You are on page 1of 11

துப்பாக்கியால் ஒடுக்கப்படும் போராட்டம்

ஆங்கிலத்தில்: இளங்கோவன் ராஜசேகரன், நன்றி: ஃபிரண்ட்லைன், செப்டம்பர்14, 2018

தமிழில்: குமரேசன் முருகானந்தம்.

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது


"உள்நோக்குடன் திட்டமிட்டு" உருவாக்கிய ஒரு கலவரத்தில் போலிஸ் துப்பாக்கிச் சூடு நடந்தது. 13
பேரின் மரணமும், பலர் அடைந்த பாடுகாயங்களும், அங்கு குடியிருக்கும் மக்களின்
வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் அச்சுறுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக
போராடுவதற்கான மக்களின் மன உறுதியை பலப்படுத்தியேயுள்ளன.

--------------------------------------------------------------
மே 22 அன்று காலையில், தென் தமிழகத்தின் தூத்துக்குடி நகரத்தில், லைன்ஸ் டவுனில்,
ஒற்றை அறைகொண்ட ஒரு மீனவர் குடியிருப்பின் வாசலில் நின்றிருந்த வனிதா, அவருடய மகள்
அவரை நோக்கி தெரு முனையிலிருந்து கையசைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவளது
பெற்றோர்களுக்கும், இரண்டு மூத்த சகோதரர்களுக்கும் "அன்புக்குறியவள்",
18 வயதேயானவள், அருகிலுள்ள ஆர் லேடி ஸ்னோஸ் பசிலிக்கா தேவாலயத்திற்கு
சென்றுகொண்டிருந்தாள். "ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்” 100 வது நாளைக் குறிக்கும்
பேரணியில் பங்கு பெறுவதற்காக குடியிருப்போர்கள் அங்கு கூடுமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்கள்.

ஸ் னோ லி ன் ஜே க் ஸ ன் சமூக பிரச்சனைகளில் ஆர்வத்துடன் பங்கேற்பது


வ னி தா விற்கு ஆச்சர்யமளிக்கவில்லை. ஸ் னோ லி ன் , ஒரு வாரத்திற்கு முன்புதான் தனது பள்ளி
இறுதியாண்டு படிப்பை முடித்துவிட்டு சட்டப்படிப்பில் சேர்வதற்காக தன்னைத்
தயார்படுத்திக்கொண்டிருந்தாள். அவள் மீனவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தமான பிரச்சனைகளில்
மிகுந்த நாட்டம் கொண்டவளாக இருந்தாள் என்றார் வ னி தா . நகரில் அமைந்திருக்கும்
ஸ்டெர்லைட்டின் தாமிர உருக்காலையை மூடுவதாக ஆட்சியரிடமிருந்து உறுதிமொழி
பெறுவதற்கான "தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடல்" எனும் அறைகூவலுக்கு
ஸ் னோ லி ன் இயல்பாகவே உடனடியாக செயலாற்றலானாள். “அவள் தனது அண்ணியையுடனும்,
அண்ணியின் எட்டு வயது குழந்தையுடனும் போராட்டத்திற்குச் சென்றாள்.” என்றார் வ னி தா
ஃப்ரண்ட்லைனிடம்.

இந்த ஆர்ப்பாட்டமானது, நாடு சுதந்திரமடைந்த பின், தமிழ்நாடு கண்ட மிக மோசமான


போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேரை கொன்றுவிட்டது. ஸ் னோ லி ன் , ஆட்சியர் அலுவலகத்தின்
அருகில் போலிசாரின் தோட்டாவிற்கு இறையானாள். அந்த துப்பாக்கிச் சூட்டின் தாக்கமானது,
அவளது முகத்தின் ஒரு பகுதியை தோட்டா பிய்த்தெறிந்துவிட்டது. "தினமும் நான் அவளுக்கு
முத்தமிடுவேன். இப்போது நான் அவளை வழியனுப்பக்கூட முத்தமிட முடியாது போயிற்று. எங்கே,
அவளுடைய தேவதை போன்ற முகம்?" வனிதா அவருடைய கணவர் அவரருகே
அடக்கமுடியாமல் அழுதுகொண்டிருந்த அதே நேரத்தில் தானும் நொறுங்கித்தான் போனார்.

பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளாலான சுமார் 500 பேர் கொண்டதொரு


கூட்டம், காலை 9 மணி சுமாருக்கு வரலாற்று சிறப்புவாய்ந்த தேவாலயத்தின் முன் கூடியது.
ஆலையை மூடவேண்டும் என்ற கோரிக்கைகள் கொண்ட பதாகைகளும், கையால் எழுதப்பட்ட
போஸ்டர்களும் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் மக்கள்
ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி புறப்பட்டனர். 1990 களில் ஸ்டெர்லைட்க்கு எதிரான
போராட்டங்கள் செயலிழந்து போயிருந்த கிராமங்களில் ஒன்றான, அ. குமாரரெட்டியாபுரம், 100
நாட்களுக்கு இப்போராட்டத்தை தக்கவைக்கும் புது வீரியத்தைக் கண்டது.
ஸ்டெர்லைட் ஆலை, 20 ஆண்டுகளுக்கு முன்னர் அது நிறுவப்பட்டதிலிருந்தே காற்றையும்,
நீரையும் மாசுபடுத்தும் மாசுபடுத்தியாகவே இருந்துள்ளதென்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடுமையான எதிர்ப்பு இருந்த போதிலும், 1994 ல் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய
அன்றைய தினத்திலிருந்தே, லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வே தா ந் தா
ரி சோ ர் ச ஸ் குழுமத்தின் ஒரு துணைநிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனமும், சர்ச்சையும்
இணையானவை. கடந்த இரு தசாப்தங்களில், பல்வேறு விதிமீறல்கள் மற்றும் பல மோசமான
விபத்துகள் காரணமாக, பலமுறை ஆலை மூடப்பட்டது. (காண்க: “ஸ்டெர்லைட் போராட்டத்தின்
வரலாறு”, காலச்சுவடு, ஜூன் 2018.) மார்ச் 23-24, 2013 அதிகாலையில் வாயு கசிவு ஒன்று
தூத்துக்குடியின் மக்கள் தொகையான சுமார் நான்கு லட்சம் பேர்களில் பாதிபேரைத்
தூங்கிக்கொண்டிருந்த போதிலும் மூச்சுத் திணறலுக்குள்ளாக்கியது. ஸ்டெர்லைட் நிறுவனம்
அக்கசிவை மறுத்தது. கசிவின் ஆரம்பம் எதுவென்பது இன்னமும் ஒரு மர்மமாகவே உள்ளது.
அப்போதிலிருந்தே நகர மக்கள் ஆலையைக்கண்டு அஞ்சுகின்றனர்.

