You are on page 1of 11

நலன்...

நீலன்

பகவான் ஸ்ரீராமசந்திர மூர்த்தி இலங்கை செல்ல சுக்ரீவன் தலைமையில், வானர படைகளின் உதவியோடு கடலில்
பாலம் அமைக்கிறார். வானர படைகள் கல், பாறை, மரம், மலை என்று பெயர்த்து கடலில் போடுகின்றனர். ஆனால்
எத்தனை போட்டாலும், கடலின் ஆழத்தால் அது அத்தனையும் முழ்கி விடுகிறது.

துவண்டு போன சுக்ரீவன் பகவானிடம் வந்து......கடலின் ஆழம் மிகவும் அதிகமாக உள்ளது. பாலம் கட்டி முடிக்க
எங்கள் சக்தியால் முடியாது போலிருக்கிறது..... என்ன செய்வது என்று வணங்கி கேட்டார். அதற்கு ஸ்ரீராமசந்திர
மூர்த்தி... அங்கு விளையாடி கொண்டிருந்த நலன் நீலன் என்ற இரண்டு குட்டி குரங்குகளை காட்டி, கடலில் போடும்
ஒவ்வொன்றையும் அவர்களை தொட செய்து போடுங்கள் என்று கூற, அப்படியே சுக்ரீவன் செய்தான்.

என்ன ஆச்சர்யம்... இப்போது கடலில் போட்ட பாறைகளும், மலைகளும் மிதக்க ஆரம்பித்தன. அனுமனுக்கு ஒரே
ஆச்சர்யம். அவர் பகவான் ஸ்ரீராமசந்திர மூர்த்தியை வணங்கி, அந்த குரங்குகள் தொட்டு கொடுத்தால் மட்டும் எப்படி
எல்லாம் மிதக்கிறது? என்ன காரணம் என்று கேட்டார்.

அனுமா... ஒரு முனிவர் அத்தி மரத்தின் அடியில் கடும் தவம் செய்து கொண்டிருந்தார். அந்த பக்கம் விளையாடி
கொண்டிருந்த நலன் நீலன் இருவரும் அந்த மரத்தில் இருந்த அத்தி பழங்களை பறித்து விளையாடி கொண்டிருந்தன.
அந்த பழங்கள் முனிவர் மீது விழுந்தது. கோபத்தில் கண் விழித்த முனிவர்.... தன் கமண்டலத்தில் இருந்து நீரை
எடுத்து, கைகளை ஓங்கியபடி மரத்தை அண்ணாந்து பார்த்தார்.

அங்கே... இரண்டு இளம் குரங்கு குட்டிகள் விளையாடி கொண்டிருப்பதை பார்த்து, முனிவர் மனம் இளகுகிறது.
ஆனால் கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்தாகி விட்டதே.... எனவே, தன் சாபத்தை மாற்றி அவர்கள் எறியும் எதுவும்
பஞ்சுபோல் மிதக்கட்டும் என்று கூறிவிடுகிறார்.

அதனால் தான் இவர்கள் தொட்டு கொடுக்கும் பாறைகள் கடலில் மூழ்காமல் மிதக்கின்றன என்று ராமசந்திர மூர்த்தி
கூறினார்

இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்
வணங்கப்படுகிறார்கள். இவர்களில் படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா; காக்கும் தொழில் கொண்டவர் விஷ்ணு;
அழிக்கும் தொழில் கொண்டவர் சிவன் என, இவர்களைப் போற்றி வணங்குகிறது. வேதம். பிரம்ம வைவர்த்த புராணம்,
விஷ்ணு புராணம், சிவ புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய புராண நூல்களில் இந்த மூவரின் தோற்றமும், அவர்கள்
தத்தமக்குரிய பணிகளை ஏற்ற விவரமும், அவர்களின் பூரண மஹிமையும் சித்திரிக்கப்படுகின்றன.[/h]

பன்னெடுங்காலமாக பிரம்மாவை ஆலயங்களில் வழிபடக்கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து


வருகிறது. புண்ணிய பாரதத்தில் ஒன்றிரண்டு கோயில்கள் தவிர, பிரம்மாவுக்கு வேறு ஆலயங்கள் கிடையாது.
சிவனுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் சைவர்கள் எனப்படுகின்றனர். விஷ்ணுவுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள்
வைணவர்கள் எனப்படுகின்றனர். பிரம்மனை மட்டும் தனியாக வழிபடும் சம்பிரதாயமோ, பிரிவோ இல்லை. பல
ஆலயங்களில் விஷ்ணுவும் சிவனும் சேர்ந்து ஹரிஹர ஸ்வரூபமாகப் பூஜிக்கப்படுகின்றனர்.

ஹரியும் ஹரனும் ஒன்று’ என்ற வாசகம் உண்டு. ஆனால், பிரம்மாவை தனியாகவோ அல்லது மூவருடன் சேர்த்தோ
வழிபாடு செய்ய எந்த சம்பிரதாயத்திலும் விளக்கங்கள் இல்லை.

முப்பெரும் கடவுளர்களில் ஒருவராகப் பேசப்படும் இந்த பிரம்மா யார்? அவர் எங்கிருந்து தோன்றினார்? அவருக்கு
ஏன் தனி வழிபாடு இல்லை?

தேவி மஹாத்மியம் என்கிற தேவி புராணத்தில் ஒரு சம்பவம் விளக்கப்படுகிறது.

ஒரு யுகத்தில் மஹாப்பிரளயம் தோன்றி அனைத்து உலகங்களையும் நீரில் ஆழ்த்தியது. அதற்கு முன்பு
தோற்றுவிக்கப்பட்ட எந்த ஜீவராசிகளும், தாவர, விலங்கினங்களும் காணப்படவில்லை. பார்க்குமிடமெல்லாம் தண்ணீர்.
அந்த பிரளய வெள்ளத்தில் ஒரு சிறு ஆலிலை மிதந்து வந்தது. அதன் மேல் பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஒரு குழந்தை
வடிவில் மிதந்துகொண்டிருந்தார்.
'நான் யார்? என்னைப் படைத்தவர் யார்? எதற்காகப் படைத்தார்?’ என்ற சிந்தனையுடன் ஸ்ரீமஹாவிஷ்ணு அனந்த
நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அப்போது, ஆதிபராசக்தி எனும் மூல சக்தி 'மஹாதேவி’ என்ற பெயருடன்
தோற்றமளித்தாள்.

சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய சின்னங்கள் அவள் கரங்களில் ஒளிர்ந்தன. ஆதிபராசக்தியைச் சூழ்ந்து ரதி, பூதி,
புத்தி, மதி, கிருதி, த்ருதி, ஸ்ரத்தா, மேதா, ஸ்வேதா, ஸிதா, தந்த்ரா ஆகிய 11 தேவியரும் காட்சி தந்தனர். அப்போது
மஹாதேவி அசரீரியாக அருள்வாக்கு தந்தாள்.

