You are on page 1of 2

வாசிப்புப் பழக்கம்

‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பது பல்லாண்டுகளுக்கு முன்பே நம்


முன்னோர்கள் கூறிச் சென்ற முதுமொழியாகும். இம்முதுமொழிக்குப் பொருந்தியவாறே அமைகிறது
வாசிப்புப் பழக்கம். வாசித்தல் என்பது என்ன? பேசுதலும் வாசித்தலும் ஒன்றாகி விட முடியுமா?
அடிப்படையில் இரண்டும் வாய்விட்டு வார்த்தைகளைக் கூறுவது என்றாலும் இவ்விரண்டிற்கும்
நிறைய வேறுபாடுகள் உள்ளன. நம் நடைமுறை வாழ்க்கையில் நிறைய சம்பவங்களைக்
காண்கிறோம். அதை உரைநடை படுத்துகையில் பேசுகிறோம். ஆனால், வாசித்தல் என்பது
ஏற்கனவே முறையாக எழுதப்பட்ட தகவலை அல்லது உரைநடையை உச்சரித்தல் ஆகும்.
இப்பழக்கத்தை எளிதில் கொண்டு வர முடியாது. முதலில் ஒவ்வொரு சொற்களையும் எழுத்துக்
கூட்டி உச்சரித்து பின் அதைத் தொடர்ந்து வழக்கப்படுத்தினாலே நாளடைவில் அது
சரளமாகும்.
வாசிப்புப் பழக்கத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற ஐயம்
எழலாம். கல்வி கற்றுக் கொண்டாலே போதுமே எனவும் சிலர் நினைக்கலாம். ஆனால், கல்வியைக்
கற்றுக் கொள்வதற்கு அடித்தளமாக விளங்குவது வாசித்தலே ஆகும். பாடப்புத்தகத்தில் உள்ள
பகுதியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் அதை நமக்கு வாசிக்கத் தெரிய
வேண்டும். வாசிப்பபைப் பழக்கிக் கொள்வதன் மூலம்தான் நாம் சுயமாகப் பிறர் உதவியின்றி கற்க
விரும்பியதைக் கற்கலாம். அதனால்தான், வாசிப்புப் பழக்கம் சிறுவயதிலிருந்தே பழகிக் கொள்ள
வேண்டிய ஒரு பழக்கமாகும். அப்பொழுதுதான் இறுதிவரை நாம் அதை வழக்கப்படுத்தி
நன்மை காண முடியும்.
சிறுவயதில் வாசிப்பது உச்சரித்தலை மேம்படுத்திக் கொள்வதற்கே என்றாலும் நாளடைவில்
அதன் பயன் அதிகரிக்கின்றது. காலப்போக்கில் நாம் நிறைய விடயங்களைக் காண ஆரம்பிப்போம்.
பல புதிய விடயங்களை அறிய வேண்டிய கட்டாயமும் ஏற்படும்.
‘எவ்வத் துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வத் துறைவது அறிவு’
என்பது நம் பொய்யாமொழிப் புலவரின் கூற்று. ஆகையால், தற்போதைய உலகச் செய்திகள்
அனைத்தையும் அவ்வப்போது அறிந்து வைத்திருத்தல் சிறப்பாகும். இவ்வாறு இருக்கையில்,
தினந்தோறும் பிறர் வந்து கூறுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்க இயலாது. இன்றைய
பரபரப்பு மிகுந்த உலகத்தில் நாமே முன்வந்து செய்திகளை அறிந்து கொண்டால்தான்
விழிப்புணர்வுடன் வாழ முடியும்; இல்லாவிடில் கிணற்றுத் தவளையாகி விடுவோம். இதற்குச் சிறந்த
வழி வாசித்தலே ஆகும். பல விசயங்களை வாசிப்பதன் மூலம் நமக்குப் பல தகவல்கள் அறிய
வரும்.
அதுமட்டுமின்றி, வாசித்தல் தனிமனிதனின் மொழி வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.
பலவற்றை வாசிப்பதன் மூலம் நம்மை அறியாமலே நமக்கு இலக்கண இலக்கியக் கூறுகள்
விளங்குகின்றன. பின், அதை நடைமுறை வாழ்க்கையில் முறையாகப் பயன்படுத்த உதவுகிறது.
அதிலும், பள்ளி மாணவர்கள் தங்கள் மொழிப் பாடங்களில் சிறந்து விளங்க வாசித்தல் பெரிதும்
உதவுகிறது. இதன் மூலம், அவர்கள் அதிகமாகச் செய்யும் இலக்கணத் தவறுகளைத் தவிர்க்கலாம்.
அதுமட்டுமின்றி, புதிய புதிய சொற்களை அறிவதன் மூலம் அவர்களின் மொழி வளமும் பெருகும்.
ஆகையால், வாசித்தல் மொழியைச் சீரழிவிலிருந்து தவிர்க்கிறது எனலாம்.
இருப்பினும், இன்றைய உலகம் பரபரப்பு மிகுந்ததாகிவிட்ட மாற்றத்தினால் நம்மிடையே