சாதி மத வெறுபாடுகளைக் கடந்து, அனைத்து தரப்பு மக்களும் ஆலைக்கு எதிராக


கைக்கோர்த்தனர். இது, கவனமாக திட்டமிடப்பட்ட திட்டங்களை கவிழ்த்துவிடுமோ என்று சில
சுயநலமிகள் அச்சமடைந்தனர். ஜோதிகுமார், நாடார் சமூகத்தைச் சார்ந்த மாணவர் மற்றும்
அவருடைய சகாக்கள் போராட்டக்காரர்களுடன் இணைந்துகொள்ள தேவாலயத்தை
அடைந்தார்கள். "2013 ல் வாயுக்கசிவு ஏற்பட்டபோது, ஆஸ்துமா நோயாளியான தனது தந்தையார்
மூச்சு திணறலால் உயிரிழக்கும் நிலைக்குச் சென்றுவிட்டார். அவரை காப்பாற்ற அவசரஅவசரமாக
மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல வேண்டியதாயிற்று," என்றார் ஜோதிகுமார். "இந்த விஷமிகள்
1996 லிருந்து நடக்கும் ஸ்டெர்லைட்க்கு எதிரான இப்போராட்டங்களை சீர்குலைக்க 'பிரித்தாளும்'
சூழ்ச்சியை கையாண்டனர்," என்று தனது தந்தையார் கூறியதை நினைவுகூர்ந்தார் ஜோதிகுமார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை - 1994 லிலிருந்து1999 வரை மற்றும் வாயுக்கசிவு
நகரத்தை தாக்கிய மார்ச்சு 23, 2013 லிருந்து 100 நாட்கள் தொடர்ந்த தற்போதய போராட்டம் வரை
என்ற இரு கட்டங்களில் மதிப்பீடு செய்தல் வேண்டும்.

“திருவிழா மனநிலை”

தெருக்களில் இறங்கி நடக்கத் தொடங்கியபோது, மக்கள் திரள் ஒரு பேரணியாகப் பெருகி,


ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாகவே சென்றது. பல்வேறு இடங்களிலிருந்து ஆட்சியர்
அலுவலகம் நோக்கி குவியும் போராட்டக் குழுக்களை ஒருங்கிணைப்பதை சமூக ஊடக தகவல்
பரவல்களும், அலைபேசிகளும் பெரிதும் இலகுவாக்கின. “உண்மையில், அது ஒரு திருவிழா
மனநிலையாகவே இருந்தது. எங்களை குடும்பத்துடன் வரவே கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. சமூக
அக்கரையுடைய குழுக்களை ஒற்றைக் குடையின் கீழ் கொண்டுவரும் மற்றும் ஆலைக்கு எதிரான
போராட்டத்தை ஒருங்கிணைக்கும் அமைப்பான ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இயக்கங்களின்
கூட்டமைப்பு (தி ஃபெடரேஷன் ஆஃப் ஆன்டி ஸ்டெர்லைட் மூவ்மென்ட்), உடல் நீரிழப்பு மற்றும்
சோர்விலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள குடிநீர், உணவு பொருள்கள் மற்றும்
திண்பண்டங்களுடன் வருமாறு எங்களை கேட்டுக்கொண்டது,” என்றார் தற்போது காயங்களுடன்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 45 வயதான பால்பாண்டி.

இது ஒரு அடையாள ஆர்ப்பாட்டம் மட்டுமே மேலும் ஆட்சியர் சந்திப்பிற்குப் பின்னர்


அனைவரும் திரும்பிவிடுவோம் என்று அமைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர், என்றார். “மனைவி,
மக்கள், மற்றும் குழந்தைகளுடன் வந்த எங்களை வன்முறையில் ஈடுபட்டனர் என்று கூறுவது
அபத்தமாக இல்லையா?“ அமைதியாக பேரணியில் நடந்து வந்துகொண்டிருந்த எதிர்ப்பாளர்களை,
வழிநெடுகிலும் மோசமான வார்த்தைகளால் சீண்டியது போலிசாரே,” என்றார் அவர்.
ஒரு சில தமிழ் தொலைக்காட்சி சேனல்கள், காலையில், பேரணியை நேரடியாக ஒளிபரப்பி
வந்தனர். ஆனால், அவர்கள் மட்டுமே நன்கு அறிந்த (ஒப்புக்கொள்ள முடியாத) காரணங்களால்
அதை நடுவிலேயே நிறுத்திக்கொண்டனர்.

மக்களின் இக்கூற்றுகள் உண்மையெனில், மாநில அரசு மற்றும் அதன் காவல்துறையும்


கூறியது போல் நிலைமை சீர்குலைந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக ஆனது எப்போது, ஏன்?
இந்த கேள்விக்கான பதிலின் திறவுகோல், ஒருவேளை அடுத்தடுத்து தொடர்ந்து துரிதகதியில்
நடந்தேறிய சம்பவங்களில் காணப்படலாம்.

குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு-144 (சட்டவிரோதமாக கூடுதல்) ஊரடங்கு உத்தரவை


நிர்வாகம் அமலுக்குக் கொண்டுவந்தது. ஆயினும் அதன் அமலாக்கம் முறண்பாடானது;
தொடக்கத்தில் அது, நகரின் பெரும்பான்மையான பகுதியை உள்ளடக்கிய தூத்துக்குடி தெற்கு
காவல் நிலையப் பகுதியிலும், பின்னர், ஸ்டெர்லைட் மற்றும் ஆட்சியர் அலுவலகம் அமைந்த
சிப்காட் காவல் நிலையப் பகுதியிலும் விதிக்கப்பட்டது.

மே 22 அன்று, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் காவல்துறையினரின் ஒரு


பிரிவு, பேரணியினரை எதிர்கொண்டு கலைந்து செல்லுமாறு கூறினர். நகரினுள் கூடியிருந்த மக்கள்
கலைந்துசெல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்றாலும் கிராமத்திலிருந்து வந்த மக்கள்
மேலும் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இது மக்கள் மனதில் குழப்பத்தையும்,
அவநம்பிக்கையையும் தோற்றுவித்தது என்று ஒரு மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
"காவல்துறையினர் தங்களது ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்வதாக அவர்கள் நினைத்தார்கள்,"
என்றார்.

விரைவிலேயே, பேரணி செல்லும் பாதை நெடுகிலும் பல்வேறு இடங்களில் காவல்


துறையினருக்கும் பொது மக்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. "இது ஆட்சியர்
அலுவலகம் முன்பாக நடைபெறவிருக்கும் ஓர் அடையாள ஆர்ப்பாட்டமாக மட்டுமே
இருக்குமென்றும், தேவையற்ற எந்த செயலிலும் ஈடுபடும் உத்தேசம் ஏதும் எங்களுக்கு
கிடையாதென்றும் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தோம். எங்களது மக்களை
சமாதானப்படுத்தும் பொருட்டு, இந்த ஆலையின் நிலையைப்பற்றி ஆட்சியரிடமிருந்து வாக்குறுதி
பெறவே நாங்கள் விரும்பினோம்." என்றார் போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த
தொழிலாளி பிரைட்டன் (26).
ஆட்சியர் இல்லாமை

ஆனால், மாவட்ட ஆட்சியர் N. வெங்கடேஷ், தலைமையகத்தில் எங்கும் காணவில்லை.