''மஹாவிஷ்ணுவே! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று கர்மாக்களும் ஒவ்வொரு யுகத்திலும் பிரதிபலிக்கும்.
பிரளயம் தோன்றி அவற்றை அழிக்கும்போது, காக்கும் கடவுளான நீ மட்டும் அழியாமல் நிற்பாய். ஆதிசக்தியின்
அம்ஸமாகத் திகழும் நீ பிரளயத்துக்கும் ஊழித்தீக்கும் அப்பாற்பட்டு நிலைத்திருப்பாய். சத்வ குணங்களின்
பரிமாணமாக நீ திகழ்வாய். உனது நாபியிலிருந்து (தொப்புள்) பிரம்மன் தோன்றுவான். அவன், ரஜோ குணங்களின்
பிரதிநிதியாக இருந்து, பிரளயத்தில் மறைந்த அனைத்தையும் சிருஷ்டி செய்வான். அவன் அழியாத பிரம்மஞானத்தின்
மொத்த உருவமாக இருந்து, மீண்டும் அண்ட சராசரங்களை உருவாக்குவான். அவனது புருவ மத்தியில் ஒரு மாபெரும்
சக்தி தோன்றும். அதன் வடிவம்தான் சிவன். அவன், தமோ குண வடிவமாக, ருத்ர மூர்த்தியாக நின்று, ஸம்ஹாரம் எனும்
அழிக்கும் தொழிலை ஏற்பான். இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முப்பெரும் கர்மாக்களையும் பிரம்மா,
விஷ்ணு, சிவனாகிய நீங்கள் மூவரும் செய்வீர்கள். உங்களின் இயக்க சக்தியாக நானும் என் அம்ஸங்களான
தேவிகளும் செயலாற்றுவோம்'' என்று அருளினாள் தேவி.

தேவி புராணத்தின் ஏழாவது காண்டத்தில், பிரம்மன் தோன்றிய வரலாறு மேற் கண்டவாறு விளக்கப்படுகிறது.

விஷ்ணுவின் நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத்தின் பரப்புகளைத் தாண்டி,
அது நீண்டு வளர்ந்தது. அதன் நுனியில் ஒரு பிரமாண்டமான தாமரை மலர் மலர்ந்தது. அதனுள் இருந்து பிரம்மதேவன்
தோன்றினார். அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் இருந்தன. அவற்றில் ஒரு முகம், பின்னர் சிவபெருமானால்
அழிக்கப்பட்டது. அதனால் பிரம்மன் 'நான்முகன்’ என்றழைக்கப்பட்டார். அவருக்கு 'சதுரானன்’ என்ற பெயரும் உண்டு.

தாம் தோன்றியதுமே ஸ்ரீ விஷ்ணுவைக் குறித்தும், அம்பிகையைக் குறித்தும் கடும் தவம் இயற்றத் தொடங்கினார்
பிரம்மன். ஜகதம்பா எனப்படும் மஹாதேவி மற்றும் மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் பிரம்மன் ஞானச்சுடராக
மாறினார். சிருஷ்டி தொடங்கியது. முதலில், பூரண ஞானத்தின் பிரதிநிதிகளாக அத்ரி, ப்ருகு, குத்ஸர், வஸிஷ்டர்,
கௌதமர், காஸ்யபர், ஆங்கீரஸர் ஆகிய சப்தரிஷிகள் தோன்றினர். அதன்பின், ஜீவராசிகளை உற்பத்தி செய்யும்
பிரஜாபதிகள் தோன்றினர். அண்டங்கள் தோன்றின. ஜீவராசிகள் உருவாகின. புல், புழு, பூச்சி, கடல்வாழ் இனங்கள்,
நிலவாழ் மிருகங்கள், மனிதன் என சிருஷ்டி தொடர்ந்தது.

- இது, தேவி மஹாத்மியத்தில் காணப்படும் பிரம்மனின் தோற்றம் பற்றிய புராணக் கதை.

'மனு ஸ்மிருதி’ எனப்படும் சாஸ்திரத்தில் பிரம்மன் தோன்றிய வரலாறு வேறு விதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

''பிரளயத்தின் முடிவில் அண்டங்களை விடப் பெரியதாக ஒரு முட்டை வடிவம் தோன்றியது. அது, தங்கத்தைவிடப்
பிரகாசமாக ஜொலித்தது. பல்லாயிரம் வைரங்கள்போல் அது மின்னியது. அண்ட சராசரங்களை உருவாக்கும் அத்தனை
சக்தியும், அதற்குரிய தவமும் ஞானமும் அந்த முட்டையில் அடங்கியிருந்தது. பிரளய வெள்ளத்தில் விழுந்த முட்டை
வெடித்தது. அதிலிருந்து ஐந்து முகத்துடன் ஜெகஜ்ஜோதியாக ஒரு தேவன் தோன்றினார். அவர்தான் பிரம்மதேவன்.
அவரிடமிருந்து சிருஷ்டி தொடங்கியது. பிரமாண்டமான அந்த முட்டை உடையும்போது ஒரு சத்தம் உருவானது.
அதுவே 'ஓம்’ எனும் பிரணவம். அந்த ஓம்கார நாதத்திலிருந்து மூன்று சப்த அலைகள் வெளிப்பட்டன. அவை 'பூர்’,
'புவ’, 'ஸுவஹ’ என்பன. இந்த நாதத்திலிருந்தே பூலோகம், புவர்லோகம், ஸுவலோகம் ஆகிய மூன்று உலகங்களும்
தோன்றின. மனு ஸ்மிருதியிலும், வாமன புராணத்திலும் பிரம்மனின் தோற்றம் பற்றி மேற்கண்ட விபரங்கள்
தரப்பட்டுள்ளன.

இந்த எல்லா புராணங்களிலிருந்தும் ஓர் உண்மை புலனாகிறது. 'பிரம்மதேவன்’ ஒரு ஸ்வயம்பூ. அதாவது, தானாகத்
தோன்றிய தெய்வம் என்பதே அந்த உண்மை. அவர் அண்ட சராசரங்களில் உள்ள அத்தனை ஆற்றல், அறிவு, ஞானம்
ஆகியவற்றின் மொத்த உருவம். அவர் மூலம் ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி, அது லட்சமாகி,
கோடியாகும். பிரம்ம சிருஷ்டி ஒவ்வொரு விநாடியும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த ஞானத்தையும், ஆற்றலையும்
ஒரு கருவறைக்குள் அடைத்து வைக்க முடியுமா? அப்போது சிருஷ்டி நிகழ்வது தடைப்படாதா? அதனால்தான்,
பிரம்மனுக்கு ஆலய வழிபாடு இல்லை என பல்வேறு ஞானிகள் பல்வேறு காலகட்டங்களில் விளக்கியுள்ளனர்.
'ஞானம்’ என்பதற்கு வடிவமோ, வர்ணமோ, வாசனையோ கிடையாது. அதற்குப் பரிமாணங்களும் இல்லை.அதனால்,
அதனை ஓர் ஆலய உருவத்தில் அடக்க முடியாது. ஆகவே பிரம்மன், உருவ வழிபாட்டுக்கு அப்பாற்பட்டவன் என்பது
தெரிகிறது. ஒவ்வொரு மனிதனும் ஞானத்தைத் தேடும்போது, அவனுள் அடங்கும் சக்தியை பிரம்மஞானம் என்கிறோம்.
பிரம்மனுக்குரிய ஆலயம், ஞானிகளின் உள்ளம்தான். 'அழியாத சத்யமும், பிறழாத தர்மமுமே பிரம்மஞானம்’ என்று
கூறியுள்ளனர் சித்தர்கள்.

