You are on page 1of 34

2.

தொல்சமயம் (Proto Religion)

0. முன்னுரை

சமயம் என்பது மக்கள் பண்பாட்டின் பல கூறுகளில் ஒன்றாகும். சமயம்


எச்சூழ்நிலையில் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி மானிடவியல் அறிஞர்களில்
பலர் ஆராய்ந்துள்ளனர். அவர்களுடைய ஆய்வுகளிலிருந்து சமயத்தின் தோற்றம்
அதன் இயல்பு அதன் தேவை போன்றவற்றை நம்மால் அறிந்து கொள்ள
முடிகின்றது. தொல்சமயம் பற்றி வினக்கமாக அறிந்து கொள்வதற்குமுன்
மானிடவியலாளர்கள் நோக்கில் பண்பாடும் சமயமும் எவ்வாறு நோக்கப்படுகின்றன
என ஆராய்தல் பொருத்தமானது.

0.1. பண்பாடு

‘பண்பாடு’ என்னும் தமிழ்ச்சொல் ஆங்கிலத்தில் வழங்கும் culture என்னும்


சொல்லுக்கு நிகராகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இச்சொல் மிக
அண்மைக் காலத்தில் தமிழில் டி.கே. சிதம்பரநாத முதலியாரால் ஆங்கிலச்
சொல்லான culture என்பதற்கு நிகராகத் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது என்று
ச.வையாபுரி பிள்ளை பதிவு செய்துள்ளார்1. எனினும், இச்சொல்லின் வேரான
‘பண்பு’ என்னும்சொல் சங்க இலக்கியங்களிலேயே பரவலாக ஆளப்பட்டுள்ளது2.
இச்சொல்லுக்குத் தமிழ் லெக்சிகன் ‘குணம், இயல்பு, மனத்தன்மை, பிறரியல்பை
அறிந்து நடக்கும் நற்குணம், விதம், அழகு, செய்கை’ எனப்பல பொருள்களைத்
தருகின்றது3. பிற்சங்க நூல்களுள் ஒன்றான கலித்தொகை ‘பண்பெனப்படுவது
பாடறிந்தொழுகுதல்’ என வரையறுக்கின்றது4. இவ்அடிக்கு உரை விளக்கம் தரும்
கலித்தொகை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் ‘மக்கட்பண்பு என்று
சொல்லப்படுவது உலக வழக்கம் அறிந்தொழுகுதலை’ என்று எழுதுகின்றார்.
பண்பாடு என்னும் சொல்லைப் பண், பாடு என்னும் இரண்டு சொற்களின் கூட்டுச்

1
ச. வையாபுரி பிள்ளை, தமிழக மறுமலர்ச்சி, 1989:ப,219.
2
தாமஸ் லெஹ்மன் (Thomas Lehmann) தாமஸ் மால்டன் (Thomas Malten) ஆகியோர் தொகுத்த A
Word Index for Cankam Literature என்னும் நூலில் அறுபத்தொரு (61) இடங்களில் பண்பு என்னும்
சொல் இடம்பெறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. Institute of Asian Studies, 1993: பக். 290 -291

3
தமிழ் லெக்சிகன், 1963: ப. 2454.
4
கலித்தொகை, 1967, 133:3.

32
சொல்லாக நச்சினார்க்கினியர் கருதியிருப்பது இவ்வுரையிலிருந்து தெளிவாகின்றது5.

Culture என்றும் ஆங்கிலச் சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி, ‘the

customs and beliefs, art, way of life and social organization of a particular country or
group’ என்று பொருள் தருகின்றது6.

1. மானிடவியலாளர்கள் நோக்கில் பண்பாடு

‘பண்பாடு’ என்பது மனிதனுக்கே உரியது; இதுவே பிற


உயிரினங்களிடமிருந்து மக்களைப் பிரித்துக் காட்டுகின்றது. ‘மனிதன் பண்பாட்டைக்
கொண்ட ஒரு விலங்கு’7 என்னும் கருத்து மானிடவியலாளர்களிடம் பரவலாகக்
காணப்படுகின்றது. உயிரினங்களின் வாழ்க்கையைக் கூர்ந்து ஆராயும்போது,
நியாண்டர்தால் மனிதன், கொரில்லாக் குரங்கு, வாலில்லாக் குரங்கு போன்ற
மனிதனின் நேர்மூதாதைகளான உயர்பாலூட்டிகளிடமும் மனிதனை ஒத்த
நடத்தைகள் காணப்படுகின்றன.

மேலும், கீழ்நிலைப் பாலூட்டிகளான யானைகள் சிங்கங்கள் போன்ற


விலங்கினங்களிடமும் மந்தையாகக் கூடி ஒருதலைமையின் கீழ்வாழும்
நடத்தைமுறை உள்ளது. தேனீ எறும்பு போன்ற சிற்றுயிர்களிலும் தலைமைப்
பண்பும் தலைமைக்குப் பணிந்து நடக்கும் நடத்தையும் காணப்படுகின்றன. ஆனால்,
இவை அவற்றின் உடல்களிலுள்ள மரபணுக்களால் (genes) கட்டமைக்கப்படுகின்றன.
இவை தம்அறிவினால் இந்நடத்தைமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை.

ஆனால், மனிதனின் பண்பாடு அறிவு சார்ந்த நிலையில் உருவாகின்றது.


தலைமுறை தலைமுறையாகத் தம்முன்னோர்களிடமிருந்து கற்றுக் கொண்ட நடத்தை
முறைகளால் மனிதனின் பண்பாடு கட்டமைக்கப்படுகின்றது. மனிதன் தான் பிறந்தநாள்
முதல் இறக்கும் நாள்வரை, பண்பாட்டைச் சமுதாய வயமாக்கல் (socialization),
பண்பாட்டு வயமாக்கல் (enculturation) ஆகியவை மூலம் கற்கிறான். அவனுடைய
குடும்பமும் சமுதாயமும் மனிதனுக்குப் பண்பாட்டைக் கற்பிக்கின்றன.

5
மேலது: 138- ஆம் பாடல் உரை
6
Oxford Advanced Learner’s Dictiarary, 2010: 370
7
இத்தலைப்பின் கீழ் இடம்பெறும் கருத்துகள் பக்தவத்சல பாரதியின் ‘பண்பாட்டு மானிடவியல்' நூலில்
(2003) உள்ள 148 – 152-ஆம் பக்கங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தழுவி எழுதப்படுகின்றன.

33
மானிடவியல் துறையில் வழங்கும் பல சொற்களைப் போன்றே, ‘பண்பாடு’
என்னும் சொல்லையும் மிகச்சுருக்கமாகவும் தெளிவாகவும் வரையறுத்து
விளக்குவது இயலாததாகின்றது. அதற்குக் காரணம் ‘பண்பாடு’ என்னும் கருத்தாக்கம்
அறிவுசார்ந்த நிலையில் எண்ணற்ற கருத்து வடிவங்களின் (abstractions)
படிநிலைகள் மூலம் வெளிப்படுவதேயாகும். இவ்வகைக் கருத்து வடிவங்களைப்
பின்வரும் படம் ஒன்றின் மூலம் விளக்குகின்றோம்:

34
1 22 1

படம் : 1

இப்படத்தில் 1 என்பது தனிமனிதனின் பண்பாடாகும்; அது அம்மனிதனின்


தனித்தன்மையைக்(idiosyncratic) காட்டும் பாங்குகள் அனைத்தையும்
கொண்டதாகும். இதிலிருந்து, ஒவ்வொரு மனிதனும் மற்றொருவனை ஒத்த
பாங்கினைக் கொண்டிருக்கவிலை என்பது புலனாகும். இரண்டு தனிமனிதர்கள்
ஒன்றாகக் கூடும்போது இரண்டிற்கும் பொதுவான ஓர்இடம் (space) உருவாகின்றது.
அந்த இடத்தில் ‘நம்பண்பாடு’ உருவாகின்றது; ‘நம்பண்பாடு’ என்பது சமூக
அமைப்பில் இருவர் கலந்துறவாடும்போது உருவாகின்றது. படத்தில் இரண்டு
வட்டங்களும் சந்திக்கும் இடைவெளி (எண் 2) இதனைக் குறிக்கிறது.

ஆனால், சமுதாயம் என்பது இருவரையும் தாண்டிப் பலர் கூடி


வாழ்வதாகும். பலரும் ஒன்றாகக் கூடி வாழும்போது, ‘நம் பண்பாடு’ விரிந்து ஒரு
சமுதாயத்தின் பண்பாடாக, நாட்டின் பண்பாடாக மலர்கின்றது. கீழே
கொடுக்கப்பட்டுள்ள படத்தினைக் காண்க:

1 1

33

படம் : 2

இப்படத்தில் 1, 2 என்பன இரண்டு தனிமனிதர்களின் தனித்தன்மைகளைக்


காட்டுகின்றன. இவ்விருவரும் கலந்து மூன்றாம் மனிதரொடு உறவாடும்போது, மேலே
நாம் காட்டிய படம 1-இல் இடம் பெற்றுள்ள வட்டம் 2 இல் உள்ள ‘நம் பண்பாடு’
தகர்ந்து ‘சமுதாயப் பண்பாடு’ (மூன்று வட்டங்களுக்கும் பொதுவான, 3 என்று
குறிக்கப்பட்டுள்ள இடத்தில்) உருவாகின்றது. சமுதாயப் பண்பாட்டில் ஊடாடுவோர்
அளவில் மிகுந்திருப்பதால், அது சமுதாயத்தின் முதன்மைப் பண்பாடாகின்றது

35
(dominant culture). ‘பண்பாடு’ என்பது அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுவது
(shared) என்றும் கற்றுணரப்படுவது (learned) என்றும் மானிடவியலாளர்கள்
விளக்குகின்றனர்.

‘பண்பாடு’ என்றால் என்ன என்பது பற்றி மானிடவியலாளர் கூறும்


கருத்துகளில் சில கீழே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. அவையாவன:

அ. பண்பாடு என்பது மக்களால் ஆக்கப் பெற்ற ஓர் ஊடகம் (medium).


அவ்ஊடகத்தைக் கொண்டே மக்கள் தங்கள் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

ஆ. பண்பாடு என்பது மக்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து


செயல்படும்போது உண்டாகும் நடத்தைமுறைகளின் தொகுப்பாகும்;
இது சமுதாயத்திற்கு சமுதாயம் வேறுபடுகின்றது. பண்பாடு உயிரியல்
நிலையில் (biological) வராத ஒன்றாகும்.

இ. மக்கள் தலைமுறை தலைமுறையாகக் குழுக்களாகச் சேர்ந்து கற்ற


நடத்தை முறைகளும் பழக்க வழக்கங்களும் மரபுகளும் சேர்ந்த
ஒருதொகுதியே பண்பாடு ஆகும்.

ஈ. பண்பாடு என்பது மனிதனின் உடல்சாராத அமைப்பு

உ. பண்பாடு என்பது மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட சுற்றுச் சூழல்.


இதில் பொருள்சாராப் பண்புகள் சட்டங்கள் நம்பிக்கைகள்
முதலானவை அடங்குகின்றன.

ஊ. பண்பாடு என்பது மரபு வழியாகப் (traditional) புரிந்து


கொள்ளப்படுகின்ற ஓர்அமைப்பு; இது கற்றலின் மூலம்
பெறப்படுகின்றது; கற்றல் நடத்தல் முறையின்வழி
உருவாக்கப்படுகின்றது.

எ. பண்பாடு என்பது அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படும்


கருத்துகளும் சமுதாயத்திலிருந்து மரபுரிமையாகப் பெறப்படும்
நம்பிக்கைகளும் வழக்கங்களும் அடங்கிய தொகுப்பாகும்.

36
ஏ. பண்பாடு என்பது அறிவு நம்பிக்கை ஒழுக்க நெறிகள் சட்டம்
வழக்கம் முதலானவற்றையும் மனிதன் சமுதாயத்தின் ஓர்
உறுப்பினனாக இருந்து, அவன் கற்கும் பிறதிறமைகளையும்
பழக்கங்களையும் கொண்டுள்ள ஒருமுழுமைத் தொகுப்பாகும்.