போலிஸ் நடவடிக்கை நடந்தேறிக் கொண்டிருக்கும் அவ்வேளையில் ஆட்சியர், "ஜமாபந்தி"
(வருவாய் தனிக்கை) நடத்தும் பொருட்டு கோவில்பட்டி நகரில் இருந்ததாகவும், தொடர்ந்து
தூத்துக்குடியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலிருக்கும் ஒட்டப்பிடாரம் பஞ்சாயத்து ஒன்றிய
அலுவலகத்தில் இருந்துவிட்டதாகவும் ஒரு மூத்த வருவாய்துறை அதிகாரி ஃ பி ர ண் ட் லை னு க்குத்
தெரிவித்தார். இது, ஆர்ப்பாட்டம் அதன் உச்சத்திலும், பதற்றம் தீவிரமாகவும் உணரப்பட்ட அதே
வேளையாகும். "சட்டப் பிரிவு-144 அமலில் இருந்தது மற்றும் அந்த நாளில் ஆட்சியர் அலுவலகம்
முற்றுகையிடும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் வெகு முன்னதாகவே
அறிவிக்கப்பட்டிருந்தது," என்றார் மதுரையிலிருந்து செயல்படும் தன்னார்வ மனித உரிமை தொண்டு
அமைப்பான ‘பீப்பிள்ஸ் வாட்ச்’சின் ஹென்றி டிப்ஹேன்.

வியத்தகுவகையில், வெங்கடேஷ், அவர் மட்டுமே நன்கு அறிந்த காரணங்களால், மாவட்ட


நிர்வாகத்தை இரண்டு தினங்களுக்கு காவல்துறையின் கைகளில் ஒப்படைத்துவிட்டு
தலைமையகத்தில் இருக்கவில்லை. கலவரம் நடந்துகொண்டிருக்கும்போது, காவல்துறையானது,
காவல்துறைக் கூடுதல் இயக்குனரால் (ஏ‌டி‌ஜி‌பி) (சட்டம் ஒழுங்கு) வழிநடத்தப்பட்டதோடு மேலும்
நான்கு காவல்துறைத் தலைவர்களையும்(ஐ.ஜி), இரு காவல்துறைத்
துணைத்தலைவர்களையும்(டி.ஐ.ஜி), 15 கண்காணிப்பாளர்களையும்(எஸ்.பி‌), பெரும் எண்ணிக்கையில்
காவல்துறை உதவிக் கண்காணிப்மாளர்களையும்(எ.எஸ்.‌பி), காவல்துறை துணைக்
கண்காணிப்பாளர்களையும்(டி.எஸ்.‌பி) கொண்டிருந்தது. அரசு, மே, 23 அன்று திருநெல்வேலி
ஆட்சியர், சந்தீப் நந்தூரியை வெங்கடேஷிடமிருந்து பொறுப்புகளை ஏற்குமாறு அனுப்பியப்
பின்னர் அமைதி திரும்பியதுப் போன்றதொருத் தோற்றம் உண்டானது. தூத்துக்குடி காவல்துறைக்
கண்காணிப்பாளர்(எஸ்.பி‌) P. மகேந்திரன், அதே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால்,
ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் துணை ஆட்சியர் உள்ளிட்ட மூத்த
வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த நெருக்கடியான நிலையின்போது இல்லாததுப் பற்றி மாநில
அரசிடம் எவ்வித விளக்கமும் இல்லை.

உளவுத்துறையின் தோல்வி

வன்முறைக்கு முந்தைய நிகழ்வுகள், உளவுத்துறை, நிர்வாகத்தை தோல்வியுறச்செய்த,


சரிசெய்ய முடியாததொரு உண்மையைச் சுட்டிக்காட்டியது. “ஒன்றும் நடக்காது என்று காவல்துறை
எங்களுக்கு உறுதியளித்தது. நாங்கள் அதை நம்பினோம்,” என்றார் அந்த வருவாய்த்துறை அதிகாரி.
ஆட்சியர் தனது வழக்கமான பணிகளை கவனிக்கச் சென்றதற்கு அளிக்கக்கூடிய ஒரு நம்பத்தகுந்த
பதிலாக ஒருவேளை இது இருக்கலாம். மூத்த அதிகாரிகள் இல்லாதுபோனதற்கான மாநில
அரசிடமிருந்து தரப்படும் விளக்கமானது, துணை தாசில்தார் போன்ற கீழ்நிலையிலிருக்கும் இரண்டு
அதிகாரிகள் ஏன் துப்பாக்கிசூட்டுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள் என்பதை விவரிக்க
உதவும். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 21 ன்படி அவர்கள் சிறப்பு நிர்வாக குற்றவியல்
நடுவர் அந்தஸ்த்து உடையவர்கள், மேலும் “நிர்வாக குற்றவியல் நடுவருக்கு உள்ள அனைத்து
அதிகாரங்களையும் பெற்றவர்களாவர்.”

மனித உயிர்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பின் மீது பொதுமக்கள் எழுப்பிய


கண்டனங்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் (AIADMK) தலைமையிலான
மாநில அரசை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியதால், விதிகளை பின்பற்ற தவறிய காரணத்தை
மேற்கோள் காட்டி, ஒரு துரித நகர்வில் மே 28, அன்று தனது வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின்
ஓர் ஆணையால் ஆலையை மூடியது.

மே 29 அன்று, சிப்காட் (SIPCOT) தொழிற்வளாகத்தின் நிர்வாக இயக்குனர், தொடர்ச்சியான


ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் மற்றும் மக்களின் உடல் நலம் குறித்த அச்சங்களினால்,
ஏற்கனவே முன்மொழியப்பட்ட ஆலையின் (இரண்டாம் கட்ட) விரிவாக்கத்திற்கு அளித்த நில
ஒதுக்கீட்டை (342.22 ஏக்கர்) ரத்து செய்தார். மேலும், நிலத்திற்கான விலையாக வசூலித்தத் தொகை
சிப்காட்டின் விதிகளின்படி திரும்ப அளிக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது. இருப்பினும், “இது
ஒரு துரதிஷ்டவசமான திருப்பம். எதிர்கால நடவடிக்கைள் குறித்து நாங்கள் முடிவெடுப்போம்,”
என்றது வேதாந்தாவின் அறிக்கை.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, சட்டமன்றத்தில் மே 29 அன்று கொண்டுவரப்பட்ட


சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானதிற்கு பதில் அளிக்கையில் “தவிர்க்க முடியாத காரணங்களால்
காவல்துறை இத்தகய நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.” என்று தெரிவித்தார்.
ஆனால், 13 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்கள் என்று அவர் ஒரு முறைகூட
சொல்லவில்லை, மாறாக 13 பேர் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் இறந்துவிட்டார்கள்
என்றார். மேலும், எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) மற்றும் சமூக விரோதிகளின்
மீது பழி சுமத்த அவர் தவறவில்லை.
100 வது நாள் பேரணியின் அறிவிப்பிற்கு முன்பே நிலைமையைத் தவறுதலாக கையாள்வது
துவங்கிவிட்டது. பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக, மாவட்ட
நிர்வாகமும், காவல்துறையும் அவர்களை பிரித்தாளத் தொடங்கியதென்பது, மக்கள் மத்தியில்
சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர். முந்தய
வாரத்தில் நடத்தப்பட்ட அமைதிக்கான கூட்டத்திற்கு, போராட்டத்தில் முனைப்புடன்
ஈடுபட்டிருக்கும் பெரும்பான்மையான ஆர்வலர்களை புறந்தள்ளிவிட்டு, ஒரு சில ஆர்வலர்களும்
வணிகர்களும் மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டனர். “இது வேண்டுமென்றே, ஸ்டெர்லைட்டுக்கு
எதிரான அமைப்பாளர்கள் இடையே பிளவு ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மற்றும்
பூமரங்க் போன்று தங்கள் பக்கமே திரும்பியதொரு நகர்வு. அடயாள ஆர்ப்பாட்டத்தை ஒரு
தனியார் பள்ளி வளாகத்தில் மட்டும் நடத்த ஒப்புக்கொள்ளுமாறு கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
நிற்பந்திக்கப்பட்டார்கள். பெரும்பான்மையானவர்கள் அதற்கு எதிரான நிலையில் பேரணியை
முன்னெடுக்க முடிவெடுத்தனர்.” என்றார் டிப்ஹேன்.

ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்லும் பேரணியினரை பல்வேறு இடங்களில்


காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது பிரச்சனையின்‌ அறிகுறிகள் தென்படத் துவங்கின.
முதலில், காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடயேயான முரண்பாடு, அங்கொன்றும்
இங்கொன்றுமான சீற்றத்துடன் கூடிய வாதங்கள் மற்றும் அவ்வப்போதுமான செருப்பு
வீச்சுக்களுடன் மட்டுமே இருந்தது. ஆனால், காவல்துறை தடியடி நடத்த துவங்கிய சமயத்தில்
தான் மக்கள் கற்களை வீசி எதிர்வினையாற்றத் தொடங்கினார்கள். “கூட்டத்தினரை ஆட்சியர்
அலுவலகம் நோக்கி ஈர்த்துச்சென்றது காவல்துறையினரே. அவர்கள் (காவல் துறை), பேரணியை
பிரித்துவிட்டிருக்க நினைத்திருந்தால், 9 கி.மீ. நெடிய பாதையில் VVD சிக்னல் சந்திப்பிலோ,
மடத்தூரிலோ செய்திருக்கலாம்.” என்று சுட்டிக்காட்டினார், ஸிடெர்லைட்க்கு எதிரான போராட்ட
குழுவின் சட்ட ஆலோசகரும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் உறுப்பினரும், பல்வேறு
பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டபட்டிருப்பவருமான வாஞ்சிநாதன்.

11.00 மணியளவில், VVD சிக்னல் சந்திப்பில், தூத்துக்குடி காவல்துறை ஏ.எஸ்.பி


செல்வநகாரத்தினம் தலைமையிலான காவல்துறையினர் தடியடியைக் கையாண்ட போதுதான்
குழப்பம் முதலில் ஆரம்பித்தது, என்கின்றனர் விவரமறிந்தவர்கள். பின்னர், பிற்பகலில் VVD சிக்னல்
சந்திப்பிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் திரேஸ்புரம் பகுதியில் வாழ்ந்த ஜே. ஜான்சி
ராணி என்ற 37 வயதான ஒரு பெண் இறப்பதற்குக் காரணமானா துப்பாக்கிச்சூட்டை நடத்திய
காவல்துறை குழுவிற்கு தலைமை வகித்தவரும் அதே அதிகாரி தான் என்கிறார்கள்
விவரமறிந்தவர்கள். எஸ்.பி.யின் முகாம் அலுவலகத்திற்கு முன்னால் கூடியிருந்த ஒரு கும்பலே
துப்பாக்கிச் சூடுக்கான காரணம் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில், அதே நேரத்தில், திருநெல்வேலி புறவழிச் சாலையில், போலீசார்


பேரணியாளர்களுக்கு எதிராக கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்தினர் மேலும் ஆட்சியர் அலுவலகம்
நோக்கி நகர்ந்துகொண்டிருந்த கூட்டத்தை கலைக்க தடியடியைக் கையாண்டனர். பெண்கள் மற்றும்
குழந்தைகள் கூட விட்டுவைக்கப்படவில்லை, அவர்களில் பலர் காயமடைந்தனர். இதனால்
கோபமடைந்த போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் தாக்கும் மனப்பாங்குடன் திரும்பி கற்களை
வீசித் துவங்கினர். “இவ்வாறாக ஆட்சியர் அலுவலகம் அருகே துப்பாக்கிச் சூட்டிற்கான
மிகப்பொருத்தமான சூழல் உருவாக்கப்பட்டது,” என்கிறார் வழக்கறிஞரும், ஆர்வலருமான ஒருவர்.

"திடீரென்று நாங்கள் துப்பாக்கிச் சுடப்படும் சத்தங்களை கேட்டோம்"

நகர்புறம் மற்றும் கிராமங்களில் இருந்து அணிவகுத்து வந்தவர்கள் கூட்டம், தடுப்புகளை


மீறி ஆட்சியர் அலுவலகத்தின் அருகே நண்பகல் சுமாருக்கு வந்து சேர்ந்தது. ”நாங்கள்
அலுவலக வாயிலிலிருந்து சுமார் 300 மீ தூரத்தில் நிறுத்தப்பட்டோம். பின்னர், தொடர்ந்து
துப்பாக்கிச் சுடப்படும் சத்தத்தை நாங்கள் கேட்டோம். கண்ணீர்புகை குண்டுகள் வெடிப்பும்,
தடியாயடிகளும் தொடர்ந்தன. எவ்வித எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. ஆட்சியர்
அலுவலகத்திலிருந்தும், அருகிலிருக்கும் ஸ்டெர்லைட் குடியிருப்பு வளாகங்களிலிருந்தும்
கரும்புகைமூட்டம் மேலெழும்புவதைக் கண்டோம். சில வாகனங்கள் எரிந்துகொண்டிருந்தது,
இருந்தும் நாங்களோ, ஆர்ப்பாட்டக்காரர்களோ அருகே செல்ல முடியவில்லை. திடீரென்று, மக்கள்
இரத்தம் கொட்டக்கொட்ட கீழே விழுவதைக் கண்டோம். இறந்தவர்களும், இறக்கும் தருவாயில்
இருப்பவர்களும், காயமடைந்தவர்களும் இருசக்கர வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டார்கள்.
அப்பாவி மக்கள் வேட்டையாடப்பட்ட சுமார் 40 நிமிடங்கள் முழுமையான குழப்பம் நிலவியது,"
என்கிறார் குண்டடிப்பட்ட 43 வயதான ஈவ்லின் விக்டோரியா. விரைவிலேயே, ஆட்சியர்
அலுவலகமருகே ஏற்பட்ட பெருந்துயரத்தின் பூதாகாரம் வெளிவரத்தொடங்கியது. துப்பாக்கிச்சூடு
ஒன்பது பேரைப் பலிவாங்கியிருந்தது. அவர்களில், ஸ்நோலின் மற்றும் ஸ்டெர்லைட்தூக்கு எதிரான
போராட்ட ஒருங்கிணைப்பில் தீவிர செயல்பட்டாளரும், ரேடிக்கல் யூத் ஃபிராண்ட்டைச்
சேர்ந்தவருமான 47 வயதான
பி. தமிழரசன், குண்டடிபட்ட தலத்திலேயே மரணமடைந்தவர்களாவர். துப்பாக்கிதித்
தோட்டாப்பட்டு காயமந்தவர்களும், கை, கால் முறிவு அடைந்தவர்களும் ஏராளம். உறுதி
செய்யப்படாத தகவல் இறந்தவர்கள் அல்லாமல் மேலும் 11 பேர் குண்டடிப்பட்டனர் என்றது.
காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்
கழகம் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்சுகள் சேவைக்கு உட்படுத்தப்பட்டன.

