You are on page 1of 1

அன்னையின் பாதம் போற்றி. அவள் தந்த தமிழே போற்றி. வணக்கம்.

நான் சிவசந்திரன்
புவனேஸ்வரன். 12 வயது நிரம்பிய நான் ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி பயில்கிறேன். என்
தலைப்பானது அறிந்து உறவாடு. உறவுகளின் மேம்பாடுகள் சரியாக புரியப்படாமல் போனதால்
தான் கூட்டுக் குடும்ப தத்துவங்கள் சிதைந்து போயின. முதியோர் இல்லங்கள், அனாதை
ஆசிரமங்கள் ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்து விட்டன. உறவின் உன்னதங்கள் புரியப்படாமல்
மனித வாழ்க்கை உருண்டு கொண்டிருக்கின்றது. மாற்று மதத்தவர்களிடம் மாமன் மச்சான்
உறவு கொண்டாடிய கிராமிய பண்புகள் முகங்கள் திருப்பி மாற்றுப் பாதையில் பயணிக்க
தொடங்கி இருக்கின்றன. ஒரு தாய் வயிற்றில் பிறந்த தொப்புள்கொடி உறவுகளில், திருமண
பந்தங்களால் இடையில் வந்து ஒட்டிக்கொண்ட உறவுகளில், நட்பால் மலர்ந்த உறவுகளில், நம்
அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? பிரச்சினையற்ற வாழ்க்கை எந்த மனிதனுக்கும்
அமைவதில்லை என்பது இயற்கையின் நியதி. அந்த பிரச்சினைகளில் பெரும்பகுதி உறவுகளால்
ஏற்படுகிறது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் அதனை அலசி ஆராய்ந்தால்
அதன் காரணம் மிக அற்பமாக இருக்கும். புரிந்து கொள்வது வேறு, புரிந்து கொள்ள மறுப்பது
வேறு. இந்த இரண்டு நிலைகளின் இடையே விளைவது தான் உறவுகளில் விரிசல்கள்.
பெற்றோர்களே, பிள்ளைகளை அரவணைத்துச் செல்லுங்கள். பிள்ளைகளே, பெற்றோர்களை
மதித்துப் பாருங்கள். உறவுகளின் உன்னதங்களை நினைத்துப் பாருங்கள், வேற்றுமை விலகி
மனம் லேசாவதை உணர்வீர்கள். உடைந்த பாத்திரம் வேண்டுமென்றால் ஒட்டாமல் போகலாம்,
ஆனால் எந்த நிலையிலும் மீண்டும் மீண்டும் உறவுகள் மட்டும் ஒட்டிக்கொள்ளும். பொருளாதார
ஏற்றத்தாழ்வுகள் இருப்பது மனித உறவில் இயல்பு. இதை ஏற்றுக்கொண்டு அவர்களையும்
அரவணைத்து, அவர்கள் மனம் கோணாமல் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய
உரிமைகளை, கவுரவங்களை, கண்ணியங்களை கொடுக்கும் போது அவர்களை நாம்
மதிக்கிறோம் என்ற மனப்பாங்கில் அவர்கள் மனமும் குளிர்ந்து விடும், வேற்றுமையும் மறந்து
விடும். அப்படிப்பட்ட உறவுகளோடு இணைந்து வாழும் போதுதான் உறவுகளின் உன்னதத்தை நாம்
உணர்ந்து கொள்ள முடியும். நம் மனதிலும் அன்பும், பண்பும், பணிவும், பாசமும், நேசமும்
வந்து குடியேறும். உறவுகளை உன்னதமாய் மதிக்கின்ற சிறந்த வாழ்வை நாமும் வாழ முடியும்
என்று உறுதியோடு முயற்சிப்போம். உறவுகளில் விரிசல் இல்லாத புது வாழ்வு மலர்ந்தால் உலகமும்,
உறவும் சீர்பெறும். எல்லா பிரச்சினைக்கும் ஒட்டுமொத்தமாய் தீர்வு கிடைத்து விடும். ஆகவே,
உறவின் உன்னதத்தை அறிந்து உறவாடுவோம் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி.

You might also like