You are on page 1of 4

தேசிய வகை மாதிரி மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி

இலக்கணம் கற்பித்தலில் கையாளப்படும் புதிய உத்திமுறையின் விளைப்பயன்கள்

நான் கடந்த 5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில்
பள்ளிசார் அனுபவம் பெறச் சென்றேன். இப்பள்ளி நகர்ப்புறத்திற்குச் சற்று வெளியில்
அமைந்திருப்பதனால் இப்பள்ளிக் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளியாகத்
திகழ்கிறது. இப்பள்ளியில் சுமார் 16 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். நான்
ஆசிரியரிடம் மேற்கொண்ட நேர்காணலின் வழி இங்கு பயிலும் மாணவர்கள் நடுத்தர
குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும் ஆதலால் பெரும்பாலான மாணவர்களின் அறிவுசார்
நிலை குறைவாகவே இருக்கின்றது என்றும் அறிந்து கொண்டேன். இதனால், ஆசிரியர்கள்
இலக்கணப் பாடத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் சில சிக்கல்களை
எதிர்கொள்கின்றனர் என்பதனையும் இதன்வழி நான் புரிந்து கொண்டேன்.

எனக்கு கிடைத்த அனுபவத்தின்படி இங்கு பல மாணவர்கள் இலக்கணப் பாடத்தின்


மேல் வெறுப்பு கொண்டதால் இலக்கணப் பாடத்தின் மேல் ஆர்வம் செலுத்துவதில்லை.
மாணவர்கள் தமிழ்மொழி குறிப்பாக இலக்கணப் பாடம் வரட்சியானது எனும்
எண்ணத்தைக் கொண்டிருப்பதாலும் இலக்கணப் பாடத்தை வெறுக்கின்றனர் எனலாம்.
இருப்பினும், இப்பள்ளியில் பணி புரியும் தமிழாசிரியர்கள் தங்களால் இயன்ற வரையில்
தமிழ்மொழி கற்பித்தலில் குறிப்பாக இலக்கணத்தில் ஒரு சில புதிய உத்திமுறைகளை
கையாளுகின்றனர்.