மறுநாள், பிரேதப்பரிசோதனை நடத்த முயற்சி எடுத்தபோது, இறந்தவர்களின் உறவினர்கள்


எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் 25 வயதான
எஸ். காளியப்பன், கொல்லப்பட்டார். உசிலம்பட்டியைச் சேர்ந்த 42 வயதான
என். ஜெயராமன், துப்பாக்கிச்சூட்டினால் ஏற்பட்ட காயங்களுக்கு பலியான மேலும் ஒருவர்.
போலீசாரின் துப்பாக்கிசூட்டிற்கு அப்போதுவரை பலியானவர்களின் எண்ணிக்கையை 12 க்கு
உயர்த்தியது. 13 வதாக பலியானவர், போலீசாரால் மார்பில் உதைக்கப்பட்டதாக கூறப்படும்
இருவப்புரத்தைச் சேர்ந்த 42 வயதான செல்வசேகர். 2011 ல் பரமக்குடியில் ஆறு தலித்துகள்
கொல்லப்பட்ட நிகழ்வுக்கும், 1980 ல் திருநெல்வேலியின் குறிச்சங்குளத்தில் எட்டு விவசாயிகள்
கொல்லப்பட்ட நிகழ்வுக்கும் பிறகு நடந்தேறியதொரு மிக மோசமான போலீஸ்
துப்பாக்கிச்சூடாகும். டிஜிபி சார்பில், மே 31 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எழுத்துமூலம்
அளிக்கப்பட்ட அறிக்கையில் இறந்தவர்கள் பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது.

சில காட்சிபொருள்கள் மற்றும் உறவினர்களின் கூற்றுக்களின் கூர்ந்தாராயிச்சியானது,


போலீசாரின் இந்த துப்பாக்கிசூட்டிலிருக்கும் கலங்கடிக்கக்கூடியதொரு பொதுப்பாங்கைக் தெரிய
வருகிறது. அது, பெரும்பாலும் மிகமிக அருகாமையிலிருந்து சக்தி வாய்ந்த துப்பாக்கிகளிலிருந்து
வருகிறது.

ஸ்நோலின், வாயில் சுடப்பட்டிருந்தாள் என்கிறார் வனிதா. தோட்டா அவளது முகத்தை


அடையாளங்காண முடியாத அளவிற்கு உருக்குலைய சிதைக்கும் முன்னர் மண்டையோட்டை
துளைத்துச் சென்றது. "அவர்கள் என் மகளைக் மிகக்கொடூரமாக கொலைசெய்துள்ளனர்.
குறைந்தபட்சம் அவர்கள், அவளின் காலிலோ, உடலிலோ சுட்டிருக்கலாம். நாங்கள் அவள்
முகத்தையாவது காண முடிந்திருக்கும்," என்கிறார் அவர்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நண்பர்களும் கூறுகையில் "அவர்கள்


குருவிகளைப்போல் சுடப்பட்டார்கள்," என்கின்றனர். திரேஸ்புரத்தில் உயிரிழந்த ஜான்சி ராணி
மண்டையோடு நொறுக்கப்பட்டுக் கிடந்தார். புஷ்பா நகரைச் சேர்ந்த பி. ரஞ்சித்குமார், திறமையான
குத்துச்சண்டை வீரர் மற்றும் தமிழரசன் இருவரின் தலையிலும் தோட்டாக்கள் இருந்ததாக
கூறப்படுகிறது. சிலோன் காலணியைச் சேர்ந்த 55 வயதான ஜி. கந்தையா மற்றும் எஸ். மணிராணி
இருவரும் கழுத்தில் சுடப்பட்டிருந்தவேளையில் அன்னை வேளாங்கன்னி நகரைச் சேர்ந்த 47
வயதான ஜே. அந்தோணி செல்வராஜ் மார்பில் சுடப்பட்டிருந்தார்.

கொல்லப்பட்ட 13 பேர்களில் நால்வர் தலித்தும், மூவர் மீனவருமாவர். பலியானோர்களில்


மற்றவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள்.

அந்த இருதினங்களில், காவல்த்துறையின் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள், இரண்டு


பெண்கள் உட்பட 12 பேர்கள் மற்றும் காயங்களினால் ஒருவர் என்பதை சந்தீப் நந்தூரி
உறுதிபடுத்தினார். மொத்தத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ஓர் பத்திரிகை
வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் எத்தனைபேர்
இருக்கிறார்கள் என்பதைப்பற்றி மௌனம் சாதிக்கிறார். ஏறத்தாழ 83 பேர் சிறு
காயங்களடைந்துள்ளார்கள். போலீஸ் தரப்பில் 24 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் உள்ளிட்ட 34 பேர்
காயமடைந்து திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று
தெரிவிக்கப்பட்டது. நான்கு சக்கர மற்றும் இரு சக்கர, அரசு மற்றும் தனியார் வாகனங்கள் ஏறத்தாழ
100 வாகனங்கள் கலவரத்தின்போது தீக்கிரையாகின. மொத்த இழப்பு சுமார் 1.65 கோடி ரூபாய் என்று
மதிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ஈட்டுத்தொகையாக சுமார் 1.04 கோடி ரூபாய்
வழங்கபட்டபோதிலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான நட்டஈடூ 10 லட்சம் ரூபாயிலிருந்து 20
லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கிறது.

“துப்பாக்கிக் குதிரையை நேசிக்கும் போலீசார்”

அந்த இரு தினங்களின் வன்முறையை நுணுக்கமாக மதிப்பிடுகையில், காவல்துறை


சூழ்நிலையை திறமையாக கையாளாததை அம்பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கூட்டத்தை
அமைதியான முறையில் கலைந்து செல்ல வைப்பதற்கு பதிலாக, அதைத் தூண்டிவிடுதல் எனும்
தங்களுடைய நயவஞ்சக நோக்கத்தை நிறைவேற்றிட "திட்டமிட்டு வேண்டுமென்றே" கலவரம்
போன்றதொரு சூழலை உருவாக்கியது போலிருக்கிறது என்ற ஆர்வலர்கள் மற்றும்
எதிர்ப்பாளர்களின் கூற்றை மெய்ப்பிக்கவும் செய்கிறது. "சாதாரண உடையில் துப்பாக்கி ஏந்திய
போலீசார் கூட்டத்தினுள் கலந்திருந்தனர். தோட்டாக்கள் எங்கிருந்து வந்தன என்பது எங்களுக்குத்
தெரியாது. அவர்களில் பலர் வெள்ளை சட்டைகளிலும், வேட்டியிலும் கூட காணப்பட்டனர்,"
என்றார் மயிரிழையில் உயிர் தப்பிய ஆர்வலரும் ஒருங்கிணைப்பாளருமான ஒருவர்.

