You are on page 1of 2

தமிழர் விழாக்கள்

பெரு மதிப்பிற்குறிய ஆசிரியப் பெருமக்களே, நீதி தவறா நீதிபதிகளே, மற்றும்

மாணவ மாணவிகளே, உங்கள் அனைவருக்கும் என் முத்தான முத்தமிழ்

வணக்கத்தை இரு கரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன். என் பெயர் தீபாஷ்வினி

இராஜேந்திரன். நான் நான்காம் ஆண்டு மாணவி. இன்று நான் பேச எடுத்துக்

கொண்டிருக்கும் தலைப்பு ‘தமிழர் விழாக்கள்’.

மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும் மலர்ச்சியும்,

புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்கள். மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில்

திளைக்க வைப்பதே விழாக்களின் முக்கிய நோக்கமாகும். தமிழ் மாதங்களில்

சித்திரை தொடங்கி பங்குனி வரை எண்ணற்ற தமிழர் விழாக்கள்

கொண்டாடப்படுகின்றன.

தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரையில் தமிழரின் வருடப் பிறப்பு ,

சித்திரா பௌர்ணமி மற்றும் சித்திரைத் திருவிழா மிகசிறப்பாக நடைபெறும்.

இரண்டாவது மாதமான வைகாசியில் விசாகத் திருநாளும், மூன்றாவது மாதமான

ஆனியில் ஆனித் திருமஞ்சனம் மற்றும் குருபூர்ணிமா பண்டிகையும்

கொண்டாடப்படுகிறது. நான்காவது மாதமான ஆடியில் ஆடி அமாவாசை, ஆடி

கார்த்திகை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு போன்ற அநேக விழாக்கள்

கொண்டாடப்படுகிறன. ஐந்தாவது மாதமான ஆவணியில் விஷ்ணு ஆலயங்களில்

கிருஷ்ணர் பிறப்பு ஒரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி

விநாயகர் சதுர்த்தியும் கூட இம்மாதம் கொண்டாடப்படுகின்றது்


ஆறாவது மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி பண்டிகையை மக்கள்,

வீடுகள் மற்றும் ஆலயங்களில் கொலு வைத்து கொண்டாடுவர். ஏழாவது மாதமான

ஐப்பசி என்றாலே அனைவர் நினைவுக்கு வருவது தீபாவளிப் பண்டிகைதான்.

அனைத்து தமிழர்களும் மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் திருநாள் அல்லவா இது.

எட்டாவது மாதமான கார்த்திகையில் மக்கள் இல்லங்களில் தீபம் ஏற்றி

கொண்டாடுவர். ஒன்பதாவது மாதமான மார்கழி மாதத்தின் சிறப்பு வைகுண்ட

ஏகாதசி திருவிழாகும். பத்தாவது மாதமான தை மாதத்தில் உலகெங்கும் வாழும்

தமிழர்களால் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பதினொன்றாவது மாதமான மாசி மாதத்தில் வரும் மாசி மகம் மற்றும்

மகாசிவராத்திரி மிகவும் சிறப்புப் பெற்றது.இறுதியாக, பண்ணிரெண்டாவது

மாதமான பங்குனியில் பங்குனி உத்திரம் மற்றும் வள்ளி, தெய்வயானை

திருக்கல்யாணம் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் மாரியம்மன் கோயில்களில்

கொடியேற்றி திருவிழாக்கள் 15 தினங்கள் நடைபெறும்.

அன்புசால் அவையோரே , ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி மறுமலர்ச்சி

ஆகியவற்றை அச்சமுதாயம் காலங்காலமாகப் போற்றிக் கொண்டாடும்

விழாக்களின் வழியாக அறியலாம். ஆகவே, நமது முன்னோர்கள் கொண்டாடிக்

கழித்த விழாக்களைக் நாமும் கொண்டாடி மகிழ்ந்து அடுத்த

தலைமுறையினருக்கும் கொண்டு சேர்ப்போமாக...!

நன்றி

You might also like