மேலே நாம் எடுத்துக் காட்டிய வரையறைகளில் இறுதியாக (ஏ)இல்


கூறப்பட்டுள்ள கருத்து எட்வர்ட் பர்னட் டைலர் (Edward Burnett Tylor) என்னும்
புகழ்பெற்ற மானிடவியல் அறிஞர் வகுத்தளித்த கோட்பாடாகும். இன்று ‘பண்பாடு’
என்னும் சொல்லை நாம் எவ்வாறு பொருள்கொள்கின்றோமோ, அதே பொருளில்
இச்சொல்லைப் பயன்படுத்தியவர் டைலரே ஆவார். அவர் கி.பி. 1871-ஆம்
ஆண்டில் வெளியிட்ட ‘தொல்பண்பாடு’ (Primitive Culture) என்னும் நூலில்
மேற்கூறிய கோட்பாட்டினை வகுத்தளித்து உள்ளார். அது பின்வருமாறு:

Culture or civilization, taken in its wide ethnographic sense is that complex


whole which includes knowledge, belief, art, moral law, custom, and any
other capabilities and habits acquired by man as a member of society8.

1.1. பண்பாட்டின் உட்கூறுகள்

பண்பாட்டின் உட்கூறு என்னும்போது, அது முழுமையான (whole) ஒரு


பண்பாட்டின் மிகச்சிறிய கூறாகும் (component). பண்பாட்டின் மிகச்சிறிய கூறு
என்றால் என்ன? அதனை எப்படி வரையறுப்பது? என்பன போன்ற வினாக்கள்
நம்முன் எழுவது இயல்பேயாகும். பண்பாடு என்பது இலக்கியம் கவிதை நடனம்
இசை கோயில்கள் சடங்குகள் வேத மந்திரங்கள் வாழ்க்கைத் தொழில்கள்
போன்ற பலகூறுகளால் மட்டும் உருவாக்கப்பட்டதன்று; அது, இவற்றை எல்லாம்
தாண்டி, மக்களின் நடத்தைமுறைகள் அனைத்தையும் தன்னுள்கொண்டு
ஒருகட்டுக்கோப்புக்குள் செயல்படும் மிகப்பெரும் அமைப்பாகும். இவ்வமைப்பில்,
பல்வேறு கூறுகள் உள்ளன. அவை பல்வேறு கோலங்களில் (patterns) பண்பாட்டை
வெளிப்படுத்துகின்றன. இக்கோலங்களை மூன்று கூறுகளாகப் பகுத்து
மானிடவியலாளர்கள் விளக்குகின்றனர். அவையாவன:

8
Primitive Culture, 2 Vols. (New York, Harper and Row, 1958: 1. மேற்கோள் பக்தவத்சல பாரதியின்
‘பண்பாட்டு மானிடவியல்’ (என்னும் நூலிலிருந்து) 2003: ப. 152.

37
அ. பொருள்சார் கூறுகள் (material components)
ஆ. அறிதல்சார் கூறுகள் (cognitive components)
இ. நெறிகள்சார் கூறுகள் (Normative components)

‘பண்பாடு’ என்பது இவ்வாறு மூன்று கூறுகளாகப் பகுக்கப்பட்டிருந்தாலும்,


அதன் அமைப்பை (structure) நோக்கும்போது, அது பொருள் சார்ந்த
பண்பாடாகவும் (material culture) பொருள்சாராப் பண்பாடாகவும் (non-material
culture) இருநிலைகளில் செயல்படுவது தெளிவாகின்றது. மக்கள் தங்கள்
தேவைகளுக்காகச் செய்துகொள்ளும் எல்லாச் செயல்களும் பொருள்சார்
பண்பாட்டில் அடங்கும். வேட்டையாடுதல் பயிரிடுதல் மீன்பிடித்தல் வாணிகம்
செய்தல் உழவுக் கருவிகளையும் போர்க் கருவிகளையும் செய்தல் போன்றன
பொருள்சார் பண்பாட்டில் அடங்குகின்றன.

பொருள்சாராப் பண்பாட்டில் உழவு நெசவு போன்று நம்கண்முன்


நடைபெறாத ஆனால் மனத்தால் மட்டுமே உணரக் கூடிய கூறுகள்
இடம்பெறுகின்றன; இக்கூறுகள் மனம் சார்ந்தவை (idea oriented). கருத்துருக்கள்
(ideas) பழக்க வழக்கங்கள் (customs) அறவியல் (ethics) அறிதிறன் (cognition)
அழகியல் (aesthetics) சிந்தனை (thougt) கற்பனை (imagination) நடிப்பு (action)
இலக்கியம் (literature) பாட்டு (song) இசை (music) நடனம் (dance) வழிபாடு (worship)
மந்திரம் (sacred utterance) நம்பிக்கை (belief) போன்ற பருப்பொருள் அல்லாத
அனைத்தும் பொருள்சாராப் பண்பாட்டில் அடங்குகின்றன. இவை மனத்தால்
மட்டுமே உணரக் கூடியனவாகவும் புரிந்துகொள்ளக் கூடியனவாகவும் இருப்பதால்,
இவற்றை மானிடவியலாளர் மனவடிவங்கள் (mentifacts) என்பர்.

38
2. சமயத்தின் தோற்றம்

மேலே நாம் எடுத்துரைத்தவற்றிலிருந்து, சமயம் என்பது


மானிடவியலாளர்கள் பார்வையில் பொருள்சாராப் பண்பாட்டினைச் சார்ந்ததாகும்
‘சமயம்’ என்னும் சொல்லின் பொருள் (meaning) பற்றி நாம் முன்னுரையில்
எடுத்துரைத்துள்ளோம். அதனைத் தொடர்ந்து பண்பாட்டு மானிடவியல் நோக்கில்
‘சமயம்’ எவ்வாறு தோன்றியது என்பதனை மானிடவியல் அறிஞர்களின்
கருத்துகளிலிருந்து எடுத்துரைக்க முயல்கின்றோம்.

சமயத்தின் தோற்றம் பற்றி ஆராய்வதற்குமுன் ‘சமயம்’ என்றால் என்ன?


என்று வரையறுத்துக் கொள்வது இன்றியமையாததாகும். பௌதிக உலகத்தில்
காணப்படும் பொருள்கள் (matter) பற்றிய வரையறைகள் கண்ணால் காணக் கூடிய
பொருள்களைப் பற்றியவையாகும். ஆனால், ‘சமயம்’ பற்றிய வரையறைகள்,
அவற்றுக்கு நேர்மாறானவை. சமயத்தை யாரும் கண்ணால் காண முடியாது;
பருப்பொருள் (concrete object) ஒன்றினைப் போல, அதனை நாம் தொட்டு உணர
முடியாது. ஏனெனில், சமயம் மக்கள் உணர்வுகளோடு தொடர்புடையது; அது மக்கள்
பண்பாட்டின் ஒரு கூறு. ‘சமயம்’ பற்றிய எந்த வரையறையும் சமயத்தின்
அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியனவாகவும் பயன் விளைவிக்கக்
கூடியனவாகவும் இருத்தல் வேண்டும். சமயத்தினை வரையறுத்துக் கூறும்போது,
அதன் சிறப்புத் தன்மையையும் (uniqueness) மற்றொன்றிலிருந்து அதனைப் பிரித்துக்
காணக் கூடிய அதன் தனித்தன்மையையும் (distinctiveness) அவ்வரையறை
கொண்டிருத்தல் வேண்டும்.

சமயத்தின் தோற்றம் பற்றி மானிடவியலாளர்கள் பலர் ஆய்வு


செய்துள்ளனர். அவர்களுள் எட்வர்ட் பர்னெட் டைலர் (Edward Burnett Tylor, 1832
- 1917), ஜேம்ஸ் பிரேசர் (James Frazer, 1854 - 1941), எமிலி தர்கைம் (Emile
Durkheim, 1858 - 1917), கிளிப்போர்ட் கீட்ஸ் (Cliffird Geerts), மலினோவ்ஸ்கி
(Bronislaw Malinowski, 1884 - 1942), லெவி ஸ்டிராஸ் (Claude Levi Starouss, 1908),
மிர்ஸா எலியாது (Mirza Eliade, 1907 – 1986), ஆர். மாரட் (Robert R. Marret)
ராட்கிளிப் பிரௌன் (Alfred Reginald Radcliffe Brown, 1881 – 1955) போன்றோர்
குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.

2.1. எட்வர்ட் பர்னெட் டைலர்

39
எட்வர்ட் பர்னெட் டைலர் என்னும் ஆங்கிலேயே மானிடவியல் அறிஞர்
மெக்ஸிகோ நாட்டின் பழங்குடி மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவர்களது
பண்பாட்டினை மீட்டுருவாக்கம் செய்து நூல்களாக வெளியிட்டார். அவருடைய
புகழ்பெற்ற ஆய்வு நூல்களுள் ஒன்று ‘தொல்பண்பாடு’ (Primitive Culture, 1871)
என்னும் நூலாகும். இந்நூலில், அவர் சமயத்தின் வளர்ச்சிநிலைகளை மூன்று படிநிலை
(hierarchy) அமைப்புகளாக விவரித்துள்ளார்.

ஆவியுலகக் கோட்பாடே (animism) சமயத்தின் தொடக்கம் என்பது டைலரின்


கொள்கையாகும். உலகில் காணப்படுகின்ற விலங்குகள் பறவைகள் செடிகொடிகள்
போன்ற உயிரியக்கமுள்ள (animate) பொருள்களிலும் கல் மண் போன்ற உயிரியக்கம்
இல்லாத (inanimate) பொருள்களிலும் ஆவி (spirit) உறைவதாகப் பழங்குடி மக்கள்
நம்புவதாக டைலர் கருதுகின்றார். பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கையோடு
ஒன்றி வாழ்ந்தார்கள்; இடி மின்னல் மழை புயல் வெள்ளம் போன்ற இயற்கை
நிகழ்வுகளை அவர்களால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை; அவர்கள்
தங்களைச் சுற்றிலும் தங்கள் கண்ணுக்குப் புலப்படாத எண்ணற்ற ஆவிகள்
உள்ளன என்று நம்புகின்றனர். அந்நம்பிக்கையின் விளைவாக இடி மின்னல்
போன்ற இயற்கை நிகழ்வுகள் அவ்இயற்கைப் பொருள்களுக்குள் உறையும்
ஆவிகளால் உருவாக்கப்படுகின்றன என்று எண்ணுகின்றனர். ‘ஆவி
வழிபாட்டிலிருந்தே சமயம் உருவாயிற்று’ என்பர் டைலர். அவர் சமயம் மூன்று
படிநிலைகளில் வளர்ந்ததாக விளக்குகின்றார். அதனைப் பின்வரும் படம் மூலம்
விளக்கலாம்:

சமயம்

ஆவியுலகக் கோட்பாடு (animism)

பல்சமயக் கோட்பாடு (polytheism)

ஒரு சமயக் கோட்பாடு (monotheism)

40
இதன் வழியாகச் சமயம் பற்றிய மிகக் குறைந்த - அடிப்படையான -
வரையறையை டைலர் வகுத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆனால், அவருடைய வரையறை, சமயம் பற்றிய முழுப்பொருண்மையையும்
காட்டவில்லை; மாறாக, ‘ஆவி’ என்றால் என்ன? என்ற மற்றொரு வினாவிற்கு
அக்கோட்பாடு நம்மை இட்டுச் செல்கின்றது.9

2.2. ஜேம்ஸ் பிரேசர்

ஜேம்ஸ் பிரேசர் இங்கிலாந்தைச் சார்ந்த மானிடவியல் அறிஞர்.


மானிடவியலாளர்களில் சமயம் பற்றி ஆராய்ந்தவர்களில் இவர் குறிப்பிடத் தக்கவர்.
அவர், தான்தொகுத்த தரவுகளை இரண்டு தொகுதிகளாகத் ‘தங்கக் கிளை’
(The Golden Bough) என்னும் தலைப்பில் வெளியிட்டார். மானிடவியல் ஆய்வுகள்
இன்று வளர்ந்துள்ள நிலையில், பிரேசரின் ஆய்வு நெறிமுறைகள் முடிவுகள்
விவாதத்திற்கு உரியனவாக இருந்தாலும், இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ள
அவருடைய ‘தங்கக் கிளை’ என்னும் நூல் சுருக்கப் பதிப்பாகத் தொடர்ந்து
வெளியாகிக் கொண்டிருப்பதிலிருந்து, அவருடைய தரவுகளின் முக்கியத்துவம்
தெளிவாகப் புலப்படுகின்றது

ஜேம்ஸ் பிரேசர் சயமத்தைப் பற்றி விளக்கும்போது, அதனைத் தருக்கரீதியாக


விளக்காவிட்டாலும், அதனை ஓரளவுக்கு அறிவார்ந்த (intellectual) முறைகளில்
விளக்கினார். அவர் சமயம் என்பதனை விளக்கும்போது, ‘சமயம் அறிவார்ந்த
முறையில் அமைந்தது என்பதனைவிட, அது தான்தோன்றிய சமுதாயத்தின்
சிக்கலுக்குரிய ஒரு தீர்வாக அமைந்தது’ என்று விளக்கினார்.

