You are on page 1of 3

நம் வாழ்க்கை நம் கையில்

அணிந்துரை
வழங்கியவர் ஆரூர் ஆர்.சுப்பிரமணியன்
நம் வாழ்க்கை நம் கையில் என்ற தன்னம்பிக்கையோடு, உறுதிபட வாழ
நம்மால் முடியும் என்னும் உண்மையை நமக்கு காரணகாரியங்களுடன்
பேராசிரியர் திரு இராஜமோகன் அவர்கள் அறிவார்ந்த இந்நூலில் மிகத்
தெளிவாக விளக்குகிறார். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை
நிறைவுடன், ஆனந்தமாக வாழவேணடும் என்ற ஆழ்ந்த அக்கறையுடன்
எழுதப்பட்ட ஒரு அற்புதப் படைப்பு இந்த நூல்.
நிறைவான வாழ்க்கை அமைவதற்கு உடல்நலமும் மனநலமும்
இன்றியமையாதவை என்பதை வலியுறுத்தி அதற்கான
வழிமுறைகளையும் மிகத்தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர்.
ஸர்வம் தத் ப்ராக்ஞா நேத்ரம், ப்ரக்ஞானே ப்ரதிஷ்டிதம்| ப்ராக்ஞா
நேத்ரே லோக:, ப்ராக்ஞா பரதிஷ்டா, ப்ரக்ஞானம் ப்ரஹ்ம
என்பது ஐதரேய உபநிஷத் மஹாவாக்கியம்.
அதாவது இவ்வுலகில் எல்லாப்பொருட்களும் பிரக்ஞையையே
நேதாவாக உடையன. பிரக்ஞானத்திலேயே நிலைபெற்றுள்ளன. உலகம்
பிரக்ஞானத்தால் நடத்தப்படுகிறது. பிரக்ஞானத்தில் நிலைபெறுகிறது.
பிரக்ஞானமே பிரம்மம். ஐதரேய உபநிடதம் 3.3
இந்த உபநிடத மஹாவாக்கியத்தை அடிப்படையாகக்கொண்டு தனது
விளக்கங்களை ஆசிரியர் அளிக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.
மனிதவாழ்க்கையின் தலையாய நோக்கம் மோட்சம் அதாவது உலக
வாழ்க்கையிலிருந்து விடுதலை. இந்த வாழ்க்கையின் இன்ப
துன்பங்களிலிருந்து விடுதலை. உலகவாழ்க்கையின் நிலையற்ற
தன்மையிலிருந்து விடுதலை. இந்த நோக்கத்தை நிறைவேற்றும்
வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். நலமான
உடலும், தெளிவான மனமும் அதற்கு தேவையான அடிப்படைகள்.
அவற்றை அடைவதற்கான வழியை இந்த நூல் நமக்குக்காட்டுகிறது.
தூய்மையான, சத்தான உணவும், ஆழ்ந்த உறக்கமும் உடலின்
ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். ஆனால் இவை மிதமாக இருக்க
வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சாகிவிடும் என்பது சுகர்
மாமுனியின் அருள்வாக்கு.
அவர் மேலும் தொடர்கிறார்: அகங்காரத்தின் வெளிப்பாடே இந்த உடல்.
இதன் மீது பற்றும், மமகாரத்தின் வெளிப்பாடாகிய வீடு, மனைவி,
மக்கள், சுற்றம் ஆகியவற்றின் மீதுகொள்ளும் பாச உணர்வும்
தற்காலிகமானவையே. இந்த நிலையாமையை உணர்ந்து மனிதன்
வாழவேண்டும்.
உடலின் தேவைபற்றி திருமூலரின் கருத்துடன் நூல் தொடங்குகிறது.
உயிரின் பயணத்துக்கு உடல் எவ்வளவு தேவை என்பதும் அதைப்
போற்றும் வழிகளும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. மனிதனைப் பற்றும்
பலவிதமானப் பசிகளைப்பற்றி உதாரணங்களுடன் தெளிவாக்குகிறார்.
நலமான உடலுக்கு தண்ணீரின் அவசியம் பற்றி ஆசிரியரின் விளக்கம்
நம்மை மலைக்க வைக்கிறது. அடடா, இத்தனைநாள் இதை அறியாமல்
