களைப் பகுத்தாய்ந்து பார்க்கையில், அப்பர் அவர்களின்


கைவண்ணத்தால் மலர்ந்த ‘சலம் பூவோடு தூபம்’ எனும் பாடல் இன்றைய கால இளையோர்
நெறியான வாழ்வை மேற்கொள்ளப் பெரிதும் துணை புரிகின்றது. பாடலில் அப்பர்,

சலம் பூவோடு தூபம் மறந்தறியேன்

தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

போன்ற முருகுணர்ச்சி நிறைந்த வரிகளின் மூலம் வாசிப்பவரின் கவனிப்பை மற்றும் மனதை


ஈர்க்கின்றார். நீர், பூக்கள், நல்ல மணம் வீசும் தூபங்களை, நல்ல சங்கீதம் பொருந்திய பாடல்கள்!
ஆஹா! சொல்லும் போதே நம்மைப் பக்தி பரவசமடையச் செய்கின்றது. மேலும், அப்பர் அவர்கள்
நாம் வாழ்க்கையில் எத்தகைய துன்பம் அல்லது இன்பம் வந்தாலும் இறைவனை பிரத்தனை
செய்தல் அவசியம் என்பதனை இப்பாடலின் மூலம் எடுத்துரைக்கின்றார். இன்றைய காலத்தில்
இளையோர்கள் சந்திக்கும் சிக்கல்கள் பல. இருப்பினும் அதனை நினைத்துக் கொண்டு நாம்
இறைவனை மறக்கக் கூடாது. நீர், மலர், தூபம் மற்றும் பூக்களைக் கொண்டு இளையோர்கள்
சிக்கனமாக இறைவனை வணங்கினாலும் கூட அவர் நமக்கு அருள் புரிவார். எந்நேரமும்
இறைவனின் புகழைப் பாடுவதன் மூலம் இளைஞர்கள் வாழ்வில் வழி தவறிப் போவதில்லை.
மேலும், இளையோர்கள் கொலை, கொள்ளை, மது போன்ற தீய நடவடிக்கைகளில்
ஈடுபடுவதில்லை. இறைச் சிந்தனை அவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தி நல்வழிக்குக் கொண்டு
செல்லும். ஆகையால் இளையோர் வாழ்க்கையில் முன்னேற இறை நம்பிக்கை பெரிதும் உதவியாக
அமையும். இப்பக்தி இலக்கியத்தின் வழி, இறை நம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக இளையோர்
நெறியான வாழ்வை மேற்கொள்ளுவார்கள் என்பதில் கிஞ்ச்சிற்றும் ஐயமில்லை.

இதனை தொடர்ந்து, சமய புரட்சியாளர் வள்ளலார் அவர்களால் உருவாக்கப்பட்ட பக்தி


இலக்கியங்களில் ஒன்றான திருவருட்பாவை ஆராய்ந்து பார்க்கலாம்.

ஒருமையுடந் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்த்தம் உறவு வேண்டும்

இத்திருவருட்பா வரிகளில் உள்ள சொற்கள் யாவும் கடினமாக இல்லாமல் அனைவருக்கும் மிகவும்


எளிதாகப் புரியும் வண்ணம் அமைந்துள்ளது. இத்திருவருட்பா இளையோரின் வாழ்க்கையை
மேம்படுத்தும் வகையில் பல கருத்துகளை எடுத்துரைக்கின்றது. முதலில் நாம் அன்றாட வாழ்வில்
உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒரு வேடம் போட்டு நடித்தல் கூடாது என்பதை
இத்திருவருட்பா விளக்குகின்றது. நாம் பிறர் முன்னிலையில் சிரித்து பேசிவிட்டு, மனதில் அவரை
பற்றி தீய எண்ணங்களை வளர்க்கக் கூடாது. மேலும், நாம் என்றும் இறைவனையே துதித்துப் பாட
வேண்டுமே ஒழிய, பொய் சொல்லித் திரியக்கூடாது என்பதனை நாம் இத்திருவருட்பா மூலம்
அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் நாம் எப்பொழுதும் சமுதாயத்தினரால் போற்றப்படுவோம்.
மேலும் இத்திருவருட்பா பெண் மீது மோகம் கொள்ளாது, இறைபக்தியில் அதிக மூழ்கியிருக்க
வேண்டும் என்று உணர்த்துகிறார். அதனை தொடர்ந்து, நமக்கு ஆரோக்கியமான சிந்தனையும்
வாழ்க்கையும் தந்த இறைவனை நாம் வாழ் நாளில் என்றும் மறக்கக் கூடாது என்ற உன்னதமான
நெறியை வலியுறுத்துகின்றது இந்த திருவருட்பா. இறைவனை விட மாபெரும் சக்தி வேறு
எதுவுமில்லை. அத்தகைய இறைவனைப் போற்றி நாம் என்றும் பாட வேண்டும். ஆகையால்,
இளையோர்களின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தப் பல நெறிகளை எடுத்துரைக்கின்றது இந்த
முருகுணர்ச்சி நிறைந்த பக்தி இலக்கியங்கள்.