மனித சமுதாயத்தில் ‘சமயம்’ தோன்றுவதற்குமுன் ‘மந்திரம்’ (magic)


இருந்தது என்பது பிரேசரின் கொள்கை. மந்திரத்தைப் பழங்குடி மக்களின் தவறான
மதிப்பீடு அல்லது அவர்களிடமிருந்த ஒரு வகையான போலி அறிவியல் நெறி
என்கின்றார் பிரேசர். இயற்கை நிகழ்வுகள் எவ்வாறு நிகழ்கின்றன?
அந்நிகழ்வுகளுக்குரிய காரணங்கள் யாவை? அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு
என்ன செய்யவேண்டும்? என்பன போன்ற வினாக்களுக்குத் தொல்சமூகங்களில்
வாழ்ந்தவர்களால் விடை காண முடியவில்லை. அம்மக்களிடம் காரணம் (cause)
காரியம் (effect) பற்றிய பொது அறிவு இருந்தது. ஆனால், தீய விளைவுகளைத்

9
The ANTHROPOLOGY of RELIGION, 2000: P.15.

41
தடுப்பதற்கு அறிவார்ந்த நிலையில் சிந்திக்காமல், அவர்கள் மந்திரங்களால் தமக்கு
ஏற்படும் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்த முடியுமென்று நம்பினர். அவர்களைப்
பொறுத்தமட்டில் ‘மந்திரம்’ என்பது ஒரு செய்ம்முறை உத்தியாகும் (technique)10.

மந்திரங்களின் துணைகொண்டு இயற்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்று


தொல்சமூக மக்கள் நம்பினர். இயற்கையின் ஆற்றலைத்தம் கட்டிற்குள் கொண்டு
வருவதற்காக அவர்கள் மந்திரங்களைச் சிலசூத்திரங்களாக, வாய்பாடுகளாக
உருவாக்கினர். அவற்றை உச்சரிப்பதன்மூலம் இயற்கையின் ஆற்றலைத்தாம்
விரும்பியவாறு கட்டுப்படுத்தித் தங்கள் வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ள
முடியும் என்பது அப்பழங்கால மக்களின் நம்பிக்கையாகும்.

தொல்குடி மக்களின் அறிவு வளர்ந்த நிலையில், மந்திரங்கள் குறைபாடு


உடையனவென அவர்கள் உணர்ந்தனர். இயற்கையைக் கட்டுப்படுத்தும் வேறு
ஆற்றல்களும் இருப்பதாக அவர்கள் நம்பத் தொடங்கினர். அவ்ஆற்றல்களை
அவர்கள் வணங்கத் தலைப்பட்டபோது, ‘சமயம்’ தோன்றியது என்பது
பிரேசருடைய கருத்து. சமயத்திலிருந்து அறிவியல் படிமலர்ச்சி பெற்றது என்பதும்
அவருடைய கொள்கையாகும். அதனைப் பின்வரும் படத்தின் மூலம் விளக்கலாம்:

மந்திரம்

சமயம்

அறிவியல்11

பிரேசரைத் தொடர்ந்து, மேலும் பல மானிடவியல் அறிஞர்கள் மந்திரத்தின்


தோற்றம், அதன் செயல்முறைகள் பற்றியும் பழங்குடிச் சமுதாயங்களில் மந்திரங்கள்
எவ்வாறு தோன்றின என்பது பற்றியும் விரிவாக ஆராய்ந்தனர். இவ்ஆய்வுகள்
‘மந்திரம்’ பற்றிய ஒரு புரிதலைக் கொடுத்தன.

2.3. எமிலி தர்கைம்

10
Studying Religion Anthropologically, p. 17

11
பக்தவத்சல பாரதி, மானிடவியல் கோட்பாடடுகள், 2005,ப:244.

42
எமிலி தர்கைம் என்னும் பிரெஞ்சு மானிடவியலாளர் ஆஸ்திரேலிய
முதற்குடிமக்களின் (Aborigines) வாழ்க்கையை ஆராய்ந்து, சமய வாழ்க்கையின்
அடிப்படை அமைப்புகள் (The Elementary Forms of the Religious Life, 1915)
என்னும் நூலை எழுதினார். தர்கைம் பார்வையில் ‘சமயம்’ என்பது உலக வாழ்க்கையின்
விவரிப்பு அன்று; அதற்கு மாறாக, அது சமூகத்தைக் குறியீடுகளின் (symbols) மூலம்
வெளிக்கொணரும் ஓர்அமைப்பாகும். சமயம் தனிமனித உணர்வு சார்ந்தது எனச்சிலர்
கருதியதற்கு மாறாக, அவர் அது ஒட்டுமொத்த சமுதாய உணர்வுகளோடு
தொடர்புடையது என்று கருதினார்.

சமயத்தை அவர் புனிதம் (sacred), தீட்டு (profane) என்று இரண்டு எதிர்


இணைவுகளாகப் (binary oppositions) பிரித்துக் காட்டி விளக்கியது அவருக்கே உரிய
தனிச்சிறப்பாகும். மக்கள் கூடி வாழும் சமூக வாழ்க்கையில் நாள்தோறும் நடைபெறும்
நிகழ்வுகளில் சில தீட்டானவை (profane) என்றும் சில புனிதமானவை (sacred)
என்றும் கருதப் பெறுகின்றன. சமுதாயம் தான் நீடித்திருப்பதற்கான ஒழுக்க
நெறிமுறைகளையும் அறநெறிகளையும் புனிதமான நடத்தைகளிலிருந்தே பெற்றுக்
கொள்வதாக, தர்கைம் வாதிட்டார்:

உலகின் (சமய) நம்பிக்கைகளைப் புனிதம் தீட்டு என்று


இரண்டு பகுதிகளாகப் பகுத்துக் காண்கின்ற அறிவுப்
புலம் ஒன்றில், புனிதமானவை என்று கருதப்பெறும்
அனைத்தும் உள்ளடங்குகின்றன; மற்றொன்றில்,
தீட்டெனக் கருதப்பெறும் அனைத்தும்
உள்ளடங்குகின்றன. சமயச் சிந்தனையில் இப்பண்புக்
கூறே (trait) அடிப்படையாக அமைகின்றது. நம்பிக்கைகள்
தொன்மங்கள் (வினாவினை எழுப்பாமலே,
ஏற்றுக்கொள்ளப்படும்) உறுதிக் கோட்பாடுகள் (dogmas)
புராணங்கள் போன்றன பொருள்களின் புனிதத்
தன்மையைக் கட்டமைக்கும் வகைமாதிரிகளாகவோ
அல்லது அவற்றின் தொகுதிகளாகவோ உள்ளன. புனிதப்
பொருள்களுக்கு உரியனவாகக் கருதப்படும் ஒழுக்க
நெறிகள் ஆற்றல்கள் புனிதப் பொருள்கள்
ஒவ்வொன்றுக்கும் இடையில் உள்ளனவாகக் கருதப்படும்

43
தொடர்புகள் தீட்டுக்கும் புனிதத்திற்கும் இடையிலுள்ள
வேறுபாடுகள் ஆகியனவற்றின் இயல்பை எடுத்துக்
காட்டுவனவாக அமைகின்றன12.

தர்கைமின் சமயம் பற்றிய கொள்கை புனிதம், தீட்டு என்னும் இரண்டு


அடிப்படை எதிர் இணைவுகளின் கூட்டாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகத்தில்
கற்பு புனிதமாகக் கருதப்படுகின்றது. கணவனோடு இல்லறம் நடத்தும் பெண்கள்
புனிதமானவர்களாகக் கருதப் பெறுகின்றனர். ஆனால், அவர்கள்தம் கணவனை
இழந்து விதவைகள் ஆகிவிட்டால், அவர்களைத் தமிழ்ச் சமூகம் விலக்கி
வைக்கின்றது; தமிழ்ச் சமூகத்தின் பார்வையில் அவர்கள் தீட்டுப்பட்டவர்
ஆகின்றனர். அவர்கள்தம் புனிதத் தன்மையை இழந்துவிட்டதாகத் தமிழ்ச் சமூகம்
கருதுகின்றது. இதனைப் பின்வருமாறு விளக்கலாம்:

கற்பு வாழ்க்கை x கைம்மைக் கோலம்

(புனிதம்) x (தீட்டு)

1.2. கிளிப்போர்ட் கீட்ஸ்

கிளிப்போர்ட் கீட்ஸ் என்னும் அமெரிக்க மானிடவியலறிஞர் சமயத்தைக்


குறியீடுகளின் (symbols) தொகுதியாக விளக்குகின்றார். சமயத்தின் தோற்றம் அதன்
விளக்கம் பற்றி வருணிக்காமல், கீட்ஸ் சமயங்கள் எதனைக்
குவிமுனைப்படுத்துகின்றன (focus) என்பதனை விவரிக்கின்றார். அவருடைய
கொள்கைகளின்படி,

i. சமயம் ஒழுங்கமைப்பட்ட குறியீடுகளின் தொகுதி.


ii. அக்குறியீடுகள் ஆற்றல் வாய்ந்தவையாக, அனைத்துப் பகுதிகளிலும்
ஊடுருவிப் படர்ந்து காலங்காலமாக நிலைத்து நிற்கின்ற
மனஉணர்வுகளோடு செயலார்வத்தையும் மக்களிடத்தில்
தூண்டுகின்றன.

12
The ANTHROPOLOGY of RELIGION. op.cit.:p.139.

44
iii. மனித வாழ்க்கையின் இருப்புநிலைக்குத் தேவையான முறையில்
கோட்பாடுகளை உருவாக்கி அவற்றை ஒழுங்கமைவு செய்வனவாக
இக்குறியீடுகள் உள்ளன.

iv. சமயக் கோட்பாடுகள் உண்மையானவை என்று மக்கள்


நம்பும்படியான தோற்றத்தை இக்குறியீடுகள் உருவாக்குகின்றன.

v. கருத்துருக்களும் (concepts) அவை தோன்றுவதற்குக் காரணமாக


அமையும் செயல்திறம் மிக்க தூண்டல்களும் உண்மையானவையே
என்று சமயம் தனக்கே உரிய முறையில் மக்களை நம்ப
வைக்கின்றது13.
மானிடவியல் அறிஞர்களில் கீட்ஸ், சமயத்தை உணர்வுகளுடன் (emotions)
தொடர்புடையதாக விளக்கினார். இலக்கியக் கோட்பாடுகளின் வழிநின்று
பண்பாட்டையும் சமயத்தையும் ஓர்இலக்கியப் பனுவலைப் போன்றோ (text)
அல்லது ஓர்உருவகத்தைப் (metaphor) போன்றோ விளக்க இயலும் என்று கீட்ஸ்
கருதுகின்றார்.

2.5. மாலினோவ்ஸ்கி

மாலினோவ்ஸ்கி என்னும் ஆங்கிலேய மானிடவியல் அறிஞர் பண்பாட்டினை


முழுமையானதாக ஏற்றுக் கொண்டு, அதன் செயற்பாடுகளின் (functions) வழியாகப்
பண்பாட்டின் முழுமையை ஆராய வேண்டுமென்று வற்புறுத்தினார். இவருடைய
ஆய்வின் வழியாக மானிடவியல் ஆய்வுகளில் செயற்பாட்டியம் (functionalism)
என்னும் புதிய கோட்பாடு உருவாகியது. அக்கோட்பாடு சமூக உறவுகளைச்
சமயம் என்னும் அமைப்பிலுள்ள (structure) பல்வேறு மூலக்கூறுகளுக்கிடையிலுள்ள
நெருக்கமான உறவுகளை வலியுறுத்துகின்றது.

