You are on page 1of 2

என் நாடு மலேசியா

முப்புறம் கடல் சூழ்ந்து நாற்புறமும் செம்மையாய்ச் செழிப்புற்று உலக


வரைப்படத்தில் கடுகளவே தோன்றினாலும் உலகளவில் பிரசித்து பெற்றது நம்
மலேசிய மலைத் திருநாடு. மலேசியக் கொடியை உற்று நோக்கினால் அதில்
இருக்கும் நட்சத்திரம் 14 முனைகளைக் காட்டுவதை காணலாம். அவை 14
மாநிலங்களைக் குறிப்பது. மலேசியாவைப் பற்றி கேட்டால் முதலில் நினைவுக்கு
வருவது நம் நாட்டின் தலைநகரமான கோலாலும்பூர் தான். ஒட்டு மொத்த
மலேசியாவிற்கே சிறப்பைக் கூட்டும் பல சுற்றுலா அம்சங்கள் இங்கே உள்ளன.
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வியக்க வைக்கின்றன. உலகையே
சுற்றிப்பார்ப்பதும், மலேசியாவைச் சுற்றிப்பார்ப்பதும் சமமாகக் கருதலாம்.

தேசம் எங்கிலும் நேசம் கண்டோம்


பல்லின மக்களோடும் பாசம் கொண்டோம்
பாரினில் புகழைத் தேடித் தந்தோம்
ஓரினமாய் இங்குக் கூடி வாழ்கிறோம்

நம் மலேசிய திருநாடு பிற நாட்டைக் காட்டிலும் தனி சிறப்பு கொண்ட நாடாகும்.
ஏனெனில், நம் நாட்டில் மட்டுமே பல்லின மக்கள் வெவ்வேறு கலை
கலாசாரங்களைக் கொண்டிருப்பினும் பிணக்கம் இன்றி இணக்கமாக வாழ்கிறோம்.
பல கலாசாரமும் பண்பாடும் நம் நாட்டில் மட்டுமே காண முடியும். “இன்றிருக்கும்
உயிரிகள் யாவும் எங்கள் தாயின் பிள்ளையே”. இது நம் தாய் நாடு என்பதால்
இந்நாட்டில் வாழும் பிற இனத்தவர்களும் நம் உடன்பிறப்புகளைப்
போன்றவர்களே என்பது நாம் உணர்ந்ததே. ‘ஒற்றுமையில்லாக் குடும்பம்
ஒருமிக்கக் கெடும்’ என்ற பழமொழியானது குடும்பத்திற்கு மட்டுமல்லாது
நாட்டிற்கும் பொருந்தும் என்பதால் வேற்றுமைகளைக் களைந்து பிற
இனத்தவருடன் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையுடனும் வாழ வேண்டும் என்பது அறிந்ததே. ‘ஒன்று பட்டால்
உண்டு வாழ்வு’ என்பதில் எத்துணைப் பெரிய உண்மை பொதிந்துள்ளது என்பதை
உணர்வு பூர்வமாக உணர்வோமே.

இயற்கை அன்னை நமக்கு வழங்கிய மலை, காடு, ஆறு, கடல் போன்றவை நம்மை
வாழ வைக்கின்றன. நம் திருநாடு பல இயற்கை வளங்களைக் கொண்டு எழில்
மிக்க நாடாகத் திகழ்கின்றது. நம் நாடு நாளுக்கு நாள் தொழிற்துறை,
விவசாயத்துறை, கல்வித்துறை என பல துறைகளின் உறுதுணையால் துரித
வளர்ச்சியடைந்து வருகின்றது. இவ்வாறான துறைகளின் வளர்ச்சி இந்நாட்டு
குடிமகன் மட்டுமல்லாது அந்நியர்களையும் தொழிலுக்காக இங்கு ஈர்க்கின்றது.
அந்நியர்களின் வருகையால் இரு நாடுகளுக்கிடையே பண பரிமாற்றம்
ஏற்படுகிறது. பணப் பரிமாற்றத்தால் நமது நாட்டு பொருளாதாரம்
வளர்ச்சியடைகின்றது.

நம் நாடு பூமத்திய ரேகையில் இருப்பதால் பல அழிவிடத்திலிருந்து பாதுகாப்பாக


இருக்கின்றோம். உதாரணமாக, சுனாமி, சுழல் காற்று போன்றவற்றிலிருந்து
பாதுகாப்பாக வாழ இயலுகின்றது. பல இடங்களில் நீர் வீழ்ச்சியும் பச்சை
பசெலெனும் மலைகளும் நம் நாடு நீர் வளம் மற்றும் நில வளம் மிகுந்தவை
என்பதற்குச் சான்றாகின்றது. இச்சூழல் நம் நாட்டில் மிதமான சீதோஷன
நிலையைக் கொடுக்கின்றது. நம் நாட்டில் ஆண்டுதோறும் மழையும் வெயிலும்
மிகுந்திருக்கும்.

மன்னர்க்கழகு செங்கோன் முறைமை என்பதற்கொப்ப நமது மலேசிய நாட்டில்


அரசியல் அமைப்பு நிலைத்தன்மையாக உள்ளது. ஆட்சியாளர்களின் திட்டமிடும்
திறனும், அதை செயல்படுத்தும் வேகமும் நாட்டை வேகமாக முன்னேற
வைத்திருக்கின்றது. ஒரே மலேசியா என்ற கொள்கை திட்டத்தின் கீழ் நம் நாடு
ஒற்றுமையுடனும் சுபிட்சத்துடனும் விளங்குகின்றது. அன்று விதைத்த பல்நோக்கு
சிந்தனை இன்று மேலோங்கி இருக்கின்றது. நமது நாட்டில் பல கட்டிடங்கள்,
தகவல் தொழில் நுட்பம் மற்றும் பள்ளி அளவிலான தர மதிப்பீடு பாடத்திட்டம்
போன்றவை இன்று 2030 தூர நோக்கு சிந்தனையைக் கொண்டுள்ளது என்பதே
இதன் சான்றாகும்.

ஒவ்வொரு பொருளும் ஒரு சரித்திரம் சொல்வதாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.


நம் மலேசிய நாட்டின் சிறப்பினைப் பார்த்தோமேயானால் இன்றொருநாள்
போதாது. மக்கள் இங்கு நல்வாழ்வுப் பெற்று வாழ்ந்திட வரங்கொடுத்த நம் தாய்
நாட்டை வாழ்த்தி வணங்குவோம்.

- யஷ்வினா ஜெயகாந்தன்
5 Diamond 2021

You might also like