ஒருமுறை சிவபெருமானின் திருவடி, திருமுடியைக் கண்டறிய பிரம்மாவும் விஷ்ணுவும் முயன்றனர். வராக வடிவில்
பூமியில் ஆழச் சென்ற விஷ்ணு, சிவபெருமானின் திருவடியைக் கண்டறிய முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டு
அவரைச் சரணடைந்தார். ஆனால் பிரம்மனோ, திருமுடியைக் கண்டறிந்ததாகப் பொய் கூறினார். அப்போது
சிவபெருமான், பிரம்மனுக்குப் பூவுலகில் ஆலய வழிபாடு இருக்காது என சாபமிட்டார்.

இப்படியொரு கதை அருணாசலேஸ்வர புராணத்திலும், சிவபுராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவபெருமான் பிரம்மனைச் சபித்தார் என்பதை அறிவுபூர்வமான கண்ணோட்டத் துடன் பார்த்தால், ஒரு தத்துவம்
புரியும். 'பொய் வழியில் யாரும் சிவனைக் காண முடியாது. பொய் வழியால் சிவனை அறிந்ததாகக் கூறுபவர்கள்
உலகோரால் பாராட்டப்பட மாட்டார்கள்’ என்பதே இதன் ஆழ்ந்த கருத்து.

யார் பிரம்மன், அவர் எப்படித் தோன்றி னார் என்பதை ஆராய்ந்து அறியும்போது ஒரு தெளிவு ஏற்படுகிறது. யார்
பிரம்மன் என்பதைவிட, எது பிரம்மம் என்பதைக் கண்டறிவதே உயர்ந்த ஞானம். பிரம்மன் எப்படித் தோன்றினார்
என்பதைத் தெரிந்து கொள்ளும்போது, 'ஞானம்’ எப்படித் தோன்றுகிறது, அதனை அடையும் வழி எது என்பதையும்
தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சத்யமே ஆன்மிகம்! தர்மமே தெய்விகம்!

இதனை உணர்ந்தால், அவன் பிரம்மஞானி ஆகிறான். அவனை வழிபடுவதே பிரம்மதேவன் வழிபாடாகும்.



ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை,
நம்மில் பலருக்குத் தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை.
ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது
அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர்...
ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன்
வித்யாப்பியாஸம் செய்துகொண்டிருந்தான். அப்போது அவனுக்கு உற்ற நண்பன் ஒருவனும் இருந்தான் . அவன் பெயர்
அனந்தன். பரம ஏழையான அவன், வசிஷ்டரின் ஆசிரமத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான்.

குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஸ்ரீராம- லட்சுமண சகோதரர்களுக்குத் தொண்டு செய்வதில், அனந்தன்
பேரானந்தம் கொண்டான். குறிப்பாக, ஸ்ரீராமன்மீது அவன் வைத்த பற்றும் பாசமும் அளவுகடந்ததாக இருந்தது.
பதிலுக்கு அனந்தனிடம் ஸ்ரீராமனும் பேரன்பு காட்டினான். இருவரும் சேர்ந்து ஆனந்தராமனாக குருகுலத்தில்
விளங்கினர்.

ஸ்ரீராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல், எழுத்தாணியைக் கூராக்குதல், வில்லைத் துடைத்தல், அஸ்திரங்களை எடுத்து
வைத்தல், உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளை பெருமகிழ்ச்சியோடு செய்து வந்தான் அனந்தன். ஸ்ரீராமனை ஒருநாள்
காணவில்லை என்றாலும், அவன் மனம் ஏங்கித் தவிக்கும். 'சுதாமனும் கண்ணனும் போல’ வசிஷ்டருடைய குருகுலத்தில்
அனந்தனும் ஸ்ரீராமனும் நட்பு கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வனத்துக்குச் சென்று, தர்ப்பைப் புல் பறித்து வரவேண்டியது அனந்தனின் கடமை.
அதுபோல் ஒருமுறை அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்தான். அந்த நேரத்தில் ஸ்ரீராமனின் குருகுலம் முடிந்து,
குருவிடம் விடைபெற்று சகோதரர்களுடன் அயோத்திக்குச் சென்றுவிட்டான். வனத்தில் இருந்து திரும்பி வந்த
அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான். உடனே ஸ்ரீராமனைக் காண அவன் மனம் துடித்தது.
உடனே புறப்பட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீராமனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே அவனுக்கு மேலும் ஒரு
அதிர்ச்சி காத்திருந்தது. அப்போதுதான் மகரிஷி விஸ்வாமித்திரருடன் ஸ்ரீராமனும் லட்சுமணனும் யாக
சம்ரக்ஷணத்துக்காக வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். துக்கம் அனந்தனின் தொண்டையை அடைத்தது. ஒன்றும்
அறியாத பாலகனான ஸ்ரீராமன் கானகம் செல்ல நேர்ந்ததை எண்ணிக் கலங்கினான். ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பிய
தசரதனையும், அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரரையும் மனத்துக்குள் கடிந்துகொண்டான்.

பாவம் ஸ்ரீராமன்! காட்டில் அவன் என்ன செய்வான்? அவனுக்கு யார் சேவை செய்வார்கள்? நித்திய கர்மங்களுக்கு
தர்ப்பை, சமித்து போன்றவற்றை யார் சேகரித்துத் தருவார்கள்? இப்படியெல்லாம் அவன் மனம் தவித்தது. எப்படியும்
ஸ்ரீராமனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான் அனந்தன்.
தன் குரு வசிஷ்டரிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல், நேராகக் காட்டை நோக்கிச் சென்றான். அடர்ந்த காட்டில், 'ராமா...
ராமா...’ என்று கதறிக்கொண்டு, ஸ்ரீராமனைத் தேடி அலைந்தான். காட்டில் வழி தவறி, ஒரு இருண்ட பகுதிக்குள்
அகப்பட்டுக்கொண்டான். அங்கே... பல நாட்கள் ஸ்ரீராமனைத் தேடியும், அவனைக் காணாமல் அனந்தனின் மனம்
வாடியது. ஸ்ரீராமனைக் காணாமல் ஊர் திரும்பவும் அவனுக்கு விருப்பமில்லை. 'ராமா... ராமா...’ என்று
ஜபித்துக்கொண்டு, அன்ன ஆகாரமின்றி, அந்தக் காட்டிலேயே ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்தான். அவன் அமர்ந்த
இடத்தில், அவனை மூடியவாறு புற்று வளர்ந்துவிட்டது. ஆனால், அவனது 'ராம’ ஜபம் மட்டும் நிற்கவில்லை.

காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. இதற்கிடையில், ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நிகழ்ந்து முடிந்திருந்தன.
விஸ்வாமித்திரரின் யாகத்தை முடித்துக் கொடுத்து, சீதையை மணம் முடித்து, தந்தை சொல் காக்கக் கானகம் சென்று,
சீதையைப் பிரிந்து, அனுமனின் உதவியால் அவள் இருக்கும் இடம் அறிந்து, இலங்கை சென்று ராவண சம்ஹாரம்
செய்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியிருந்தான் ஸ்ரீராமன். அவன் பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள்
நடந்துகொண்டிருந்தன. இத்தனை நடந்ததும், அது எதுவும் தெரியாமல் புற்றுக்குள் 'ராமா... ராமா..’ என்று
தவமியற்றிக்கொண்டிருந்தான் அனந்தன்.

ஸ்ரீராமனின் பட்டாபிஷேகத்தைக் காண பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களும், மன்னர்களும்,
மகரிஷிகளும் அயோத்திக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது காட்டு வழியே சென்று கொண்டிருந்த சில மகரிஷிகள்
'ராம’ நாமத்தைப் பாடிக்கொண்டே சென்றனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு அனந்தன் தவமியற்றிக்கொண்டிருந்த
புற்று இடிந்தது. அனந்தன் தவம் கலைந்து எழுந்தான். 'ராமா... ராமா... எங்கிருக்கிறாய் என் ராமா?’ என்று கதறினான்.
காலச் சுழற்சியினால் தனக்கு வயதாகியிருப்பதைக்கூட அவன் அறியவில்லை. பல ஆண்டுகள் முடிந்துபோனதையும்
அவன் உணரவில்லை.
இன்னும் குழந்தைபோல ஸ்ரீராமனைத் தேடினான். அப்போது மகரிஷிகள் கூட்டத்தில் ஒருவர், அவன் யாரென்று
விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனுக்கு ஆறுதல் கூறினார். ஸ்ரீராமன் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து
கொள்ளப் போவதையும், அதற்காகவே எல்லோரும் அயோத்தி செல்வதையும் அனந்தனுக்குத் தெரிவித்தார். ராமனுக்கு
ஏற்பட்ட துன்பங்களைக் கேட்டு கண்ணீர் வடித்தான் அனந்தன். இருந்தாலும், ராமனுக்குப் பட்டாபிஷேகம்
நடக்கப்போகும் செய்தி அறிந்து, அதைக் காண மகரிஷிகளுடன் அயோத்தி புறப்பட்டான்.

அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று பட்டாபிஷேக நாள். எங்கும் வேத கோஷமும், மங்கல இசையும்
முழங்கிக்கொண்டிருந்தன. குல குரு வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முதலானோர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று
செய்து கொண்டிருந்தனர். மக்கள், மன்னர்களுடன், தேவர்களும் தேவ மாதர்களும் அங்கே வந்திருந்தனர்.

ஸ்ரீராமன் அதிகாலையிலேயே மங்கல நீராடி, ஆடை அணிகலன்கள் அணிந்து, தன் குலதெய்வமான சூரிய
தேவனையும், தாயார் மூவரையும் வணங்கி, கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான். அப்போது
எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும் வகையில் உரத்த குரலில், ''அடே ராமா! இத்தனை காலம்
எங்கிருந்தாயடா? உன்னை எத்தனை காலமாய் தேடுகிறேனடா?'' என்று குரல் கொடுத்தபடியே ராமனை நோக்கி ஓடி
வந்தான் அனந்தன். ராமனை இறுகத் தழுவிக் கொண்டான்.
கந்தல் உடையில், ஜடா முடியுடன் பரதேசிக் கோலத்தில் பாமரன் ஒருவன், 'அடே ராமா’ என்று கூவி அழைத்தது
கண்டு, அவையினர் அதிர்ச்சியுற்றனர். 'எவனோ பைத்தியக்காரன் இவ்வாறு செய்கிறான்’ என்று கோபத்துடன்
காவலர்கள் அவனைப் பிடித்திழுக்க விரைந்தபோது, ஸ்ரீராமன் அனந்தனை நெஞ்சாறத் தழுவி, அவன் கண்களில்
வழிந்த கண்ணீரைத் துடைத்து, ''என்னை மன்னித்துவிடு அனந்தா!'' என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.
''உன்னிடம் சொல்லிக்கொள்ளாமலே குருகுலத்தில் இருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம்
அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன். என் தவற்றை மன்னித்துவிடு'' என்று மீண்டும் சமாதானம் செய்தான்.
அதைக் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டனர். தன்னைப் போலவே தன் பிரபுவிடம் பக்தி செலுத்தும் மற்றொரு பக்தன்
இருக்கிறான் என்றெண்ணிப் பூரித்த அனுமனின் கண்களிலும் நீர் சுரந்தது.

அப்போது வசிஷ்டர், ''ராமா... இவர் யார்?'' என்று கேட்க, ''தெரியவில்லையா குருதேவா? இவன் என் பள்ளித்
தோழன். தங்கள் குருகுலத்தில் சேவை செய்த சீடன் அனந்தன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப்
'பிரபு’ என்றும் 'மகாராஜா’ என்றும்தான் அழைக்கிறார்கள். என்னை 'அடே ராமா’ என்று அழைக்க என் தந்தை தசரதன்
இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன் மூலம் என் தந்தைக்கு நிகரானவன் ஆகிவிட்டான்
இந்த அனந்தன்!'' என்று கூறினான் ஸ்ரீராமன். வசிஷ்டரும் அனந்தனைக் கட்டித் தழுவி ஆசீர்வதித்தார். எல்லோர்
கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!

''இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து, இடையறாமல் என் நாமத்தை ஜபித்து, என்னைத் தேடிக் கண்டடைந்த
இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்'' என்று கூறிய ஸ்ரீராமன் அனுமனை
நோக்கி, 'உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கௌரவம் தரலாம்?'' என்று கேட்டான்.
''பிரபு! தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என்று கூறினீர்கள். தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு, இவரை
அதில் அமர்த்தி மரியாதை செய்வது இவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை!'' என்று கூறினான்
அனுமன். எல்லோரும் அதை ஆமோதித்தனர்.