இக்கூற்றுகளை முற்றிலுமாக புறந்தள்ளிவிட முடியாது. ஆட்சியர் அலுவலகம் அருகே டி-


ஷர்ட் மற்றும் விளையாடும்போது அணியும் காற்சட்டையணிந்து, ஒரு வெண்ணிற காவல்துறை
வாகனத்தின் மேல், தொலை-தூரம் சுடக்கூடிய துப்பாக்கிகளைக்கொண்டு குறிபார்க்கும் மூன்று
போலீசாரை காட்டும் ஒரு காணொளிப் பதிவு சமூக ஊடகத்தில் வைரலாகி, நாகரிக சமூகத்தை
அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"இது போன்ற சூழ்நிலைகளில் சாதாரண உடையணிந்த போலீசாரை கூட்டத்தில்


கலக்கவிட்டு பயன்படுத்துவது ஆபத்தான ஒன்று. அவர்கள், போராட்டத்தை முன்னின்று
நடத்துபவர்களை 'தேர்ந்தெடுத்து சுட்டுவீழ்த்தும்' ஸ் னை ப் ப ர் ஸ் என்ற வலுவான சந்தேகம்
எங்களுக்கு இருக்கிறது. ''இலக்கு நிர்ணயித்து சுடுவதை' கையாண்டார்கள் என்று போலீசார் மீது
நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்," என்றார் டிப்ஹேன்.

சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் (PUCL), அதன் செய்தி வெளியீட்டில்,


கிட்டத்தட்ட அதே கருத்துக்களை எதிரொலித்தது. "போலீசார், நிராயுதபாணியாக நின்ற
கூட்டத்தினர் மீது எவ்வித முன்னறிவிப்புமின்றி கடுமையான மற்றும் எவ்வித
தூண்டுதலுக்குமுள்ளாகாதுத் தடியடியைக் கையாண்டனர். இது, கூட்டத்தின் ஒருசாராரிடமிருந்து
எதிர்வினையைத் தூண்டி கல்வீச்சுக்கு வழிவகுத்தது," என்கிறார் தேசியப் பொது செயலாளர் வி.
சுரேஷ்." இது, பாதுகாப்பற்று, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த
போராட்டக்காரர்களை இலக்கிட்டுச் செய்த கொலை" என்று கூறியது. PUCL மேலும் கூறுகையில்
"அது, குறிப்பாக போராட்டக்காரர்களை கொல்வதற்காக நடத்தப்பட்ட ஒரு நியாயமற்றதூம்,
அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோததுமான துப்பாக்கிச்சூடு". ஆனால், காவல்துறை, “சம்பந்தமற்ற
சமூகவிரோதிகளின்” வழிகாட்ட, செயலாற்றவல்லதோர் கும்பல் ஆட்சியர் அலுவலகத்தை
சூறையாடும் எண்ணத்துடன் நுழைந்தனர் என்று கூறி துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தியது. “மூத்த
அதிகாரிகளுக்கும் இலக்கு வைக்கப்பட்டிருந்தது என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்தது” என்றார்
ஓர் காவல்துறை அதிகாரி. முதலமைச்சர் பழனிச்சாமியும் “வெளியிலிருந்து சமூக விரோத சக்திகள்”
ஊடுறுவி சட்ட-ஒழுங்கு சீர்கேடு நிலையை உருவாக்கினார்,” என்றார்.

ஆனால், அவர்களின் கூறுக்கு புறம்பாக, மாவட்ட நிர்வாகம் ஊடகங்களுக்கு வெளியிட்ட


காணொளிகளின்படியும், கல்வீச்சில் ஈடுபட்ட எந்தவொரு எதிர்ப்பாளர்களும் ஆட்சியர்
அலுவலகத்திற்குள் நுழையவில்லை.

கற்களின் மழையை எதிர்கொண்ட காவல்துறையினர், காவல்துறைப் படையின் மற்றொரு


பிரிவினர் வந்து கும்பலை விரட்டியடிக்கும்வரை ஆட்சியர் அலுவலகத்தினுள் பின்வாங்கி,
நுழைவாயிலை உட்புறதில் தாழிட்டுக்கொண்டனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சில அடயாளங்காணமுடியாத நபர்கள் அருகிலிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதையும்,
தீயிட்டு கொளுத்தியதையும் காண முடிந்தது. நிதர்சனத்தில், நுழைவாயிலின் கண்ணாடி
உடைந்திருந்ததைத்தவிர, மேசை, நாற்காலிகளோ, கோப்புகளோ, ஆவனங்களோ எவ்வித
பாதிப்புகளுக்கும் உள்ளானதைக் காண முடியவில்லை என்று அவர்கள் கூறினர். கூடுதலாக
கூறுகயில் தகவல் மையம் கூட எவ்வித பாதிப்புமடையாமல் அப்படியே இருந்தது என்றனர்.

"அந்நிறுவனத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தின் பொறுப்பை தோளேற்றி நடத்தும்


அந்த ஒன்றுபட்ட குழுக்கள் மீது பழிபோடும் ஒரு தெளிவான சூழ்ச்சியே," என்கிறார் மனித
உரிமைகள் அமைப்புக்களின் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த அ. மார்க்ஸ். உண்மையை
கண்டறியும் பணியை மேற்கொண்ட அவரும், மற்றேனைய ஆர்வலர்களும், மக்களின்
பிரச்சனைகளை முன்னெடுத்து போராடும் "ஜனநாயக சக்திகளை அரக்கத்தனமாக சித்திரிக்கும்"
மாநில அரசு மற்றும் சில வலதுசாரி அமைப்புகளின் முயற்சிகளை கண்டித்தனர். "சமூக-விரோத
சக்திகள் நுழைந்துவிட்டனர் என்ற கீச்சிடும் கூச்சல், காவல்துறையின் ஒட்டுமொத்த மனித உரிமை
மீறல்களை மூடிமறைக்க முயற்சிக்கும் பலவீனமானதொரு தந்திரமாகும். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட
எந்த ஒரு அமைப்பும் தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்றார் மார்க்ஸ்.

தமிழரசன், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் செயலூக்கமுள்ள அமைப்பாளராக


இருந்தவர். அதே நேரத்தில், குண்டடிபட்டு காயங்களால் மருத்துவமனையில் உயிரிழந்த என்.
ஜெயராமன், உசிலம்பட்டி அருகே ஒரு கிராமத்திலுள்ள மக்கள் அதிகாரம் எனும் சமூக
அமைப்பின் உறுப்பினராக இருந்தவர். "தூத்துக்குடி வன்முறைக்குப் பிறகு, எங்கள் அமைப்பைச்
சேர்ந்தவர்களை எவ்வித காரணங்களுமின்றி காவல்துறையினர் காவலில் வைக்கின்றனர். எங்களது
அமைப்பு ஜனநாயக முறைப்படி இயங்கும் ஓர் அமைப்பாகும். நாங்கள், தங்களது உரிமைக்காக
போராடும் மக்களுக்கு துணை நிற்கின்றோம். எங்களை ஒரு தீவிரவாதிகள் குழுவாகச் சித்தரிப்பது
மிகவும் வருத்தமளிக்கிறது," என்கிறார் மாநிலம் முழுவதுமுள்ள அதன் உறுப்பினர்கள்
இலக்காக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில
ஒருங்கிணைப்பாளரான சி. ராஜு.

