You are on page 1of 4

பொது உரை தயாரிப்பு : சொற்பொழிவு

தலைப்பு : இளைஞர்களால் தேர்ந்தெடுக்கப்படும்


நண்பர்கள்

பெருமதிப்பிற்குரிய தலைமையாசிரியருக்கும், சக ஆசிரியர்களுக்கும்

அன்பான மாணவ மணிகளுக்கும் என் இனிய மாலை வணக்கத்தைத்

தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இவ்வினிய பொழுதினில் இப்பள்ளியின்

கட்டொழுங்கு ஆசிரியர் என்ற முறையில் “இளைஞர்களால்

தேர்ந்தெடுக்கப்படும் நண்பர்கள்”, என்ற தலைப்பினையொட்டி ஓர்

உரையை ஆற்ற வந்துள்ளேன்.

மாணவ மணிகளே,

இளைஞர்கள் எனப்படுபவர்கள் யார்? குழந்தை பருவத்திற்கும்

முதிர்ந்த பருவத்திற்கும் இடைப்பட்டவர்களே இளைஞர்களாவர்.

இப்பருவத்தைப் பெரியோர் மிகவும் அழகாக கண்ணாடியின் தன்மைக்கு

ஒப்புமையாகக் கூறுவர். ஏனெனில், கண்ணாடி என்பது எளிதில் உடையக்

கூடியதாகும். அதுபோலவே இளைஞர்கள் எந்தச் சூழ்நிலையிலும் எளிதில்

பிறரால் ஆட்கொள்ளப்படக் கூடியவர்களாவர். இதனால்தான் பெரியவர்கள்

இப்பருவத்தைக் கண்ணாடிக்கு ஒப்புமை படுத்தி இளைஞர்களை மிகவும்

கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

அன்பார்ந்த மாணவர்களே,

இக்காலச் சூழலில், தாய் தந்தையினரைத்தவிர ஓர் இளைஞனுக்கு

அவன் தேர்ந்தெடுக்கும் நண்பனே வாழ்க்கையின் வழிகாட்டியாக


அமைகிறான். எனவே, இளையோர் தமக்கு உகந்த நண்பனை மிகவும்

கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்

“நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பருட்டு”

என்ற திருக்குறளுக்கேற்ப உதட்டளவில் நட்புக் கொள்ளாமல் நண்பன் தீய

வழியில் செல்லும்போது நல்வழிகாட்டுபவனையே சிறந்த நண்பனாகக்

கொள்ள வேண்டும். நண்பனின் துன்பத்தை அல்லது கஷ்ட்டத்தைத் தம்

துன்பமாக நினைக்கும் ஆற்றல், உதவும் மனப்பான்மை, ஒத்துழைக்கும்

தன்மை, எளிதில் நட்புக் கொள்ளும் தன்மை போன்ற குணங்கள் ஒரு

நண்பனிடம் இருத்தல் மிக அவசியமாகும். இக்குணங்கள் அனைத்தும்

காந்தம் இரும்பைக் கவர்வது போல ஒருவரிடம் நட்புக்கொள்வதற்கு

ஈர்ப்புச் சக்தியாக அமைகிறது.

மாணவர்களே,

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலான நேரத்தைத் தங்களுடைய

நெருங்கிய நண்பர்களுடனே செலவழிக்கின்றனர். ஏனெனில், இளைஞர்கள்

உடல் மற்றும் உள மாற்றங்களினாலும், விரக்தியாலும், குறுகிய

சிந்தனையாலும் சிக்குண்டுள்ளனர். அவர்கள் தங்களது பிரச்சனைகளையும்

சிக்கல்களையும் சக நண்பர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள முன்

வருகிறார்கள் அல்லது விரும்புகின்றார்கள் என்றும் சொல்லலாம்.

ஏனெனில், சம வயதுடைவர்களால்தான் தங்களது மனதைப் புரிந்து

கொள்ள முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஆகவே, பள்ளியில்

நடக்கும் பிரச்சனைகளையும் தங்களுடைய வாழ்வில் ஏற்படும்

இன்னல்களையும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளாமல் நண்பர்களையே

நாடிச் சென்று பகிர்ந்து கொள்கிறார்கள்.