இத்தனை பெரிய மரியாதைக்குத் தான் தகுதியானவனா என்றெண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். அவன்
வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி, மாலை அணிவித்து மரியாதை
செய்து, பாத பூஜையும் செய்தான் ஸ்ரீராமன். அதன் பின்பே, ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் ஆரம்பமானது.
ராமாவதாரத்தில் பகவானின் அன்பினால் கட்டுண்டு ஆனந்தமடைந்த அனந்தனே, ஒருவேளை அதே பேரானந்தத்தை
மீண்டும் அனுபவிக்க கிருஷ்ணாவதாரத்தில் குசேலனாக வந்தானோ என்று தோன்றுகிறது அல்லவா?!
மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12 வருட வனவாசமும்,
ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த
ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள். உறவையும், நட்பையும், அமைதியையும் பெரிதும்
விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற,
பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜதூதனாக அனுப்ப விரும்பினான். அவன் அறிவுக்கு எட்டியவரையில்,
பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத் தகுதியுடையவர்களாகப்படவில்லை. எனவே,
ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான்.

''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத்


துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று
பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நானோ, அமைதியையும் சமாதானத்தையும்தான்
விரும்புகிறேன். துரியோதனனிடம் பாண்டவர் தூதுவனாக நீ செல். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய
ராஜ்ஜியத்தைக் கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகள் கேள். அதுவும் இல்லை
யென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அதையும் அவர்கள் தர மறுத்தால், ஐந்து இல்லங்களையாவது கேள். எப்படியும்
அதையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டு'' என்றான் தர்மன்.

''யுதிஷ்டிரா, நிச்சயம் தர்மத்தை நிலைநாட்ட என்னால் ஆனதைச் செய்கிறேன். உங்களுக்காகத் தூது போய், நீ
கூறியபடி, ஐந்து வீடுகளாவது யாசகம் கேட்டுப் பார்க்கிறேன். எதற்கும் தம்பிகளிடமும் திரௌபதியிடமும்
கலந்தாலோசித்து, அவர்கள் அபிப்ராயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விடைபெற்றுச் செல்கிறேன்'' என்று கூறி,
பீமார்ஜுனர்களைக் காணப் புறப்பட்டான் கண்ணன்.

பீமன், ராஜ்ஜியத்தை யாசகம் கேட்டுப் பெறுவதை விரும்பவில்லை. சூதாட்ட மண்டபத்தில் தான் செய்த சபதம்
நிறைவேற, போர் வந்தே ஆக வேண்டும் என அவன் கர்ஜித்தான். அதே கருத்தை கண்ணனிடம் அடக்கமாகத்
தெரிவித்தான் அர்ஜுனன். அதன்பின் திரௌபதியையும் நகுலனையும் சந்தித்தான் கண்ணன்.

''அண்ணா, நீ தூது போவது தர்மமா? அதுவும் ஐந்து வீடுகள் யாசகமாகக் கேட்கப் போகிறாயாமே! அதை அவர்கள்
தர சம்மதித்துவிட்டால், அவிழ்ந்த என் கூந்தல் முடிவது எப்போது? உன் மீது ஆணையாக நாங்கள் செய்த சபதங்கள்
என்னாவது?'' எனக் கண்ணீர் வடித்தாள் திரௌபதி. நகுலனும் தர்மனின் எண்ணத்துக்கு உடன்படவில்லை.

''பாஞ்சாலி, நீங்கள் அனைவரும் என் மீது ஆணையிட்டுத்தான் சபதங்கள் செய்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்று
வதில் உங்களைவிட என் பொறுப்புதான் அதிகம். அவை நிச்சயம் நிறைவேறும். எப்படி என்று மட்டும் இப்போது
கேட்காதே! நம்பிக்கையோடு பொறுத்திரு. நான் ஸஹதேவனைக் கண்டுவிட்டு, நாளை ஹஸ்தினாபுரம் புறப்படுகிறேன்.''
எனக் கூறி, ஸஹதேவன் குடில் நோக்கிப் புறப்பட்டான் கண்ணன்.

அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த ஸஹதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து,
வரவேற்றான்.

''ஸஹதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். அதற்காக
எல்லா உபாயங்களையும் கையாளப் போகிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன்.
போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்... அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ண பிரான்.
ஸஹதேவன் சிரித்தான். ''போர் வராமல் தடுக்கத்தானே உபாயம் தேடுகிறாய்! நல்லதொரு உபாயம் உண்டு.
சொல்கிறேன். செய்ய முடியுமா, பார்?'' என்று ஆரம்பித்தான் ஸஹதேவன்.

தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது
ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.

''கண்ணா, கேள்... பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை
அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல்
நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்'' என்றான் ஸஹதேவன்.

கண்ணன் உரக்கச் சிரித்தான். ''என்னைக் கட்டுவதா? எப்படி முடியும் ஸஹதேவா?'' என்றான். ''ஏன் முடியாது?'' என்று
எதிர் சவால் விட்டான் ஸஹதேவன். அந்தக் கணமே, பல்லாயிரம் கண்ணனாக வடிவெடுத்து மண்டபம் எங்கும்
வியாபித்தான் ஸ்ரீகிருஷ்ணன். பார்த்த பரவெளியெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. இத்தனைப் பரிமாணங்களையும்
எப்படிக் கட்டுவது?

ஸஹதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான். பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ரூப, குண,
நாமங்களை மனதில் தீவிரமாகத் தியானித்தான். பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது.
அப்போது பிறந்தது ஸஹதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்.

'ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே


விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே
கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!’

என்பதே அந்த மந்திரம். ஸஹதேவன் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, கண்ணன் எடுத்த வடிவங்கள் ஒவ்வொன்றாய்க்
கலந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரே கண்ணனாகி, அவனும் ஸஹதேவனின் இதயத்துக்குள்ளே கட்டுண்டான்.
''ஸஹதேவா, நீ வென்றுவிட்டாய்! என் தாய் என்னை உரலில் கட்டினாள். பிருந்தாவன கோபியர், கட்டுத்தறியில்
கட்டினார்கள். நீயோ இதயத்தில் கட்டிவிட்டாய். பக்தியினால் கடவுளையும் கட்ட முடியும் என்று காட்டிவிட்டாய்.
போதும்! என் கட்டுக்களை அவிழ்த்து, என்னைப் போக விடு!'' என்று கூறினான் கண்ணன்.

இப்போது ஸஹதேவன் பேரம் பேசினான். ''கட்டுக்களை அவிழ்த்துவிடுவதானால், எனக்கு ஒரு வரம் கொடு'' என்றான்.
''கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன். ''பாரதப் போரில் குந்தி புத்திரர்களான எங்கள் ஐவரையும் காப்பாற்றுவதாக
வரம் கொடு'' என்றான் ஸஹதேவன்.
கண்ணன் மீண்டும் உரக்கச் சிரித்தான். ''ஸஹ தேவா! சற்று அவகாசம் தருகிறேன். ஏதாவது விட்டுப் போயிருந்தால்,
அதையும் வரத்தில் சேர்த்துக் கொண்டு வாசகங்களைச் சரியாக அமைத்து வரத்தை மீண்டும் கேள், தருகிறேன்''
என்றான் கண்ணன்.

