You are on page 1of 3

அமுதான தமிழே நீ வாழி; என் ஆவினிலே கலந்து நாவினிலே

தவழும் அமுதான தமிழே நீ வாழி. எம் தாய் தமிழுக்கு முதல்


வணக்கம். மதிப்பிற்குரிய நீதிபதிகளே, ஆசிரியர்களே, சக
தோழமைகளே உங்கள் அனைவருக்கும் என் முத்தான முதற்கண்
வணக்கங்கள் உரிதாகட்டும்.

ஒன்னா இருக்க கத்துக்கனும் அந்த உண்மைய சொன்னா


ஒத்துக்கனும் காக்கா கூட்டத்தப் பாருங்க அதுக்குக் கற்று
கொடுத்தது யாருங்க... ஒன்னா இருக்க கத்துக்கனும் அந்த
உண்மைய சொன்னா ஒத்துக்கனும்.... ம்ம்ம்.... சபையோர்களே
இப்பாடலில் பொதிந்துள்ள மறைப்பொருள் என்ன? ஆம் ஒற்றுமை.
அடிப்படையாக ஒற்றுமை என்பது குடும்பத்திலிருந்தே
பிறப்பெடுக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமை இல்லையேல் நம்
சமுதாயத்திலும் நாட்டிலும் ஒற்றுமையைப் பார்க்க முடியாது.
எனவே, குடும்பத்தில் ஒற்றுமை மிக அவசியம் என்ற தலைப்பில்
இன்று உங்கள் முன்னிலையில் பேச வீற்றிருக்கிறேன்.
தற்போது பல குடும்பங்களில் ஒற்றுமை நிலவுவதற்கான
வாய்ப்புகள் நாளுக்கு நாள் குன்றி வருகிறது. இதற்குக் காரணம்
என்னவாக இருக்கும். ஒரு வேளை தொழில்நுட்ப வளர்ச்சியால்
துளிர்விட்ட திறன்பேசியின் ஆதிக்கமாக இருக்குமோ? ஆம்
அந்த திறன்பேசியே குடும்பத்தில் ஒற்றுமையை நிலைகுலையச்
செய்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நீங்கள்
சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவரவர் திறன்பேசியைக் கையில்
வைத்துக்கொண்டு ஒரே வீட்டில் வெவ்வேறு உலகத்தில் வாழ்ந்து
வருகின்றனர். வீட்டில் எவரும் ஒருவருக்கொருவர் பேசிக்
கொள்வது கூட கிடையாது. ஏதோ ஓர் தங்கும் விடுதியில்
இருப்பது போல் காணப்படுகின்றனர்.
இச்சிக்கலை களைவதற்கு நாமே அவர்களுக்குச் சில
பரிந்துரைகளை வழங்கி உதவிடுவோம். அதாவது, குடும்ப
உறுப்பினர்களோடு சேர்ந்து உணவு உண்ணுதல், ஓய்வு நேரங்களில்
எல்லோரும் ஒன்றாக அமர்ந்து மனம்விட்டு பேசி சிரித்தல் போன்ற
செயல்களில் ஈடுபடலாம். ஆனால், ஒரு முக்கியான கண்டிப்பு.
குடும்பத்தோடு நாம் செலவிடும் அந்த ஓரிரு மணி நேரம்
திறன்பேசிக்குத் தடை என்ற விதிமுறை கட்டாயம் ஒவ்வொரு
குடும்பத்திலும் விதிக்கப்பட்டு முறையே பின்பற்றப்பட வேண்டும்.
இக்கடமையிலிருந்து நாம் தவறிவிட்டோமானால், நம்
குடும்பத்தை நாமே தனிமை எனும் சிறையில் இட்டு குடும்ப
ஒற்றுமையை சீரழித்த பாவியாகி விடுவோம்.
அடுத்ததாக, இரண்டாவது கருத்து. பெற்றோர்கள்
பிள்ளைகளைப் பராமறிக்கின்றனர். ஆனால் பிள்ளைகளோ வயது
முதிர்ந்த பெற்றோர்களைக் கைவிட்டு விடுகின்றனர். தற்போது
நாம் கண்கூடாகக் காணக்கூடிய காட்சி இது. இச்சிக்கலை
எப்படித்தான் சரி செய்வது? ஆம், பெற்றோர்களுக்கும்
பிள்ளைகளுக்கும் இடையே அன்பும் பண்பும் நிரம்பியிருக்க