மாலினோவ்ஸ்கி சமூகம் தன்னைத் தானே ஒழுங்குபடுத்திக் கொள்ளும்


ஓர்அமைப்பு என்று கருதுகிறார். இவ்வமைப்பில் உள்ள சமயம், பொருளீட்டும்
குழுக்கள், உறவுத் தொடர்புகள் (kinship), போன்ற அனைத்தும் உயிராற்றல் மிக்க
ஒருமுழுமையின் (organic whole) உறுப்புகள் என்பது அவருடைய கொள்கையாகும்.
புனிதம் பற்றி மக்கள் கொண்டுள்ள பயபக்தியே (reverence) அதன்
13
Geertz Clifford, Religion as A Cultural System in Micheal Bantonc (ed.) Anthorpological
Approaches to the Study of Religion. ASA Monographs 3, London: p.4. மேற்கோள்: The
ANTHROPOLOGY of RELIGION, op.cit: p. 23.

45
செயற்பாட்டெல்லைகளை (functional limits) வரையறுக்கின்றது. அச்சத்தோடும்
பயபக்தியோடும் சடங்குகளை (rituals) நிகழ்த்தினால், அவை புனிதமானவையாக
ஆகிவிடுகின்றன என்பது மாலினோவ்ஸ்கியின் கருத்தாகும்14.

2.6. லெவி ஸ்டிராஸ்

லெவி ஸ்டிராஸ் என்னும் மொழியியல் அறிஞர் மானிடவியலை


அமைப்பியம் (structuralism) என்னும் மொழியியல் கோட்பாட்டின் வழி
ஆராய்ந்துள்ளார். அமைப்பியம் என்பது மொழியின் கூறுகளான ஒலியன்கள்
(phonemes) உருபன்கள் (morphemes) தொடரன்கள் (syntax) ஆகியன
மொழியமைப்பில் எவ்வாறு ஒன்றொடொன்று இணைந்து மொழியைக்
கட்டமைக்கின்றன என்பதனை விளக்கும் அமைப்பு மொழியியல் கோட்பாடாகும்
(structural linguistic theory).

அமைப்பு மொழியியல் கோட்பாட்டின் அடிப்படையில் சமயத்தை -


குறிப்பாகத் தொன்மத்தை (myth)-லெவிஸ்டராஸ் விளக்க முயல்கின்றார்;
தொன்மத்தில் அடங்கியுள்ள குறியீடுகளும் (symbols) நிகழ்ச்சிகளும் (events) ஒரு
மொழி இலக்கணத்தில் இடம்பெறும் கூற்றை (utterance) ஒத்துள்ளன. அக்கூற்று
மாற்றம்பெறும் வகைகளை இலக்கணம் ஆராய்ந்து எடுத்துக்காட்டுவது போன்று,
தொன்மத்தையும் ஆராய முடியும் என்று அவர் கருதுகின்றார். தொன்மங்கள் (myths)
குலக்குறியீடுகள் (totems) ஆகியன சமயத்தை எடுத்துரைக்கும் பொருத்தமான
குறிகளாகும் (codes) என்பது அவருடைய கருத்து. இக்குறிகளை இடமாற்றம்
(transpose) செய்ய இயலும் என்கின்றார் அவர். பின்வரும் எடுத்துக் காட்டினைக்
காண்க:

மேகலை நன்றாகப் பாடினாள் – ‘மேகலை’ எழுவாய்; ‘நன்றாக’


வினையடை; ‘பாடினாள்’ வினைமுற்று,

இத்தொடரில் வரிசையாக அமைந்துள்ள எழுவாய் வினையடை


பயனிலை என்னும் மொழியின் கூறுகளை இடம் மாற்றி நன்றாகப்
பாடினாள் மேகலை எனத்தொடரை மாற்றி அமைக்கும்போது,

14
The ANTHROPOLOGY of RELIGION, op.cit: p. 16

46
தொடரில் பொருள் மாற்றம ஏற்படவில்லை; ஆனால், பாடிய செயல்
அழுத்தமாகக் கூறப்படுகின்றது,

இதனைப் போன்று வெவ்வேறு இடங்களிலிருந்து நாம் பெற்றுக் கொண்ட


தொன்மத்தின் குறியீடுகளை இடம் மாற்றுவதன் மூலம், சமயம் பற்றிய உண்மைகள்
வெளிப்படுத்தப்படுகின்றன என்பது லெவி ஸ்டிராஸின் கருத்தாகும்.

இவ்வாறு, தொன்மத்தையும் சமயம் தொடர்பான பிற உண்மைகளையும்


ஆராய்வதன் மூலம், சமயத்தின் அடிப்படைக் கூறுகளுக்கும் மற்றவற்றிற்கும்
இடையில் அமைந்துள்ள தொடர்புகள் தெளிவாகின்றன. இத்தெளிவின் மூலம்
சமயத்தின் முழுமையை நாம் உணர முடியும் என்பது லெவி ஸ்டிராஸின்
அமைப்பியக் கோட்பாடாகும்.

ஒன்றுக்கொன்று மாறுபட்ட எதிர் இணைவுகளைக் கொண்டுள்ள மனித


மனமே தொன்ம மாறுபாடுகளுக்கும் காரணமென்று லெவிஸ்டராஸ் உறுதிபடக்
கருதுகின்றார். இயற்கை x செயற்கை, ஆண் x பெண், வாழ்வு x சாவு என்பன
போன்ற எதிர்இணைவுகளின் அடிப்படையில் பொருள்களை அமைப்பியம்
வகைப்பாடு செய்கின்றது. ஒன்றுக்கொன்று எதிரான இவ்எதிர் இணைவுகளிலுள்ள
சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் அவற்றை ஒன்றோடொன்று இணைத்துக் காண்பதற்கும்
மனிதனின் மனமே அடிப்படையாக அமைந்துள்ளது என்கின்றார் லெவி ஸ்டிராஸ்.

இத்தகைய தீர்வுகள் முடியக் கூடியவைபோன்று தோன்றினாலும், அவை


நிலையானவை அல்ல; மனிதன், தொடர்ந்து வெவ்வேறான செயல்களைச்
செய்துகொண்டே இருந்தாலும், அவை புரிந்துகொள்ளக் கூடியனவாக உள்ளன
என்று லெவி ஸ்டிராஸ் அவற்றை விளக்குகின்றார்.

வள்ளி முருகன் பற்றிய தமிழ்த் தொன்மங்களை நோக்குக. வேட்டைச்


சமூகத்தில் காதலியாகவும் காதலனாகவும் இருந்த வள்ளியும் முருகனும் காலப்
போக்கில் குறிஞ்சி நிலத் தெய்வங்களாகவும் பக்தி இயக்கக் காலத்தில் வைதிகத்
தெய்வங்களாகவும் படிமலர்ச்சி பெற்றுகொண்டு வளர்ந்துள்ளன. தமிழ் மனிதமனம்
இப்படி இவர்களைக் காலந்தோறும் கட்டமைப்புச் செய்துகொண்டு வந்துள்ளது.

47
ஒரு நிகழ்வின் பொருள், தோற்றம் ஆகியவற்றைப் படைத்துக்
கொள்ளக்கூடிய ஒரு விருப்பமான விளையாடலை (play) மனித மனம்
ஆடிக்கொண்டே இருப்பதாக லெவிஸ்டிராஸ் கருதுகின்றார்15.

லெவிஸ்டிராஸ், தர்கைம் முன்வைத்த புனிதம் தீட்டு என்னும்


எதிர்இணைவுகளையும் சசூர் (Ferdinand de Sassure) முன்வைத்த அமைப்பு
மொழியியல் கோட்பாட்டினையும் அடிப்படைகளாகக் கொண்டு, சமயம் பற்றிய தன்
கருத்துகளை விளக்குகின்றார் என்பது மேலே நாம் எடுத்துக்
காட்டியனவற்றிலிருந்து தெளிவாகின்றது.

2.7. மிர்ஸா எலியாது

மானிடவியல் அறிஞர்களில் லெவி ஸ்டிராசைப் பின்பற்றிச் சமயம் பற்றி


விளக்கியவர்களுள் மிர்ஸா எலியாது (Mirza Eliade) என்பவர் குறிப்பிடத்
தக்கவராவார். பிரபஞ்சத்தில் நிகழும் நிகழ்வுகளை விளக்கத் தொன்மங்களையே
அவர் பெரிதும் பயன்படுத்தினார். உலகமும் தெய்வங்களும் மனிதர்களும் எவ்வாறு
தோன்றினர் என்பதற்குரிய விடைகளை அவர் தொன்மங்களில் தேடினார்.
தொன்மங்கள் கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு சடங்குகளின் மூலம் தொடர்ந்து
இணைத்துக் கொண்டிருக்கின்றன என்று அவர் கருதுகின்றார். அவருடைய
பார்வையில் சடங்கு (ritual) என்பது தொன்மத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்டும்
நிகழ்ச்சியாகும்16.

தொல்மக்கள் பார்வையில் இவ்வுலகமும் அதிலுள்ள பொருள்களும்


புனிதமானவை. அவர்கள் காணும் ஒவ்வொரு பொருளும் புனிதத்தின் இயல்பையும்
(nature) அதன் அளவையும் (size) காட்டுவதாக அவர்கள் நம்பினர். புனிதப்
பொருள்கள் ஒரு படத்தொகுப்பு (hierophony) போன்று அமைந்திருப்பதாக அவர்
எண்ணுகின்றார். வெளித்தோற்றத்தில், ஒன்றுக்கொன்று தொடர்பற்றும் மாறுபட்டும்
காணப்படும் பொருள்கள் அனைத்தையும் பொதுமைப்படுத்தும் பண்பாகப் புனிதம்
செயல்படுவதாக எலியாது விளக்குகின்றார். மாறுபட்டும் முரண்பட்டும் கிடக்கின்ற
பொருள்களுக்கிடையில் ஒரு பொதுமையைப் புனிதம் ஏற்படுத்துகின்றது என்பது
எலியாதின் கொள்கையாகும்.

15
Analyzing Religion Anthropologicalaly, op.cit. p. 19

16 ?
. The ANTHROPOLOGY of RELIGION, op.cit. :p.157.

48
தமிழர்களின் சமய மரபில் நீர்நிலைகள் (குளம் ஆறு கடல்) புனிதமானவை;
மரங்கள் சிலவற்றில் (கடம்பு ஆல் வேங்கை வாகை போன்ற மரங்கள்) தெய்வங்கள்
தங்கியிருப்பதாகக் கருதப்படுவதால் அவை புனிதமானவைகளாகக்
கருதப்படுகின்றன. தெய்வங்கள் உறைவதாகக் கருதப்படும் சில மலைகள் /
குன்றுகள் (திருப்பரங்குன்றம் வேங்கடம்) புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.
இவை ஒன்றோடொன்று நேரடியான தொடர்புகள் அற்றவை. எனினும், அவை
‘புனிதம்’ என்னும் கருத்துருவின் கீழ் ஒரே நேர்கோட்டில் அமைந்து விடுகின்றன.
இதனைப் பின்வரும் படம் விளக்குகின்றது:

புனிதம்

மலைகள் மரங்கள் நீர்நிலைகள்

இவை மூன்றும் தம்மளவில் வேறுபட்டனவாக இருந்தாலும், புனிதம் என்னும்


கருத்தாக்கத்தின்போது (concept) ஒன்றாகி விடுகின்றன

2.8. ராபர்ட் மாரட்

சமயத்திற்கு அடிப்படை ஆவி வழிபாடே என்று ஆராய்ந்து கூறிய


டைலருக்குப்பின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராகப்
பதவியேற்ற ஆர்.ஆர்.மாராட் பசிபிக் பெருங்கடல் தீவுகளில் வாழும் மெலனீசியப்
பழங்குடி மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து, அம்மக்களிடமிருந்த ‘மனா’ (mana)
என்னும் நம்பிக்கையைக் கண்டறிந்தார். அந்நம்பிக்கையை அடிப்படையாகக்
கொண்டு மாரட்தம் ‘மனாக்’ கோட்பாட்டை உருவாக்கினார். இது தொல்சமயத்தின்
தோற்றத்தை விளக்க எழுந்த இரண்டாவது மானிடவியல் கோட்பாடாகும்.