''இல்லை கிருஷ்ணா! நீ என்னைக் குழப்பப் பார்க்கிறாய். நான் கேட்டது கேட்டதுதான். பாரதப் போரில் குந்தி
புத்திரர்கள் எங்கள் ஐவரையும் எப்படியாவது காப்பாற்றிவிடு!'' என்றான். ''நல்லது ஸஹதேவா. வரம் மட்டுமல்ல.
வாக்கும் அளிக்கிறேன். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் உங்கள் ஐவரையும் காப்பாற்றுகிறேன். என்னைக்
கட்டவிழ்த்து விடு'' என்றான் கண்ணன். ஸஹதேவன் தியான நிலையைக் கலைத்து கண்ணனைக் கட்டவிழ்த்தான்.

கர்ணனோடு சேர்ந்து குந்திக்கு ஆறு புதல்வர்கள் என்பதை அறியாமல், 'குந்தி புத்திரர்கள் ஐவரை மட்டும் காப்பாற்று’
என வரம் கேட்டுவிட்டானே ஸஹதேவன். பாவம், கர்ணனைக் காப்பாற்ற இவனும் தவறிவிட்டானே! விதி யாரை
விட்டது!'' என்று எண்ணிக் கொண்டே கண்ணன் ஹஸ்தினாபுரப் பயணத்தை தொடங்கினான்.

கண்ணன் சங்கல்பப்படி, குருக்ஷேத்திரப் போர் தொடங்கியது. போரின் கடைசி நாட்களில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது.
அப்போது அவனுக்குக் கொடுத்த வாக்கின்படி யுத்த பூமியில் வந்து, தன் மகன் கர்ணனை மடி மீது கிடத்தி, ''மகனே''
என்று கதறி அழுதாள் குந்தி. அப்போதுதான் பாண்டவர்களுக்கு, கர்ணன் தங்கள் சகோதரன் என்பது தெரிந்தது.
அனைவரும் கதறினர். ஸஹதேவனின் நினைவலைகள் பின்னே சுழன்றன. கட்டுண்ட கண்ணனிடம் தான் கேட்ட
வரமும், அப்போது அவன் தந்த வாய்ப்பும், தன் அறியாமையால் அந்த வாய்ப்பை இழந்து, ஐவரை மட்டுமே காப்பாற்ற
தான் கேட்ட வரமும், அவன் நினைவுக்கு வந்தன. தான் கற்ற சாஸ்திர அறிவு தன்னைக் காப்பாற்றவில்லை என்பதை
ஒரு கணம் உணர்ந்தான்.

''ஊருக்கெல்லாம் ஜோசியமும் ஆருடமும் சொல்ல உதவிய சாஸ்திரம், எனக்குக் கூடப் பிறந்த சகோதரன்
இன்னொருவன் இருக்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டவில்லையே? இதனை நான் கணிக்கத் தவறிவிட்டேனே... இது
மாயை. கண்ணன் காட்டும் வழி ஒன்றே மெய். அதுவே உயர்ந்த சாஸ்திரம். இனி எந்த சாஸ்திரமும் வேண்டாம்'' என்று
கோபத்தில் தன் ஜோதிடச் சுவடிகளை எல்லாம் கிழித்தெறிந்தான். அவற்றில் பல, போர்க்களத் தீயில் விழுந்து
அழிந்தன. எஞ்சியவற்றை ஸஹதேவனின் சீடர்கள் எடுத்து, பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, விட்டுப் போன பல
விஷயங்களை ஊகத்தால் சேர்த்து, ஸஹதேவனின் ஜோதிட சாஸ்திரத்துக்கு மறு உயிர் தந்தார்கள். மறைந்தவை
மறைந்தே போயின. அதனால்தான் இன்றும் ஆரூட ஜோஸ்ய சாஸ்திரத்தில் 'ஜோஸ்யம் பாதி, ஹேஷ்யம் மீதி’ என்று
சொல்கிறார்கள்!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!

நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான் என்று சொல்வார்கள். அதனால் அவரை 'சனீஸ்வரன்’ என்று
போற்றுவர். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், அவரவர் ராசிக்கேற்ப ஏழரை ஆண்டுகள் சனியின் பிடிக்குள் அடங்கி,
உயர்வு- தாழ்வுகளைச் சந்தித்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதைத்தான் 'ஏழரைச்சனி’ என்கிறார்கள்.
'கொடுப்பதும் சனி; கெடுப்பதும் சனி’, 'யாரை விட்டது சனி’ என்றெல்லாம் பழமொழிகள் பல உண்டு.

ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது தேவேந்திரன்


சனீஸ்வரனைப் பார்த்து, ''உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?'' என்று கேட்டான்.
அதற்கு சனீஸ்வரன், 'இதுவரை இல்லை. ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை
நான் பீடிக்கவேயில்லை. ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!' என்று கூறி, அவசரமாகப்
புறப்பட்டார்.

'எங்கே செல்கிறீர்கள்?'' என்று இந்திரன் கேட்க, 'சிவனைத் தரிசிக்க!'' என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்.

நேராக கயிலாயம் சென்றவர், சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்.


''சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?'' என்று கேட்டார்.சிவபெருமான்.

''பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே
வந்தேன்'' என்றார் சனீஸ்வரன்.

''எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா... விளையாடுகிறாயா? கிரகங் களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே
பீடிக்கப் போகிறாயா?' என்று கேட்டார்.

''ஆம் ஸ்வாமி! நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும்,
ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து என் கடமையைச் செய்ய அனுமதி
தாருங்கள்'' என்று கேட்டார் சனீஸ்வரன்.

''ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது' என்று கூறிய சிவபெருமான்,
பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராக்ஷத்தில் மறைந்துகொண்டார். ருத்ராக்ஷத்தில் உள்ள
தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது. அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில்
இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?

ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன். ஏழரை நாழிகை
கடந்தது. சிவபெரு மான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார். சனீஸ்வரனை நோக்கி, ''பார்த்தாயா சனீஸ்வரா...
உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே?'' என்றார்.

''இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக
ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம்
ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள்'' என்றார்.

'சனீஸ்வரனின் விதி’யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை


எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான். ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த
ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை
அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.

சிவனைப் பீடித்த சனி அதோடு விட்டு விடவில்லை. திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட
பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த
சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.

ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை
மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன். இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர
சேனைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி
வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன. ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம்
எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்’
என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.

அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ''பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி
பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்''
என்று வேண்டினார்.

'எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப்
பீடித்துப் பாருங்கள்' என்றார் ஸ்ரீராமன்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ''ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி
ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு'' என்றார்.

''சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப்
பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம்
வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ள லாம்'' என்றான் அனுமன்.

''ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும்
நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?''என்று கேட்டார்
சனீஸ்வரன்.

''என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால்,
அது பெரும் அபசாரமாகும். 'எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து
தங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன். அதுவரை சாதாரண பாறைகளைத்
தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத்
தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின்
பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று. அதனால்,
சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. 'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்றுகூடச் சிந்தித்தார்.
அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.

''சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?''
என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன், ''ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது
பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன். சாக்ஷ£த் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில்
தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன் ' என்றார் சனீஸ்வரன்.

''இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது
என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?' என்றார் அனுமான். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், ''அனுமான்..!
உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றார். ''ராம
நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில்
இருந்து நீங்களே காத்தருள வேண்டும்' என வரம் கேட்டார் அனுமன். சனியும் வரம் தந்து அருளினார்.

பொதுவாக ஒருவரை ஏழரைச் சனி பீடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து மங்குசனி, தங்குசனி, பொங்குசனி
என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியின் மங்குசனி, தங்குசனி காலத்தில்
ஏற்படும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைகளைச் சமாளித்து, முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற,
''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம'' என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென்று
சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்
லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்?
இந்து மதத்தில் இருக்கும் புராணங்கள் வெறும் கதைகள் அல்ல அதில் நிறைய மர்மங்களும் மனிதன் எப்படி
நடந்துகொள்ளவேண்டும் எதையெல்லாம் செய்யகூடாது என கூறும் அனுபவ அறிவுரைகளாகும் இதில்
முக்கியமானவை ராமாயணம் மற்றும் மகாபாரதம் என்னும் இரண்டு இதிகாசங்களாகும் இதில் இரண்டு விதமான
கருத்துக்கள் உண்டு ஒன்று செவிவழிக்கதைகள் இது தங்களது முன்னோர்கள் வழி பரம்பரை பரம்பரையாக சொல்லி
கொடுத்து வருவது செவிவழி கதைகளில் ராவணனின் பராக்கிரமம் அதிகமாக பேசப்பட்டு இருக்கும் அவன்
ஆயகலைகள் அறுபத்தினான்கும் நான்கு வேதங்ககளையும் கற்றறிந்தவன் என கூறபடுவதுண்டு வாய்வழி மரபுகள்
மற்றும் கிராமியவாசிகளாலும் கூட இந்த புராணங்கள் இன்னமும் பேசபடுகிறது அப்படிப்பட்ட ராமாயண கதைகளில்
வரும் ராம லக்ஷ்மணன் பற்றிய அதிர்ச்சிகரமான ஒரு நிகழ்வுதான் இந்த பதிவின் மூலம் பார்க்க போகிறோம்

இந்த பூமியில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை ஸ்தாபித்த பின்பு விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களும் வைகுண்டம்
மீளுவதாக ஐதீகம். ஸ்ரீராமரும் சரயு ஆற்றில் இறங்கி மறைந்து போவதாகவே பத்ம புராணம் தெரிவிக்கிறது.அது
பற்றிய விவான பதிவு அடுத்த தொடரில் பார்க்கலாம் ..ஆனால் அவருக்கு நம்பிக்கைக்கு பாத்திரமான அவரது எல்லா
கஷ்டங்களிலும் கூடவே நின்ற அவரது சகோதரன் லக்ஷ்மணனின் முடிவு எப்படி என்று நமக்கு தெரியுமா இரண்டு
விதமான கருத்துக்கள் இருக்கின்றன முதல் கருத்து லக்ஷ்மணனை கொல்ல சொல்லி ராமபிரான் கட்டளையிட்டார்
எனபது இதை கேட்கும் போது நமக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது இரண்டாவது கருத்து அவர் முடிவுகாலம்
தெரிந்ததும் சரயு நதியில் மூழ்கி தன்னுடைய அவதாரத்தை முடித்துக்கொண்டார் எனபது ஆனால் முதலில்
சொல்லப்பட்டது போல லக்ஷ்மணனுக்கு ராமபிரான் அளித்த மரண தண்டனை.எனபது அதிர்ச்சியான தகவல்தான்
தன் தம்பியறுள் லக்ஷ்மணனை மட்டும் அதிகமாக நேசித்த ராமபிரான் தான் அவரின் மரணத்திற்கு காரணமாக
இருந்தார் என்பது, ராமாயணம் அறிந்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியாகவே இருந்திருக்கலாம்

இந்த துர்ச்சம்பவம் நடக்க காரணமாக இருந்த நிகழ்வுகள் மற்றும் ராமபிரான் தன் தம்பியான லஷ்மணனை இப்படி
தண்டிக்க என்ன காரணமாயிருக்கும் என்பதை பற்றி இபொழுது பார்க்கலாம் ராம ராவண யுத்தம் முடிந்ததும்
ராமபிரான் வெற்றியோடு அயோத்திக்கு திரும்பினார் அதன் பிறகு ஒரு அரசனாக நீதிதவராமல் சட்டதிட்டங்களுக்கு
உட்பட்டு எல்லோரையும் சமமாக மதித்து நீதிதவராமல் அரசாட்சி புரிந்தார் அவருடைய அகண்ட ராஜ்யத்தை ராமரின்
புதல்வர்களாகிய லவனும் குசனும் ராமரின் தம்பிகளான பரதன் மற்றும் அவர்மனைவி மாண்டவிக்கு பிறந்த மக்களும்
லக்ஷ்மணன் மற்றும் ஊர்மிளைக்கு பிறந்த மக்களும் சத்ருக்னன் மற்றும் அவர் மனைவி சுருதகீர்த்திக்கு பிறந்த
மகன்களும் ராமரின் ஆலோசனை படி பலபிரிவுகளாய் பிரித்து ராஜ்யத்தை செவ்வனே ஆண்டு வந்தனர்.ஸ்ரீ ராமரும்
நாட்டு மக்களின் நலன்களுக்காக பல யாகங்களை செய்தார். அப்படி ஒரு நேரத்தில்தான் சீதையும் பூமா தேவியின்
அழைப்பின் பேரில் பூமியில் சென்று மறைந்தார்.