“காணாமல் போன” இளைஞர்கள்


நிலைமை மேலும் சீர்கெடாது காப்பாற்றியது உள்ளூர் மக்கள், ஆர்வலர்கள்,
வழக்கறிஞர்கள், வணிகர்கள் மற்றும் ஏனையோர்களையும் உள்ளடக்கிய தூதுக்குடி சமூகத்தின்
கூட்டு செயல்பாடாகும். "பிரச்சனை உண்டாக்கும் சாத்தியக்கூறு உள்ளவர்களை வெளியேற்ற"
என்று மூத்த காவல்துறை அதிகாரி கூறுவதுபோல், காவல்துறையினர் நள்ளிரவில் தங்களது வீட்டு
கதவுகளை இடித்து, வீட்டிலிருந்தவர்களை இழுத்துச் சென்றபோது, பொறுப்புள்ள மூத்த
வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் களத்தில் இல்லாத நிலையில், தூத்துக்குடி மக்களுக்கு
தங்களது மனக்குறைகளை முறையிடுவது கடினமானது. "மே 22 ன் வன்முறைக்குப் பின்னர்,
உடனடியாக, நகர் முழுவதுமான மனிதவேட்டை தொடங்கியது. நகரத்தின் மீது ஒரு மிருகத்தனமான
கட்டுப்பாட்டை கையாண்ட, ஆக்கிரோஷமான காவல்துறையினரிடம் எங்களால் பேசமுடியவில்லை.
எனவே, நீதித்துறையின் உடனடி தலையீட்டுக்காக முயற்சிசெய்யும் வழக்கறிஞர்களை நாங்கள்
அணுகினோம்," என்று ஓய்வுபெற்ற கல்வியாளரும் சமூக ஆர்வலருமான ஒருவர் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி அளிக்க வழக்கறிஞர்கள் சட்டப்படி உரிமையுடையவர்கள்,"
என்று சென்னை உயர்நீதி மன்றமும் அறிவித்தது.

இந்த நேர்மறையான நீதித்துறைத் தலையீடு மக்களுக்கு நம்பிக்கையூட்டியது. தூத்துக்குடி


வழக்குரைஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் குழு ஒன்று, மூத்த வழக்கறிஞர்
A.W.D. திலக் அவர்களின் தலைமையில், கைது செய்யப்பட்டு ரகசிய இடங்களில் வைத்து
மூன்றாம்தரச் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட அப்பாவி இளைஞர்கள் பலரைப் பிணையில்
விடுவித்தது. மனு ஒன்றைத் தொடர்ந்து நீதிமன்றம் தலையிடும் வரை, அந்த 16 வயது முதல் 28
வயதுக்குட்பட்ட அனைத்து இளைஞர்களில் ஒருவர் கூட இரண்டு தினங்கள் முழுவதும்
நீதித்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை. சட்டவிரோத கைதின் மீது உத்தரவைக் கோரியவாறு,
ஒரு மனுவுடன் மே 23 ம் தேதி அந்த வழக்கறிஞர்கள் குழு, தலைமைக் குற்றவியல் நடுவர் பகவதி
அம்மாள் அவர்களை அணுகியது.

தலைமை குற்றவியல் நடுவர் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, அந்த


கோரிக்கைகளை சரிபார்க்க, இளைஞர்கள் கைதிகளாக வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட அந்தந்த
காவல்நிலையங்களில் நேரில் சென்று விசாரிக்கும் தேடுதல் அதிகாரியாக விளாத்திகுளம் நீதிமன்ற
நீதிபதி காளிமுத்துவேல் அவர்களை நியமித்தார். அவர் அங்கு சென்று சேரும் முன்னரே
போலீசார், அனைவரையும், மொத்தம் 95 பேர், வல்லநாடு காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி
தளத்திற்கு இடம் மாற்றிவிட்டனர். சட்டத்திற்குட்பட்ட சிறைச்சாலைக்கு வெளியே சட்டவிரோதமாக
கைது செய்து வைத்திருப்பதற்கு நடுவர் ஆட்சேபனைகள் தெரிவித்து, 30 பேரை உடனடியாக
விடுதலை செய்தார். பின்னர் அவர்கள் காவல் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டனர், மேலும்
அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147, 148, 353 மற்றும் தமிழ்நாடு பொதுச் சொத்து
(சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992, பிரிவு 3 மற்றும் 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள்
பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மே 24 அன்று நீதிமன்றத்திற்கு
கொண்டு வரப்பட்டனர். இருப்பினும் வழக்கறிஞர்கள், அனைவருக்கும் பிணையில் விடுதலை
அளிக்க, நடுவர் சாருஹாசினி முன்பு மனு தாக்கல் செய்தனர். அனைவருக்கும் பிணையில்
விடுதலை அளிக்கும் முன்னர், அவர் இரவு வெகுநேரம் வரை இருந்து ஒவ்வொரு மனுவின் மீதும்
விசாரணை நடத்தினார்.

பின்னர், இளைஞர்களை மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறை அனுமதிக்காத


உண்மையை நீதித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இது ஏனெனில், அவர்கள்
சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்று குற்றம்சாட்டி, அதற்கு சாட்சியாக அவர்களின் உடல்களில்
பிளந்து கிடைக்கும் காயங்களைக் காண்பித்தனர். அந்த இளைஞர்களை மருத்துவ பரிசோதனைக்கு
கொண்டு சென்றபோது, பணியிலிருந்த மருத்துவர்கள் அந்தக் காயங்களை பதிவிட மறுத்துவிட்டனர்
என்றும் குற்றம் சாட்டினார். நீதித்துறை அதிகாரிகள் காவல் நிலையத்திற்கும் தூத்துக்குடி அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் வருகை தந்து காயமடைந்தவர்களின் வாக்குமூலத்தை
பதிவுசெய்ததோடு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதையும் உறுதி செய்தனர்.

"எப்படி கைது செய்யப்பட்டவர்களை, சட்ட வரையறைக்கு புறத்தேயுள்ள இடத்திற்கு


கொண்டுசெல்ல முடியும்? அது ஒரு அடாவடித்தனம், போலீஸ் அகங்காரத்தின் உச்சபட்சச் செயல்.
துணைநிலை நீதித்துறை இல்லையெனில், இந்நேரம் பலர் சிறையில் உழன்றுகொண்டிருப்பார்கள்,"
என்றார் அக்குழுவைச் சேர்ந்த E. அதிசயகுமார். இவ்வாறாக, அந்த தூத்துக்குடி வழக்குரைஞர்
சங்கத்தின் வழக்கறிஞர் குழு, மாவட்ட நீதித்துறை அதிகாரத்தின் மூலம், சட்டவிரோதமாக காவலில்
வைக்கப்பட்ட 30 சிறார்கள் உள்ளிட்ட 95 இளைஞர்கள் அனைவருக்கும், பிணையில் விடுதலைப்
பெற்றுத்தந்தது. வன்முறையின்போதும், வன்முறைக்குப்பிறகும் குறிப்பாக பிரேத பரிசோதனை
உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தலையீடு பொதுமக்களுக்கு
அவ்வமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கைகளை மீட்டெடுக்க உதவியது.

