You are on page 1of 3

நான் போற்றும் தமிழ்மொழி

செந்தமிழே நறுந்தமிழே
என்னில் இருந்தமிழே
கண்ணதுவின் கருவிழியே
மேதினியில் நான் சிறக்கக்
காட்டிடு நல்வழியே!

பெருமதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே! நீதியை நிலைநிறுத்த வீற்றிருக்கும் மனுநீதிச்


சோழர்களே! நேரத்தைக் கண்காணிக்கும் மணி காப்பாளர் அவர்களே! மற்றும் என்னுடன்
தமிழில் சொல்வீச்சால் போரிடப் படையெடுத்திருக்கும் அன்புசால் நண்பர்களே! உங்கள்
யாவருக்கும் எனது திருவாய் மலர்ந்து, தீந்தமிழ் செந்தமிழ் கலந்து எனது வணக்கத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வினிய வேளையில் உங்கள் முன் ‘நான் போற்றும் தமிழ்மொழி’ எனும் தலைப்பில்


தொண்மை தமிழின் மாண்புகளையும் தனிச் சிறப்புகளையும் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

அன்பார்ந்த அவையோர்களே,

ஒரு மனிதன் தன் எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளப் பயன்படும் அரிய


கருவி மொழியாகும்.  மொழியே மனித வாழ்வினைத் திறம்படவும் செம்மையுறவும்
வைக்கின்றது. அவ்வாறு சிறப்பும் செம்மையும் வாய்ந்த மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ்
என்பதன் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும்.

தமிழ் என்னும் சொல்லில் ‘த’ வல்லினத்தையும் ‘மி’ மெல்லினத்தையும் ‘ழ்’


இடையினத்தையும் சார்ந்தது.தமிழ்மொழியில் உள்ள ழகர ஒலியானது பிற மொழிகளில் இல்லாத சிறப்பு
அம்சமாகக் கருதப்படுகிறது. தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவம் இனிமையானதோடு
மட்டுமல்லாமல் அதை உச்சரிக்கும் போது குறைந்தளவு காற்றே வெளியேறுகிறது என மொழி
ஆய்வாளர்கள் சிறப்பித்துக் கூறி இருக்கின்றனர்.

அன்புசால் சபையோரே,

 காலம் பல மாறினாலும் கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய மொழியாக


திகழ்வது என் தாய்மொழி தமிழ்மொழியே என்று கூறினால் அது மிகையாகாது.இயல், இசை, நாடகம்,
எனும் முத்தமிழாய் வளந்து,கன்னித் தமிழாய், செந்தமிழாய், வண்டமிழாய், பைந்தமிழாய், வலம்
வரும் ஒரே மொழி தமிழ் மொழியாகும். எண்ணற்ற புலவர்களாலும், அரசர்களாலும் சங்கம் வைத்து
நடத்தப்பட்ட ஒரே மொழி தமிழ் மொழியாகும்.

இதனைக் கருத்தில் கொண்டே பாவேந்தர் பாரதிதாசன், 

நனிபசு பொழியும் பாலும் 

தென்னை நல்கிய நீரும் 

இனியன என்பேன் எனினும் தமிழை 


என்னுயிர் என்பேன் கண்டீர் !

என்று மொழிகிறார்.

அன்பிற்கினியோரே,

4000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தமிழ்மொழி, செம்மொழியாய் சிறப்புற்று


விளங்குவது தமிழர்கள் செய்த பெரும் பேராகும். தமிழின் தொன்மை,பிறமொழி தாக்கமின்மை,
தாய்மை, இலக்கிய வளமை, இலக்கண செழுமை, நடுவுநிலமை,உயர்ந்த விழுமிய
சிந்தனைகள்,கலை இலக்கியத்தன்மை, மொழிக்கோட்பாட்டுத் தன்மை போன்றவை
செம்மொழிக்குரிய பண்புகள் என மொழியாளர் பகருகின்றனர்.

செம்மொழிகளில் பல இன்று வழக்கொழிந்து விட்டன. அவற்றை இன்று பேசக் கூட


ஆளில்லை. ஆனால், இன்றும் நம் தமிழ் பீடுநடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. அதை நாம்
இன்றும் பேசவும் எழுதவும் செய்கிறோம். அது மட்டுமின்றி கணிணி பயன்பாட்டில் கூட தமிழ்
மிக வேகமாக முன்னேறி வருகிறது. 

அன்பார்ந்த மாணவர்களே,

உலக இலக்கியங்களில் முதன்மை பெற்றவை சங்க இலக்கியங்கள்


ஆகும். பத்துப்பாட்டு,எட்டுத்தொகை பதினொன்கீழ்கணக்கு நூல்கள் இன்றளவும்
தமிழ்மொழியின் இலக்கிய வளத்திற்கு இன்பம் சேர்கின்றன.தமிழ்மொழியில் உள்ள
இலக்கியங்களைப் போல வழமையான,செழுமையான இலக்கியங்கள் உலகிலுள்ள
வேறெந்த மொழியிலும் இல்லை என செக்நாட்டு மொழி அறிஞர் கமில் சுவலபில் கூறியுள்ளார்.

எனதருமை சகோதரர்களே,

ஒரு மொழியின் இலக்கண வளமே பற்பல இலக்கியங்கள் படைக்க முன்னோடியாக


திகழ்வதற்கு வழிவகுக்கும். தமிழ் மொழியின் தொன்மையான இலக்கண நூல்
தொல்காப்பியமாகும். எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றுக்கும் தொல்காப்பியம் இலக்கணம்
கூறுகிறது. தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியரின் அகத்தியம், ஐந்திலக்கணங்களின்
அருமையை எடுத்துரைக்கிறது. நன்னூல், தண்டியலங்காரம், சதுரகாத்தி போன்ற
இலக்கண நூல்கள் தமிழ்மொழிக்கு அணிகலன்கலாய் மேலும் அழகு சேர்கின்றன.

அன்பார்ந்த அவையோரே,

மக்களின் அன்றாட நிகழ்வுகளை வெளிப்படுத்தும் கால கண்ணாடிகளாய்


இலக்கியங்கள் திகழ்கின்றன. புலவர் பூங்குன்றனார் பாடிய ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’, ‘தீதும்
நன்றும் பிறர் தர வாரா’, வான்புகழ் வள்ளுவனின் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, போன்ற
இலக்கிய அடிகள் உலகில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வழிகாட்டும்
கலங்கரை விளக்கங்கலாக திகழ்கின்றன. ஒவ்வொரு இலக்கியமும்
ஒவ்வொரு இலக்கை, குறிக்கோளை மக்களிடையே விதைத்து பண்பட்ட
மனிதர்களாய் வாழ வழிவகுத்து வருகின்றது என அறுதியிட்டுக் கூறலாம்.

அவையோர்களே,

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ(து)


எங்கும் காணோம்!" என்று பாரதியாரும்

"தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத்


தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்!" என்று பாவேந்தரும் தமிழின் பெருமையை தங்களின்
பாடல்கள் மூலம் கூறியுள்ளனர்.

சொல்லில் இனிமை, பொருளில் இனிமை, ஓசையில் இனிமை, இலக்கணத்தில் இனிமை,


இலக்கியத்தில் இனிமை எனப் பல இனிமைகள் நிறைந்த தமிழ்மொழியை நமதாகப் பெற்றிருப்பது
நாம் பெற்ற பெருமையல்லவா! ஆம் சகோதரர்களே, இவ்வினிய மொழியே நான் போற்றும்
தமிழ்மொழி என்றுக் கூறி எனதுரையை முடிக்கின்றேன்.நன்றி வணக்கம்.

You might also like