You are on page 1of 3

அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.

என் கதையின் தலைப்பு

மதியூக மரங்கொத்தி. காட்டு ராஜா சிங்கத்திற்கு அன்று கடுமையான

பசி! எங்குத் தேடியும் எந்த மிருகமும் கண்ணில் சிக்கவில்லை. அங்கும்

இங்கும் தேடி அலைந்து இறுதியாக ஒரு மானைப் பிடித்து, அரக்கப்

பரக்கத் தின்றது.

அப்படி விழுங்கிக் கொண்டிருக்கும் பொழுது மானின் எலும்புத் துண்டு

ஒன்று சிங்கத்தின் தொண்டைக்குள் மாட்டிக் கொண்டது. சிங்கம் வலி

தாங்க முடியாமல் காடே கிடுகிடுக்கும்படி கர்ஜித்தது. அதன் விளைவால்

சிங்கத்தின் தொண்டை வீங்கி விட்டது; வலியும் அதிகரித்தது.

அப்போது சிங்கம் கரடி ஒன்றைப் பார்த்தது. “கரடியே! என்

தொண்டையில் சிக்கியிருக்கும் எலும்பை எடுக்க உதவி செய்வாயா?”

எனக் கேட்டது. கரடியோ சிங்கம் தன்னைக் கொல்லத்தான் திட்டம்

தீட்டுகிறது என்றெண்ணி, “சிங்க ராஜாவே! நான் என் கையை உங்கள்

தொண்டைக்குள் விட்டால் என் கையிலுள்ள முரடான உரோமங்கள்

உங்கள் வாயைக் குத்தி மேலும் புண்ணாக்கி அதிக வலியை ஏற்படுத்தும்,”

எனக் கூறி அவ்விடத்தை விட்டு, குடு குடுவென ஓட்டம் பிடித்தது.

சிங்கத்திற்கு வலி தாங்க முடிய வில்லை. ‘கடவுளே! எனக்கு உதவ

யாரும் வர மாட்டார்களா?’ எனப் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில்,

நரி ஒன்று அவ்வழியே வந்தது. சிங்கம் அழுவதைப் பார்த்து, “சிங்க

ராஜாவே! உங்களுக்கு என்ன ஆயிற்று?” என ஆறுதலாகக் கேட்டது. “என்


தொண்டையில் எலும்பு மாட்டி உள்ளது; தயவு செய்து எடு” என

மன்றாடிக் கேட்டது.

“கவலைப்படாதீர்கள் அரசே! எனக்குத் தெரிந்த மரங்கொத்திப்

பறவையால் உங்களுக்கு உதவி செய்ய முடியும்” என்றது நரி. “என்ன

மரங்கொத்தி பறவையா? ஒரு சிறிய மரங்கொத்திப் பறவையால் என்ன

செய்ய முடியும்? பெரிய கரடியால் செய்ய முடியாத காரியத்தை

அதனால் எப்படிச் செய்ய முடியும்? நான் வலியால் துடித்துக்

கொண்டிருக்கிறேன். என்னை மேலும் வெறுப்பேத்தாதே!” என்றது

கோபத்துடன்.

“சிங்க ராஜாவே! மரங்கொத்தியை அவ்வளவு சாதாரணமாக நினைத்து

விடாதீர்கள். உங்கள் தொண்டையிலுள்ள எலும்பை எடுக்க அதனால்

மட்டுமே முடியும்” என்றது தீர்க்கமாக. வலியைத் தாங்க முடியாத

சிங்கம் வேறு வழி இல்லாமல் நரியுடன் மரங்கொத்தியைச் சந்திக்கச்

சென்றது. மரங்கொத்தியிடம் விஷயத்தைக் கூறியது நரி.

மரங்கொத்திப் பறவை சற்றும் தாமதிக்காமல், “சிங்க ராஜாவே!

நீங்கள் சற்று மல்லாந்து படுங்கள்” என்றது. சிங்கம் கோபத்துடன், “என்ன

நான் மல்லாந்து படுக்க வேண்டுமா? என்ன தைரியம் உனக்கு?” என்றது.

மரங்கொத்தியோ, “சிங்க ராஜாவே! கோபம் கொள்ளாதீகள்! நீங்கள்

மல்லாந்து படுத்தால்தான் என்னால் உள்ளே இருக்கும் எலும்புத் துண்டை

எடுக்க முடியும்” என்றது.


வேறு வழியில்லாமல் சிங்கம் மல்லாந்து படுத்தது. மரங்கொத்தி

சிங்கத்தின் மேல் தாடைக்கும் கீழ் தாடைக்கும் நடுவே ஒரு மரத்துண்டை

வைத்தது. பிறகு, தன் நீண்ட அலகால் தொண்டைக்குள் சிக்கியிருந்த

எலும்பை வெளியே எடுத்தது. சிங்கத்தின் வலியும் உடனே குறைந்தது.

“ஹா! ஹா! ஹா! எனக்கு நலமாகி விட்டது; நலமாகி விட்டது” என்று

சிங்கம் துள்ளிக் குதித்த்து.

“மரங்கொத்தியே! மிக்க நன்றி! மிக்க நன்றி!” என்றது படு

உற்சாகத்துடன். சிங்கம் மரங்கொத்தியின் மதியூகத்தை எண்ணிப்

பூரித்தது. ‘சிறிய பறவைதானே, என்ன செய்து விடப் போகிறது?’ என்று

எண்ணியதற்கு வெட்கப்பட்டது. அப்படி நினைத்ததற்கு மரங்கொத்தியிடம்

மன்னிப்புக் கேட்டது. இவை அனைத்தையும் புதருக்குள்ளேயிருந்து

பார்த்துக் கொண்டிருந்த கரடி வெட்கித் தலை குனிந்தது.

சபையினரே, இக்கதையின் மூலம் ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’

எனும் கருத்தை நன்கு உணர்ந்து கொண்டோம். சிறுவர்களான நாமும்

முயற்சி செய்தால் பெரிய பெரிய சாதனைகளைப் படைக்க முடியும்

எனக் கூறி விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்!

You might also like