"எந்த ஒரு குடும்பமும், அந்நாளின் இறுதியில் தங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்கள்


பத்திரமாக வீடு திரும்பவில்லையே என்ற அச்சத்தில் வாழ்தல் கூடாது," என்றார் மாதாகோயில்
கமிட்டியைச் சேர்ந்த ஆனந்தி. "மாநில அரசு அதன் சொந்த மக்களையே கொன்றுவிட்டது,"
என்கிறார் அவர். 1996 ல் இந்த நகரம் சந்தித்த கலவரம் மற்றும் 2018 ல் நடந்த வன்முறையாகிய
இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒற்றை பிரச்சனையால் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது: அது
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டமே. இந்த இரண்டு நிகழ்வுகளும் சுமார் இரண்டு
தசாப்த இடைவெளியைக் கொண்டன, ஆனால் அவை முட்டாள்தனமான மனித உயிரிழப்பாலும்,
சொத்துக்கள் அழிவாலும் பிணைக்கப்பட்டிருந்தன.

"இந்த போலீஸ் துப்பாக்கிச்சூடானது எதிர்ப்பாளர்களின் குரலோசைகளை


அடக்குவதேயாகும். ஆனால், இது அடக்குமுறையைக் கையாளும் ஓர் அரசாக இருந்தபோதிலும்,
தனது ஆபத்துகளின் பாரம்பரியத்துடன் கூடிய பாதுகாப்பு பயங்கரங்களின் சாதனைக்கு
பெயர்பெற்ற அவ்வாலைக்கு எதிரான போராட்டம், இங்குள்ள மக்களின் போராட்ட குணத்தைத்
தூண்டியது," என்கிறார் மார்க்ஸ். புது தில்லியைச் சார்ந்த மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணி,
"மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தவிர இது
வேறொன்றுமில்லை" என்று கூறியது.

அத்தகையதோர் கடும் சோதனைக்குப் பின்னர் தூத்துக்குடி மக்கள் ஓர் அச்ச உணர்வில்


ஆட்பட்டிருப்பதென்பது ஓர் ஆச்சரியமல்ல. காயமுற்றோர்களையும், துயரத்திலிருக்கும்
இறந்தவர்களின் உறவினர்களையும் ஃ பி ர ண் ட் லை ன் பத்திரிகை நிருபர் சந்தித்தபோது அவர்கள்
மிகவும் அச்சத்துடன் காணப்பட்டனர். அந்த தொழில் நிறுவனம் தங்களது வாழ்க்கையையும்
வாழ்வாதாரங்களையும் அழித்துவிடும் என்று நம்பினார்கள். "எங்களைப் பாதுகாக்கவேண்டிய மாநில
அரசு, எங்களை கைவிட்டுள்ளது. நாங்கள் ஓர் பேரழிவு சூழலில் இருக்கிறோம் மேலும் எவ்வித
போபால் விஷவாயு பெருந்துயர் போன்ற ஆதரவுமற்ற நிலையை நினைத்து அச்சம்
கொள்கிறோம்," என்கிறார் தனது இடது காலில் குண்டடிகாயத்துடனிருக்கும் 19 வயதான
தொழிலாளி முத்துக்குமார்.

இயல்பு நிலையை மீட்டெடுப்பதும், மக்களின் மனதில் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதும்


மாநில அரசுக்கு கடுமையானதாக இருக்கும். கூடுதல் தலைமை செயலாளர் (போக்குவரத்து) P.W.C.
தேவிதார் மற்றும் முதன்மை செயலாளர் (வேளாண்மை) ககன்தீப் சிங் பேடி ஆகியோர் அடங்கிய
இருவர் குழு அமைதியை மீட்டெடுக்கும் பணியில் உதவிட தூத்துக்குடியில் முகாமிட்டது. இது,
கொந்தளிப்பான சூழ்நிலையை சீரமைப்பதில் பெருமளவில் வெற்றிபெற்றது.
காயமடைந்தவர்களை விசாரிப்பதற்கு மருத்துவமனைக்கு வந்தபோது பகைமையுடன் கூடிய
வரவேற்பைப் பெற்ற அஇஅதிமுக அமைச்சர் கடம்பூர் C. ராஜுவைப் போலல்லாமல், இந்த இரு
அதிகாரிகள் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். இந்நிருபர் பேடி அவர்களை ஆட்சியர்
அலுவலகத்தில் சந்தித்தபோது விரைவிலேயே இயல்புநிலை திரும்புவதற்கும், மக்களிடம்
நம்பிக்கையை நிலைநாட்டவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக
அவர் கூறினார். வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்,
பேருந்துகளை இயக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, காவல்துறையினர் படிப்படியாக
விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சினிமா நடிகரும் அரசியலுக்கு வர எத்தனிப்பவருமான ரஜினிகாந்த்


காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூற வந்தபோது, காயமடைந்து
சிகிச்சைப்பெற்றுவரும் ஓர் இளைஞன் "நீங்கள் யார்?" என்று அவரைக் கேட்டபோது மக்களின்
கோபத்தை ருசிக்க நேர்ந்தது. தர்மசங்கடமடைந்த நிலையில் ரஜினிகாந்த் மருத்துவமனையை விட்டு
வெளியேறி, சமூக விரோத சக்திகள் போராட்டத்தில் மக்களை ஊடுருவி விட்டன என்று
அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கூறினார். போராட்டங்களும் கிளர்ச்சிகளும் இதுபோன்று
தொடர்ந்தால் தமிழ்நாடு விரைவிலேயே சுடுகாடாக மாறிவிடும் என்றார். இதுவும் பல்வேறு
தரப்பிலிருந்து விமர்சனத்தை ஈர்த்தது.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற


மருத்துவமனைக்கு வந்தபோது, ஊடகங்கள் மருத்துவமனையினுள்ளே அனுமதிக்கப்படவில்லை.
டி.ஜி.பி., டி.கே. ராஜேந்திரன், மே 27 அன்று நகருக்கு விஜயம் செய்தார். தமிழ்நாடு ஆளுநர்
பன்வாரிலால் புரோஹித்தும் காயமுற்றவர்களைக் காண வந்தார். தமிழ்நாடு அரசு, வன்முறை பற்றிய
விசாரணையை சி.பி.-சி.ஐ.டி.க்கு மாற்றிய அதேவேளையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தானே முன்வந்து இந்நிகழ்வின் மீது வழக்குப் பதிவு செய்தது. துப்பாக்கிச்சூடு பற்றிய விவரங்களை
ஆராய சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, அருணா ஜகதீசன், தலைமையிலான
விசாரணைக் கமிஷனை மாநில அரசு அமைத்துள்ளது.

மாநில அரசாங்கத்தின் தீவிர ஆதரவுடன் பிழைத்துவரும் ஒரு ஆலைக்கு எதிரான


போராட்டத்திற்கு தூத்துக்குடி மக்கள் மிகப்பெரிய விலை கொடுத்துள்ளனர். நீண்ட காலமாக
நடத்தப்பட்ட இந்த போராட்டமானது, சுற்றுச்சூழல் மீது மனிதத் தலையீடுகளின் விளைவுகள்
பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற ஒரு பொது விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. வலுவற்ற
கடல் சுற்றுச்சூழலின் சீரழிவைப் பற்றி இன்று மக்கள் கவலைப்படுகின்றனர். இப்போது
முதன்முறையாக, சுற்றுச்சூழலை பாதுகாக்க, தொழில்துறையை முறைப்படுத்த வேண்டியதின் தேவை
பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அதீத விலை கொடுத்தாயிற்று.

You might also like