போனோமே என்று தோன்றுகிறது. இதனால்தான் தண்ணீரை அமுதம்
என்றாரோ திருவள்ளுவர். சரி, போனது போகட்டும். இனிமேலாவது
நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு நோயற்ற
வாழ்வுக்கு வழிசெய்துக் கொள்வோம் என்ற உந்துதலை நமக்குள்
உருவாக்குகிறார் ஆசிரியர். அவருடைய அறிவுரையை நிச்சயம்,
உடனடியாக நடைமுறையில் கொண்டுவந்து நமது ஆரோக்கியத்தை
மேம்படுத்திக் கொள்வோம். நம் வாழ்க்கை நம் கையில்தானே
இருக்கிறது.
இங்கே வேடிக்கை என்னவென்றால் அந்த நீரை அளிக்கும் நதிகளின்
பங்கீட்டுப் பிரச்சினையை அரசியல்வாதிகள் என்றும் இளமையுடன்
வைத்திருப்பது, அது அவர்களின் கைவந்த கலையாக, அவர்களுக்கு
சிறந்த ஓட்டுவங்கியாக இருக்கிறது.
உடல்நலத்துக்கு அவசியமான அடுத்த தேவையாக ஆசிரியர்
குறிப்பிடுவது சரியான மூச்சுப்பயிற்சி. உடலின் நோய் எதிர்ப்புத்
தன்மையை அதிகரிப்பதற்கு சாதாரண மூச்சுப்பயிற்சிகூட
பெருந்துணையாக இருக்கும் என்பது நமக்கு தெளிவாகிறது.
உடல்நலமும், மனநலமும் பின்னிப்பிணைந்திருக்கின்றன என்கிறார்
ஆசிரியர். அதற்கு அவர்கூறும் விளக்கம் மறுக்க முடியாதது. மருந்துகள்
முழுமையான உடல்நலத்துக்கு காரணமாக முடியாது என்று அவர்
கூறுவதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். உடல் பற்றற்றவர்
களுக்கும் தம் உடலைப்பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுத்
திரியை நம்முள் ஏற்றிவிடும் வல்லமை வாய்ந்த அரிய நூல் இது.
விழிப்புணர்வு குறித்தும் அதன் தேவையைப் பற்றியும் இந்நூல் விரிவாக
ஆராய்கிறது. விழிப்புணர்வை மேம்படுத்திக்கொள்வதற்கான
பயிற்சிகளும் இங்கே உள்ளன.
சிரத்தை என்பது என்ன? நம்பிக்கை. பக்தியும் சிரத்தையும்
இணைந்திருக்க வேண்டும். ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்
அதன் நோக்கம் என்ன, அடையவேண்டிய இலக்கு என்ன என்பதை
தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அடுத்து அதனைச் செய்து முடிக்க
அனுபவமுள்ளவர்களின் உதவியைப்பெற வேண்டும். பாதிவேலை
செய்தபின் நாம் செல்லும்பாதை சரியாதுதானா என்னும் ஐயத்துக்கு
இடம் கொடுக்காமல் முடிக்கவேண்டும் என வேதங்கள் இலக்கண
மிட்டுள்ளன.
இத்தகைய சிரத்தையை இயல்பாகப் பெற்றுள்ள தமிழக அரசின்
முன்னாள் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவராகப்
பணியாற்றி ஓய்வுபெற்றவர் பேராசிரியர் திரு இராஜமோகன், எம்.இ.
அவர்கள். அவர் பல நுணுக்கமான ஆன்மீக, விஞ்ஞான, மெய்ஞ்ஞானத்
தகவல்களைத் தொகுத்து மிக அருமையாக வெளியிட்டுள்ள “நம்
வாழ்க்கை நம் கையில்” என்னும் வாழ்க்கை மேம்பாட்டு நூலை
தமிழ்கூறும் நல்லுலகம் நிச்சயம் வரவேற்றுக் கொண்டாடும். படித்துப்
பயன்பெறும். இவருக்கு என் நல்லாசிகள் உரித்தாகுக.
கும்பகோணம் அன்புடன்
27 – 6- 2022
ஆரூர் ஆர். சுப்பிரமணியன்
ஆன்மீக நூலாசிரியர் மற்றும்
துணை கலெக்டர் (ஓய்வு)

You might also like