‘மனா’ நம்பிக்கை உயிர்ப்புச் சக்தியின் அடிப்படையில் தோன்றுவதால்,


இதனை உயிர்ப்பியம் (animatism) என்று அவர் குறிப்பிடுகின்றார். ‘மனா’ என்னும்
சொல் மெலனீசியமொழிச் சொல்லாகும். அம்மொழியில் அச்சொல்லுக்கு
‘உயிர்ப்பாற்றல்’ என்று பொருள். இயற்கைப் பொருள்களில் அமைந்துள்ள
திறன்களைப் பெருமளவுக்கு மிகுதிப்படுத்தி, அதன்மூலம் சாதாரண மனிதர்கள்
செய்ய இயலாத செயல்களை- மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட - எல்லாச்
செயல்களையும் ‘மனா’ செய்ய வல்லது என்பது மெலனீசியப் பழங்குடி மக்களின்
நம்பிக்கையாகும்.

49
இந்நம்பிக்கையின் தோற்றம் மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாக
இருப்பினும், அது பிரமிக்க வைக்கத் தக்க செயல்களைச் சாதாரண மனிதன்
ஒருவனைச் செய்ய வைக்கின்றது; அதன் மூலம் ‘மனா’வின் ஆற்றல்
வெளிப்படுகின்றது என்பது மெலனீசியர்களின் நம்பிக்கையாகும். ‘மனா’ ஆற்றல்
உலகம் முழுவதிலும் பரவி இருந்தாலும், சில மனிதர்கள் வாயிலாகவும் பொருள்கள்
வாயிலாகவும் அது தன்னை வெளிபடுத்திக் கொள்கின்றது என்கின்றார் மாரட்.
இந்திய மானிடவியல் அறிஞர் டி.என்.மஜுமேதான் (T.N. Majumadhan) ‘மனாவை’
ஒருவகையில் ஒத்த ‘போங்கா’ (Bhonge) என்னும் ஆற்றல் சோட்டா நாகபுரிப்
பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடம் இருப்பதாகத் தெரிவிக்கின்றார்17.

2.9. ராட்கிளிப் பிரௌன்

ஆங்கிலேய மானிடவியல் அறிஞரான ராட்கிளிப் பிரௌன் வங்காள விரிகுடாக்


கடலிலுள்ள அந்தமான் தீவுகளில் தனித்தனிக் குழுக்களாக வாழும் பழங்குடி
மக்களைப் பற்றி ஆராய்ந்து, அந்தமான் தீவுமக்கள் (Andaman Islanders, 1922)
என்னும் நூலை வெளியிட்டார். அந்தமானில் வாழும் இப்பழங்குடி மக்கள் அண்மைக்
காலம்வரை உலக மக்களோடும் தங்களுக்குள்ளும் எவ்விதத் தொடர்புகள் இல்லாமல்,
தனித்தனி இனக்குழுக்களாக வாழ்ந்தவர்கள். அவர்கள் யாருடனும் தொடர்பு
கொள்ளாமல் தனித்து வாழ்ந்து வந்த காரணத்தால், அம்மக்கள் தங்கள் இனங்களின்
தூய்மையைக் காப்பாற்றி வந்த பழங்குடி மக்கள் என்று மானிடவியல் அறிஞர்களால்
போற்றப் பெற்றனர். அவர்களின் சமுதாய வாழ்க்கை மனித குல வரலாற்றின்
புதைபடிவங்களைக் (fossils) கொண்டிருத்தல் கூடும் என்று மானிடவியலாளர்கள்
கருதுகின்றனர். அம்மக்களின் சமுதாயத்தை ஆராய்வதன் மூலம் சமயத்தின் தோற்றம்
பற்றி அறிந்து கொள்ளலாம் என்று ராட்கிளிப் பிரௌன் கருதுகின்றார்.

அம்மக்களின் சமயம் ஆவி வழிபாட்டை அடிப்படையாகக்


கொண்டுள்ளது. முன்னோர்களின் ஆவிகளையும் கடல் காடு வானம் ஆகிய
இயற்கைப் பொருள்களில் உறைவதாக அவர்கள் நம்பும் ஆவிகளை அந்தமான்
மக்கள் நம்புகின்றனார்; வழிபடுகின்றனர். அந்தமான் மக்களின் சமயம் ஆவி
வழிபாடாகும் (animism); அச்சமயத்தைப் பின்வருமாறு விளக்கலாம்:

17
பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், 2003: பக். 499 - 503

50
முன்னோர்களின் ஆவி
அந்தமான் மக்களின் சமயம்

(கடல் காடு வானம் ஆகிய)


இயற்கைப் பொருள்களின்
உறையும் ஆவி

அந்தமான் பழங்குடி மக்களின் பிரபஞ்சக் (cosmos) கோட்பாடு கடல் காடு


வானம் ஆகிய இயற்கைப் பொருள்களைச் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளதாக
ராட்கிளிப் பிரௌன் கருதுகின்றார். பிழைப்புக்காக அவர்கள் மேற்கொள்ளும்
தொழில்கள் யாவும் இம்மூன்று இயற்கைப் பொருள்கள் ஒவ்வொன்றோடும்
தனித்தனியாகத் தொடர்பு கொண்டுள்ளன. அவர்கள் தங்கள் தொழிலைச்
செய்யும்போது, அதற்குரிய ஆவிகளை வழிபட்டும் அவற்றுக்கு விழா எடுத்தும்
அதற்குரிய உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டும் வாழ்வதாக ராட்கிளிப்
பிரௌன் எடுத்துரைக்கின்றார்18.

அவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வதாக வைத்துக் கொள்வோம்.


முதலில் கடல் தெய்வத்தை வணங்கிய பின்னரே, அவர்கள் கடலுக்குள் இறங்குவர்;
கடலுக்குள் செல்லும்போது சில உணவுக் கட்டுப்பாடுகளை அவர்கள்
மேற்கொள்வர். மீன்வேட்டம் பெருமளவில் கிடைக்கும்போது கடல் தெய்வத்திற்கு
விழா எடுத்து ஆடிப் பாடி மகிழ்வர். தொகைநூல் பாடல்களில் இவை போன்ற
குறிப்புகள் இடம்பெற்றுள்ளன என்பது இங்கே எண்ணத் தக்கது.

3 . தொல்சமயம் (Proto Religion)

சமயத்தை மானிடவியல் அறிஞர்கள் எவ்வாறு வரையறுக்க முயன்றனர்


என்பது குறித்து மேலே விளக்கினோம்; சில அறிஞர்களின் வரையறைகளையும்
(definitions) முன்வைத்தோம். ‘சமயம்’ என்றால் என்ன என்பதனை
விளக்குவதிலும் அதனை வரையறுத்துக் கூறுவதிலும் மானிடவியல் அறிஞர்களிடம்
கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதனை இவ்விளக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன.
வேறுவகையில் சொல்வதாயின், சமயம் பற்றிய சிந்தனையை எங்கிருந்து அல்லது

18
The ANTHROPOLOGY of RELIGION, op.cit.: pp.18-19.

51
எதிலிருந்து தொடங்குவது என்பதில் அவர்களிடையில் கருத்து வேறுபாடுகள்
காணப்படுகின்றன. மானிடவியல் அறிஞர் ஒவ்வொருவரும் சமயத்தின் ஏதாவது
ஒரு கூறினை (unit) வலியுறுத்தி, அதனையே ‘சமயம்’ என்று விளக்கவும்
வரையறுக்கவும் முயன்றுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

நம்முடைய ஆய்வுப்பொருள் ‘தமிழர்களின் தொல்சமயம்’ (Proto Religion


of the Tamils) என்பதால் ‘தொல்சமயம்’ என்றால் என்ன என்பதனை இனி, நாம்
விளக்க முயல்கின்றோம். தமிழர்களின் ‘தொல்சமயம்’ என்று கூறியவுடன்,
தமிழ்மக்கள் விலங்காண்டிகளாக காட்டாண்டிகளாக வாழ்ந்த காலத்தில் தோன்றிய
சமயத்தைப் பற்றியே நாம் ஆராய்கின்றோம் என்று சிலர் தவறாக எண்ணக்
கூடும். அவர்கள் காட்டாண்டிகளாக விலங்காண்டிகளாக வாழ்ந்த
தொல்பழங்காலத்தில் அவர்கள் உணவு தேடும் வாழ்க்கைப் போராட்டத்தில்
இடம்விட்டு இடம்பெயர்ந்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
அது அவர்களிடையில் சமூக உணர்வே தோன்றாத காலமாகும், சமயம் தோன்ற
வேண்டுமாயின், எல்லாரும் சேர்ந்து வாழும் ஒரு சமூகம் உருவாக வேண்டும்.
அதனால், அக்கால கட்டத்தில் அவர்களிடம் சமயச் சிந்தனை உருவாக வாய்ப்புகள்
இல்லை.

காட்டாண்டி விலங்காண்டி வாழ்ந்த வாழ்கை மறைந்து, தமிழ் மக்கள்


நாகரிகத்தின் வாயிலில் அடியெடுத்து வைத்தனர்; அக்காலத்தில் அவர்கள்
குழுக்களாகச் சேர்ந்து ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழத் தொடங்கினர்; சமூக
உணர்வு அரும்பிய அக் காலத்தில்தான், அவர்களால் தங்களைப் பற்றியும்
தங்களுடைய சூழலைப் பற்றியும் எண்ணிப் பார்க்க முடிந்தது. அக்கால
கட்டத்தில்தான் சமயத்தோடு தொடர்புடைய சிந்தனைகள் அவர்களிடம்
முகிழ்க்கத் தொடங்கின என்று கருதுவது தவறாகாது.

‘தொல்சமயம்’ பற்றி நாம் எடுத்துரைக்கும் கருத்துகளைச் சமயத்தோடு


தொடர்புபடுத்திப் பேசுவது ஒருவகையில் பொருத்தமற்றதாகும். தொல்குடிப்
மக்களின் வழிபாடுகளையும் நடத்தைமுறைகளையும் விளங்கிக்
கொள்வதற்காகவே, ‘சமயம்’ என்னும் கலைச்சொல்லை நாம்
பயன்படுத்துகின்றோம். உண்மையில், அது சமயம் தோன்றுவதற்கு முற்பட்ட -
முன்சமயக் (pre–religion) காலமாகும். அக்காலத்தில் அவர்களிடத்தில் உலகைப்
படைத்த இறைவன் ஒருவனைப் பற்றிய சிந்தனை தோன்றவில்லை.

52
அவர்களுடைய நோக்கங்கள் யாவும் தம்வாழ்க்கையில் தாம்
எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு, உலக
வாழ்க்கையை இயக்குவதாக அவர்கள் தாம் நம்பிய இயற்கை ஆற்றல்களை
வழிபட்டோ அல்லது அவற்றை மந்திரம் போன்ற வாய்பாடுகளால்
கட்டுப்படுத்தியோ அல்லது சில சடங்குகளைச் செய்து அவற்றை மகிழ்வித்தோ
தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள இயலும் என்பதேயாகும்.
அவற்றுக்காக அவர்கள் மேற்கொண்ட செயல்கள் மற்றும் நம்பிக்கைகளின்
தொகுப்பையே நாம் ‘தமிழர்களின் தொல்சமயம்’ என்கின்றோம். நாம் கருதும்
‘தமிழர்களின் தொல்சமயம்’ புலன்கடந்த உலகம் (meta physical world) பற்றிப்
பேசும் மெய்ப்பொருள் அறிவு அன்று; அதற்கு மாறாக, உலகில் இருப்பதாக
அவர்கள் நம்பிய ஆற்றல்களோடு தொடர்புகொள்வதை - அவ்வாறு
தொடர்புகொள்வதற்காக அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் மேற்கொண்ட
நடத்தைமுறைகளையும் வழிபாடுகளையும் ‘தொல்சமயம்’ குறிக்கின்றது.

3.1. பெருஞ்சமயம் / நிறுவன சமயம் (Great religion/


Institutionalized religion)

‘தொல்சமயம்’ பற்றிச் சிந்திப்பதற்குமுன் பெருஞ்சமயம்/


நிறுவனமாக்கப்பட்ட சமயம் பற்றி அறிந்துகொள்வது இன்றியமையாததாகும்.
ஏனெனில், இரண்டுமே ‘சமயங்கள்’ என்று கருதப்பட்டாலும், இரண்டிற்கும்
அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. இன்று, உலகில் பெருஞ்சமயங்களாக விளங்கும்
கிறித்துவம் இஸ்லாம் பௌத்தம் சமணம் போன்ற சமயங்கள் வரலாற்றுக் காலத்தில்
வாழ்ந்த மனிதர் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டவை அல்லது அவரைப் பின்பற்றிய
சீடர்களால் நிறுவனங்களாக்கப்பட்டவை. புத்தர் தம்கொள்கைகளைச் ‘சமயம்’
என்னும் நிலையில் போதிக்கவிலை; ஆயினும், அவருக்குப் பின்னர் வந்த அவரது
சீடர் பரம்பரையினர் புத்தரைக் கடவுளாக்கிப் பௌத்த சமயத்தை உருவாக்கினர்.
சமணமும் கிறிஸ்துவமும் இஸ்லாமும் இவ்வாறே வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த
ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட சமயங்களாகும்.