இப்படி இருக்கையில் ஒருநாள் ராமரின் குலகுருவான வசிஷ்டர் அவரை சந்திக்க வந்தார். முக்கியமான
சிலவிஷயங்களை பற்றி பேசவேண்டும் ஆகையால் தனிமையில் பேசவேண்டும் அபொழுது யாரும் குறிக்கிட கூடாது
எனவும் அவர் வலியுறுத்தினார் இது மிகவும் ரகசியமான உரையாடல் அதை யாரும் கேட்க்க கூடாது என கூறியதால்
ராமர் தனது நம்பிக்கைகுரிய தான் பெரிதும் நேசித்த தன தம்பி லக்ஷ்மணனை அழைத்து அந்த அறைகதவுகளை
பாதுக்ககுமாறு கூறினார் தன அனுமதி இல்லாமல் அந்த அறையினுள் நுழைபவர்களுக்கு மரண தண்டனை
விதிக்கப்படும் என்ற ஆணையையும் லக்ஷ்மனைனிடம் தெரிவித்தார்

கதவுகளை லக்ஷ்மணன் பாதுகாத்து கொண்டு நிற்கையில் அங்கே நம்முடைய கோபக்கார முனிவர் துர்வாசர்
வருகிறார் தன்னுடைய முன் கோபம் மற்றும் சாபங்களால் நன்கு அறியப்பட்டவர் இந்த துர்வாசமகரிஷி விதி
விளையாட்டில் யாரும் தப்பமுடியாது என்பதை உணர்த்த வந்த துர்வாஷா மகரிஷி தான் உடனே ராமனை
சந்திக்கவேண்டும் அதை ராமனிடம் தெரிவிக்குமாறு லக்ஷ்மனைனிடம் கூறினார் அவரை சமாதானபடுத்தி அண்ணன்
முக்கியமான ஒரு விவாதத்தை வசிஷ்ட முனிவருடன் விவாதித்து கொண்டு இருக்கிறார் அதனால் கொஞ்சம்
காத்திருக்க கூறினார் இதனால் கடும் கோபம் கொண்ட துர்வாசர் ராமனை பார்க்க தன்னை அனுமதிக்கவில்லை
என்றால் அயோத்தியா மக்கள் அனைவரும் இயற்கை சீற்றம் கொண்டு இறந்துவிட சாபம் அளிப்பதாக லக்ஷ்மணனை
மிரட்டினார் துர்வாசரின் கொபதைகண்ட லக்ஷ்மணன் குழப்ப நிலையை அடைந்தான் தன்னுயிரா இல்லை
நாட்டுமக்களின் நலனா என குழப்பமடைந்தான் முடிவில் தன்னுயிரை தியாகம் செய்ய முடிவெடுத்தார் ராமனின்
அறைக்குள் நுழைந்து துர்வாசரின் வருகையை ராமபிரானிடம் தெரிவித்தார் தான் அளிக்கும் சொல்லுக்காக நன்றாக
அறியப்பட்டவர் ராமர் சட்டம் இயற்றிய படி லக்ஷ்மணனுக்கு மரண தண்டனை அளிக்கவேண்டுமே என கலங்கி
நின்றார் ராமர் முடிவில் தான் கூறியதை போல் லக்ஷ்மணனுக்கு மரண தண்டனை நிறைவேற்றினார் இப்படியாக
முடிந்தது லக்ஷ்மணனது சோக முடிவு

ஆனால் இதே சம்பவம் வாய்வழி மரபுகளில் வேறுவிதமாக கூறபடுகிறது ஒரு நாள் ஸ்ரீராமரை தேடிக் கொண்டு ஒரு
முனிவர் வந்தார். அவர் ராமருடன் சிறிது நேரம் தனியாக பேச வேண்டும் எனவும், இடையில் யாரும் தங்களது தனி
அறைக்குள் பிரவேசிக்கக் கூடாது எனவும் உத்திரவிட்டார். அவர்தான் காலதேவர் எனப்படும் யமன் .அதன்படி ராமர்
அவரது தம்பி லக்ஷ்மணனை காவலாக வைத்துவிட்டு காலதேவரை பின்தொடர்ந்தார். யாராவது அப்படி அத்து மீறி
நுழைந்தால் சாவை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். காலதேவர் ராமரை சந்தித்து அவரது அவதாரத்தின்
நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாகவும் அவர், வைகுண்டம் செல்லும் காலம் வந்துவிட்டது எனவும் தான் அதை
ஸ்ரீராமருக்கு ஞாபகப் படுத்த வந்திருப்பதாகவும் கூறினார் இப்படி ஸ்ரீராமரும் காலதேவரும் பேசிக்
கொண்டிருக்கையில் அறைக்கு வெளியில் ஸ்ரீ ராமரை தாம் உடனடியாக பார்க்கவேண்டும் என்று லக்ஷ்மனுடன்
சண்டையிட்டு கொண்டிருந்தார் கடும் கோபக்கார முனிவர் துர்வாசர் லக்ஷ்மணன் எவ்வளவு மன்றாடியும் அவர்
விடுவதாக இல்லை

ஸ்ரீராமரை பார்ப்பதில் பிடிவாதமாக இருந்தார் நமது துர்வாச முனிவர். உள்ளே தன்னை விடவில்லையானால் துர்வாச
முனிவர், லக்ஷ்மணனுக்கு சாபம் அளிப்பேன் என்று கோபம் கொண்டதால் லக்ஷ்மணன் ஒன்றும் செய்வதறியாமல்
குழப்பம் அடைந்தார். உள்ளே போனாலோ ஸ்ரீராமர் சொன்னது போல நமக்கு சாவு நிச்சயம். இவரை உள்ளே
விடவில்லை என்றால் சாபம் நிச்சயம் என்ற நிலையில் லக்ஷ்மணனுக்கு இறைவனின் சித்தம் புரிந்தது. இது காலனின்
விளையாட்டு. நாம் இந்த பூவுலகத்திலிருந்து விடை பெற வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்பதை முழுமையாக
புரிந்துக் கொண்டார். காலனின் விருப்பதிற்கேற்ப தன்னிச்சையாக சரயு நதிக்குள் புகுந்து ஆனந்த சேஷசயனம்
எடுத்துக் கொண்டார் என்றும் கூறபடுகிறது

லக்ஷ்மணனது முடிவை தெரிந்து கொண்ட ஸ்ரீராமர் பாசதுயறால் துடித்தார் தனக்கும் காலன் அழைத்ததை ஏற்றுக்
கொண்டு தனது இந்த அவதாரம் முடிந்தது என புரிந்துக் கொண்டு அனைவருக்கும் வணக்கம் சொல்லி லக்ஷ்மணனை
தொடர்ந்து சரயு ஆற்றில் இறங்கி இந்த அவதாரத்தை நிறைவு செய்ய எண்ணினார்

உடனே தன தம்பிகளை அழைத்தார் பரதனுக்கு முடி சூடிவிட்டு தான் பூவுலகை விட்டு செல்லும் காலம் வந்து விட்டது
என கூறினார் ..ராமரது முடிவும் அவரது முடிவிற்கு பின் வானர படைகள் என்ன வாயின என்னும் உண்மையை
நமது தெரிந்த கதை தெரியாத உண்மையின் அடுத்த பதிவில் பார்க்கலாம்

You might also like