தொடர்ந்து, நான் ஆசிரியர் திலகவதியின் புதன்கிழமை காலை 08:15 முதல் 09:15


வரையிலான இரண்டாம் ஆண்டு இலக்கணம் கற்பித்தலை உற்றுநோக்கினேன். தமிழ்
மொழி இலக்கணம் வாழ்வியலுக்குத் தேவையற்ற ஒன்று எனும் எண்ணம் கொண்டுள்ள சில
மாணவர்கள் பாடத்தில் சிறிதும் கவனம் செலுத்துவதில்லை என்பதை ஆசிரியரிடம் கேட்டு
அறிந்தேன். தமிழ் மொழியில் ஆளுமை இல்லாத மாணவர்களே இவ்வாறான எண்ணம்
கொள்கின்றனர். இதனால் மாணவர்களின் தமிழ் மொழி பாடத்தின் அடைவு நிலையானது
நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே இருந்ததாக ஆசிரியர் தெரிவித்தார். இன்றைய
காலத்தில் மாணவர்கள் எவற்றில் அதிகமான ஈடுபாட்டினைக் காண்பிக்கின்றனர் என்பதை
அறிந்த ஆசிரியர் இந்த சிக்கல்களை எதிர்கொள்ள தொழிற்நுட்பத்தைப்
பயன்படுத்தியுள்ளார். வெண்கட்டி வாய்மொழி போதனா முறையைக் காட்டிலும்
தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தினால் மாணவர்கள் முழு கவனம் செலுத்துவர் என
கூறுகிறார் சுப்புரெட்டியார் (1970).
ஆசிரியர் திலகவதி அவர்கள் தங்களின் இலக்கணம் கற்பித்தலில் புதிய
உத்திமுறையான கணினியைக் கொண்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்.
தொழில்நுட்பத் துணையுடன் இலக்கணக் கல்வியைக் கற்பித்தலும் ஒரு சிறந்த
உத்திமுறையாக ஆதரிக்கப்படுகின்றது. இந்த 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தலில்
முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்த உத்திமுறையைக் கொண்டு
ஆசிரியர் திலகவதி அவர்கள் ‘இடம்’ என்ற இலக்கணப் பகுதியை ‘இடங்களை அறிவோம்’
என்று படி ஒன்றை நழுவத்தின் துணைக் கொண்டு கற்பித்தார். இங்கு ஆசிரியர்
மாணவர்களுக்கு நழுவத்தின் வழி மூன்று இடங்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
கரும்பலகையையே பார்த்துப் பழகிய மாணவர்களுக்கு நழுவம் போன்ற தொழில்நுட்ப
விடயங்களைக் காண்பிப்பதன் வழி மென்மேலும் ஈர்க்கப்பட்டனர். மேலும், அவர்களின்
காட்சிநிலையினை மேலும் அதிகரித்து விரைவில் கிரகிக்கக்கூடிய ஆற்றலை
உட்கொணர்ந்து மனதில் பதிய வைக்கவும் இந்த உத்திமுறை பயன்பாடாக
விளங்குகின்றது. காணொளிகள், ஒலிப்பதிவு, நழுவம், புதிர் போன்றவற்றை மாணவர்களுக்கு
அறிமுகம் செய்து இலக்கணத்தைக் கற்பிப்பதின் வழி மாணவர்களின் முன்னறிவினை
வலுப்படுத்தி அறிவு வளர்ச்சியினை உறுதி செய்ய முடிகிறது என்பதை ஆசிரியர்
திலகவதியின் கற்பித்தலின் வழி என்னால் காண இயன்றது. மேலும், மாணவர்கள் இதன்வழி
தொழில்நுட்பத் திறன் மிக்கவர்களாகவும் கற்றரிந்த முழுமையான மற்றும் உன்னதமான
மாணவர்களாக வடிவமைக்க முடியும். மாணவர்களை இலக்கணப் பாடத்தில் ஈடுபாட்டினை
வளர்த்து கைத்தேர்ந்தவர்களாகவும் பரந்த நிலையிலான அறிவினைப் பெறவும் இந்த
உத்திமுறை தேவைப்படுகின்றது. இருப்பினும், ஆசிரியர் திலகவதியின் இந்தக் கற்பித்தல்
உத்திமுறையில் சில குறைகளை என்னால் காண இயன்றது. அதில் ஒன்று, ஆசிரியர்
நழுவத்தைப் படைக்க பயன்படுத்திய எழுத்துரு சற்று சிறிதாக காணப்பட்டது. இதனால்,
வகுப்பில் பின் அமர்ந்த மாணவர்களால், சரியாக சொற்களை அடையாளம் காண
இயலவில்லை. ஆனாலும், மாணவர்கள் ஆசிரியர் மீது கொண்ட பயத்தால் அதைக் கூற
முன் வரவில்லை. ஆகையால், இதை ஒரு குறையாக இவ்வுத்திமுறையின் கற்பித்தலின்வழி
நான் கண்டு உணர்ந்தேன். எனவே, எனது மதிப்பீட்டின் வழி இவ்வுத்திமுறையில்
குறைகளைக் காட்டிலும் நிறைகளே அதிகமாக உள்ளதால், இது இரண்டாம் ஆண்டு
மாணவர்கள் இலக்கணம் பயில ஏற்புடையது என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.