இச்சமயங்கள் புலன்கடந்த உலகம் பற்றிப் பேசுகின்றன. இவை மனிதனின்


ஆன்மா (soul) பற்றியும் ஆன்ம விடுதலை (liberation) பற்றியும் பேசுகின்றன. தம்
சமயக் கொள்கைகளை விளக்குவதற்குப் புனித நூல்களை (scriptures) அவை
இயற்றியுள்ளன. இச்சமயங்கள் ‘ஒருகடவுட் கோட்பாட்டினை (monotheism)

53
வலியுறுத்துகின்றன; பாவம் (sin), புண்ணியம் (virtue) பற்றி எடுத்துரைக்கின்றன.
அவை தம்சமயத்தை ஒரு நிறுவனமாக்கித் (institution) தங்கள் சமயக் கொள்கைகளை
விளக்குவதற்கும் பரப்புவதற்கும் விகாரம் (பௌத்த விகாரம்), தேவாலயம் (Church)
மசூதி போன்ற நிறுவனங்களைத் தோற்றுவிக்கின்றன. தத்தம் சமயக்
கொள்கைகளைத் தம்மைப் பின்பற்றும் மக்கள் கடைப்பிடிக்கின்றார்களா?
இல்லையா? என்று கண்காணிக்கின்றன. சமய விதிகளை மீறுவோர் மீது
நடவடிக்கை எடுக்கப்படுகின்றது; அவ்விதிகளை மீறுவோர் அச்சமயக்
குழுவிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

இந்து சமயம் இன்று பெருஞ்சமயங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டாலும்,


அதன் வரலாற்றை ஆராய்ந்தால் அதனைத் தோற்றுவித்தவர் யார் என்று கூற
இயலவில்லை. ‘இந்து’ சமயம் என்னும் பெயரே இடைக்காலத்தில் இந்தியாவில்
வாழ்கின்ற இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள் குழுக்களைக் குறிப்பதற்காகப் பிறரால்
உருவாக்கப்பட்ட சொல்லாகும். இச்சமயம் பல்தெய்வக் (polytheism)
கோட்பாட்டினைக் கொண்டுள்ளது.

‘இந்து’ சமயத்தில் சைவம் வைணவம் என்று இரண்டு பெரும்பிரிவுகள்


உள்ளன. சைவம் சிவபெருமானை முதன்மையான கடவுளாக வழிபடுகின்றது;
வைணவம் விஷ்ணுவை (திருமால்) முதன்மையான கடவுளாக வழிபடுகின்றது.
ஸ்கந்த சுப்பிரமணயனே (முருகன்) முழுமுதற் கடவுள் என்பாரும் சக்தியே (The
Divine Mother) முழுமுதற் கடவுள் என்பாரும் கணபதியே முழுமுதற் கடவுள்
என்பாரும் சூரியனே முழுமுதற்கடவுள் என்பாரும் இந்து சமயத்தினராகவே கருதப்
பெறுகின்றனர்.

வடமொழியிலுள்ள வேதங்கள் உபநிடதங்கள் பகவத் கீதை போன்ற சமய


நூல்கள் உருவக் கடவுளரையும் பேசுகின்றன; உருவமற்ற மெய்ப்பொருள் பற்றியும்
பேசுகின்றன. இந்துக்களின் புனித நூல்கள் வடமொழியில் மட்டும் அல்லாமல்
இந்திய வட்டார மொழிகளிலும் உள்ளன. சைவம், வைணவம் ஆகிய சமய
உண்மைகளை விளக்கும் மூலநூல்கள் பல தமிழில் உள்ளன. ஆகவே, எல்லாராலும்
ஏற்றுக் கொள்ளக்கூடிய இந்து மறைநூல் (Hindu Sacred Scripture) என்று எதுவும்
இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. இக்காரணங்களால் இந்து சமயம் இன்று
பெருஞ்சமயமாகக் கருதப்பட்டாலும், அது சமணம், பௌத்தம் கிறிஸ்துவ இஸ்லாம்
சமயங்கள் போன்ற நிறுவன சமயம் அன்று. இச்சமயத்தின் தோற்றத்தைத்

54
திட்டவட்டமாக அறுதியிட்டுக் கூற முடியாததால், இம் மதம் ‘சநாதனம்’
எனப்படுகின்றது; ‘சநாதனம்’ என்பது தொடக்கம் எதுவும் இல்லாதது என்று
பொருள்படும். இந்து சமயத்தைச் சமயம் (religion) என்று சொல்வதைவிட
அதனைச் சில குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் வாழ்க்கை நடைமுறைகளின் (ways
of life) தொகுப்பென்று கூறுவதே பொருத்தமாகும்.

பெருஞ்சமயத்திற்கும் தொல்சமயத்திற்கும் இடையிலுள்ள அடிப்படை


வேறுபாடுகளை, பியோனா போவி (Fiona Bowie) என்னும் மானிடவியல் அறிஞர்
தொகுத்துப் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். அவர் பெருஞ்சமயம் /
நிறுவனமாக்கப்பட்ட சமயம் என்னும்நம் குறியீட்டினை ‘உலகச் சமயம்’ (world
religion) என்று குறிக்கின்றார். உலகச் சமயத்தில், பலரது கருத்துகளின்படி
இருப்பதாகக் கருதப்படும் சிறப்பம்சங்கள் (features) இவையிவை என்று அவர்
தொகுத்துக் கூறுகின்றார்:

1. அது எழுதப்பட்டுள்ள மறைநூல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.


2. அச்சமயத்தில் ஆன்ம விடுதலை பற்றிய சிந்தனை இருக்கின்றது; சில
சமயங்களில் மக்களின் ஆன்ம விடுதலைக்காக மீட்பர் (Redeemer)
ஒருவர் வருவார் என்னும் நம்பிக்கையும் இருக்கின்றது.
3. அது உலகளாவியது; உலகம் முழுவதும் பரவக்கூடிய இயல்பு அதற்கு
உண்டு.
4. அது ஒரு தொடக்கநிலைச் சமயத்தைத் (Primal religion) தன்னுள்
உள்வாங்கிக் கொள்ளும் திறனுடையது.
5. பெரும்பாலும் அதன் செல்வாக்கெல்லை மற்றவற்றிலிருந்து வேறுபட்டு
நிற்கும்.
மானிடவியல் அறிஞர்களில் பலர் தொல்சமயத்தை Primitive Religion
என்னும் கலைச்சொல்லைப் பயன்படுத்தி விளக்கினர். பியோனா போவி அதனை
Primal Religion என்கின்றார். நாம் அதனைத் ‘தொடக்கநிலைச் சமயம்’ என
மொழிபெயர்த்துப் பயன்படுத்துகின்றோம்,

தொடக்கநிலைச் சமயமங்களில் இருப்பதாகக் கருதப்படும் சிறப்பம்சங்களும்


அவரால் பட்டியலிடப்பட்டுள்ளன:

55
1. அவை வாய்மொழி வழக்கில் உள்ளவை; இச்சமயங்கள் வழங்கும்
பண்பாடுகளில் எழுத்தறிவு இருக்குமாயினும், எழுத்து வடிவில்
எழுதப்பட்ட சமயக் கோட்பாட்டுத் தொகுதிகள் இருக்க மாட்டா.
2. அவை இவ்உலக (worldly) வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை.
3. அவை ஒரு மொழியைப் பேசுகின்ற மக்கள் அல்லது இனக்குழு (ethnic
group) எல்லைகளுக்குள் இருப்பவை.
4. அவை உலகச் சமயங்கள் அல்லது பெருஞ்சமயங்களாக வளர்ச்சி
பெறுவதற்கு வேண்டிய அடித்தளங்களைத் தம்முள் கொண்டுள்ளன.
5. தொடக்கநிலைச் சமயம் வழங்கும் பண்பாடுகளில், சமயமும் சமுதாயமும்
ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துக் காண முடியாதபடி இரண்டும்
பின்னிப் பிணைந்துள்ளன; இப்பண்பாடுகளில் புனிதத்திற்கும் தீட்டிற்கும்
தெளிவான வேறுபாடுகள் இல்லை. அதேபோன்று, இப்பண்பாடுகளில்
இயற்கைக்கும் (nature) மீவியல்புக்கும் (super natural) தெளிவான
வேறுபாடுகள் இல்லை19.
பியோனா போவி தரும் விளக்கங்கள் தொல்சமயத்தையும்
பெருஞ்சமயத்தையும் அவற்றின் அடிப்படைகளையொட்டி வேறுபடுத்திக்
காட்டுகின்றன. பெருஞ்சமயத்தைத் தோற்றுவித்தவர் வரலாற்றுக் காலத்தில்
வாழ்ந்தவர்; அவரை நாம் இன்னாரென்று அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
ஆனால், ‘தொல்சமயம்’ தனியொருவரால் தோற்றுவிக்கப்பட்டது அன்று; அது
சமூகம் சார்ந்தது; சமூக வயப்பட்டது. தொல்சமுதாயங்களில் வாழ்ந்த மக்கள்
கைக்கொண்டொழுகிய பண்பாட்டின் ஓர் அலகாக (unit) வரலாற்றின் ஊடே
இயல்பாக அது வளர்ச்சி பெறுவது; அப்பண்பாட்டைக் கைக்கொண்டொழுகும்
மக்கள் இருக்கும்வரை அவர்களுடைய தொல்சமயமும் நிலைத்து நிற்கும்.

3.2. பழந்தமிழ் மக்களின் தொல்சமயம்

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் பண்பாடுகளின்


ஒரு கூறாகத் திகழும் ‘தொல்சமயம்’ பற்றி மானிடவியல் அறிஞர்கள் ஆராய்ந்து
கூறி இருப்பனவற்றை நாம் சுருக்கமாக மேலே எடுத்துக் கூறினோம். அவை
நிறுவனமாக்கப்பட்ட பெருஞ்சமயங்கள் அல்லது உலகச் சமயங்களிலிருந்து

19
The ANTHROPOLOGY of RELIGION, op.cit.: p.26.

56
வேறுபட்டுக் காணப்படுகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் பழங்குடி
மக்களின் தொல்சமயங்களில் இடம்பெற்றுள்ள முக்கியமான கூறுகளைப்
பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:

I. இயற்கை வழிபாடு (Naturism)


II. ஆவி வழிபாடு (Animism)
III. உயிர்ப்பாற்றல் (Animatism)
IV. நீத்தார் நினைவு (Veneration of the Dead)
V. முன்னோர் வழிபாடு (Ancestor Worship)
VI. மீவியல் (Supernatural)
VII. சடங்குகள் (Rituals)
VIII. மந்திரம் (Magic)
IX. குலக்குறி (Totem)
X. போலியுரு வழிபாடு (Fetishism)
XI. மனா (Mana)
இக்கூறுகள் உலகிலுள்ள பழங்குடி மக்களின் தொல்சமயங்கள்
அனைத்திலும் இடம் பெற்றுள்ளன என்று கூற இயலாது; சில பண்பாடுகளில்
இவற்றுள் சில இல்லாமலும் இருக்கலாம். எடுத்துக்காட்டாகக் கூறுவதாயின்,
அந்தமான் மக்களிடம் முன்னோர் வழிபாடும் ஆவிவழிபாடும் மட்டுமே உள்ளன.
மெலனிசீயப் பழங்குடி மக்களிடம் இருக்கும் ‘மனா’ நம்பிக்கை ஒன்றே அவர்களின்
சமயமாக விளங்குகின்றது.

பழந்தமிழ் மக்களின் தொல்சமயத்திலும் உலகின் பல்வேறு பகுதிகளில்


வாழும் பழங்குடி மக்களின் தொல்சமயங்களில் காணப்படும் சில கூறுகள் இடம்
பெற்றுள்ளன. அவற்றைத் தொல்காப்பியமும் எட்டுத் தொகைநூல்களும் பத்துப்
பாட்டும் பதிவு செய்துள்ளன. தமிழ் மக்களின் வாழ்நிலங்கள் மலைகளாகவும்
மலைகளையொட்டிய பகுதிகளாகவும் காடுகளாகவும் காடுகளையொட்டிய
பகுதிகளாகவும் ஆறுகளையொட்டிய சமவெளிகளாகவும் கடலையொட்டிய
நிலப்பகுதிகளாகவும் இருக்கின்றன.