அதுமட்டுமில்லாமல், தற்கால கவிதை உலகில் மிளிர்ந்துவரும் கவிஞர் வைரமுத்துவின்


சிந்தனை துளிகளில் மலர்ந்த கவிதை “முதல் முதலாக அம்மாவிற்கு” பகுத்தாய்ந்து பார்க்கையில்,
இக்கவிதையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தாயின் கஷ்டத்தை மிகவும் அழகான சொற்களை
கொண்டு வர்ணித்துள்ளார். இந்த கவிதையைப் படிக்கும் நமக்கே தாயின் அர்ப்பணிப்பை மிக
நன்றாக உணர முடியும். இக்கவிதையில் கவிஞர் தாயின் குணத்தையும் பெருமையும் நன்கு
எடுத்துரைத்துள்ளார். கவிஞரின்

என்னை புறந்தள்ள

இடுப்புவலி பொறுத்தவளே

என்கின்ற வரிகளின்வழி, கவிஞர் ஒரு தாயானவள் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கப்படும்


துயரத்தைச் சொல்கிறார். இத்தகைய துயரத்தை எல்லாம் தாங்கிக் கொண்டு, தன் உதிரத்தைப்
பாலாக்கி குழந்தைக்குப் பாலூட்டி சீராட்டி வளர்ப்பவள்தான் தாய் என்பவள். மேலும், அவள்
இறைவனுக்கு நிகரானவள். தாயானவள் தன் நலனைப் பற்றிக் கருதாமல் தன் பிள்ளைகளின்
நலனுக்காக என்றும் தன்னை அர்ப்பணிப்பவள் ஆவாள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற
வரிகளின்வழி அறிய முடிகிறது அதாவது மாதா எனப்படும் தாயானவளே முழு முதல் கடவுளாகக்
கருதப்படுகிறாள், அவளை அடுத்துத்தான் இறைவன்கூட வருகிறார். அதனால்,
இக்கவிதையின்மூலம், கவிஞர் இளையோர் மத்தியில் தங்கள் தாயின் அர்ப்பணிப்பை உணர்ந்து,
அவர்களை என்றும் போற்றி பாதுகாத்து வணங்க வேண்டும் என்ற சிந்தனையை விதைக்க
வருகிறார். தங்களின் தாயின் மனம் புண்படாமல், அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல்,
அவர் மனம் மகிழும் செயல்களான செயல்களைப் புரிவதே, இளைஞர்கள் தங்களின் தாய்க்குச்
செய்யும் கடமையாகும். இதன் மூலம் இளைஞர்கள் ஒரு சுபிட்சமான வாழ்வை வாழ முடியும்.
எனவே, இம்மாதிரியான தற்கால இலக்கியங்கள் இளையோர் நெறியான வாழ்வை மேற்கொள்ள
நல்ல சிந்தனைகளைப் புகுத்தவல்லது என்ற கூறினால் அது மிகையாகாது.

மேலும், மலேசிய கவிஞர் சீனி நைனா முகமது அவர்களின் இலக்கியத் தாகத்தால் மலர்ந்த
“எல்லாம் தமிழிலே” எனும் கவிதையைப் பார்ப்போம். இக்கவிதையில் கவிஞர் தமிழின்
சிறப்பினையும் மாண்பையும் மிகவும் சுவையூட்டும் வகையில் எழுதியுள்ளார். இக்கவிதையில்

எனக்கு வாய்த்த இனிய நலங்கள்

இறைவன் தந்தது தமிழிலே- அவை

உனக்கும் வாய்க்கும் உண்மை அன்பால்

உறவு கொண்டால் தமிழிலே!

என்கின்ற வரிகளின்வழி தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும். தமிழனுக்குத்


தமிழன்னையானவள் அனைத்து நலங்களையும் தமிழ் வழியாலே கொடுக்கிறாள். “தமிழுக்கு
அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்கின்ற பாவேந்தர்
அவர்கள் சுட்டிக்காட்டிய உணர்வை உள்ளத்தில் கொண்டு தமிழ் இளையோர்கள் தமிழைப்
பிழையற கற்றுத் தமிழ் மீது ஆழமான பற்றைக் கொண்டிருந்தால் நிச்சயம் தமிழன்னை
அவர்களுக்கு நலங்களை வழங்குவாள். தொடர்ந்து, கவிஞர் ஒரு குழந்தை பிறப்பது முதல்
இறப்பது வரை தாய்மொழியான தமிழைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டிருப்பதைத் தன்
கவிதையின்வழி மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார். இக்கவிதையின்வழி, இளைஞர்களின்
மத்தியில் செம்மொழியாகத் திகழும் தமிழுக்கு நன்றி பாராட்டும் குணம் மேம்படும். அவர்களின்
மனதில் தமிழ் என்பது வெறும் மொழியல்ல, அஃது உயிர் மூச்சு என்ற உணர்வு இக்கவிஞரின்
கவிதையின்வழி நிச்சயம் ஆழ்மனதில் பதியும். தாய்மொழியை இளையோர்கள் அவர்களின்
உயிருக்கும் மேலாகக் கருதி வாழ்வார்கள்.
சுருங்கக்கூறின், தமிழ் இலக்கியங்கள் இளைஞர்களை நெறியான வாழ்க்கையை
மேற்கொள்ளத் துணை புரிகிறது என்பதனை மேலே உள்ள கருத்துகள் யாவும் இதற்கு
பாரைச்ச்சாற்றுகின்றன். இதனால் இளையோர்கள் வாழ்வில் வழி தவறிச் செல்லாது சிறந்ததொரு
வாழ்க்கையை வாழ முடியும். இத்தன்வழி, பாடத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட தமிழ்
இலக்கியங்கள், இளையோர் வாழ்வை மேம்படுத்த வித்திடும் என்பது வெள்ளிடைமலை.

You might also like