வேண்டும். அன்பும் பண்பும் நிரம்பினாலே ஒற்றுமை என்பது
தானாகப் பிறக்கும். இந்த ஒற்றுமைமையை வளர்ப்பதற்குப் பெரும்
தடையாக இருப்பது யார்? மனைவி மார்களே! உங்களை நான்
குறை சொல்லவில்லை தாய்மார்களே. தவறாக
எண்ணிவிடாதீர்கள். திருமணத்திற்குப் பிறகு தனிக்
குடும்பமாக வாழ விரும்புகின்ற உங்களை நான் பலிச்
சொல்லவில்லை. ஆனால், தனியாக வாழும் நீங்கள் தணித்தே
விடப்படுகிறீர்கள், எதிர்காலத்தில். அந்தேரத்தில் ஆறுதலுக்குக்
கூட உங்களுக்கு யாரும் துணை இருப்பதில்லை. அதை கருத்தில்
கொண்டாவது குடும்பத்தோடு வாழ்வதற்கு முக்கியத்துவம்
கொடுங்கள். இக்கருத்தைத் தாழ்மையுடன் இங்கு நான்
முன்வைக்க விரும்புகிறேன்.
தொடர்வது என்னுடைய மூன்றாவது கருத்து. தற்காலத்தில்
பெரும்பாலான குடும்பங்களில் ஒருவருக்கொருவர் எந்தவொரு
பேச்சு வார்த்தையும் இல்லாமல் ஒரே வீட்டில் வேற்றார் போல்
வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணியாக விளங்குவது குடும்ப
உறுப்பினர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளே என்று
கூறலாம். எடுத்துக்காட்டாக, சில குடும்பங்களில் மாமியரும்
மருமகளும் நகமும் சதையும் போல மிகுந்த அன்போடும்
ஒற்றுமையோடும் உறவாடுவர். சில குடும்பங்களிலோ எலியும்
பூனையும் போல அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வர்.
இதனால் குடும்பத்தின் ஒற்றுமையே பாதிக்கப்படுகிறது
என்பதைப், பாவம் அவர்கள் உணர தவறுகின்றனர். ஹா....
என்னவென்று சொல்வது இச்சூழலில் இருதலை கொள்ளி
எறும்பாக மன உளைச்சலுக்கு ஆளாவது ஆண் குலமே. மேலும்,
குடும்பத்தின் ஒற்றுமையோ, சிதைந்து சீர்குலைந்து விடுகிறது.
இந்நிலை மாறிட என்ன செய்யலாம்? ஆம், குடும்ப உறுப்பினர்கள்
கூறும் கருத்துகள் எதிர்மறையானதாக இருந்தாலும் அதனை
திறந்த மனத்துடன் ஏற்க வேண்டும். ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்து புரிந்துணர்வோடு செயல்படுதல் வேண்டும்.
இதனால், குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவுவதோடு
ஒற்றுமையும் மேலோங்கும். இல்லையேல் கூட்டுக் குடும்பம் தனிக்
குடும்பமாக பிளவுபட நேரிடும்.
முடிவாக, ஒரு குடும்பம் செழிக்க அதன் ஒற்றுமை மிக அவசியம்.
குடும்ப ஒற்றுமையே சமுதாயத்தின் ஒற்றுமையாகும். பின்
அதுவே நாட்டின் ஒற்றுமையாகவும் அவதரிக்கிறது. எனவே,
ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உய்த்துணர்ந்து, இதுவரை
நான் கூறிய கருத்துகளையும் சிந்தையில் சேர்த்து சிறப்புடன்
செயல்பட்டால் குடும்பம் செழிக்கும்; சமுதாயம் சிறக்கும் நாடும்
சுபிட்சம் பெறும் என்று கூறி விடைபெறுகிறேன், நன்றி;
வணக்கம்.

வாழ்க தமிழ், வளர்க தமிழ், வெல்க தமிழ்.

You might also like