மாணவ மணிகளே,

பழகும் நண்பர்கள் நல்லவர்களாக இருப்பின், இவர்களும்

நன்னடத்தையையே பின்பற்றுவர். மாறாக, தீய நண்பர்களுடன்

நட்புறவாடும் இளைஞர்கள் இறுதியில் தீய வழிக்கே இட்டுச்

செல்லப்படுகின்றனர். தீய கூட்டணியில் சேரும் இவர்கள் நாளடைவில்

பெற்றோரின் கருத்துகளை ஏற்காமல், சுயமாக இயங்க முற்படுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இத்தகைய தீய நண்பர்களின் சகவாசத்தால்

போதைப்பொருட்கள் உட்கொள்ளுதல், புகை பிடித்தல், மது அருந்துதல்

மற்றும் குண்டர் கும்பலில் ஈடுப்படுதல் போன்ற தகாத காரியங்களில்

இளைஞர்கள் சிக்கித்தவிக்கவும் நேரிடும். இதனால், இவர்கள்

எதிர்காலத்தில் பல இன்னல்களுக்கு ஆளாவது மட்டுமல்லாது

குடும்பத்திற்கும் கெட்டப்பெயரை உருவாக்குகின்றனர்.

பெரும்பாலான இளைஞர்கள், வெளித்தோற்றத்திற்கே

முக்கியத்துவம் வழங்கி நண்பர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு சிலரே

நிலையான சூழல், சுமூகமான நிலை, உதவும் மனப்பான்மை,

கலந்துறவாடும் தன்மை கொண்ட நல்ல நண்பர்களை அடைகின்றனர்.

பார்த்த உடனே நட்பு கொண்டு அதன் பிறகே அவர்களைப் பற்றி

முழுமையாக அறிய விழையும் இளைஞர்கள் பின் பல இன்னல்களையும்

துன்பத்தையும் அனுபவிப்பதை நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில்

கண் கூடாகக் காணலாம்.

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சது

அகநக நட்பது நட்பு”


என்ற குறளுக்கேற்ப நாம் நண்பனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மாணவர்களே, இளைய சமுதாயத்தினர் ஒரு முடிவெடுப்பதற்கு

முன் நாலும் அறிந்து சிந்தித்து முடிவு செய்தலே நன்மை பயக்கும். கண்

கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கொப்ப இல்லாமல்,

எதையும் தீர ஆலோசித்து முடிவெடுப்பதன் மூலம் இளைஞர்கள் பல

துன்பங்களிலிருந்து விடுபடலாம்.

இறுதியாக, இளைஞர்கள் இப்பருவத்தை விளையாட்டுத்தனமாகச்

செலவழிக்காமல் சவால்களை எதிர்நோக்கும் தன்மை கொண்டு

வாழ்க்கையை நலமிக்கதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றியமைப்பது

அவர்களது கடமை என உணர வேண்டும். ஆக, இவ்விளைஞர்கள்

தேர்ந்தெடுக்கப்படும் நண்பர்கள் அவர்களை ஊக்குவிப்பவர்களாக இருக்க

வேண்டுமேயன்றி, ஆட்டுவிப்பவர்களாக இருக்கக்கூடாது என்பதனை

ஒவ்வொரு இளைஞனும் மனதில் கொள்ள வேண்டும்.

இதுவரையில் எவ்வித சலிப்பும் களைப்பும் எதிர்ப்பும் இல்லாமல்

என் சொற்பொழிவினை இன்முகத்துடன் கேட்டமைக்கு உங்கள்

அனைவருக்கும் என்னுடைய மகத்தான நன்றினைத்

தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கூறிய அனைத்துக் கருத்துகளும் இளைய

சமுதாயத்திற்குச் சிறந்த நண்பனைத் தேர்ந்தெடுப்பதில் பேருதவி புரியும்

என்பது திண்ணம் எனக் கூறி விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

You might also like