அடுத்ததாகப் பார்த்தோமேயானால், ஆசிரியர் திலகவதி அவர்கள் விளையாட்டு


முறை கற்பித்தல் என்ற இன்னொரு புதிய உத்திமுறையினைப் பயன்படுத்தினார். தற்கால
மாற்றங்களுக்கேற்ப ஆசிரியர் திலகவதி அவர்கள் இலக்கணப் பாடத்தினைக் கற்பிக்க,
அப்பாட அறிவைத் தேர்ந்தறிவதற்கு விளையாட்டு முறையைத் தேர்ந்தெடுத்திருந்தார்.
இலக்கணம் என்றாலே சலிப்புத் தட்டும் என்ற கருத்தினை மாணவர்களிடமிருந்து
முறியடிக்க இம்மாதிரியான உத்திமுறையினை அவர் பயன்படுத்தினார். நழுத்தின் வழி
மற்றும் கற்றல் சாதனங்களைச் சாதகமாக வைத்தும் இந்த உத்திமுறையினை நாடியிருந்தார்.
அதுமட்டுமல்லாது, வகுப்பறையில் குழுமுறை விளையாட்டினை ஆசிரியர்
மேற்கொண்டார். ஆசிரியர் படி இரண்டில் பாடப்பொருளாக ‘விளையாட வாரீர்’ என்ற
தலைப்பைக் கொண்டு திரி திரி பந்து என்ற விளையாட்டை மாணவர்களுக்கு அறிமுகம்
செய்து வைத்தார். இந்த விளையாட்டு முறை கற்பித்தலில் இடம்பெற்ற
பயிற்றுத்துணைப்பொருள் பந்து ஆகும். விளையாட்டின் விதியானது, மாணவர்கள்
வட்டமாக அமர்ந்து, ஒரு மாணவன் பந்தை எடுத்துக் கொண்டு இன்னொரு மாணவனின்
பின்னால் வைத்து, பின் அந்த மாணவன் நழுவத்தில் காண்பிக்கப்படும் வினாக்களுக்குப்
பதில் கூறப் பணித்து, சரியாகப் பதில் கூறிய மாணவர்களை ஆசிரியர் பாராட்டி
ஊக்குவித்தார். ஆகவே, இவ்விளையாட்டு முறைக் கற்பித்தலின் வழி ஆசிரியரால்
இலக்கணப் பாடத்தில் மாணவர்களின் பங்கேற்பினையும் ஆர்வத்தினையும் பெருக்க
முடிந்தது. மெது பயில் மாணவர்களுக்கும் இவ்வுத்திமுறையானது இலக்கணக் கூறுகளை
விளங்கிக் கொள்ள இலகுவாக அமைந்து முயற்சி செய்யத் தூண்டியது. மேலும், இம்மாதிரி
விளையாட்டு முறைகளின் வழி மாணவர்கள் களிப்புறும் சூழலை உருவாக்கிக்கொள்ள
இயன்றது. கடினமான இலக்கண விதிகளையும் இந்த உத்திமுறை எளிதாக விளங்கிக்
கொள்ளும் பக்குவத்தினை மாணவர்களுக்குத் தந்தது. ஆற்றலும் ஆவலும் மிகுந்த
இலக்கணப் பாடத்தினை மாணவர்களுக்குச் சேர்க்க இந்த உத்திமுறை பயனாக அமையும்
என்று நான் கருதுகிறேன்.