பழங்காலத்தில் இவை தனித்தனியான இயற்கைச் சூழலுடன் கூடிய (eco-


regions) வாழ்நிலங்களாகத் திகழ்ந்தன. மலைகளிலும் மலைகளையொட்டிய
பகுதிகளிலும் காடுகளிலும் காடுகளையொட்டிய பகுதிகளிலும் சில சமயங்களில்

57
பருவமழை பொய்த்து விடுவதுண்டு. அத்தகைய காலத்தில், அவை தம்செழுமையை
இழந்து வறண்ட நிலங்களாகி விடுவதுண்டு; பழந்தமிழ் மக்கள் இவ்வாறு தோன்றும்
நிலவியல்பைப் ‘பாலை’ என்னும் பெயரால் அழைத்தனர். அத்தகைய சூழலில்
அங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக ஆநிரை
கவர்வதிலும் வழிச்செல்வோரைத் தாக்கி அவர்களிடமிருந்த பொருள்களைப்
பறிப்பதிலும் ஈடுபட வேண்டியிருந்தது.

தொல்காப்பியர் தமிழ் மக்கள் வாழும் நிலத்தைக் குறிஞ்சி முல்லை மருதம்


நெய்தல் பாலையென வகைப்படுத்திப் பொருள் இலக்கணம் வகுத்துள்ளார்.
ஒவ்வொரு வாழ்நிலத்திற்குமுரிய தொழில்கள் வேறுபட்டிருந்தன; பொருளாதாரச்
சூழல்கள் மாறுபட்டிருந்தன; அவ்வவ் நிலத்திற்கும் தனிப்பண்பாடுகள் இருந்தன;
தெய்வங்கள் இருந்தன. இவற்றின் அடிப்படைகளிலேயே தொல்காப்பிய இலக்கணம்
எழுதப்பட்டுள்ளது; சங்க இலக்கியப் பாடல்களும் இவ்அடிப்படைகளிலேயே
பாடப்பட்டுள்ளன. இவை அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் நாம் தமிழர்களின்
தொல்சமயத்தை ஆராய்கின்றோம்.

தொல்காப்பியம் சங்க இலக்கியம் ஆகியவற்றின் காலம் உள்ளடக்கங்கள்


குறித்து முன்னுரையில் நாம் எடுத்துரைத்துள்ளோம்; தொழில்நுட்பங்கள்
வளர்ச்சிபெறாத – பெருமளவுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வாழ்நிலங்களில்
வாழ்ந்த மக்களிடையில் மலர்ச்சி பெற்ற பண்பாட்டின் வழியே அம்மக்களிடையே
உருவான வழிபாட்டு நடத்தைமுறைகளையே தமிழர்களின் தொல்சமயமென்று நாம்
விளக்க முயல்கின்றோம். இவ்வழிபாட்டு நடத்தைமுறைகளையே தொல்காப்பிய
இலக்கணமும் சங்க இலக்கியமும் பதிவு செய்துள்ளன என்றும் நாம் சுட்டிக்
காட்டியுள்ளோம்.

சங்க இலக்கியம் என்று நமக்குக் கிடைப்பனவற்றுள் வைதிக சமயம்


தொடர்பான கருத்துகளும் இடம் பெற்றிருக்கின்றன. இந்நிலையில், சங்கப் பாடல்கள்
தொல்சமயத்தைச் காட்டுவன என்று எவ்வாறு கூற இயலும்? என்னும் வினாவினைச்
சிலர் எழுப்பக் கூடும். அதற்குரிய விடையை நாம் பின்வருமாறு
முன்வைக்கின்றோம்:

i. வைதிகம் தொடர்பான கருத்துகள் பெரும்பாலும்


புறப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. பேரூர்களிலிருந்து

58
(தலைநகர்கள்) ஆட்சி செய்த மூவேந்தர்கள் குறுநில மன்னர்கள்
போன்றோர்தாம் வைதிகத்திற்கு ஆதரவாக நின்றனர்.
அவர்களுடைய நேரடியான ஆட்சியின் கீழடங்காத பிற
நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் தங்கள் தொன்மையான
வழிபாட்டு முறைகளையே தொடர்ந்து மேற்கொண்டிருந்தனர்
என்பதற்குச் சங்கப் பாடல்களில் சான்றுகள் உள்ளன.
ii. புறநானூற்றுப் பாடல் ஒன்று (335) நடுகல்லைத் தவிர வேறு
தெய்வம் எதுவும் இல்லை என்று பதிவு செய்துள்ளது. நடுகல்
வழிபாடு வைதிகம் சார்ந்த வழிபாடு அன்று. புறப்பாடல்களிலும்
அகப்பாடல்களிலும் நடுகல் வழிபாடு பற்றிய குறிப்புகள் பல
உள்ளன.

iii. இறந்தவர்களை எரியூட்டுவது வைதிக மரபு; அதற்கு மாறாக


இறந்தவர்களைப் புதைக்கும் மரபு பழந்தமிழர்களுக்குரியது.
இறந்தவர்களை நினைவுகூரும் நிலையிலும் முறையிலும்
வேறுபாடுகள் காணப்படுகின்றன. பதுக்கை, நடுகல் போன்ற
நீத்தோர் நினைவு வழிபாடுகள் பற்றிய செய்திகள் பெரும்பாலும்
குறிஞ்சி முல்லை நிலங்களோடு தொடர்பு கொண்டுள்ளன;
இறந்தவர்களைத் தாழிகளில் வைத்துப் புதைத்து நினைவுகூரும்
பண்பாடு மருதம் நெய்தல் நிலங்களில் நிலவியது. இதிலிருந்து
ஒவ்வொரு நிலமும் தனக்கென்று சிலவழிபாட்டு முறைகளைக்
கொண்டிருந்தது என்பது தெளிவாகின்றது.

iv. உலகிலுள்ள தொல்சமயங்களில் புனிதம் தீட்டு என்னும்


எதிர்மறைக் கருத்துகள் உள்ளன என்று மேலே சுட்டிக்
காட்டினோம். தமிழர்களிடமும் இத்தகைய நம்பிக்கைகள்
இருந்தன. சான்றாகப் புறநானூற்றுப் பாடல் ஒன்று (299) முருகன்
கோயிலில் உள்ள பாண்டங்களைத் தீட்டுப்பட்ட பெண்கள்
தொடக்கூடாது என்று தடை விதித்துள்ளதைப் பதிவு
செய்துள்ளது.

v. பலவகையான சடங்கு நிகழ்ச்சிகள் தொல்காப்பியத்திலும் சங்கப்


பாடல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாழ்வியல்

59
சடங்குகளும் (திருமணம் குழந்தைப்பேறு) இறப்புச் சடங்குகளும்
புலவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில கூத்துகள்
சடங்குகளாக நிகழ்த்தப்பட்டதையும் தொல்காப்பிய இலக்கணமும்
சங்கப் பாடல்களும் பதிவு செய்துள்ளன. முன்தேர்க்குரவை
பின்தேர்க்குரவை போன்றன போர்ச் சடங்குகளாகும்;
களவேள்வியும் போரோடு தொடர்புடைய சடங்கு நிகழ்ச்சியாகும்.

vi. மனித ஆற்றலுக்கு மேற்பட்ட ஆற்றல்கள் இருப்பதைப்


பழந்தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. ‘பால்’ என்று
கூறப்படும் மீவியல் ஆற்றல் தங்கள் வாழ்வில் நிகழும் எல்லா
நிகழ்ச்சிகளையும் முறைப்படுத்தி இயக்குவதாகப் பழங்காலத்
தமிழர்கள் நம்பினர் என்பதனைத் தொல்காப்பியமும் சங்கப்
பாடல்களும் பதிவு செய்துள்ளன.

vii. ஒவ்வொரு நிலத்திற்குமுரிய கண்ணுக்குப் புலப்படாத, ஆனால்


ஆற்றல்மிக்க பெண்தெய்வங்கள் இருந்தன. இவற்றைப் பொதுவாக
‘ அர மகளிர்’ என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இத்தெய்வங்கள் பேரழகு வாய்ந்தவை; இவை மலைகளிலும்
மலைச்சரிவுகளிலுள்ள குகைகளிலும் காடுகளிலும்
கடலோரங்களிலும் நீர்நிலைகளிலும் இருப்பனவாக நம்பப்பட்டன.
அவற்றின் இருப்பிடத்தை யொட்டி அவர்கள் அவற்றை வரையர
மகளிர் நீரர மகளிர் எனப்பெயர் சூட்டி வழிபட்டனர்.

viii. மலை காடு ஆறு கடல் போன்ற இயற்கைப் பொருள்கள்


வழிபாட்டுக்குரியவையாக இருந்தன.

ix. காவல் மரம் பற்றிய செய்திகள் பதிவாகி உள்ளன; இவை


குலக்குறியோடு தொடர்புடையனவாகலாம்.

x. வேளிர்களின் தோற்றம் பற்றிய தொன்மங்கள் புலவர்களால்


பாடப்பட்டுள்ளன.

xi. மேலோர் உலகம் பற்றித் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. இது


வைதிக சமயம் கூறும் கடவுளர் வாழும் மேலோர் உலகம்

60
அன்று; மாறாக, போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரர்களின்
உயிர்கள் இறப்புக்குப் பின் சென்று சேரும் - வீரர்கள் தங்கும் -
உலகமாகக் கூறப்பட்டுள்ளது.

xii. இவ்வுலகத்தில் அறம் செய்தால், மறுபிறப்பில் அதற்குரிய பயன்


கிட்டும் என்பது வைதிக சமயக் கொள்கை. அதற்கு மாறாகப்
பழந்தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடு அமைந்துள்ளது.
இதனைப் புறநானூற்றுப பாடல் ஒன்று (134) பதிவு
செய்துள்ளது.

xiii. குறிஞ்சிநிலத்திற்கு முருகனையும் முல்லைநிலத்திற்கு


மாயோனையும் மருதநிலத்திற்கு வேந்தனையும் நெய்தல்
நிலத்திற்கு வருணனையும் தொல்காப்பியம் தெய்வங்களாக
வகுத்துள்ளது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் வேந்தனை
வைதிக சமயம் கூறும் இந்திரனாக விளக்குகின்றார்கள். வருணன்
என்னும் நெய்தல்நிலத் தெய்வத்தின் பெயரும் வைதிக சமயக்
கடவுள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. சங்க இலக்கியப்
பாடல்களில் நேரடியாக இந்திரனைப் பற்றிய குறிப்புகளோ
வருணனைப் பற்றிய குறிப்புகளோ இல்லை. பாலை நிலத்திற்குரிய
தெய்வம் பற்றிய வெளிப்படையான குறிப்பு தொல்காப்பியத்தில்
இல்லாவிட்டாலும், அவர் பாலை நிலத்தெய்வமான கொற்றவை
பற்றிக் குறிப்பிடுகின்றார். சங்கப் பாடல்களில்சில கொற்றவை
வழிபாட்டைப் பதிவு செய்துள்ளன. நெய்தல்நிலத்தில் நெய்தல்நில
மக்கள் சுறாமீனின் கொம்பை நட்டு வழிபடும் செய்தி சங்கப்
பாடல்களில் இடம் பெற்றுள்ளது. இவ்வழிபாடும் வைதிக சமய
வழிபாடு அன்று.

தொல்சமயம் பற்றி நாம் மேலே வைத்துள்ள கருதுகோளுக்கேற்பத்


தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் தமிழர்களின் தொல்சமயத்தை
விளக்குவதற்குரிய தரவுகள் பதிவாகியுள்ளன என்பது உறுதியாகின்றது.

3.5. தொல்சமயம் தொடர்பான ஆய்வுகள்

61
உலகம் முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் மானிடவியல் கல்வியும்
ஆராய்ச்சியும் பெருமளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளன. மேலைநாட்டு மானிடவியல்
அறிஞர்கள் உலகெங்கினும் வாழும் பழங்குடி மக்கள் வாழும் இடங்களுக்குச்
சென்று அம்மக்களுடைய இனம் மொழி பண்பாடு நாகரிகம் பற்றி ஆராய்ந்து
அறிவார்ந்த நூல்களை எழுதியுள்ளனர்; தொடர்ந்து எழுதியும் வருகின்றனர்.