இவ்வாசிப்புப் பழக்கம் காணாமற்போய் விட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது
ஒரு காரணத்திற்காக நேரத்துடன் போட்டிப்போட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின்
பொன்னான நேரத்தைப் துணைப்பாட வகுப்புகளுக்கும் பள்ளிப் புறப்பாட நடவடிக்கைகளுக்கும்
விளையாட்டுகளுக்கும் என இன்னும் பலவற்றுக்கும் செலவிடுகின்றனர். சரி, அவை அவர்களின்
நலன் கருதியே என எடுத்துக்கொண்டாலும், அதை விடுத்து அவர்களுக்குக் கிடைக்கும் ஓய்வு
நேரத்தைத் தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், கைபேசிகள் எனப் பல நவீன ஊடகங்கள் பறித்துக்
கொள்கின்றன. இப்படியிருக்கையில், நம்மிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து கொண்டே
செல்கிறது. இந்நிலைமை தொடர்ந்தால் நம் வருங்கால சந்ததியினரே பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
ஆகையால், பலதரப்பினரால் பலதரப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஒருவரின் முன்னேற்றத்திற்காக அடித்தளமாக விளங்குவது குடும்பமே. எனவே, பிள்ளைகள்
வாசிப்புப் பழக்கத்தை அமல்படுத்த முதன்மை நடவடிக்கைகளைப் பெற்றோர்களே எடுக்க
வேண்டும். குழந்தைகளைக் கணினி மையத்திலும் கராத்தே வகுப்பிலும் சேர்த்து விட ஆர்வம்
காட்டும் பெற்றோர்கள், அவர்களை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்த்து விடவும் ஆர்வம் காட்ட
வேண்டும். நூலகத்தில் அவர்களுக்கு ஏற்ற புத்தகங்களை எடுத்துக் கொடுத்து அவர்களை வாசிக்கச்
செய்ய வேண்டும். அவர்களோடு பெற்றோர்களும் இணைந்து வாசித்தல் சிறப்பாகும். இதன் மூலம்,
பிள்ளைகள் பெற்றோர்களின் வழிகாட்டலைப் பின்பற்றுவர். மேலும், பெற்றோர்கள் சிறுவர்கள்
விரும்பிய கதை புத்தகங்களையும் வாங்கித் தர வேண்டும். தெனாலிராமன், பீர்பால், முல்லா போன்ற
கதைகள் நகைச்சுவை ஊட்டுவது மட்டுமின்றி பல நன்னெறிக் கூறுகளையும் எடுத்துரைக்கின்றன.
இதனால் சிறுவர்கள் ஒழுக்கத்துடனும் வளர்வார்கள்.
அதனையடுத்து, பள்ளிகளும் சுற்றுப்புற சமூகத்தினரும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த
பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை
அதிகரிக்க முதலில் சுய நூலகத்தை அமைக்க வேண்டும். பின், பல தரமான புத்தகங்களை
மாணவர்கள் நலனுக்கு வாங்கி வைக்க வேண்டும். ஆசிரியர்கள் வாசிப்பதன் வழி கிடைக்கும்
நன்மைகளை மாணவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு வாரமும்
மாணவர்கள் குறைந்தது ஒரு புத்தகத்தையாவது படித்திருக்கின்றனரா என்பதை உறுதி செய்ய
வேண்டும். அவர்களுக்குத் தக்க வெகுமதியும் அளிக்க வேண்டும். நம் குமுகாய விழாக்களில்
போட்டிகள் செய்தால், பரிசுப் பொருள்களுக்குப் பதிலாகப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கும்
பழக்கத்தை இயன்ற அளவில் நடைமுறைபடுத்த வேண்டும். படிப்பதைப் போல் இனிமையானது
வேறொன்றும் இல்லை. ஆகையால், திருமணங்களில் இனிப்புப் பண்டங்களுக்குப் பதிலாகப்
புத்தகங்களைக் கொடுத்தாலும் தவறொன்றும் இல்லை.
ஆகையால், வாசிப்பதால் பல நன்மைகள் உள்ளன என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாய்
புலப்படுகிறது. இப்பழக்கத்தை நாமும் வழக்கப்படுத்தி நன்மை பெறுவோமாக! பல
விடயங்களை வாசித்து நம் சிந்தனையையும் வளப்படுத்தி ஒரு சிறந்த மானிடனாக இவ்வுலகத்தில்
வெற்றி நடை போடுவோமாக!

You might also like