இருப்பினும், இவ்விளையாட்டு முறை என்ற உத்திமுறை மாணவர்களுக்கு


நன்மையைச் செய்தாலும் இதிலும் சில குறைகளை என்னால் காண முடிந்தது. ஆசிரியர்
திலகவதியின் கற்பித்தலில் திரி திரி பந்து என்ற விளையாட்டை நடத்தும்போது வகுப்பில்
உள்ள ஒரு சில மாணவர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
அம்மாணவர்களுக்கு ஆசிரியர் கூறிய விளையாட்டின் விதிகள் சரியாக புரியவில்லை
என்பதை நான் கண்டு அறிந்தேன். அதனால், ஆசிரியர் அவர்களை விளையாட கூறியும்
அவர்கள் விளையாட மறுத்தனர். பின்பு வட்டத்தில் அமைதியாகவே அமர்ந்திருந்தனர்.
இன்னொரு காரணம் அவர்கள் கடைநிலை மாணவர்கள் என்பதால் ஆசிரியர் அதற்கு
முன்பு படித்தக் கொடுத்த இடம் என்ற இலக்கண பகுதியே விளங்காத பட்சத்தில்
அவர்களால் ஆசிரியர் சென்ற அடுத்த படியில் ஒத்துழைப்பையும் கவனத்தையும் செலுத்த
இயலவில்லை. இதனைத் தவிர்த்து, வட்டத்தில் அமர்ந்திருந்த இன்னும் சில மாணவர்கள்
விளையாட்டில் மட்டுமே முழு கவனத்தைச் செலுத்தினர். ஆசிரியர் நழுவத்தைப்
பயன்படுத்தி கேள்வி கேட்டபோது அவர்களால் பதில் கூற இயலவில்லை.
அம்மாணவர்களின் எண்ணம் முழுவதும் விளையாட்டில் பயன்படுத்திய பந்தின் மீதே
இருந்தது. இன்னும் சில மாணவர்கள் பந்தைத் தூக்கிக் கொண்டு வட்டத்தில் ஓடும்போது
கீழே வழுக்கி விழுந்தனர். இதனால், விளையாட்டில் ஈடுபட்டிருந்த மற்ற மாணவர்களின்
கவனம் சிதறியது. ஆகையால், இவ்வுத்திமுறையில் அதிகமான குறைகளை என்னால்
கண்கூடாக காண முடிந்ததால், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இவ்வுத்திமுறை
ஏற்புடையதாக அமையவில்லை என்பது எனது மதிப்பீட்டாகும்.

இந்த ஒரு வார பள்ளிசார் அனுபவத்தின் மூலம் நான் பல புதிய விஷயங்களைத்


தெரிந்து கொண்டேன். தமிழ் மொழி இலக்கணப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கையில் தமிழ்
ஆசிரியர்கள் பல தரப்பட்ட சவால்களை எதிர்கொள்கின்றனர். மாணவர்கள் இலக்கணப்
பாடத்தை விருப்பமுடன் கற்க வேண்டுமானால் மாணவர் உளவியலுக்கு ஏற்பவும், வகுப்பு
நிலைக்கு ஏற்பவும் பாடத்தைக் கற்பிக்க வேண்டும். அங்ஙனம் கற்பிக்கும்போது பல்வேறு
புதிய கற்றல் உத்திமுறைகளை ஆசிரியர்கள் கையாள வேண்டும். கற்பித்தலில் புதிய
உத்திமுறைகள் கையாளப்படும்போது மாணவர்களுக்கு ஆர்வம் உண்டாகி கற்கும்
பாடத்தில் ஈடுபாடு ஏற்படுகிறது. தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப
ஆசிரியர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதால் மாணவர்களின் தேவையை நன்கு அறிந்து
அதற்கேற்றவாறு கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை வகுப்பறையில் சரிவர நடத்திச் செல்ல
முடியும் என கருதுகிறார் அண்ணாமலை (2011). அதுமட்டுமின்றி, மாணவர்களுக்கு
இலக்கணப் பாடத்தின் பால் மேலும் ஆர்வத்தை மேலோங்கச் செய்ய ஆசிரியர்கள்
தற்கால நடைமுறைக்கு ஒப்ப தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து,
இலக்கண விதிகளை மனப்பாடம் செய்யச் சொல்லி மாணவர்களுக்குப் புரிதல் திறனே
இல்லாமல் செய்துவிடும் போக்குக் கண்டிப்பாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
இலக்கணமே மொழியைக் காக்கும் வேலி என்பதால் இலக்கணப் பாடத்தை கற்பிக்கும்
ஆசிரியர்கள் புதிய சிந்தனைகளை நாளும் கையாண்டு கற்றல் கற்பித்தலை நடத்த
வேண்டும். ஆசிரியர்கள் கல்வி கற்பதை எப்போதும் நிறுத்தி விடக் கூடாது என்பதனை
நான் இவ்வொரு வாரத்தில் நன்கு புரிந்து கொண்டேன்.

You might also like