ஆனால், இந்தியாவில் மானிடவியல் கல்வி பெருமளவிற்கு வளரவில்லை.


ஒருபெரும்துணைக் கண்டமான இந்தியாவில் ஏறத்தாழ இருபது
பல்கலைக்கழகங்களில் மட்டுமே மானிடவியல் துறை உள்ளது என்று அறியும்போது,
அதன் வளர்ச்சி பற்றி நாம் சொல்ல வேண்டுவதில்லை. மேலை நாடுகளிலிருந்து
வந்த பலஅறிஞர்கள், தென்னிந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும், பாகிஸ்தானிலும்
வாழ்கின்ற திராவிடப் பழங்குடிகளின் வாழ்க்கை பண்பாடு மொழிபற்றி ஆராய்ந்து
நூல்களை எழுதியுள்ளனர். தென்னிந்தியாவில் வாழும் தென்திராவிடப் பழங்குடி
மக்களான தோடர்கள் பற்றி ரிவர்ஸ் (Rivers) என்பாரும் எமனோ (Emeneau)
என்பாரும் ஆராய்ந்துள்ளனர். தர்ஸ்டன் (Thurston) என்பார் ‘தென்னிந்தியக்
குலங்களும் குடிகளும்’ (Caste and Tribes of South India) என்னும் மிகச் சிறந்த ஆய்வு
நூலைப் பல தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார். எல்வின் வெரியர் (Verriar
Elwin) என்பார். மத்திய இந்தியாவில் வாழும் நடுத்திராவிட இனக்குழு மக்களின்
பண்பாட்டினை ஆராய்ந்துள்ளார்.

பெரியாழ்வார் சக்திவேல் இஸ்ரேல் இராமகிருஷ்ணா ரெட்டி போன்ற


இந்திய மொழியியல் அறிஞர்களும் திராவிட இனக்குழு மக்களின் மொழி பண்பாடு
பற்றி ஆராய்ந்துள்ளனர். இவற்றுள் பெரும்பாலான மொழியியல் அடிப்படையில்
எழுதப்பட்டவையாகும்; அவற்றுள் அம்மக்களின் தொல்சமயம் பற்றிய விரிவான
தரவுகள் இல்லை.

தமிழ்நாட்டில் மானிடவியல் துறை சென்னைப் பல்கலைக் கழகத்திலும்


புதுவைப் பல்கலைக்கழகத்திலும் தனித்துறையாக உள்ளது. புதுவையிலுள்ள
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் (PILC) மானிடவியல்
துறை அறிஞராகப் பணியமர்த்தப் பெற்றுள்ள பக்தவத்சல பாரதி தனியொருவராக
அதனை ஒருதனித்துறையாக வளர்த்தெடுத்து வருகின்றார்.

62
மானிடவியல் பற்றிய நூல்களும் தமிழில் பெருமளவில் வெளிவரவில்லை.
மானிடவியலைத் தமிழில் முதன்முதலில் அறிமுகம் செய்த பெருமையும் பக்தவத்சல
பாரதிக்கே உரியதாகும். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது,
தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட வாழ்வியல் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள
மானிடவியல் தொடர்பான கட்டுரைகள் அனைத்தையும் அவரே எழுதினார்.
மானிடவியல் பற்றித் தமிழில் முதன்முதலில் அறிமுகமானவை இவருடைய
கட்டுரைகளேயாகும்.

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிக்


கொண்டே பக்தவத்சல பாரதி மானிடவியல் தொடர்பான நூல்களை எழுதி
வெளியிட்டு வருகின்றார். இவர் 1990-ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட
‘பண்பாட்டு மானிடவியல்’ என்னும் நூலே தமிழ்மொழியில் வெளிவந்த முதல்
மானிடவியல் நூலாகும். இந்நூல் தமிழ் மக்களிடம் பெரும்வரவேற்பைப் பெற்றதால்,
அதன் திருந்திய பதிப்புகள் அடுத்தடுத்து வெளிவந்தன. ‘தமிழர் மானிடவியல்’
என்னும் நூலும் (2002), ‘மானிடவியல் கோட்பாடுகள்’ என்னும் நூலும் (2005)
வெளியாகித் தமிழ்நாட்டில் பெரும்தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இந்நூல்களில்
மானிடவியலின் தோற்றம் வளர்ச்சி அதன் கோட்பாடுகள் விரிவாக
எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

நம் ஆய்வுப் பொருளான ‘தமிழர்களின் தொல்சமயம்’ பற்றி விரிவான


நூல்கள் எதுவும் ஆங்கிலத்திலோ தமிழிலோ இதுவரை வெளிவந்ததாகத்
தெரியவில்லை. தொல்சமயத்தின் பல கூறுகளையும் தன்னகத்துக் கொண்டுள்ள
நூலாக மு. சண்முகம் பிள்ளையின் ‘சங்கத் தமிழரின் சமயமும் வழிபாடும்’
என்னும்நூல் 1996-ஆம் ஆண்டில் வெளியாயிற்று. இந்நூலில் சங்க இலக்கியங்களில்
இடம்பெற்றுள்ள பழந்தமிழர்களின் சமயம் பற்றிய குறிப்புகள்
இடம்பெற்றிருப்பதோடு வைதிக சமயம் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன;
எனவே, இந்நூலை தமிழர்களின் தொல்சமயம் பற்றி ஆராயும் தனிநூலாகக் கொள்ள
முடியாது. ஏனெனில் இந்நூலாசிரியர் தம் கருத்துகளை மானிடவியல் நோக்கில்
ஆராய்ந்து கூறவில்லை; இந்நூலைப் பழந்தமிழ் மக்களின் வழிபாடுகள் பற்றிய
செய்திகளின் தொகுப்பாகவே நம்மை எண்ண வைக்கின்றது.

சண்முகம் பிள்ளையைப் போன்றே இவ்ஆய்வாளர் சங்க காலத் தமிழ்


மக்களின் சமயம் நம்பிக்கைகள் பற்றி ஆராய்ந்து எழுதிய ஆங்கிலக் கட்டுரை The

63
Religious Beliefs and Practices of Ancient Tamils சென்னைப் பல்கலைக் கழகத்தில்
மெய்யியல் துறையில் நடைபெற்ற ஓர் அகில இந்தியக் கருத்தரங்கில்
படிக்கப்பட்டுச் செப்பம் செய்யப்பட்டு, இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்
(MHRD) உறுப்பான நாகரிகங்கள் தொடர்பான ஆய்வு மையத்தால் (Centre for
Civilization) 2008-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின்னர் இது தனிநூலாக
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் (2010) வெளியிடப்பட்டது. இந்நூலிலும்
பழந்தமிழ் மக்களின் சமயம், மானிடவியல் நோக்கில் ஆராயப்படவில்லை.

க.கைலாசபதி அவர்களின் ‘பழந்தமிழர் வாழ்வும் வழிபாடும்’ என்னும்


நூலில் இடம்பெற்றுள்ள ‘பேய் மகளிர்’ என்னும் கட்டுரை பழந்தமிழ் மக்களின்
போர் தொடர்பான வெற்றிச் சடங்கை மானிடவியல் நோக்கில் ஆராய்ந்து
கூறுகின்றது. இந்நூலில் இடம்பெற்றுள்ள ‘அழிவும் ஆக்கமும்’, ‘வீர வணக்கம்’
என்னும் இரண்டு கட்டுரைகளும் பழந்தமிழ் மக்களின் போர் நடவடிக்கைகளை
அறிவியல் நோக்கில் ஆராய்கின்றன.

பி.எல்.சாமி என்னும் அறிஞர் எழுதிய ‘தமிழ் இலக்கியத்தில் தாய்த் தெய்வ


வழிபாடு’ (1975) என்னும் நூலும் ‘வேலன் வெறியாட்டு’ என்னும் கட்டுரையும்
முறையே பழந்தமிழர்களின் தெய்வங்களான கொற்றவை முருக வழிபாடுகளை
மானிடவியல் பார்வையில் ஆராய்கின்றன. கா.சிவத்தம்பி அவர்களின்
முனைவர்பட்ட ஆய்வேடான Drama in Ancient Tamilnadu (1981) தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டு ‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்னும் பெயரில்
(2001) வெளிவந்துள்ளது. இவ்ஆய்வு நூலில் சிவத்தம்பி வீர யுகத்தில் நடனமும்
நாடகமும் தமிழ்மக்களின் வாழ்க்கையோடு இணைந்த சடங்குகளின்
வெளிப்பாடுகளாகும் என்று விளக்கியுள்ளார்.

நா. வானமாமலை அவர்களின் ‘தமிழர் பண்பாடும் தத்துவமும்’ என்னும்


கட்டுரைத் தொகுப்பு நூலில் (2008) இடம்பெற்றுள்ள ‘முருக – ஸ்கந்த இணைப்பு’
‘பரிபாடலில் முருக வணக்கம்’ என்னும் இரண்டு கட்டுரைகளும் பழந்தமிழ்த்
தெய்வமான முருக வழிபாடு காலந்தோறும் எவ்வாறு மாறுபட்டுக் கொண்டு
வந்துள்ளது என்பதனை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து கூறுகின்றன.
ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய ‘மந்திரம், சடங்குகள்’ என்னும் நூல் (1988)
தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்ச் சமூகத்தில் மந்திரம் எவ்வாறு
வினையாற்றுகின்றது என்பதனை ஆராய்ந்து கூறுகின்றது. ஆ.தனஞ்செயனின்

64
‘குலக்குறி இயலும் மீனவர் வழக்காறுகளும்’ என்னும் நூல்(1996) பண்டைத் தமிழ்ச்
சமூகத்தில் இடம்பெற்றுள்ள குலக்குறி பற்றிய ஆய்வைத் தொட்டுக் காட்டுகின்றது.
அவருடைய மற்றொரு நூலான ‘சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியமும்’
என்னும் நூல் (2010) பழந்தமிழ்ப் பாடல்களை மானிடவியல் பார்வையில்
ஆராய்கின்றன. நா.இராமச்சந்திரனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு
வெளியிடப்பட்டுள்ள ‘பொத்தன் தெய்யம்’ என்னும் நூலிலுள்ள (2011)
கட்டுரைகளும் பழந்தமிழச் சமூகத்தின் வழிபாட்டு மரபுகளுக்கும் நாட்டார்
வழிபாட்டு மரபுகளுக்குமிடையிலுள்ள தொடர்புகளைச் சுட்டிக் காட்டுகின்றன.
சு.வித்தியானந்தனின் ‘தமிழர் சால்பு’ (1985) என்னும் நூலும், கா.சுப்பிரமணியனின்
‘சங்க காலச் சமுதாயம்’ (1982) என்னும் நூலும் பெ.மாதையனின் ‘சங்க கால
இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும்’ (2004) என்னும் நூலும்
கைலாசபதியின் ‘தமிழ் வீரநிலைக் கவிதை’ (2006) என்னும் ஆய்வு நூலும் கா.
சிவத்தம்பியின் ‘பண்டைத் தமிழ்ச் சமூகம்’ (2010) என்னும் நூலும் பழந்தமிழ்
மக்களின் சமயம் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றன. புதுவை மொழியியல்
பண்பாடு ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘பண்பாட்டியல் நோக்கில்
பண்டைத் தமிழர் சமய மரபுகள்’ என்னும் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூல்
(2011) பழந்தமிழர்களின் தொல்சமயம் பற்றிய பல கூறுகளைத் தொட்டுக்
காட்டுகின்றன.

3.6. முடிவுரை

தமிழ் மக்களின் ‘தொல்சமயம்’ பற்றி வெளிவந்துள்ள ஆய்வுநூல்கள் பற்றி


எடுத்துக் கூறினோம். தமிழர்களின் ‘தொல்சமயம்’ பற்றி ஒரு முழுமையான ஆய்வு
இதுவரை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. பழந்தமிழ் மக்களின்
தொல்சமயத்தின் பல்வேறு கூறுகளை மானிடவியல் நோக்கில் ஆராய்ந்து கூறும்
முறையில் இவ்ஆய்வு திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இது ஒரு முன்னோடி
ஆய்வாகலாம்.

65

You might also like